எடுத்த பாதம் - சுபஸ்ரீ சுந்தரம்


”உனக்காகத் திறக்கும் இதயத்தின் 

ஆயிரம் கதவுகளில்

எல்லா வாயிலிலும் 

நீ எனக்காகக் காத்திருப்பதை காண்கிறேன்”


குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் வரிகள். அதுபோல ஒரு நில்லாப்பயணியின் எல்லா வழிகளிலும் அவன் வந்து சேர்வதற்காகக் காத்து நிற்கிறது அது. அது ஏதென்றும் எங்கென்றும் பயணிக்கும் தெரிவதில்லை. செல்திசை குறித்த அறுதியான வரைபடங்கள் ஏதும் இங்கில்லை. தூண்டில் முனையின் ஒருபுறம் பயணியும் மறுபுறம் பிடிபடாது விலகி ஆடும் மீனென சென்றடைய வேண்டிய இலக்கும் நின்றிருக்கும் தீரா விளையாட்டு. வழிதோறும் காத்திருக்கும் ஒவ்வொன்றும் சென்றடைவதன் இன்பத்தைத் துளித்துளியாய் கண்ணுக்குக் காட்டி மீள மீள அழைத்துக் கொண்டே இருக்கிறது. அத்தகைய ஒரு விளையாட்டில் விலக முடியாது இருப்பவர்கள் தீராப்பயணி ஆகிறார்கள். 


வாழ்நாளின் பெரும்பகுதியை பயணங்களிலேயே கழிப்பவர், இம்மண்ணைத் தீராக் காதலுடன் மீண்டும் மீண்டும் வலம் வருபவர், அந்த அனுபவங்களை தன் எழுத்தின் வழி வாசகனுடன் தொடர்ந்து பகிர்ந்து வருபவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவரது பயண எழுத்துக்கள் காட்டுவது, வான் நோக்கி எழுந்த கால் மட்டுமே அளக்கத் துணியும் விரிவான்வெளி! அடுத்ததெண்ணாது எடுத்த பாதம் மட்டுமே செல்லக் கூடிய தொலைவுகள்! 


சில மாதங்கள் முன் இணையத்தில் புல்வெளிக் கழுகு ஒன்று மேற்கொண்ட பயணத்தின் வரைபடத்தை ஜிபிஎஸ் துணைகொண்டு பதிவு செய்திருந்தார்கள். ஒரு நாளைக்கு 355கிமீ தொலைவு வரை பயணித்த அக்கழுகு கடற்பரப்புகள் மீது பறப்பதைத் தவிர்த்ததும், எப்போதும் நிலங்களின் மீது பறப்பதையே தெரிவு செய்ததும் எனப் பல சுவாரசியமான தகவல்கள் இருந்தன. அது பறந்தலைந்த வான்வழியின் தடங்களை கண்டபோது அவை அதன் பயணக்குறிப்புகள் என்ற எண்ணம் தோன்றியது. 


அதுபோல ’புறப்பாடு’ தொடங்கி, ’அஜ்மீர் பயணம்’ வரை, வேளிமலை நோக்கிய அன்றாட நடை முதல் ஆஸ்திரேலியாவின் புல்வெளிதேசம் வரை இவரது சுவடுகள் உலகெங்கும் விரவி இருக்கின்றன. சிறு மகவாய் வீடு விட்டிறங்கி சிறுபாதம் வடித்த சிற்றடித் தடங்கள் முதல் இந்திய நிலம் முழுவதும் துறவியென அலைந்து திரிந்த சுவடுகள் தொட்டு, உலக நாடுகள் பலவற்றிலும் நடந்து வந்த காலடிகளும் இணைந்த ஒற்றைப் பெரும்பயணத்தை அகம் உணர்ந்த தருணம் ’இனித்தம் உடன் எடுத்த பொற்பாதமும்’ என்ற வரி நினைவில் எழுந்தது. எடுத்தவைத்த ஒவ்வொரு அடியையும், அடைந்த ஒவ்வொரு அனுபவத்தையும் இனித்தம் உடன், பெருவிருப்புடன் எழுதிய எழுத்தாளர்.


இதுவரை தமிழில் எழுதப்பட்ட எந்த ஒரு பயண இலக்கிய நூலிலும் இல்லாத அளவுக்கு விரிவான களங்களைத் தொட்டுப் பேசும் இவரது பயண எழுத்துக்கள் தீவிர இலக்கிய வகைமைக்குள் வைக்கப்பட வேண்டிய செவ்வியல் ஆக்கங்கள். 


பொதுவாக பெரும்பாலான பயணக் கட்டுரைகள், பயணத்தில் ஏற்பட்ட சுவையான அனுபவங்கள் (அல்லது எழுதியவர் அப்படி எண்ணிக்கொள்பவை), மேலோட்டமான வர்ணனைகள், உணவு, உறைவிடம் குறித்த அங்கலாய்ப்புகள், விதந்தோதல்கள் இவை குறித்து இருப்பதைப் பார்க்கலாம். அந்த பயண எழுத்து இலக்கியம் என்ற கணக்கிலேயே வராது. 


கலைஞன் அகவயமாக அடைந்த ஒரு அனுபவத்தை மொழியில் தரும்போது அது இலக்கியமாகிறது. அத்துடன் பயணம் செய்யும் நிலத்தின் பின்புலத் தகவல்களை, வரலாற்றை, புவியியலை, அதன் வளர்ச்சியை, வாழ்வியல் முறையை அல்லது அவ்விடம் குறித்த முக்கியமான தரவுகளை அளிக்கும்போது அது ஓரளவு செறிவு கொள்கிறது. 


இவற்றுக்கும் அப்பால் ஒரு படைப்பு, அம்மொழியில் புதிய அளவுகோள்களை  உருவாக்கி விடும் போது, அம்மொழியின் இலக்கிய வளர்ச்சிக்கு வேரும் நிலமும் ஆகி விடும் போது அவை செவ்விலக்கியம் ஆகிறது.  அவ்விதத்தில் ஆசிரியர் ஜெயமோகன் எழுதியுள்ள அருகர்களின் பாதை, இந்தியப் பயணம், நூறு நிலங்களின் மலை போன்ற பல நூல்கள், பயண நூல்களின் தரத்தை, அளவுகோல்களை மிக உயரிய தளத்துக்குக் கொண்டு நிறுத்தும் செவ்விலக்கிய படைப்புகள்.




