ஆசிரியரை அடைதல் - குக்கூ சிவராஜ்



ஈரோட்டுக்கு அருகிலிருக்கும் அறச்சலூர் எனும் மலையடிவார கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தேன்.  விவசாயம் பிரதானத் தொழிலாக இருந்தபோதிலும், அதற்கடுத்தபடியாக நெசவுத்தொழில் பெரும்பான்மையாக இருந்தது. நானூறு வீடுகளுக்கும் அதிகமாக கைத்தறி நெசவு நெய்யப்படும் பகுதியில் எங்கள் வீடும் அதிலொன்றாய் அமைந்திருந்தது. என் அம்மாவுடைய அப்பாவான 'அப்புச்சி' தீவிரமான காந்தியப்பற்றாளர். பூமிதான யாத்திரைக்காக தமிழகத்தில் வினோபாவுடன் சேர்ந்து பல்வேறு ஊர்களுக்கு நடந்து திரிந்தவர். என் அம்மா கண்ணம்மா புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையவர். எங்கள் தெருவில் ஐந்தாறு வீடுகள் தள்ளி அரசு கிளைநூலகம் இருந்தது. அதன்வழியாக பூந்தளிர், அம்புலிமாமா போன்ற சிறார்நூல்கள்  எனக்கு அறிமுகமாகின. 


நான் பதினொன்றாம் வகுப்பு செல்லத் துவங்குகையில் இயற்பியல் ஆசிரியரான ஓ.வி.சரவணக்குமார் என் வாழ்வில் அறிமுகமானார். மிகச்சிறந்த வாசிப்பாளரான அவர் எழுத்தாளர் பிரமிளுடன் தொடர்பிலிருந்தார். பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் நான் தோல்வியுற்றேன். அகத்தில் பாரங்கவியத் துவங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில்தான் என் ஆசிரியர் எனக்கு சுந்தர ராமசாமியின் படைப்புலகத்துள் என்னை திசைப்படச் செய்தார். 'ஒரு புளியமரத்தின் கதை'தான் நான் முழுமையாக வாசித்த முதல்நாவல். அதன்பின் அவர் அசோகமித்திரனின் படைப்புகளை எனக்கு பரிந்துரைத்தார். வாசிப்பின் வழியாக என் வாதைகளிலிருந்து சிறுகச்சிறுக மீண்டுகொண்டிருந்தேன்.


அத்தகைய காலச்சூழலில்தான் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் 'ரப்பர்' நாவல் வெளியாகியது. அந்நூலின் பின்னட்டையில் இருந்த அவருடைய தோற்றமும், எழுத்தாளர் பற்றிய குறிப்பிலிருந்த வயதும் எனக்குள் ஒருவித ஈர்ப்பையும் கவனக்குவிப்பையும் உண்டாக்கியது. அகரம் வெளியிட்ட அப்புத்தகத்தின் பின்னட்டையிலிருந்த இளம் ஜெயமோகனின் முகம் இன்றளவும் என்னுடைய நினைவில் தெளிவுறப் பதிந்திருக்கிறது. 


சென்னையில் சினிமா, இலக்கியம் என சுயத்தேடலின்பொருட்டு எங்கெங்கோ சுற்றியலைந்து திரிந்தேன். என் அப்பாவுடைய குடிப்பழக்கம் காரணமாக குடும்பம் பெரும் சீரழிவுக்குள் வீழத்தொடங்கியது. உறவுகளைக்கூட அணுகமுடியாத ஒருவித சமூக அவமானமாகவே நான் அதை உணர்ந்தேன். எனக்கு அப்போது இருபது வயது. விருப்பத்துறை சார்ந்து இயங்கி சென்னையிலும் என்னை நிலைநிறுத்திக்கொள்ள இயலாத நெருக்கடிச்சூழல். அத்தகைய சூழலிம்கூட, எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதிவந்தேன். ஒருநாள், சென்னையில் நிகழ்ந்த நிகழ்வுக்கு சுந்தர ராமசாமி வருவதையறிந்து அவரை 'நேரில் வந்து சந்திக்கலாமா?' எனக் கேட்டிருந்தேன். அவர் இசைவு தெரிவிக்கவும் நான் அந்நிகழ்வுக்குச் சென்றேன்.

