மழை மரம்! - சரவணன் சந்திரன்


மஞ்சள் ஒளியை ஊடுருவி இளமழைச் சாரல் விழுந்து கொண்டிருக்கையில், இலைகள் சுருண்டிருந்த மரம் ஒன்றினடியில் சோர்வாக அமர்ந்திருந்தேன். மற்றவையெல்லாம் மழைநேரத்தில் இலை மலர்ந்து நிற்கையில், தன் முகம் தாழ்த்தி நிற்கிற இம்மரத்தை 'பன்னி' மரமெனக் கிண்டலாகச் சொல்வார்கள். "வெவரம் தெரியாதவனுக. என்னைக்குத்தான் நல்லத இவனுக கொண்டாடி இருக்காங்க. இது மழை மரம். கீழ புல் பூண்டுகூட மொளைக்க விடாம இருக்கற பெறப்பு நோக்கமில்லாத மரமா இது? இலையெல்லாம் ஒடுங்கி மழைத் தண்ணி நிலத்தில விழ வைக்கிற மரம் இது. பூமியை குளிர்விக்கிற நோக்கமுண்டு அதுக்கு. நல்லது செய்ற ஒண்ணை தூங்கு மூஞ்சி மரம்னு சொல்லிட்டாங்க" என்றார் மார்க்கர். 


அமர்ந்த நிலையிலேயே என்னுடைய வெண்ணிற விளையாட்டு உடையைத் தொட்டுப் பார்த்தேன், மண்ணொட்டிச் சொதசொதவென இருந்தது ஈரம். ஏனோ அதை உதறத் தோன்றவில்லை உடனடியாக. காலம் முழுக்க ஒட்டி வரப் போகிற செம்மண் அதுவென அறியவும் இல்லை அப்போது. கன்னச் சதைகள் தளர்ந்து தொங்கிய மார்க்கர், அந்த பரந்துவிரிந்த முதிய மரத்தைப் போலவே தெரிந்தார் எனக்கு. என்னை உழற்றிக் கொண்டிருந்த அழுத்தம் ஒன்றினுள் இருந்து மீட்டுக் கொடுக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார். பழக்கப்பட்ட உறுதுணைகளிடம் முதிய யானையொன்று செய்வதைப் போல, தலையை ஆட்டியபடி வெற்றிலையை அதக்கிக் கொண்டிருந்தார் என்னருகே அமர்ந்து. 


சுண்ணாம்பு பவுடர் அடங்கிய ஈய வாளியைத் தூக்கிக் கொண்டு, மைதானத்தை குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கோடு போட்டுப் பிரிக்கிறவர் என்பதாலேயே அவருக்கு மார்க்கர் எனப் பெயர். எப்போது பந்து எழும்பும்? துள்ளும்? அவருக்கு எவரைக் காட்டிலும் மைதானத்தை நன்றாகத் தெரியும். தூர தேசத்து மைதானங்களின் மடிகளை எல்லாம் பார்த்தவர். அதில் பெருங்கனவுகளுடன் துள்ளி மடிந்த எத்தனையோ முகங்களையும் கண்டவர். 


அன்றைக்கு அந்த மைதானத்தில் பார்த்த போட்டி ஒன்றில் அவ்வணி அணிந்திருந்த மஞ்சள் நிற ஜெர்ஸியை அணிவது குறித்து நான் விசனப்பட்டுக் கொண்டிருந்ததையும் அறிந்தே இருந்தார் அவர். கடமானைப் போல மைதானத்தில் துள்ளியாடும், பெங்களூர் ராணுவ அணியில் விளையாடிய தாம்சனைப் போல ஆக வேண்டும் எனக்கு. "உனக்கு விளையாட்டுன்னா என்னன்னு சொல்லி குடுத்திட்டோம். ஆனா பெரிய மைதானத்தில விளையாட நீ இன்னமும் கத்துக்கலை. ஆசை இருந்தா பத்தாது. நோக்கமும் குறியும் ஒண்ணா சேரணும். மைதானத்தில பந்து ஒட்டி உருள்ற மாதிரி. இது உன்னோட மைதானம் இல்லை. உடனே கிளம்பி அங்க போயிடு. அங்க இருக்கற கோச் உன்னை இன்னொரு இடத்துக்கு கைமாத்தி விட்டிருவாரு. அவர் ஒரு சித்திரக் குள்ளன்" என மார்க்கர்தான் முதன்முதலாக அதைச் சொன்னார் எனக்கு. அவ்வுருவம் எனக்குள் பேருரு கொண்டெழுந்தது ஒரு கருங்கற் சிலையைப் போல. கண்களை மூடிக் கொண்டேன் அனிச்சையாக. 


