நிரந்தரமானவன் - இயகோகா சுப்பிரமணியம்


இரண்டு மூன்று நாட்கள் உடல் நலம் சரியில்லாதபோது, இரவில் 'அபிப்பிராய சிந்தாமணி' என்ற புத்தகத்தை வாசித்தேன். வெகு நாட்களுக்குப் பிறகு வாய்விட்டுச் சிரித்த சத்தத்தில், எனது தம்பி ஓடிவந்து கேட்டு, அவனுக்கும் வாசித்துக்காட்டி, நாங்கள் சிரித்த சிரிப்பில் நோயே ஓடிவிட்டது. அதுவும் அந்த 'ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே' பாடலைக் கேட்டுக்கும்போது இன்றும் ஜெயமோகனின் நகைச்சுவை சிரிக்க வைக்கின்றது.


'குமரித்துறைவி' குறுநாவலை கொரோனா தனிமைச் சிறையில், ஓர் இரவில் படித்தேன். இடையில் என்னையும் அறியாமல் அழ ஆரம்பித்தேன். எனது தம்பி மகள் மணவிழாவின்போதும், அவளை அவள் புகுந்த வீட்டுக்கு அனுப்பியபோதும் ஏற்பட்ட மிக நுண்ணிய உணர்வுகளின் சோகத்தை, பாசத்தை, நெகிழ்ச்சியை குமரித் துறைவியின் மதுரைப் பயணத்தில் மீண்டும் உணர்ந்தேன். தமிழில் இப்படி ஓர் எழுத்தாளனைச் சந்தித்த காலம் தமிழர் அனைவர்க்கும் ஒரு பொற்காலம். அற்புதமான எழுத்தாளனை வெளிச்சம் போட்டுக் காட்டிய அதிசிய நூல் விஷ்ணுபுரம். நான் இரசித்துப் படித்த மற்ற தமிழ்ப் புதினங்கள், ஆங்கிலப் புதினங்கள் - எதிலுமே காணாத ஒரு புதுப்புனைவைக் கண்டேன். நிறையப் புத்தகம் படிக்கும் பலர், என்னிடமே, கொஞ்சம் குழுப்பமாக இருக்கிறதே என்று கூறினர். ஆரம்பம்தான் அப்படி, போகப்போக நீங்கள் விஷ்ணுபுரத்தை விட்டு வெளியே வரமாட்டீர்கள் என்று கூறினேன். ஏனெனில், எனக்கும் ஆரம்பத்தில் ஒரு சிறு குழுப்பம் ஏற்பட்டது. மேலே போகப்போக ஒரு பிரமிப்பும், வியப்பும் தத்துவ விஸ்வரூபமும் - என்னை ஆட்கொண்ட பரவசத்தை என்னால் எழுத்தில் பதிவிட இயலவில்லை. விஷ்ணு, ஒரு யுகத்துக்கு ஒரு முறை புரண்டு படுப்பாராம். நான் பல யுகங்களை இந்த ஒரு புத்தகத்தில் கண்டேன் வியந்தேன்.


 அறம் சிறுகதைத் தொகுப்பை - ஒரே இரவில் வாசித்து முடித்தேன். உண்மைச் சம்பவங்களின் ஆதார சுருதியோடு உணர்வுப்பூர்வமான எழுத்து நடையும், திருப்பமும் இன்றும் மனதில் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. யானை டாக்டர், சோற்றுக் கணக்கு - என ஒவ்வொரு கதையுமே பாச மலர்கள்தான் மிகையுணர்ச்சி எனச் சிலர் மனதுக்குப் படலாம். எத்தேையா விதமான சூழல்களில் - ஓங்கிச் சிரிக்கும் கும்பல், கட்டியழுது அரற்றித் துடிக்கும் மனிதர்கள், சூழ்நிலையை மறந்து ஆஹாவெனக் கைதட்டி இரசிக்கும் இளைஞர்கள் - மிகை நடப்பாக நடக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா.


மெல்லிய நகைச்சுவை, ஆதங்கம், சோகம் - எல்லாம் கலந்த ஒரு மாயக் கலவை அறம்.



வெண்முரசு - உண்மையில் நான் இதை முழுவதும் படிக்கவில்லை. ஒரே மூச்சில் அத்தனை புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று முடிவெடித்திருக்கின்றேன். ஆயினும் இடையிடையே படித்த பல பகுதிகளில் மஹாபாரதத்தை இன்னுமொரு கோணத்தில் பிரமிக்க வைக்கும் எழுத்து வித்தையில் உணர்கின்ற பேரானந்தம், அறம் எழுதிய, அபிப்பிராய சிந்தாமணி எழுதிய அதே விரல்களா வெண் முரசை வருடியிருக்கின்றன என்பதே ஆச்சரியம்.