 

பெரும் தயக்கத்தோடு அந்த இலக்கிய நிகழ்வில் ஒதுங்கி நின்றிருந்தேன். தேநீர் இடைவேளை நேரத்தில், யாரோ ஒருவரோடு அவர் பேசிக் கொண்டிருக்கையில் சட்டென என்னை நோக்கித் திரும்பி 'சிவராஜ்தான நீங்க?' எனக்கேட்டு, நான் பதற்றமடையத் துவங்கியவுடன் என் இருதோள்கைகளையும் இறுகப்பிடித்து அணைத்துக் கொண்டார். அச்சமயம், நாட்டியக்கலைஞர் அனிதா ரத்னம் அவரெதிரில் நின்றிருந்திருந்தார். அவரிடம், "என் நெருக்கமான நண்பர்" எனச்சொல்லி அறிமுகப்படுத்தினார். அவருடைய கை என் தோளைவிட்டு விலகவேயில்லை. 'நெருக்கமான நண்பர்' என்ற வார்த்தையை மட்டுமே நான் மீளமீள நினைத்து கண்ணீர்மல்கிக் கொண்டிருந்தேன். 'என் வாசகர்' என்று சொல்லியிருக்கலாம், ஆனால் அவர் அப்படிச் சொல்லாமல் நண்பர் என அறிமுகம் செய்துவைத்தது எனக்குள் கிளர்த்திய பேருணர்வு சொற்களுக்கு அப்பாலானது. அந்தத் தருணத்தை நினைத்தபடியே சாலைவழி நடந்துவந்து வடபழனி அறைக்கு வந்தடைந்தேன். 




ஏதோவொரு மனநெருக்கடி அதிகமாகும் சூழ்நிலைகளில் சட்டென சுந்தர ராமசாமி வீட்டுத் தொலைபேசி எண்ணிற்கு அழைத்துவிடுவேன். சிலமுறை இரவு ஒன்பது மணிக்கு பிறகுகூட அழைத்திருக்கிறேன். அவ்வாறான சமயங்களில், சுராவின் மகன் கண்ணன் தொலைபேசியை எடுத்து, "அப்பா தூங்கிட்டாரு. ஏதாச்சும் அவசரமா தகவல் சொல்லணுமா?" என்பார். "இல்ல... அவர் குரல்கேட்டா போதும்ணு தோணுச்சுங்க" எனச் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிடுவேன். அப்படி இரவில் அவரை அழைத்ததுக்கு மறுநாள், வழக்கம்போல வாழ்வோட்டத்தில் அந்த நெருக்கடிச்சூழல் மறைந்துவிடும். கடக்கவே முடியாத இரவென ஒன்று இல்லவே இல்லை என்பதை அக்காலகட்டத்தில் நான் நெஞ்சுணர்ந்தேன்.


ஆனால், சுரா வீட்டுக்கு நான் அழைத்திருந்த இருநாள் கழித்து என் வீட்டுக்கு ஒரு தபால்பொதி வரும். வாங்கிப் பிரித்தால் அதில் அவருடைய இரு புத்தகங்களும், அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதமும் இருக்கும். புத்தகத்தின் முதற்பக்கத்தில் தன்னுடைய வாசக மேற்கோள் ஒன்றினை எழுதி கையெழுத்திட்டு அனுப்பியிருப்பார். இப்பொழுது நினைத்தாலும் அந்த கணங்களின் நெகிழ்வு என்னை ஒட்டுமொத்தமாக நிலைகுலைத்துவிடும். எழுத்தாளர் என்பதற்கும் மேலாக அவரை என் மானசீக ஆசிரியராகவே நான் உருவகித்துக்கொண்டேன். ஓர் ஆசிரியரைக் கண்டடைந்த அகநிறைவில் அவர்தந்த சிறுசிறு நம்பிக்கைகளைப் பிடித்து வாழ்வை நகர்த்திவந்த சமயத்தில், சட்டென சுந்தர ராமசாமியின் மரணம் என் அகத்தை உடைத்து நொறுங்கச் செய்தது. மிகுந்த உளவீழ்ச்சிக்கு உள்ளானேன். 