சுடர்முகம்


பயணங்கள் இல்லாத மாதங்களே இல்லை என்ற வாழ்க்கை முறை கொண்டவர் ஜெயமோகன். எங்கேனும் செல்வது குறித்த சிந்தனைகளோ பேச்சோ இல்லாத ஒருநாளேனும் இவர் வாழ்வில் இருந்திருக்குமா என்பது ஐயமே. சில பறவைகள் துருவங்களைக் கடந்து செல்லும் ஆணையோடுதான் இவ்வுலகில் சிறகுகளைப் பெறுகின்றன. சுடர்முகம் எப்போதும் விண் நோக்கியே எழுகிறது.


இவருடைய சில பயணங்கள், நண்பர்களுடன் விரிவான திட்டங்களுடன் அமைவது. மற்றவையோ தனித்தவை, எந்தத் திட்டமிடலும் இல்லாத புறப்பாடுகள். முதலாவது வகை, பரிவாரங்கள் சூழ இசை முழங்க, பாட்டும் கூத்தும், பட்டும் பரிவட்டமுமாய் வலம் வரும் பெருமாள் செல்லும் உலாப் போல கோலாகலம். மற்றொன்று ஊரடங்கிய பின் தன் தனித்த புரவியில் ஊரை வலம் வரும் கிராமத்து காவல் தெய்வம் போல தனிமையின் தீவிரமும் உன்மத்தமும் கொண்டது. ஆனால் எத்தனை பேர் உடன் வந்தாலும் பயண அனுபவம் என்பது அந்தரங்கமானது என்பதை இவரது எழுத்துக்களின் வழி உள்ளாழத்தில் தீண்டப்படும் ஒன்றால் உணரலாம். 

இவருடைய அனேக பயணக் கட்டுரைகளில் கிளம்புதலின் இனிமை பற்றிய வரிகள் இருக்கும். ஒவ்வொரு பயணத்திலும் நண்பர்கள் சந்தித்து, பயணம் குறித்த எதிர்பார்ப்புகள் மனதை கிளர்ச்சியடையச் செய்ய, சென்றகால பயணங்களின் இனிய நினைவுகள் உள்ளத்தை நிறைக்க, ஏதேதோ பேசிச் சிரித்துக் கொண்டு கிளம்பும் வர்ணனைகள் நிச்சயம் இருக்கும்.


கிளம்பியதுமே அன்றாட வாழ்க்கையை முழுமையாக துண்டித்து பின்னால் விட்டுவிடுவதை பயணத்தின் அடிப்படை விதிகளில் ஒன்றாக முன்வைக்கிறார். அதன் வழியாகவே உண்மையில் பயணம் ஒரு “அனுபவமாக” ஆகிறது.


பயணங்களில் நாம் காணும் நிலக்காட்சிகளும் முகங்களும் நமக்களிக்கும் அனுபவம் அன்றாடம் நாம் காணும் பழக்கமான் இடங்களும் முகங்களும் அளிப்பதல்ல. அறிதல் நிகழும் முறையை பௌத்தம் அந்தக்கரணவிருத்தி (அகநுழைவு நிகழ்வு), சப்தாகரண விருத்தி(ஒலியேற்ற நிகழ்வு) , ததாககரண விருத்தி(அதுவாதல் நிகழ்வு) என்று விளக்குவதை சொல்கிறார். பயணங்களில் அதுவாதல் நிகழ்வுக்கு இடமில்லாத நிலையில் ஒவ்வொரு காட்சியும் முகமும் புதியதாக அதிர்வை அளித்து நம் ஆழ்மனதை சென்றடைவதை சுட்டுகிறார். இத்தகைய ஒரு ஆழ்மனப் பதிவை அடைய அன்றாடத்தைத் துறத்தல் மிக முக்கியமானது என்பதே இங்கு முதன்மையானது.


பயணம் எங்காயினும், கிளம்பும் அந்த முதலடி மிக இனிமையானது. புத்தனின் மகாபரிநிர்வாணத்துக்கான செலவும் அது போல ஒரு முதலடியில்தான் துவங்கியிருக்கும் என்பதால் எல்லாப் பயணங்களும் சென்றடைவதற்கான சாத்தியங்கள் கொண்டவையே. அந்த வகையில் வீடு துறந்து செல்லுதலின் அனுபவக் குறிப்புகளான ’புறப்பாடு’ நூலை பயண அனுபவங்கள் வகைமையில் வைத்துப் பார்க்கலாம். அதன் முன்னுரையில் ஜெயமோகன் எழுதியிருப்பது போல தவழும் குழந்தைகூட அது சென்று சேரச் சாத்தியமான எல்லையின் கடைசி விளிம்பில்தான் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. வீட்டை விட்டு புறப்படுவது ஒரு வகையில் அன்னை மடியை விட்டிறங்கி வீதிக்கு ஓடும் குழந்தையின் செயல்தான், தவிர்க்க முடியாததும், ஏதோ ஒரு கணத்தில் மனம் பொங்கி மீண்டும் திரும்பி வரச் செய்வதுமான ஒன்று.


இவரது பயணங்கள் எழுதித் தீராத கனவுத் தன்மை உடையவை. கிளைநுனியில் அமர்ந்து இளைப்பாறும் பறவை எந்நொடியும் சிறகு விரிக்கத் தயாராக இருப்பது போல, ஒரு பயணம் முடிந்து வீடு சேரும் முன்னரே அந்த பயணம் ஏற்றிய சுடர் அடுத்த புறப்பாட்டுக்கான கனலை ஏற்றிவிடுவதை இவர் எழுத்துக்களில் உணரலாம். உதாரணமாக இந்தியப்பயணம் எனப் பெயர் கொண்ட நீண்ட பிரயாணத்தின் போதே அடுத்ததாக இமயத்தில் லடாக் செல்லும் எண்ணம் வந்துவிடுகிறது.