அப்போது படித்துக் கொண்டிருந்த பதினோராம் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, திருநெல்வேலி விளையாட்டு விடுதியில் சேர்வதெனத் தீர்மானித்தேன். ஏனெனில் பதினோராம் வகுப்பில்தான் அங்கே சேர முடியும் என்பதனால், மீண்டுமொரு முறை அவ்வகுப்பைப் படிக்கத் தயாரானேன். "காணாததை கண்ட மாதிரிக்கு கிறுக்கு பிடிச்சு அலையுது இது" எனச் சொன்ன பசுபதி அத்தைதான் சுருக்கில் முடிந்து வைத்திருந்த கசங்கிய ரூபாயை எடுத்து அளித்துத் திருநூறு பூசி அனுப்பி வைத்தாள். கருவேலம் புதர்கள் அடங்கிய அவ்வூரை விட்டு, பெட்டி படுக்கையுடன் சைக்கிளை மிதித்துக் கொண்டு, அதுவரை அறிந்தேயிராத, பச்சை வயல்கள் போர்த்தியிருந்த ஒரு ஆற்று வழித்தடத்தைத் தாண்டி, அந்தச் சித்திரக் குள்ளனின் மடியில் போய்ச் சேர்ந்தேன். "ஏற்கனவே விளையாடுகிறவந்தானே?எதற்காக இங்கே வந்தாய்?" என்றார். "இதுவரை செய்தவைகளின் செய்யப் போகிறவைகளின் அடிப்படைகளை புரிந்துகொள்ள என மார்க்கர் சொல்லச் சொன்னார்" என்ற போது, மூக்கு சிவந்து சிரித்துக் கொண்டார், மலைகள் சூழ்ந்த உபதலையில் பிறந்து வளர்ந்த அவர். 


அதுவரை நான் கற்றுக் கொண்டிருந்த வித்தைகள் எல்லாமும் பல்லிளித்தன, நன்றாக அடிவாங்கி நூல்பிரிந்த ஒரு தோல்ப் பந்தைப் போல. முதலில் அத்துறைக்கான பணிவைக் கற்றுக் கொடுத்த அவர், இறுதியில் மைதானத்தில் உருளும் பந்தாய் மாற்றினார் என்னை. எதிரேயோடும் தடத்தில் குறுக்கே விழும் மட்டைகளைத் தாண்டி ஆகாயத்தில் புள்ளிமானைப் போலத் தவ்வுகிற வித்தையைக் கற்றுக் கொடுத்த அவர், என்னைத் திரும்பவும் வரைந்தார் அம்மைதானத்தில் ஓர் புதிய சித்திரமாய். அச்சித்திரத்தில் அவருடைய வியர்வையின் மணம் ஒட்டியிருக்கிறது உப்பரிந்த தடத்தைப் போல. எங்கெங்கோ அடிப்படை வித்தைகளைக் கற்றுக் கொண்டிருந்திருக்கலாம் என்றாலும் அவர்தான் அடையாளம் எனக்கு. சிதறிக்கிடந்த என்னை அத்துறையில், டர்ப் பந்தைப் போலப் பூரணமாக்கிய வகையில், அவருடைய  மாணவனாகவே இன்றைக்கும் அறியப்படுகிறேன் அவ்விளையாட்டு வெளியில். 