அத்தகைய துயர்க்காலத்தில், சில நாட்கள் கழித்து அந்த நிகழ்கையை நான் அடைய நேர்ந்தது. இறையருள்தருணம் போல மிக மரியாதைக்குரிய ஒன்றாக அதை இன்றளவும் நினைவுக்குள் பத்திரப்படுத்தி உள்ளேன்... சுராவைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய 'நினைவின் நதியில்' கட்டுரைகளை நான் முதன்முதலாக வாசித்தேன். உண்மையில், நான் என் ஆசிரியரை மீண்டும் கண்டடைந்த தருணமென்றே அதைக் கருதுகிறேன். ஓர் ஆசிரியமனதை இழந்த இழப்பின் இடைவெளியை வெகுவிரைவில் என்னால் நிரப்பிக்கொள்ள இயன்றது. 'நினைவின் நதியில்' நூலில் ஜெயமோகன் அவர்கள் எழுதியிருந்த கட்டுரைகள் என் மனதுள் இன்னும் அணுக்கமாக சுராவை துலங்கச்செய்தன.


சென்னையில் நடந்த 'நினைவின் நதியில்' நூல்வெளியீட்டு நிகழ்வுக்கு நான் சென்றிருந்தேன். அந்நிகழ்வுக்குப் பிறகு, என்னுடைய மானசீக ஆசிரியராக நான் ஜெயமோகன் அவர்களை ஏற்கத் தொடங்கினேன். என்னளவில், சுந்தர ராமசாமி அவர்களின் மறுபிறப்பென ஜெயமோகன் அவர்கள் என் அகத்துள் நிகழ்ந்தார். மிக மிக அந்தரங்கமான தருணமாகவே அதை மதிக்கிறேன் நான். குரு மட்டுமே நிறைக்கும் ஓர் அகவெற்றிடம் நம் எல்லோருள்ளும் உண்டு. அதை நிரப்பிய ஓர் நற்குருவாக படைப்பாளுமை ஜெயமோகன் அவர்கள் என்றும் என் முதன்மையான ஆசிரியர்.


ஓர் ஆசிரியர் நமக்குள் உண்மையில் நிகழ்த்துவது என்ன? கன்னட நடிகர் இராஜ்குமார் கடத்தல் வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் நான்குபேர் கைதாகினர். அதில் ஏழுமலை, சுப முத்துக்குமார், மாறன் என மூவரின் பெயர் எனக்கு நினைவிருக்கிறது. கைதி ஏழுமலை எழுத்தாளர் சுராவுக்கு 'அன்றில்' எனும் பெயரில் சிறைச்சாலையிலிருந்து தொடர்ந்து கடிதங்கள் எழுதினார். சுராவும் அந்த எல்லா கடிதங்களுக்கும் பதில் அனுப்பினார். இந்த கடிதவழி உரையாடல்களை  'சுந்தர ராமசாமி ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டிருந்தனர். 


பல கடிதங்களின் கடைசிவரியில், "என்றாவதொருநாள் நீங்கள் ஒரு புதிய சூர்யோதத்தைக் காண்பீர்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என எழுதியிருப்பார். ஏழுமலை அவர்கள் அரைப்பக்கம் எழுதியிருந்த கடிதத்துக்கு சுரா ஐந்து பக்கங்கள் அளவுக்கு பதில் எழுதியிருப்பார். சுரா மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கையில்கூட, ஒரு நீண்ட கடிதத்தை எழுதி ஏழுமலைக்கு அனுப்பிவிட்டே வெளிநாடு சென்றிருப்பார். இந்த எல்லா தகவல்களும் அப்புத்தகத்தில் தேதியுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறையிலிருந்து விடுதலையான பிறகு ஏழுமலை அக்கடிதங்களை புத்தகமாக்கி பிரசுரித்திருக்கிறார். சுராவின் ஆசிரிய அகம் எத்தகைய மானுடவிரிவு கொண்டது என்பதை அப்புத்தகம் நமக்கு வெளிச்சப்படுத்தக் கூடும்.