ஒரு வாசகரின் கேள்விக்கு ஒவ்வொரு பயணமும் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கும் அன்றாடத்தில் இருந்து வெளியேறிச் செல்லும் முயற்சிதான் என்கிறார். ஏனெனில் அன்றாடம் என்பது நம்மைச் சூழ்ந்திருப்பவற்றின் உள்ளே உறையும் அறிதல்களையும் பரவசங்களையும் காண விடாத திரை; அதிலிருந்து விலகி அறியாத புதிய இடங்களுக்கு செல்வது இருத்தலை இனிமையாக்குகிறது என்பதே பதிலாகத் தருகிறார்.



காற்றின் தடம்

பயணங்கள் போல வாழ்க்கையை நிறைவு செய்வது பிறிதொன்றில்லை என உணரும் ஒருவரின் பயண மனநிலை எவ்விதம் இருக்கும் என்பதை காட்டுபவை இவரது எழுத்துக்கள். தன் இருப்பிடத்தை உதறிவிட்டு தன்னையே துறந்து முற்றிலும் வேறொருவனாக்கிக் கொள்ளும் மனப்பாங்கும், புதிய நிலத்தில் தன்னை வேறொரு வாழ்வில் நிகழ்த்திப் பார்க்கும் கற்பனையும் இவரது பயணங்களை நிகரற்ற அனுபவங்கள் ஆக்குகின்றன.  


இவரது பயண எழுத்துக்களை வாசிப்பதிலும் படி நிலைகள் இருக்கின்றன. வாசகனை எழுத்துக்கள் வழியாக பயணத்தின் அனுபவத்தை உணரச் செய்வதும் இதுபோன்ற பயணங்களை நாமும் மேற்கொள்ள வேண்டும் என்ற உந்துதலை அளிப்பதும் முதற்கட்டம்.  ஒவ்வொரு கட்டுரையிலும் பிரியத்துக்குரிய ஒரு ஆசிரியரின் கனிவோடு பல முக்கியமான புள்ளிகளைத் தொட்டுக் காட்டிச் செல்கிறார். ஒரு புதிய நிலத்தின் வரலாற்றை, பண்பாட்டை அங்குள்ள கலையை பற்றி எழுதும் போது ஒரு வரைபடத்தை உருவாக்கிக் கொள்வது போல, மெல்ல மெல்ல விரித்து அதை ஒட்டி வாசகனுக்குள் எழ சாத்தியமான எல்லா கேள்விகளையும் தானே முன்வைத்து அவற்றை விளக்கி முழுமையைக் காணச் செய்கிறார். அந்த எழுத்தின் வழியாக ஒரு வாசகன் எழுத்தாளரை ஆசிரியரென உணரக்கூடிய அணுக்கம் அடுத்த கட்டம். இந்த அறிவார்ந்த பார்வையைத் தாண்டி, பயணங்களில் ஒரு படைப்பு மனம் மட்டுமே அள்ளிக் கொள்ள சாத்தியமான அனுபவங்கள் அவதானிப்புகளை ஒரு இலக்கிய வாசகன் அறிந்து கொள்வது அடுத்த நிலை. காற்றின் காலடிச்சுவடுகளை எவ்விதம் கண்டுகொள்வதென பயிலும் நிலை.


புதிய நிலங்களில் பயணிக்கும் போது அந்த இடம் சார்ந்த தகவல்களை வெறும் விவரங்களாக ஒருவர் ‘தெரிந்து’ கொண்டால் அது அனுபவமாக ஆவதில்லை. அங்கு புலன்களால் உணரப்படும் நுண்ணுணர்வுகளையும், புலன்கள் கடந்த அனுபவங்களையும் சித்தரிக்கும் இவரது மொழிவன்மையால் அந்த அனுபவம் வாசகனுடையதாகிறது.  


துளித்துளியாய் சேகரித்த காட்சிகள் வேறொரு தருணத்தில் புனைவுகளில், இயற்கையின் பேரிருப்பாய், மனித குணநலன்களின் சித்தரிப்புகளாய், அழ்படிமங்களாய் உருமாற்றம் அடைந்து எழுவது பேருரு தரிசனம். ஆசிரியர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் சொல்வது போல “நிலங்களை கலந்துபிசைந்து பொன்னிலங்களை உருவாக்கும் ஒரு குழந்தை எனக்குள் உள்ளது. அதற்கு விளையாட்டுக்கு மூலப்பொருள் சேர்க்கவே நான் பயணம் செய்கிறேன்” ஆம், மகத்தான நிலக்காட்சிகள் ஒரு படைப்பு மனதின் உட்புகுந்து கனவில் எழுந்து படைப்புகளில் வெளிவரும்போது அதிஅற்புதமானவையாக ஆகிவிடுகின்றன.


நில்லாநதியின் கரையில்


சில காலம் முன்னர் கங்கையின் ஊற்றுமுகம் முதல் அது கடல் சேரும் அழிமுகம் வரை, நதியை ஒட்டியே ஒரு பயணம் செய்யவேண்டும் என்ற ஒரு திட்டம் மனதில் இருந்தது. ஒரு நொடியும் நில்லாதோடும் நதியை கரையில் ஓரிடத்தில் நின்று காணவே மனிதனுக்கு வாய்க்கிறது. என்றேனும் அந்த நதியின் ஒரு துளியேயான மீன் போல ஒரு பயணம் நிகழ்ந்தால் கங்கையை சற்றேனும் அறியலாகும். 


அதுபோல ஜெயமோகனின் இந்தியப் பயண அனுபவங்களை வாசிக்கும் போது, இவரது அனுபவங்கள் அறிதல்கள் என்னும் நில்லாநதியின் ஒரு துறையில் நம் கலம் கொள்ளக்கூடிய சிறு பகுதியைத்தான் வாசகன் அள்ளிக்கொள்ள நேர்கிறது என்று அகம் அரற்றுகிறது. அதுவே அந்நதியில் மீண்டும் மீண்டும் இறங்கித் திளைத்தாடும் விழைவையும் விதைக்கிறது.


முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மண்ணை இடையறாது வலம் வந்து கொண்டே இருப்பவர். இந்நிலத்தை இவரது தூரிகை வரைந்து கொண்டே இருக்கிறது. ஆசிரியரின் எழுத்துக்களின் வழி உருவாகும் இந்நிலத்தின் சித்திரம், பண்பாடுகளின் நெசவாய், கலைகளின் விளைநிலமாய், வரலாற்றின் எஞ்சிய சுவடுகளாய், தத்துவங்களின் வெளியாய், எண்ணற்ற முகங்களின் தேசமாய்,  காலம்காலமாய் ஞானியரும் துறவிகளும் மாபெரும் கலைஞர்களும் அலைந்து திரிந்த ஞானபூமியாய் எழுந்து வருகிறது. 


“நான் இந்தியா என நினைப்பது எனக்கு அன்னமிட்ட ஆயிரக்கணக்கான கைகளை. நான் மிக அபூர்வமாகவே பட்டினி கிடந்திருக்கிறேன். அனேகமாக எங்கும் இல்லறத்தாரால் கனிவுடன் மட்டுமே உணவிடப்பட்டிருக்கிறேன். எனக்கு என் தேசம் மனித உள்ளங்களில் குடியிருக்கும் அன்னபூரணிதான்.” – இந்த இந்தியாவை ஆழமான அகத்தொடுகை நிகழாதவரை ஒருவர் சென்று தொடுவது கடினம்.


இம்மண்ணில் பிறந்தவர்களுக்கு இமயம் சென்று தீராத நிலம், கங்கை கண்முன் திகழும் காலமின்மையின் பெருக்கு. காளிதாசன் முதல் அனைத்து கலைமனங்களும் எழுதிவிட்ட இமயமும் கங்கையும் இவரது எழுத்தில் மேன்மேலும் வளர்கின்றன. அலைதலில் இருப்பவர்கள் அனைவரையும் வழி இதுவெனச் சொல்லி தனை நோக்கி ஈர்க்கும் வடமீன் இமயம். அதுகுறித்த எண்ணற்ற வர்ணனைகள், நிலச் சித்தரிப்புகள், கவித்துவ சொல்லிணைவுகள், மன எழுச்சியின் பதிவுகள் ஆசிரியர் ஜெயமோகனின் புனைவிலும் அபுனைவிலும் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. 


பனிமலைகளின் முதற்காட்சி தரும் பரவசம், இமய முகடுகளில் ஒவ்வொரு சிகரமாய் ஒளியேற்றிக் கொள்ளும் புலரியின் பொற்கணங்கள், மாபெரும் மலரிதழ் அடுக்குகளுக்குள் நிற்கும் அற்புத உணர்வைத் தரும் வெண்பனிக் குவைகள், முடிவேயில்லாத நாக உடலென மலைகளைக் கவ்வும் சாலைகள், மலையின் விழிகள் என வான்காட்சியை மட்டுமே தன்னுள் தேக்கிய நீர்ச்சுனைகள், ஒலியென எப்போதும் உடன் வரும் இனிய நீர்ப் பெருக்குகள், பனிப் பாலை வெளிகள், விழிதொட்டு வெகுநேரம் கடந்தே சென்றடைய நேரும் அருகென மயக்கும் தொலைவுகள், எல்லையற்ற விரிவு நோக்கி முழுமோனத்தில் அசையாது இமயத்தின் மடியில் அமர்ந்திருக்கும் மாபெரும் மடாலயங்கள், அங்கு தியானத்தில் என நா அடங்கி காத்திருக்கும் மாபெரும் மணிகள் என எத்தனை காட்சிகள்! முதல் முறை பார்த்த போதே பல பிறவிகளில் அலைந்து திரிந்த நிலமெனத் தோன்றியதற்கு ஆசிரியரது இமயப் பயணக் கட்டுரைகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.   


இன்னும் இம்மண்ணை முழுதாய் பார்க்கவே இல்லை, இதுவரை இது குறித்து எதுவுமே எழுதப்படவே இல்லை என மலைக்க வைக்கும் கன்னிநிலங்கள் ஒவ்வொரு பயணத்திலும் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் நிலம்.  ஒரு மாத காலம் தொடர்ச்சியாக சமணர்களின் கலைப் பொக்கிஷங்களை பார்த்துக் கொண்டே சென்ற பயணத்தின் இறுதியில் ஒரு கோவில் அதுவரை பார்த்தது அனைத்தையும் அழகில் விஞ்சி நிற்கிறது. “என்னை என்னவென்று நினைத்தாய் என்று பாரதமே கண்முன் எழுந்து நிற்பது போலிருந்தது.” என்கிறார் ஆசிரியர்.



விரிவான் விசும்பு 


ஜெயமோகனின் பயண எழுத்துக்களில் புறவுலகின் அனுபவங்களைக் கொண்டு அகவுலகை அவர் விரிவான் வெளியென விரித்துக் கொள்வதை காணும் போது வெளியே காணும் விசும்பே உள்ளேயும் உறைவதை உணர முடிகிறது. 


பயணங்களில் ஒருபோதும் சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் தவறவிடவே கூடாதென்பதை பல பதிவுகளில் எழுதியிருக்கிறார். ஒரு ஊரில் மாலையையும் அதிகாலையையும் கழித்தால் அந்த ஊரில் குறைந்தபட்ச வாழ்க்கை ஒன்றை வாழ்ந்திருக்கிறோம் என ஒரு கட்டுரையில் சொல்வார். கங்கையின் படகுகளில், இமயத்தின் சிகரங்களுக்கு மேல், கோதையின் அலைகளில், பாலை நிலத்தில் அறியாத ஒரு கிராமத்து வயலில் என, இவரது எழுத்தில் தோன்றி மனதில் ஆழமாகப் பதிந்து விட்ட எண்ணற்ற அந்தியும் காலையும் நினைவில் எழுகிறது. காலைப் பொழுதை, கதிரின் முதல் ஒளியை, ஒளியை வாழ்த்தும் பலநூறு பறவைகளின் சிறகடிப்பை, பொழுதணைவை, எத்தனை முறை, புனைவுகளிலும் அபுனைவுகளிலும் எத்தனை விதமாக எழுதியிருக்கிறார் என அகம் தொட்டெடுக்கிறது.  


