கருநீலத்தழல்மணி - வெண்முரசு பாடல் உருவான கதை - ராஜன் சோமசுந்தரம்




பெரும்பாலும் தெரிந்த வார்த்தைகளால் ஆனதாகவே இருக்கும். ஆனாலும், எழுத்தாளர் ஜெயமோகன் அந்த வார்த்தைகளைக் கோர்த்து புதிய வார்த்தையாய் எழுதும்போது, இவை ஏற்கெனவே நமக்குத் தெரிந்த வார்த்தைகள்தானா என்ற வியப்பை ஏற்படுத்தும். முற்றிலும் புதிய ஒன்றை நமக்குக் காட்டும். உச்சவழு, கல்குருத்து, நற்றுணை, சொல்வளர்காடு போன்ற சொற்சேர்க்கைகள் மந்திரம் போல ஒலிக்கின்றன.

இதைப்போன்ற ஆயிரமாயிரம் பரவசமூட்டும் சொற்களால் நிறைந்து கிடக்கும் ‘நீலம்’ நாவலை முதன்முறை படித்தபோது திகைத்துவிட்டேன்.


கருநீலத்தழல்மணியே என்றொரு சொல். வானெழுந்த சுடரொளியே என்றொரு சொல். கூடவே தாய்மையின் ஆன்மிகம். தந்தைமையின் ஆன்மிகம். வானெழுந்த மோகத்தின் ஆன்மிகம்.


‘வெண்முரசு’ வாசிக்கத் தொடங்கி ‘வண்ணக்கடல்’ படித்துக்கொண்டிருக்கும்போதுதான், அதன் பிரம்மாண்டம் உறைத்தது. ஒவ்வொரு சிறு இழையும் சேர்ந்து, பல தளங்களாய் விரிந்து கட்டியமைக்கும் ஒரு மாபெரும் கதையாடல் வெளி. அதை இசையில் கொண்டுவருவதென்றால், எப்படி ஒவ்வொரு வாத்தியமும், ஒவ்வொரு இசைத்துணுக்கும், வெவ்வேறு உணர்வுடன் சென்று இறுதியில் ஒரு பெரும் இசைவலையைக் கட்டியெழுப்பும் வாய்ப்பு இருக்கிறது என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், ‘நீலம்’ முற்றிலும் வேறொரு அனுபவம்.


காலையில் எழுந்தவுடனே ‘நீல’த்தின் ஒரு அத்தியாயம் படித்துவிடுவேன். நாள் முழுவதும் கவிதையும் இசையும் மணக்கும். ஒருநாள் தோடி. இன்னொரு நாள் மார்வா. மற்றொரு நாள் ஹம்சநாதம். எல்லா வரிகளும் பாடலாய் உருவெடுத்து நாள் முழுவதும் சுற்றிவரும்.


ஆஸ்டின் சௌந்தர், அமெரிக்க விஷ்ணுபுரம் நண்பர்களுடன் சேர்ந்து ‘நீல’த்தின் வரிகளை எடுத்து ஒரு பாடல் உருவாக்கலாம் என்று முயன்றபோது சந்தித்த மிகப்பெரிய சவால், எந்த உணர்வுகளைச் சொல்வது, விடுவது, எந்த வரிகளைக் கொள்வது, விடுவது என்பதே. மோகம் என்பதை மட்டுமே முன்னிறுத்தி ‘நீலம்’ வரிகளை வைத்து ஒரு முழுநீள இசைநாடகம் எழுதலாம். அதைப்போலவே ஏக்கம், கைவிடப்படுதல் போன்ற உணர்வுகளை மட்டுமே கொண்ட வரிகளை எடுத்து முழுமையான இசைநாடகம் ஆக்கலாம்.


ராஜன் சோமசுந்தரம்

பதிலாக, நீலம் கொடுத்த ஒட்டுமொத்த ஆன்மிக அனுபவத்தை இசையில் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. தாய்மையின் அனுபவம், தந்தைமையின் அனுபவம் குறித்து எனக்குப் பிடித்த வரிகளை எடுத்துக்கொண்டேன். இவற்றைக் கடந்த ஒன்றைச் சுட்டுவதற்காக 'வானத்திலிருந்து ஒலிக்கும்' குரலாக சில வரிகளையும், ‘முதலாவிண்’னிலிருந்து சில வரிகளையும் எடுத்துக்கொண்டேன். உருவமுள்ள கடுவெளியானவன். உருவமற்ற கருத்தாகவும் ஆனவன். அனைத்தும் கடந்து காலமாக ஆனவன். கண்ணானவன். காண்பதுமானவன். இதோ இங்கே மடியில் குழந்தையாகக் கிடக்கின்றான். அழகிய பாடலாக உருவெடுத்துவிட்டது!