அப்புத்தகத்தை வாசித்துவிட்டு, எப்படியாவது ஏழுமலையைச் சந்தித்துவிட மாட்டோமா என ஏங்கித் தவித்திருக்கிறேன். யார்யாரிடமோ கேட்டுத் தேடியலைந்து அவருடைய தொலைபேசி எண்ணைப் பெற்று அவருக்கு அழைத்துப் பேசினேன். நெகிழ்வுடன் அந்த முதல் உரையாடல் நிறைவுற்றது. அதன்பின் நிறையமுறை இருவரும் பேசிக்கொள்வோம். அகநெருக்கடி மிகுந்த ஒருநாளில் யதேச்சையாக அவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் ஏழுமலை அண்ணன், "இன்னைக்கு சுந்தர ராமசாமியோட நினைவுநாள், தெரியுமா?" என்றார். தற்செயலாக அழைத்துப்பேசிய அந்த தொலைபேசி உரையாடல் அப்படியே சுராவைச் சுற்றியே நீண்டது. சிறிது நேரம் கழித்து ஏழுமலை அவர்கள், "இப்போ நான் பின்தொடரும் நிழலின் குரல் படிச்சிட்டிருக்கேன். கொஞ்ச வருசங்களுக்கு முன்னாடியே இந்த புத்தகம் எனக்கு கிடைச்சிருந்தா, நான் ஜெயிலுக்கு போயிருக்க மாட்டேன்" என்றார். அது உண்மைதான் என்பதை அவர் குரலின் அழுத்தம் எனக்கு உணர்த்தியது.




ஏழுமலை சிறையிலிருந்து விடுதலையாகி, தற்போது ஒரு தேநீர்க்கடை வைத்துள்ளார். நவீன இலக்கியப் புத்தகங்கள் மற்றும் மிக முக்கியமான நல்ல படைப்புகளைக் கொண்ட புத்தகக்கடையும் இணைந்த தேநீர்க்கடை அது. இலக்கியம் பேசி புத்தகங்களைப் பகிர்கிறார். மாதாமாதம் இலக்கியக் கூடுகைகள் ஒருங்கிணைக்கிறார். சொல்லப்போனால் பெரும் பொருளியல் நெருக்கடியில் அவர் இருக்கிறார். ஆனாலும், தன் இலக்கியமனதை வைராக்கியமாகப் பிடித்துக்கொண்டு தன் வாழ்வினை எதிர்கொண்டு வருகிறார். எத்தனையோ மனிதர்களுக்கான உதாரணமாக அவர் வாழ்வு அர்த்தம்கொண்டுள்ளது இன்று.


ஆனால், நம்பிய தத்துவத்தின் இருண்மையை விட்டு வெளியேற விரும்பாத, தன்னை மறுபரிசீலனை செய்யத் துணியாதத சுப முத்துக்குமார் என்பவர், விடுதலையாகி வெளிவந்த சில நாட்களிலேயே கொலை செய்யப்படுகிறார். எனில், ஓர் ஆசிரியர் நமக்குள் உண்மையில் நிகழ்த்துவது என்ன? இவ்வாழ்வை எப்படியாவது நேர்மறையாக எதிர்கொள்ளச் செய்யும் வைராக்கியத்தை, நம்பிக்கையின் மீதான தீர்க்கத்தை ஓர் ஆசிரியரின் துணையிருப்போ அல்லது சொல்லிருப்போ தான் நமக்கு அளிக்கிறது. 