“காலை, அந்த மலைச்சரிவில் தன்னந்தனியாக, துல்லியமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு பெரிய ஆசி போல, ஒரு மௌனமான இசை போல.”


“உரிமையாளரின் கை வருடலை ஏற்று நிற்கும் நாய்க்குட்டிகள் போல மரங்கள் சூரிய ஒளியை பூசிக்கொண்டு சலனமற்று நின்றன. அவ்வப்போது உவகை தாளாமல் கொஞ்சம் நெளிந்தன. வால்குழைத்து உடல் சிலிர்த்தன.”


“இந்தப் பயணத்தின் மகத்தான அந்தி. மெல்ல மெல்ல ரத்தச்சிவப்பில் சிவந்து சிவந்து எரிந்தணைந்தது சூரியன். பெரும் காளவாய் போல ஒரு கணம். அதிபிரம்மாண்டமான செம்பருத்தி போல மறு கணம். தங்கம் உருகிய கலம் போல மறு கணம்.”


“புலரி ஒரு மாயத்தூரிகையால் வானத்தில் ஒவ்வொரு மலையாக எழுதிக்கொண்டிருந்தது. ஒளிரும் பொன் வண்ணத்தில் பாறைமுகடுகள். நிழல்களுடன் கலந்து புடைத்தெழுந்த மலைப்பாறைச்சரிவுகள். பச்சை மரங்கள். அப்பால் நீர்த்த வண்ணத்தில் மலைகள். அவற்றுக்கும் அப்பால் மிகநீர்த்த வண்ணத்தில் தொலை தூரத்து மலைகள். அவற்றுக்கும் அப்பால் கலைந்த வண்ணத்தீற்றல்கள் போல இன்னும் உருவாகி முடிக்காத மலைகள்.”


“மணல் மேல் ஏறிச்சென்றபோது வெள்ளை யானைகள் மேல் ஏறிப் பொற்சாமரங்கள் வீசி வரும் அக்னிதேவன் போல சூரியன் உதித்து நிற்பதைக் கண்டோம். பாலைவனத்தூசு பொன்படலமாகப் பரவியிருந்தது. பொன்னிறமான துணிவழியாகப் பார்ப்பது போல சூரியன் தெரிந்தது. பொன்னிற முகத்தின் குங்குமம் போல.”


இதுபோல இன்னும் பல நூறு புலரிகளையும் அந்திகளையும் நிகழ்த்தியவர்.


நதியொன்று பயணத்தில் அவ்வப்போது மரங்களுக்கு ஊடாக தலை காட்டுவது போல பயணக்கட்டுரைகளில் கவித்துவ தருணங்கள் மின்னி மறைவது இவற்றை கவிதைகளின் நிரையில் கொண்டு வைப்பவை. 


தண்டகாரண்யத்தின் ஆழ்ந்த குளிரில் ஊறி வரும் நதியாகிய சந்திராவதி அருவியாய் பொழியும் சித்ரகூட் அருவியைக் கண்டு அகமெழுந்து “விண்ணின் ஓங்காரத்தை மண்ணில் ஒலிக்கும் வெள்ளிநாக்கு” என்று சொல்லும் கவிமனது. “வெயிலின் அழகை புல்நுனிகள் தோறும் வைர ஊசிகளைப் பொருத்தும் அதன் மாயத்தை பார்த்தபடி நடந்தோம்” என இயல்பாக உதிரும் வர்ணனை!.


காற்று கானல் வரி பாடிச் சென்ற மணல் வெளியை கண்டு “மணல் தான் வரலாறு. இந்த மணலில் நடந்த எல்லாப் பாதங்களும் மறைந்தன. மணல் புதிய பாதங்களுக்காகக் காத்துக் கிடக்கிறது. மணல் வரலாறு. திரும்பிப்பார்க்கையில் இரு பாதங்களின் தடங்கள் ஒரு குறள் வரி போலக் கிடந்தன. ஒரு கவிதை வரி. ஒரு வாழ்க்கையின் பதிவு. இந்தத் தாள் எழுதப்படுவதை எல்லாம் உடனே உள்வாங்கி செரித்து அழித்துக்கொள்கிறது. மணல் இலக்கியம்.” மணலை வரலாறாக, இலக்கியமாக காணும் கண்கள்.


“குகைகளின் வழியே” இந்தியாவின் ஆந்திரா, சட்டிஸ்கர், ஒரிசா மாநிலங்களில் உள்ள மாபெரும் பிலங்களை, குகை வழிகளைத் தேடிச் சென்ற ஒரு பயணம். அப்பயணம் குறித்து எழுதும் போது “இந்தியாவின் மேலே சென்று கொண்டிருந்த பயணங்களுக்கு மாறாக உள்ளே ஒரு பயணம். அது நம் உள்ளே செல்லும் பயணமும் கூட” என்கிறார். 


இங்குள்ள ஒவ்வொன்றும் அங்குள்ள வேறொன்றாக உருமாறிக் கொண்டே இருக்கும் அகம் இவருடையது.


மண் பிளந்தெழல்


பயணத்தின்போது அதை வெறும் கேளிக்கை அனுபவமாகவோ, புதிய இடங்களைக் குறித்த புறவயமான செய்திகளின் தொகுப்பாகவோ ஆக்கிக் கொள்ளாமல், தன் ஆழுள்ளத்தை அதன் முன் திறந்து வைப்பதையே ஜெயமோகன் ஒவ்வொரு பயணத்திலும் செய்கிறார். பெற்றுக்கொள்ளவெனத் திறந்துகொள்ளும் சிப்பியிலேயே முத்து விளைகிறது. புதிய அனுபவங்களின் முன் திறந்து வைக்கப்பட்ட அகத்தில் அவை மகத்தான அனுபவச்செறிவாக ஆகின்றன, அந்த விதைகள் நிலம் கீறி முளைத்தெழும்போது அது இலக்கியமாக பதிவாகிறது.