"விளையாடத்தான் வந்திருக்கிறாய், சிவப்பு அட்டை வாங்கி வெளியேறுவதற்கு அல்ல" என வாழ்விற்கான அடிப்படை ஒன்றையும் சேர்த்துக் கற்பித்தவர் அவர். என்னை மிகச் சரியாக ஒருபெரிய வட்டத்திற்குள் கைமாற்றிய வகையில், ஆடத் துவங்கிய காலத்தில் எனக்கு ஆட்டத்தின் அடிப்படைகளைச் சொல்லித் தந்தவர்களை அவர் கௌரவப்படுத்தவும் தவறவில்லை. "விளையாடும் போது கேலரியை பார்க்காதே" எனப் பனியைப் போல உருகுகிற வார்த்தைகளை எனக்குள் ஊன்றியவர். அவ்வெளியை விட்டு வெளியேறிய பிறகும் இன்றைக்கும் இவ்வரிகள் என்னைவிடாமல் துரத்துகின்றன, ஊனை உருக்குகிற வெப்பம்கூடிய வார்த்தைகளாக. எதனைக் காட்டிலும் வலியவை அவை. 


என்னுடைய இரண்டாவது ஆட்டம் அக்கரிசல் மண்ணில் இருந்து எழுத்துத் துறையில் துவங்கிய போது, போதாமைகள் சூழ்ந்து மூச்சுமுட்டிக் கொண்டிருந்தது. தெரிந்த தடத்தில் நடைபோடுகிற வண்டிமாட்டைப் போலப் புறம் தெளிவாகவும் துலக்கமாகவும் தெரிந்தாலும், அகம் எதையோ செய்யச் சொல்லி ஏங்கிக் கொண்டிருந்தது. அதுவரை அறியாத தடமொன்றைப் பிரமைகள் எதுவும் கொள்ளாமல், அச்சமின்றிப் பற்றிக் கொள்ளச் சொன்னது அது. எனக்கான மைதானம் இதுவல்ல, என அடியாழம் அரற்றிக் கொண்டிருந்த வேளையில்தான் என் பயிற்சியாளரை ஒத்த சித்திரக் குள்ளன் என்னை வாரிச் சுருட்டிக் கொண்டார். நான் அதிகமும் கதகதப்பாய் உணரும் சொற்களினுச்சி அதுவென உணர்ந்து கொண்டேன். 


திசைகளின் நடுவே மேற்குநோக்கித் திரும்பி உயர்ந்து நின்றிருந்த அச்சித்திரக் குள்ளன் எனக்குள் விதைத்தவைகளைத் தொகுத்துக் கொள்கிறேன் இப்போது. அதன் அடிமடியில் செம்மண் ஒட்டிய உடையோடு அமர்ந்திருந்த சிறுவனைப் போலத்தான் இக்கணத்திலும் உணர்கிறேன். 


"பாலுள்ள பசுவின் மடி எனினும் குருதியே கொசுவிற்கு உகந்தது" என அவர் எழுதிய வரிகளே என் ஒட்டுமொத்த இயங்கியலுக்குமான ஆதாரம். அதுவொரு அவரால் சுட்டப்பட்ட மேற்கோள்தான். ஆனால் இதைவிட மேலான வரிகள் பலவற்றின் வழியாக அவர் எனக்குள்ளும் எவருக்குள்ளும் நிதமும் புகுந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார் ஒரு மலைத் தேசத்துப் பனிப் புகையைப் போல. 


போதையின் கரங்களில் ஒப்புக்கொடுத்து, அதில் இருந்து மாயக் கரமொன்று என்னை மீட்டெடுக்காதா என ஏங்கிக் கொண்டிருந்த காலங்களில் எல்லாம் என்னை ஈட்டிக் கொடுத்தது விஷ்ணுபுரம்தான். தற்கொலையின் விளிம்பில் ஊசலாடிய போது. மலையுச்சி ஒன்றில் மனம் கலங்கி நின்றிருந்த சமயத்தில். எத்தனை தடவை? அத்தனை தடவையும். "பைபிள் மாதிரி அத கூட வச்சுக்கிட்டே சுத்தறீங்களே" என என் நண்பர்கள்கூட மிதமாய்ச் சுட்டிக் காட்டுவார்கள். 