என் வாழ்வில் நானும்கூட தமிழ்தேசியம் சார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் மிகத் தீவிரமாக மனதைச் செலுத்தி எதிர்மறையையும் அவநம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டு, இருண்மைப் பித்தேறி இம்மானுடம் மொத்தத்தையும் என் எளிய அரசியல் காரணங்களுக்காக வெறுக்கத் துணிந்த ஓர் சூழலில் நின்றிருக்கிறேன். ஏழுமலையின் வாழ்வும், என் வாழ்வும்கூட 'பின்தொடரும் நிழலின் குரல்' நாவலில் பிரதிபலிப்பதை அகப்பூர்வமாக உணர இயன்றது. இன்று எத்தனையோ இளையோர்களை வறட்டுத் தத்துவத்தின் முட்கவைக்கு பலியாகாமல் திசைதிருப்பிய பெருந்திறவு அப்புத்தகத்தால் நிகழ்ந்திருக்கிறது.


சுந்தர ராமசாமியின் மரணம் எனக்குள் எத்தகைய அகநடுக்கத்தினை உருவாக்கியதோ, அதேவிதமான சமன்குலைவை 'யானை டாக்டர்' வாசித்த இரவிலும் நான் அடைந்தேன். ஒருவித மனங்கொள்ளாமை சில நாட்கள் நீடித்தது. வெறும் கதையென அதிலிருந்து வெளியேறிவிட இயலவில்லை. எண்ணத்தின் சுழல்சுருளுக்குள் மீளமீள ஆழ்ந்துபோனேன். அதன்பின், அய்யா நம்மாழ்வாருடன் பொற்குணம் எனும் ஊரில் தங்கியிருந்த சமயம்,  அக்கதையை நம்மாழ்வாருக்கு வாசித்துக் காண்பித்தேன். முக்கால்வாசி கதையைக் கடந்தநேரத்தில் அய்யா விசும்பி அழுது கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார். எல்லா மனிதனின் ஆன்மாவுக்குள்ளும் அக்கதையின் சொற்கள் ஊடுருவ வல்லன என அன்றறிந்தேன். (நம்மாழ்வார் உருவாக்கிய வானகம் இயற்கை வேளாண் பண்ணையானது பொருளியல் நெருக்கடியில் சிக்கியிருந்த சூழ்நிலையில், விஷ்ணுபுரம் நண்பர்கள் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி 'சூரியஒளி மின்சார அமைப்பு' ஒன்றை அங்கு நிறுவிக் கொடுத்தார்கள். அந்தச்சூழ்நிலையில் அது எத்தகைய பேருதவி என்பதனை நானறிவேன்.)


யானை டாக்டர் கதையை கேட்டு முடித்துவிட்டு அய்யா நம்மாழ்வார், "இந்த கதைய நிறைய இளைஞர்கள்ட்ட கொண்டுபோய் சேக்கணும்ய்யா. ஏன்னா, ஒரு மனுசன் தன் வாழ்நாளெல்லாம் அர்ப்பணிச்சு ஒரு துறைல வேலைசெஞ்சா தான் அவன் நம்ம எல்லாத்துக்கும் மூத்த ஆசிரியரா மாறமுடியும். இந்த உண்ம இந்த கதையில இருக்குய்யா. இந்த கதை நிறைய மனச மாத்தும்ய்யா" என்றார். ஜெயமோகன் அவர்கள் அக்கதையை மக்கள் பிரதியாக மாற்றுவதற்கு அந்நேரம் அனுமதித்திருந்தார். ஆகவே, முதற்கட்டமாக இரண்டாயிரம் பிரதிகள் அச்சடித்து மக்களுக்கு வழங்கினோம். திருமணம், இலக்கியக் கூடுகைகள், பிறந்தநாள் பரிசு என எல்லா விழாக்களிலும் அது கரமளிக்கப்பட்டது. எங்கெங்கோ நண்பர்களிடமிருந்து தொகை பெற்று ஆயிரமாயிரம் பிரதிகளாய் அந்நூலை அடுத்தடுத்து அச்சுப்படுத்தி அனுப்பினோம். அச்சமயத்தில், 'மின்சார இருசக்கர வாகனம்' தயாரிக்கும் நிறுவனத்தில், ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல் பிரிவில் ஸ்டாலின் பாலுச்சாமி பணியாற்றிக் கொண்டிருந்தான். அவனது சம்பளத் தொகை முழுவதையும் தந்து அப்புத்தகத்தின் அச்சாக்கத்திற்கு பெருந்துணையாக நின்றான்.