ஆழுள்ளம் சேகரித்த நினைவுகள் எழுத்தாக பெருகுவதை வாசிக்கும் போது, வரலாறு, இயற்கை, இலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த பார்வைகள் ஆன்மீகத் தேடல் என்னும் கங்கையில் வந்து இணையும் பிரயாகைகளாக தோன்றுகிறது. அதனாலேயே அவை பேரிலக்கிய நூல்களுக்கு இணையான முக்கியத்துவம் கொள்கின்றன.


வரலாறு என்று சொல்லும் போது, எந்த ஒரு இடத்துக்கும், சமூக சூழலுக்கும், கலைக்கும், சூழியல் மாற்றங்களுக்கும், மக்களின் வாழ்வியல் முறைகளுக்கும் அதன் வேர் வரை சென்று, அதனைப் புரிந்து கொள்ள முயலும் வரலாற்றுப் பார்வையே ஆசிரியர் ஜெயமோகனுடைய அடிப்படையான நோக்கு.  அந்த வரலாற்றுப் பார்வையே எந்த ஒரு விஷயத்தையும் ஒட்டுமொத்தத்தின் ஒரு பகுதியாக வைத்துப் பார்க்கவும், அதன் இயல்பான பரிணாம மாற்றங்களை, அதன் சாரமாக உறைவதை, அதன் செல்திசையை வகுத்தும் தொகுத்தும் தெளிவாக சொல்லாக்க உதவுகிறது. 


இந்தியாவின் பல ஊர்கள், மாநிலங்கள் வழியாக செல்லும்பொழுது அப்பகுதியில் கண்ணில் படும் காட்சியிலிருந்து அப்பகுதியின் வரலாற்றை, பண்பாட்டை, அரசியல், சமூகவியல் கூறுகளை நோக்கி விரிந்து விரிந்து செல்கிறார். உதாரணமாக சட்டிஸ்கரில் உள்ள பர்சூர் என்னும் ஊரில் உள்ள ஆலயம் பற்றிய குறிப்புகள். பழங்குடிக்கலை மெல்ல வந்து இந்தியச் சிற்பக்கலையின் அடித்தளமாக மாறுவதை உணரக்கூடிய ஒரு தலம் அது, பழங்குடி வழிபாட்டில் இருந்து சைவமதம் உருவான காலகட்டத்து சிலைகள் அங்கிருக்கின்றன என்ற குறிப்பு, வரலாறு குறித்தும் தத்துவ தரிசனங்கள் குறித்தும் சிற்பக்கலை குறித்தும் ஒரு விரிவான உளச்சித்திரம் கொண்ட ஆய்வாளருக்கே உரிய பார்வை. 


காஷ்மீர் போன்ற இடங்களில் பொது மனதில் ஊடகங்கள் உருவாக்கிக் காட்டும் அரசியல் சமூக நிலைக்கும், அங்குள்ள நிதர்சன உண்மைக்கும் உள்ள தொலைவை நேரில் சென்று பதிவு செய்த கட்டுரைகள் மிக முக்கியமானவை. பழங்காலம் முதல் அங்கு வாழ்ந்த மஞ்சள் இனப் பழங்குடியினருக்கும், ஆஃப்கானிய பாகிஸ்தானியப் பகுதியில் இருந்து வந்த தார்தாரிய மேய்ச்சல் பழங்குடிகளுக்கும் இடையே நிகழ்ந்த கலப்பும் அது மெல்ல மெல்ல அரசியல்வாதிகளின் கையில், மத அடிப்படைவாதிகளின் பிடியில், ஊக்குவிக்கப்படும் தீவிரவாதத்தின் கையில் சிக்கி வேறொன்றாய் உருமாறிக் கொண்டிருப்பதன் ஒட்டுமொத்த சித்திரத்தை இக்கட்டுரைகள் காட்டுகின்றன. அங்கும் எளிய பொது மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு தங்கள் அன்றாட வாழ்வை, அதற்கு உதவும் தொழில்களையே முக்கியமாகக் கருதுவதன் நிதர்சனத்தைக் காட்டுகிறார். இவை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களுக்கு முற்றிலும் மாறானவை.


இயற்கை குறித்து பேசும்போது, ஆசிரியர் ஜெயமோகனுடைய எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவர்கள் காடு இவருள் எப்பொழுதும் இருப்பதை அறிவார்கள். “பச்சை நிறம்தான் உயிரின் நிறம். பூமி முழுக்க பரவியிருக்கும் பெரும் கருணையின் நிறம் அது.” என்பதை இவரது கணக்கற்ற கானக விவரிப்புகளில் உணர முடியும். நண்பர்களுடன் மேற்கொண்ட பல்வேறு கானுலாக்கள் பதிவாகி இருக்கின்றன. காட்டின் பெருமௌனத்தை, அங்கு மட்டுமே உணரப்படும் விசித்திரமான தனிமையை, காட்டில் கணம்தோறும் நிகழ்ந்து ததும்பிக் கொண்டே இருக்கும் உயிர்த்தொகையை எண்ணற்ற முறை எழுதியிருக்கிறார். கானுலாக்களில் தன் உள்ளே நிரப்பிக்கொள்ளும் வனத்தை ஒரே நேரத்தில் உயிர்த்துடிப்பென்றும் பேரமைதி என்றும் கண்டுகொள்கிறார். 


விலங்குகளை, குறிப்பாக யானையையும் நாய்களையும் இவர் எழுதிய அளவு வேறு யாருமே எழுதியதில்லை என உறுதியாக சொல்லலாம். கௌர் எனப்படும் காட்டெருதுக்களின் கம்பீரமான அழகை, நாகங்களின் எண்ணற்ற நெளிவுகளை, தன்னந்தனியாகவே காணப்படும் கேழைமான்களை, காட்டின் மின்னலென கணநேரம் கண்ணில் பட்டு மறையும் சிறுத்தையை இவர் எழுத்துக்கள் வழியாகவே இதுவரை காண முடிந்திருக்கிறது.