என் உள்முகத்தை உற்றுநோக்கக் கற்றுத் தந்த அந்நகரில் உலவிய சங்கர்ஷனும், பிங்கலனும் நானே. அதுவரை உள்முகம் எதுவென கேள்வி கேட்கத் தெரியாதவர்களாக இருந்தோம். ஒருவிளையாட்டு வீரனாய் அகம் குவிந்த பரவச நிலைகள் பலவற்றை எட்டியிருக்கிறேன். ஆனால் அங்கே அகம் குவிகிறது என்பதை வெளியில் நின்று எட்டிப் பார்க்கப் பழக்குவித்து, மேலே நின்று பார்க்கிற தோதில் சன்னலைத் திறந்து விட்டது அச்சித்திரக் குள்ளனே. சன்னலுக்குள்ளே தலையைவிட்டு இருளில் கொத்துக் கொத்தாய்த் திரியும் மின்மினிக்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன் இப்போது. எப்போதும் நான் உற்றுப் பார்த்தபடியே இருக்கும், உள்ளுக்குள்  புறப்பட்டு மேல்நோக்கிக் கிளம்பித் திரும்பவும் வழியும் நீரூற்றின் அடித்தண்டு அவர் உரமிட்ட வார்த்தைகளென அடியாழத்தில் இருந்து உணர்கிறேன். 


புற அழுத்தங்களின் நிமித்தமாக அகம் செயல்படும் அடிப்படைகள் குறித்த அறியாமைகளில் இருந்தேன். அது மட்டுமல்லாமல், ஒவ்வொன்றின் செயல்படும் விதத்தையும் பிரித்துத் தொகுத்துப் புரிந்து கொள்ளும் வித்தையைச் சுட்டிக் காட்டி ஆற்றுப் படுத்திய அத்தாரோவின் ஏடன் அவர்தான் என்பதை இந்த இடத்தில் சொல்கிறேன். ஒருவகையில், சுபிட்சமுருகனை இன்னொரு அகத்தினுள் அமர்ந்தெழுதிய, எனக்குக் கிடைத்த அழுக்கு மூட்டையும் அவரே. பிரேத அறையொன்றை நெருங்கிப் பார்க்கச் சொல்கிற வார்த்தை ஒன்றின் வழியாக என்னைச் சூழ்ந்திருந்த, அதுபோலவான பெருவச்சங்கள் பலவற்றில் இருந்து அக்காலத்தில் என்னை மீட்டெடுத்த மாயக் கரமும் அதுவே. நேர்மறை அகவுணவூட்டிய கெத்தேல் சாகிப்பின் கரம். 


அகவலைச்சல்கள் கொண்ட என்னைப் போன்றவர்கள் இயல்பாய் வழிப் போக்கில் ஒழுகிச் சென்று சேரும் மடியதுவெனத் துணிந்து சொல்வேன். அதனால்தான் தந்தைமைகூடி குமரித் துறைவியை நோக்கி, அவர் கரைகிற கணங்களில் எங்களது அகமும் மிகச் சரியாக ஒட்டிச் சிலிர்க்கிறது. நாங்களும் செண்பகவல்லியம்மனின் மூக்குத்தி ஒளியை ஏந்தி வளர்ந்தவர்கள் ஆயிற்றே? அதனால்தான் எதிரேயிருக்கிற ஒன்றின், அலைச்சல்களை உருக்கி இன்னொன்றாய் மாற்றும் எண்ணைச் சட்டியாகவும் அவ்வகமும் முகம்காட்டி நிற்கிறது. 