குக்கூ காட்டுப்பள்ளி வாயிலாக வருடாவருடம் ஏதேனும் ஒரு ஆளுமை மனிதருக்கு 'முகம் விருது' வழங்குவது வழக்கம். அந்தமுறை அவ்விருதை யானை டாக்டர் கதையைப் படைத்ததற்காகவே எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு அளிக்கலாம் என நண்பர்கள் கூடி முடிவுசெய்தோம். விருதளிப்பு நிகழ்வை திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியில் வைத்து நிகழ்த்தத் திட்டமிட்டோம். ஒருமாத காலத்திற்கு முன்பாகவே, அப்பள்ளிக்கூட குழந்தைகளுக்கு யானை டாக்டர் கதையை சைகை மொழியில் வாசிக்க வாய்ப்பு உண்டாக்கினோம். அந்தப் பிள்ளைகள் சேர்ந்து அக்கதையை ஒரு மெளனநாடகமாக மாற்றினார்கள். டாக்டர் 'கே'வுடைய இடத்திற்கே அக்குழந்தைகளை அழைத்துச் சென்று அச்சூழலைக் காண்பித்தோம். 


அக்கதையை தாங்கள் உள்வாங்கிக் கொண்ட விதத்தில் அக்குழந்தைகள் அவரவர் சுயவிருப்பப்படி ஓவியமாக வரைந்து தந்தார்கள். அதை விருதளிப்பு நாளில் கண்காட்சியாக வைத்தோம். அந்நாளில், யானை டாக்டர் கதையைப் பற்றிய தங்களது உணர்தல்களை சைகை மொழியில் அக்குழந்தைகள் ஜெயமோகன் அவர்களிடம் வெளிப்படுத்திய காட்சி என் மரணக்கணம் வரை நினைவகலாத ஒன்று. அன்று, மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள் என் இரு கைகளையும் இறுகப்பற்றி அணைத்துக்கொண்டு அழுதபடியே, "இவனாலதான்ய்யா இத எழுதமுடியும். இவன நிரகாரிக்கவே முடியாது. விமர்சனம் வைக்கலாம், அதையெல்லாம் இவன் தாண்டிடுவான். காலத்தால அழியாத இந்த கதைய இவனாலதான் எழுத முடியும்..." என்று நெகிழ்ந்து பேசியபடியே இருந்தார். 


அடுத்த மூன்று ஆண்டுகள் நாங்கள் யானை டாக்டர் கதையையும், சேகர் தத்தாத்ரியின் சூழியல் ஆவணப்படத்தையும் ஊரூராகக் கொண்டுசென்று பள்ளிக்கூட குழந்தைகளுக்கும், கல்லூரி இளையவர்களுக்கும் அறிமுகப்படுத்தினோம். கிட்டத்தட்ட எங்கள் ஒற்றைச் செயற்திட்டமாகவே அதை நாங்கள் கருதிக்கொண்டோம். அது உருவாக்கிய உளவிசையை இப்பொழுது நினைத்தாலும் வியப்பெழுகிறது. ஜெயமோகன் என்ற சொல் எனக்குள் நிறைத்திருக்கும் அதிர்வுகளை நான் இக்கணம் மீளவும் எண்ணிப்பார்க்கிறேன்.


என்னைப் பொறுத்தமட்டில், இளைய மனங்களில் செயல்சார்ந்த ஓர் தீவிரமான உரையாடலைத் தொடர்ந்து உருவாக்கும் ஒற்றை எழுத்தாளராக ஜெயமோகன் அவர்களை உணர்கிறேன். அவ்வகையில், அவர் சுந்தர ராமசாமியின் அகநீட்சி என்ற எண்ணம் எப்பொழுதும் எனக்குண்டு. ஓர் ஆசிரியமனதாக அவரை நான் கரம்பற்றிக்கொள்வதில் நிறைவெய்துகிறேன். எனது அகத்தருணங்கள் பலவும் அவருடைய சொற்துணையால் அருளப்பட்டுள்ளது.