பயணம் செய்யும் நிலம் குறித்த கூர்மையான நிலவியல் சார்ந்த மனப்பதிவுகளை அவரது அகம் அள்ளிச் சேகரித்துக் கொண்டே இருக்கிறது. வெண்முரசு போன்ற மாபெரும் செவ்வியல் படைப்பில், நூறுக்கணக்கான சிறுகதைகளில் விரியும் நிலவெளியாக பின்னர் வெளிப்படுகிறது.


இமய மலைக்குவியல்கள் நடுவே பனி உருகி மலை அரிக்கப்பட்டு ஆழமான மலையிடுக்குகள் உருவானது குறித்தும், அந்த மலையிடுக்குகளில் மோதி நுரைத்து இறங்கும் ஒடைகள் ஆறுகளாக உருவாவது குறித்தும், வண்டல் மண் சேர்ந்து இமயத்தின் அடுக்குகளுக்கு நடுவே உருவான ஒரு துண்டு சமவெளி குறித்தும் வரும் தகவல்கள் நூறு நிலங்களின் மலையில் காணலாம். அங்கு மட்டுமே காணப்படும் ஹிமாலயன் மர்மோத், ஹிமாலயன் ஐபெக்ஸ் போன்ற விலங்குகள், திபெத்திய பனிக்காகம், இமாலயச் செம்பருந்து போன்ற அரிய பறவைகளைப் பார்த்தது பற்றிய விவரணைகள் இடம்பெறுகின்றன. புழுதி மலைகள், கூழாங்கல் மலைகள், மொட்டைக் குன்றுகள், சேற்றுப்படிவப் பாறைகள், காற்று உருவாக்கிய குகைகள், உயர்ந்த கூம்புப் பாறைகள் என மாறிக் கொண்டே வரும் நிலம் பற்றிய சித்தரிப்புகள். நம் அந்தகரணத்தை வடிவமின்மைகள் எப்போதுமே திகைக்க வைப்பதையும் அதை அறிந்தவற்றைக் கொண்டு அள்ள முயற்சி செய்து கொண்டே இருப்பதையும் உணர்கிறோம்.


இலக்கியத்தையே தியானமெனப் பயில்பவராக இவர் தான் செல்லும் வழியெங்கும் வேறொரு கண் கொண்டு, இலக்கியத்துக்கான ஆழ்மனப் படிமங்களையும், கதைக்களன்களையும் அல்லது அந்த மண்ணுக்கு சொந்தமான இலக்கியவாதிகளையும் கண்டுகொண்டே இருப்பதாக தோன்றுகிறது.



ஆசிரியரின் ஐரோப்பிய பயணக் குறிப்புகளை ’புனைவிலக்கியம் உருவாக்கிய வெளியில் ஒரு பயணம்’ என்றே சொல்லிவிடலாம். ஐரோப்பா, இலக்கியங்கள் வழியாக மனதுக்கு மிகவும் அணுக்கமாகிவிட்ட நிலம். தொன்மையான கல்பாவப்பட்ட தெருக்கள், சாம்பல்நிறச் சுவர்கள், கண்ணாடிச்சாளரங்களில் தெரிந்த வானொளி என புனைவிலக்கியத்தின் வழியாக பல நூறுமுறை உலவிய நகரமாகவே லண்டன் இவருக்குத் தெரிகிறது. விமானம் ஃப்ராங்க்பர்ட்டில் தரையிறங்கும் போது புடன்ஃபுரூக்ஸில் இறங்கிவிட்டதாக எண்ணிக்கொள்ளும் அளவுக்கு இலக்கியம் சமைத்தளித்த உலகம் ஒன்றில் சென்றிறங்கும் பயணமாக அது அமைகிறது.


பின்னர் லண்டனை சுற்றிப்பார்க்கும் போதும் ஷேக்ஸ்பியர் வந்து உணவுண்டு குடித்த விடுதி, டிக்கன்ஸின் நாவலொன்றில்  வரும் விடுதி என்றே வழிகாட்டியும் சொல்கிறார். ஜேன் ஆஸ்டின் இந்த தெருக்களில் சாரட் வண்டியில் சென்றிருப்பார். மேரி கெரெல்லி இந்தத் தெருக்களில் நடந்திருக்கக் கூடும் என்றே அந்நகரை ஜெயமோகன் அறிகிறார். அத்தனை இலக்கிய எழுத்தாளர்களின் வரலாறு கொண்ட நகரத்தை கனவிலென வாசகரும் தொடர முடிகிறது. 


மாமங்கலையின் மலை என்னும் கட்டுரையில் கொல்லூர் செல்லும் வழியில் ஒரு சிற்றூரில் ஒரு பள்ளியின் சுவரெங்கும் ஞானபீடப்பரிசுபெற்ற கன்னட எழுத்தாளர்களின் படங்கள் வரையப்பட்டிருப்பதைப் பார்த்து உவகை அடைகிறார். குடஜாத்ரியில் சிவராம்காரந்தின் பித்தனின் பத்துமுகங்களை நினைத்துக் கொள்கிறார்.  அஜ்மீர் நிலப்பகுதியைக் காணும் போது, நேரில் கண்டதை விட ஜாவர்சந்த் மக்கானியின் எழுத்தின் வழியாக அந்த நிலத்தை அறிந்ததே மிகுதி என உணர்கிறார். இவ்விதம் ஒவ்வொரு நிலமும் எழுத்தின் வழியே வரலாற்றின் நினைவில் நிறுத்தப்படுகிறது. “எழுதப்பட்ட நிலமே வாழும் நிலம்.” என்கிறார். அவ்விதத்தில் ஆசிரியர் ஜெயமோகன் எழுத்தில் எழுந்துவிட்ட நிலங்கள் சாகாவரம் பெற்றுவிட்டவை


ஆசிரியரது பல நூறு பதிவுகளை வாசிக்கும் போது இம்மண்ணின் கலை குறித்த ஒரு வரலாற்றுப் பார்வையும், அதன் வளர்ச்சி காலகட்டமும், அதற்கு வேராய் நீராய் நிலமாய் உள்ள சமய தத்துவ ஆன்மீக தரிசனங்களும் புலனாகிறது, அனைத்துக்கும் மேலாக மானுடம் கலையின் வழியாக அடைய முயற்சிப்பது என்ன என்ற கேள்வியைப் பின் தொடர்ந்து சென்று விடைகளைக் கண்டுகொண்டே இருக்கிறார். 