கோவை கிருஷ்ண ஸவீட்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்புச் சொற்பொழிவு. பகவத் கீதையைப் பற்றிய ஒரு மெய்ஞான விளக்கம். மூன்று நாட்கள், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஒரு சிறப்பான உரையை, ஜெயமோகன் நிகழ்த்தினார். உயர்ந்த தத்துவ ஞானத்தை, கால ஓட்ட இடைச் செருகல்களால் ஏற்பட்ட அனுபவ நீதிகளை இந்தப் பாரத நாட்டின் வாழ்வியல் தருமங்களும், அறமும் எப்படி உலகத்துக்கே வழிகாட்டும் மேன்மையைப் பெற்றுள்ளன என்பதை விளக்கியபோது, இந்த எழுத்தாளரின் இன்னொரு முகமும் சிறப்பு வாய்ந்த சித்திரமாக என்னுள் பதிந்தது. மனித மனதின் நுண்ணிய உள்ளுணர்வுகளை, குழப்பங்களை, ஆதங்கத்தை எழுத்து வடிவில் மிக நுட்பமாக புரியும்படி எழுதிய தமிழ் எழுத்தாளர்களை நான்


அறிந்ததில்லை. பல முன்னோடி எழுத்தாளர்களது புதினங்களில் சில பேர் எழுதியிருந்தாலும், இந்த அளவு ஆழமாக என்னை யாரும் பாதித்ததில்லை. என் வாழ்க்கையில் ஏறத்தாழ சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை முழுதாக வாசித்துள்ளேன். எனக்குள் தாக்கம் எற்படுத்திய நா.பா., கல்கி, ஜெயகாந்தன், அகிலன், கண்ணதாசன், சாண்டில்யன் என பலபேரது திறனில் மயங்கியிருக்கின்றேன். கல்கி பன்முகங்களிலும் தனது திறமையைக் காட்டியுள்ளார்.



ஆயினும் வாழ்நாள் முழுவதும் ஜெயமாகன் எழுதியதை, எழுதிக் கொண்டிருப்பதை, எழுதப்போவதை முழுவதும் ஒரு தமிழனால் வாசிக்க முடியுமென்றால், அது ஒரு உலக அதிசியமாகப் பதிவு செய்யப்படும். ஜெயமோகன் ஒரு சாதாரண எழுத்தாளன் அல்ல. அவர் தமிழக இலக்கிய வரலாற்றில் ஒரு சகாப்தம். எத்தனை இலக்கியப் பரிசுகள், பட்டங்கள் வழங்கினாலும், அவற்றை எல்லாம் மீறி நிற்கக் கூடிய உலகத் தரத்தையும் மீறிய ஒரு அற்புதம், அதிசயம். புதினங்கள், சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள், விவாதங்கள், நாடகங்கள், திரைக்கதை உரையாடல்கள், கவிதைகளின் விமர்சனங்கள், பிறமொழி எழுத்தாளர்களின் திறன்மிக்க படைப்புகளின் அறிமுகங்கள், மாற்றுக் கருத்துக்களைப் பதிவிடும் துணிவு, எதிர்த்து நின்று மறுத்துப் பேசும் போராட்ட குணம், மற்ற படைப்பாளிகளைப் பாராட்டிப் பரிசளித்துப் போற்றும் மனம், மேலும் எந்தக் கணத்திலும் எளிமையை, நேர்மையை, நட்பைக் கடைபிடிக்கும் அரிய குணம் - இவை எல்லாம் நான் ஜெயமோகனிடம் கண்டு வியந்தேன்.


ஜெயமோகன் ஒரு அசுர எழுத்தாளன். அசுர மோகனின் அறிமுகம் கிடைத்ததும் நட்பு பாராட்டியதும் எனது வாழ்க்கைப் பயணத்தில் கிடைத்த ஒரு பாக்கியம் என்றே கருதுகின்றேன். காலத்தை வென்ற எழுத்தாளன்.


'வித்வத் கர்வம்' - என்ற வார்த்தையை நான் பள்ளி நாட்களில் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஒரு நாதஸ்வரக் கலைஞரின் செருக்கை, அதற்கு விளக்கமாக ஆசிரியர் கூறினார்.


அந்தத் தூய செருக்கை, இயல்பான ஒன்றாகக் கொண்டவர் ஜெயமோகன். மிகப் பிடிவதமாக ஒன்றை மறுத்து, அது சரியில்லை என்று உணர்ந்து மாற்றிக் கொண்டவற்றையும் அவர் எழுத்தில் கண்டிருக்கின்றேன். மலையாள இலக்கியத்திலும், அதன் அரசியல் கால சூழ்நிலை ஓட்டத்திலும் அவர் பெற்ற அனுபவங்கள் - படிக்க படிக்க, தேன்போலச் சுவை கொடுப்பவை.


பல நூறாண்டு உடல் நலத்துடன் வாழ வாழ்த்தும்போது, இவன் நிரந்தரமானவன், நீடித்திருப்பவன் - என்று மனம் மகிழ்ச்சியடைகின்றது.


***

No comments:

Powered by Blogger.