இலக்கிய வட்டச் சுழற்சியில் இருக்கிற நண்பர் ஒருத்தரிடம் பேசிக் கொண்டிருக்கையில், "ஜெமோ எந்நேரமும் மிதமிஞ்சிய குற்றவுணர்விலேயே இருப்பார்" என்றார். அதை அவர் எதிர்நிலை வாதமாக முன்வைத்து நிறுவ முயன்றார். அவர் சென்றபிறகு அதுகுறித்து ஆழமாகச் சிந்தித்தேன். 


என்னைப் போன்றவர்கள் உழல்கிற எங்களுடைய தலைமுறையை முன்னோக்கி உந்திச் செலுத்துவது எது? "எதைத் தொலைத்தாலும் மீட்டுவிடலாம். குற்றவுணர்வைத் தொலைத்து விட்டால் எந்த ராட்சதக் கை வந்தாலும் மீட்டெடுக்க முடியாது" என்பதை அந்த நண்பருக்குப் பதிலாக எழுதினேன். எனக்காகவும்தான். 


ஏனெனில் அவரின் அலைச்சல்கள் வழியாக, அதன் காரணமாய் பாதாளத்தில் தலைகுப்புற விழச் செய்கிற காரணிகள் பலவற்றினூடாக, எதிர்த்து நெஞ்சைக் காட்டுகிற செயலூக்கத்தை விடாமல் பற்றிக் கொண்டிருப்பதற்கு ஆதாரமே அக்குற்றவுணர்வுதான். எங்களைப் போன்றவர்களை அவரின் கீழே இணைக்கிற, தேர்ந்த கொல்லனின் கைநுனிப்பட்ட ஆணியச்சும் அதுவே. அதை நான் நேர்மறையாக அவரிடமிருந்து பெற்ற பெருஞ் சொத்தாக, பேறாக எண்ணுகிறேன். அவ்வுணர்வுதான் எங்களைப் போன்றோரை அரிய செயலை நோக்கி அணுதினமும் விசையுடன் முன்னோக்கித் தள்ளுகிறது. செயலின்மையைப் போலவொரு இழிந்தநிலை இவ்வுலகில் இல்லை என்கிற நாணத்தை அவர் திரட்டித் தந்த அவ்வுணர்வின் வழியாகவே கையேந்திப் பெற்றும் கொள்கிறோம். என்னளவில் கேலரியில் அமர்ந்து போட்டியைப் பார்க்கிறவனாக உணர்வது, தற்கொலைக்கு ஒப்பானது. முடியாத காலகட்டங்களில்கூட எனக்குப் பதிலாய் என் மனம் அங்கே தலையைச் சிலுப்புகிற, வெப்போர்ச் சேவலைப் போல ஆடிக் கொண்டிருக்கும். அதுவாகவே மாறி அதுவாகவே கரைகிற இவ்வுணர்வைத் தகுதியான சொற்களின் வழியாக எங்களுக்கெல்லாம் கடத்தியது அவரே. 


அவர் அடிமுடி இல்லாத, தனித்தனியாகப் பிரித்தறிய முடியாத கோடிச் சொற்களுக்கு  அதிபதி. செயலூக்கம் என்கிற ஒன்று திரட்டிய உணர்வை எங்களுக்கெல்லாம் ஊட்டிய வகையில், ஒப்பில்லாத மைதானத்தின் மடி அதுவென ஆழமாக உணர்கிறேன். எனக்கு உகந்தது எதுவோ அதை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டபடி இருக்கிறேன். பண்ணி வாகை மரத்தினடியில் அமர்ந்து, செங்காந்தளை ஒத்த நிறப் பூக்களைப் பொறுக்கியபடி, மடியின் ஈரத்தில் பச்சைத் தாவரங்கள் சில முளைக்கக் காணுகிறேன். அதுதான் அதனின் இயல்பும் நோக்கமும் அடிப்படையும். சித்திரக் குள்ளன் ஒருவனாய் ஓங்கி நின்றிருக்கும் என்றென்றைக்குமான மழை மரம் அவர்!

***

1 comment:

Powered by Blogger.