ஸ்டாலின் பாலுச்சாமி, கருப்பட்டியில் கடலைமிட்டாய் செய்கிறான்; சிவகுருநாதன், கைத்தறி நெசவை மீட்டெடுக்க முழுமூச்சாக இயங்குகிறான்; முத்துவும் மைவிழியும் மாற்றுமருத்துவத்தை எளிய மக்களிடம் சேர்ப்பிக்கின்றனர்; கெளசிக், அருணிமா இருவரும் மரபுக்கட்டடக்கலையை முன்னெடுக்கின்றனர்; மதுமஞ்சரி, ஊரூராக அலைந்து திரிந்து ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமுள்ள வசிப்புப்பகுதிகளில் உள்ள கிணறுகளை புனரமைக்கிறார்; பாரதி கோபால், சுயகல்வியைத் தேடி எனும் பெயரில் ஆளுமைகளின் வாழ்வனுபவங்களை ஆவணப்படுத்துகிறாள்; விஷ்ணுப்ரியா, கழிவு மேலாண்மை சார்ந்து தன் வாழ்வினை அமைத்துக்கொண்டு இந்தியா முழுக்கப் பயணிக்கிறாள்; அருண், பிறந்த குழந்தைகளுக்கான தூயபருத்தித் துணிகளை தயாரித்து கரம்சேர்க்கிறான்; பாலகுருநாதன், நெகிழிக்கு மாற்றாக துணிப்பைகள் தைத்து பரவலாக்குகிறான்; பொன்மணி  மலையடிவார கிராமத்துப் பெண்களுக்கு தையல் பயிற்றுவிக்கிறாள்...


இவ்வாறு குக்கூவைச் சார்ந்த ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் துறையில் செயலியங்குவதற்கும், அவரவர்களின் தன்னறம் எதுவென தீர்க்கம்கொள்வதற்கும் ஜெயமோகன் அவர்களின் சொற்களே உறுதுணையாக இருக்கின்றன. இவர்கள் அனைவருக்குள்ளும் ஒற்றைமனிதர் ஆசிரியநிலையில் அமர்வதென்பதை காலமளித்த ஊழ்வினை என்று உள்வாங்கிக் கொள்கிறோம். அண்மையக் காலங்களில் எங்கள் அனைவரின் அன்றாட உரையாடலில் தவிர்க்கமுடியாததாக அவர் திகழ்வதை நாங்கள் மனதுணர்கிறோம்.



குழந்தைகளுக்கான சிறார் மாத இதழான தும்பி, நற்சிறந்த நூல்களை தேர்ந்த அச்சில் கொண்டுவரும் தன்னறம் நூல்வெளி ஆகியவற்றின் படிப்படியான வளர்ச்சிக்கு ஜெயமோகன் அவர்களின் துணைநிற்றலென்பது என்றுமே எங்கள் நன்றிக்குரியது. பல எழுத்தாளர்கள் உட்பட எத்தனையோ கலைஞர்கள் நலிவுற்ற சூழலில், இடையறாது உதவிக்கரம் நீட்டுவது ஜெயமோகன் மற்றும் அவருடைய நட்புவட்டத் தோழமைகள்தான். எந்நிலையிலும் இதை அவர் பொதுவெளியில் எழுதியதே இல்லை. ஓர் படைப்பாளிக்கு அவருடைய இறுதிக்காலம் வரை அளிக்கப்படுகிற மரியாதையும் பொருளுதவியும் எவ்வளவு அவசியம் என்பதையறிந்து அதை நிறைவேற்றும் அவருடைய பங்களிப்பை தமிழிலக்கியச்சூழல் இனிக் காலந்தாழ்ந்தே கண்டடையும்.


செயற்பாட்டுக்களத்தில் சரிவையோ, அவதூறையோ ஏற்கநேர்கிற பதற்றக் காலங்களிலெல்லாம், ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் இருப்பு எங்களை அரவணைத்து அழைத்துச் செல்கிறது. மனதில் சுமந்திருக்கும் கனவின் மலையுச்சியை மட்டுமே மீளமீள அது காட்டித்தருகிறது. வென்றுகடந்தாக வேண்டிய சுயப்பொறுப்பை அகமுணர்த்துகிறது. பெருஞ்செயல்களை நோக்கி அறைகூவ அறிவுறுத்துகிறது. 'ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை' அளிக்கிறது. 'ஆகவே, செயல் புரிக' என்பதை உச்சாடனம் போல மனதுக்குள் முழங்கத் துணிவளிக்கிறது.