இப்பாடல் எப்படி ஒலிக்கவேண்டும் என்று சில வரையறைகளை வகுத்துக்கொண்டேன். சாதாரண பக்திப் பாடல் போல் இருக்கக்கூடாது. ஏனென்றால் ‘நீல’த்தின் உணர்வு பக்தி அல்ல. ஆன்மிகம். ‘வெண்முரசு’ நவீன நாவல் வடிவைச் சேர்ந்தது. அதனால், வழக்கமான கர்னாடக வடிவுக்குப் பதிலாக நவீன வடிவம். ஜெயமோகன் ‘நீலம்’ நாவலை ஜப்பானிய கார்ட்டூன் வடிவில் அரைக்கனவில், ஸிந்தஸைசர் ஒலியுடன் கண்டதாக எழுதியிருந்ததால், ஜப்பானிய ஸிந்தஸைசர், சிங்கிங் பவுல் ஒலியுடன் குழலிசை சேர்ந்து பாடல் தொடங்க முடிவு செய்தோம்.


பாடகர்களைத் தேர்ந்து ஒலிப்பதிவைத் தொடங்கினோம். பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதியிடம் பாடல்வரிகளையும், மெட்டையும் பற்றிப் பேசிய பிறகு அடுத்தநாள் அழைத்து, “அபாரமான வரிகள்! இந்த மெட்டுடன் இணையும்போது, திரும்பத் திரும்ப அதுவே மனமெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது. அகல மறுக்கிறது. ஹான்டிங்!” என்றார். இரண்டு முழு நாட்கள் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்து பாடித்தந்தார். பாடகி சைந்தவி, அவர் குழந்தை பிறந்து சில வாரங்களில் இப்பாடலைப் பாடினார். தாய்மையின் ஆன்மிகத்தை அற்புதமாக இசையில் கொண்டுவந்தார். அதே உணர்வுநிலை சில நாட்கள் நீடித்தாகச் சொன்னார். வானத்திலிருந்து ஒலிக்கும் வரிகளை கமல்ஹாசன் அவர்கள் அவருடைய கம்பீரமான குரலில் பாடிக்கொடுத்தார். ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு மாதிரி பாடிக்கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். ஆஸ்டின் சௌந்தர், கே. பி. வினோத் போன்ற நண்பர்கள் இரவுபகலாக ஒவ்வொரு விஷயத்தையும் ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர்.



‘நீல’த்தில் வார்த்தைகளைத் தாண்டிய ஓர் உணர்வு இருக்கிறது. அதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும் ஏதோ ஒரு வகையில் அதை உணர்வார்கள். அதை சித்தாரில் கொண்டுவர முயன்றோம். அப்படித்தான் எனக்குக் கேட்டது. இந்தியாவிலும், அமெரிக்காவிலுமாக இரண்டு தொழில்முறை சித்தார் கலைஞர்களை வைத்து முயன்றும் திருப்தியாக வரவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து பாடலுக்காகத் திரட்டிய பணம் கரைந்துகொண்டிருந்தது. ஏதோ கற்பனை செய்துகொண்டு, நடக்கவே இயலாத ஒன்றை வீணாக முயற்சித்துக்கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் தரும் சோர்வு வேறு. கடைசியாக பண்டிட் ரவிஷங்கரின் மாணவரான ரிஷப் ஷர்மா கிடைத்தார். கோவிட் அலை உச்சத்தில் இருந்த நேரத்தில், நியூயார்க்கில் ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் சிறப்பு அனுமதி வாங்கி நேரில் சந்தித்தோம். ஆறு மணிநேரம் செலவழித்து ஒவ்வொரு ஸ்வரமாகச் செதுக்கி எடுத்தோம். அன்றிரவு நண்பன் பழனியின் வீட்டில் நன்றாக உறங்கினேன்.


முதலில் மெட்டு அமைந்தது ‘கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்? என்ற வரிகளுக்கே. அதன் பிறகே, பல்லவி, சரணம் எல்லாம் இசையில் அமைந்தன. மெட்டு உருவான பின்னரே, ஜெயமோகன் எழுதியதைப் படித்தேன். மொத்த நாவலும் இந்த வரிகளிலிருந்தே தொடங்கியதாக எழுதியிருந்தார். இவை எல்லாவற்றுக்குமான கடவு ஏதோ ஓரிடத்தில்தான் இருக்கிறது போல.


***

No comments:

Powered by Blogger.