எல்லாவற்றுக்கும் மேலாக... 'புறப்பாடு' நூலில் ஒன்றை ஜெயமோகன் அவர்கள் விவரித்திருப்பார். தாய்தந்தையரை இழந்து இந்தியா முழுதும் அலைந்துதிரிந்த தவிப்புமனம் எத்தகையது என்பதை அப்புத்தகங்களின் அத்தியாயம் சுமந்திருக்கிறது. அண்மையில், எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்குத் தன்னறம் இலக்கிய விருது அளிக்கும் நிகழ்வில்,  தாய்தந்தையற்ற தாமரை பாடல் பாடி முடித்தவுடன் வேகவேகமாக அவளை தோளோடு சேர்த்தணைத்து, தூரத்திலிருந்த தன் மகள் சைதன்யாவையும் குரலெழுப்பி அருகில் வரச்சொல்லி அழைத்து ஒளிப்படம் எடுத்துக்கொண்ட அக்கணம்... என்னால் இப்போதுவரை அதை கண்ணீரின்றி நினைக்க இயலவில்லை.


ஆயிரமாயிரம் உயிர்களுக்கான தந்தையாகவும் ஆசிரியராகவும் திகழக்கூடியதாக உங்கள் வாழ்வை இறை ஆசீர்வதித்திருக்கிறது. எத்தனையோ பிறவிகளின் நல்லூழ் இது! பல்லாயிரம் ஆண்டுகளாக அணையாது எரிகிற சூரியனின் சுடர்பட்டு, பல்லாயிரம் மொக்குகள் மலர்வதைப் போல உங்கள் பேரிருப்பு எத்தனையோ மனங்களுக்கான விடிகாலை நம்பிக்கையாகிறது. பேரன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் தினமும் அதிகாலை மூன்றரை மணியளவில் அகவல்பாடி பிரார்த்தனை செய்வார். பிரார்த்திக்கும் ஒருசில நிமிடங்களில் உடைந்தழுது கண்ணீர் மல்கி நாதழுதழுக்க 'அருட் பெருஞ் சோதி... தனிப் பெருங் கருணை...' என மனமுருகி அகவல்பாடி துதிப்பார். அந்த அகவல்குரலை மானசீகமாக தொழுதுவணங்கி ஜெயமோகன் அவர்களுக்கான நீளாயுளை தெய்வங்களிடம் வேண்டுகிறேன். நித்ய சைதன்ய யதியின் கனிவுமுகத்தை நெஞ்சில் இக்கணம் நிறைக்கிறேன். ஊழே... குருவருள் என்றும் அகம்நிலைக்க நீ விதிசெய்! 


குக்கு சிவராஜ் - தமிழ் விக்கி பக்கம்

2 comments:

  1. குக்கூ சிவரானின் நெகிழ்வான பதிவு ஒரு அபூர்வ பூச்சாக ஒட்டிக்கொண்டு விட்டது. கூட்டுக்குள் உறங்கு நிலையில் ஒரு கம்பளிப் பூச்சி எதைப் பெற்றது என்பது தெரியாது. வண்ணத்துப் பூச்சியை மட்டும் இரசிக்கும் வாழ்வு நம்முடையது. தன்னுடைய கூட்டுப் புழு பருவத்தை யும், சிறகு பெற்ற பரிமாண வளர்ச்சியையும் இவ்வளவு அழகாக வேறு எவரும் வெளிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. சிவராஜுக்கு அன்பும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  2. சுராவுக்கும் உங்களுக்குமான உறவை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்; கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் சித்திரமும் நன்றாக வந்திருக்கிறது. அவ்வப்போது ஆளுமைக்குறிப்புகள் எழுதுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.