சிற்பக் கலையின் உச்சம் தொட்ட பல ஆலயங்களை பார்த்துச் செல்லும் போது, ”மகத்தான கலை மனிதனுக்கு சிருஷ்டி விதித்த மூன்று எல்லைகளை அவன் தாண்டிச் செல்ல வைக்கிறது. அவன் அகம் அவனுடைய ஐம்புலன்களின் வரையறைகளை மீறுகிறது. அவன் மரணமற்றவனாக ஆகிறான். அவன் இருப்பு கால-இட எல்லைக்கு அப்பால் நிகழ ஆரம்பிக்கிறது.” என்கிறார்.


சிற்பங்கள் குறித்த வர்ணனைகளில் இவரது எழுத்துக்கள் எப்போதும் அதிஉச்சத்தைத் தொடுகின்றன.


விமல்வாசஹி கோவிலின் சிற்ப செதுக்குகள் குறித்து “சிலந்தி வலையின் மென்மையுடன், வெண்தாமரையின் மெருகுடன், நுரைக்குமிழியின் ஒளியுடன், நாரைச்சிறகின் நுட்பத்துடன், வழியும் பாலின் நெளிவுடன், வெண்ணையின் குழைவுடன் கூடிய செதுக்குதல்கள். ஒவ்வொரு சிற்பம் முன்னாலும் சில கணங்கள் சிந்தை அழிந்த பித்துநிலை கைகூடுகிறது.” என கல்லில் எழுந்த கலையை சொல்லாக்க முற்பட, வார்த்தைகள் அலையலையாய் எழுந்து வருகின்றன. சாஸ் பாகு என்னும் கணுக்கணுவாய் சிற்பங்கள் பூத்த ஒரு ஆலயத்தை “பூமிச்செப்பின் வானத்து மூடியைத் திறந்து ஒரு அரிய நகையைக் காட்டுவது போல அந்தக் கோயில்.” என்கிறார்.


அந்த அதி உன்னதக் கலைவெளியில் நின்று ”மானுட சாதனை எதுவுமே தனிமன வெளிப்பாடு அல்ல, பெரும் கலைஞன் என்பவன் அவன் காலகட்டத்தின் ஒட்டுமொத்த கலைக்கொந்தளிப்பின் அலைமேல் ஆரோகணித்துச் செல்பவன்” என மானுடம் குறித்த, படைப்பூக்கம் குறித்த ஒரு மாபெரும் அறிதலை முன்வைக்கிறார். 


“இங்கே இந்த மகத்தான கலைப்படைப்பை சாதித்தவர்களை சிற்பிகளின் சமூகமாக நாம் நினைக்கிறோம். அது அவர்களின் உடல்களைக் கொண்டு. அவர்களைப் பல்லாயிரம் கரங்களும் பல லட்சம் விரல்களும் கொண்ட ஒரு விராட புருஷனாக உருவகிக்க வேண்டும். அந்த புருஷமேருவுக்கு எந்த மாபெரும் கலையும் ஒரு விளையாட்டுப்பொருள் மட்டுமே.” – இந்த வரியை, இந்தக் காலகட்டத்தின் ஒரு மகத்தான கலைஞன் சொல்லும்போது அது மிகுந்த பொருளேற்றம் கொள்கிறது. 


இன்று அந்த மாபெரும் கலை வெளியை புரிந்துகொள்ளும் நுண்ணுணர்வில்லாத பெரும் கூட்டம் உருவாகி நமது கலைப்பொக்கிஷங்களை சிறுகச் சிறுக அழித்துக் கொண்டிருக்கும் நிலையையும் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அது ஒரு புறம் இருக்க, ”இந்நாள் வரையிலான மானுட வரலாறே அழகை, மேலும் அழகை, மேலும் மேலும் அழகை நோக்கி மானுடப்பிரக்ஞை கொண்ட தாவல் மட்டும்தானே?’ என்ற வரி, மானுடன் எந்த நிலையிலும் மேன்மையானவற்றை நோக்கி சென்று கொண்டே இருப்பான் என்ற உளஎழுச்சியைத் தருகிறது.


ராஜஸ்தானில் சாச்சி மாதா கோவில் ஒன்றில் ஒரு தொன்மம் கேள்விப்படுகிறார்கள். சாமுண்டி மாதாவுக்கு உயிர்ப்பலி கொடுப்பதை ஸ்ரீ ரத்ன பிரபா சூரி என்ற ஆச்சாரியார் நிறுத்துவதும், தேவி கோபம் கொள்வதும், பின் அவளே அதன் பிழையுணர்ந்து குருதி பலியை வேண்டாம் என்பதுமான கதை. இது சமணம் அதற்கு முன் நிலவிய நாட்டார் வழிபாட்டுமுறையை எவ்விதம் மாற்றி அமைத்தது என்பதைக் காட்டும் சிறந்த உதாரணம் என்கிறார். மேலும்  உயிர்ப்பலியை நிறுத்துவதென்பது எவ்விதம் ஒரு இனக்குழுவின் அடிப்படையான வன்முறை சார்ந்த விழுமியங்களை, அவர்களின் மனநிலையையே மாற்றியமைக்கிறது என்பதையும் அது எவ்வளவு முக்கியமான பண்பாட்டு மாற்றம் என்பதையும் தொட்டுக் காட்டுகிறார்.


வேறொரு பயணத்தில் நாக்பூர் வழியே பயணிக்கிறார்கள். இந்திய வரலாற்றில் நாக்பூருக்கும் கல்கத்தாவுக்கும் இடையே உள்ள உறவை அவரது உள்ளம் அவதானிக்கிறது. அந்த இரு நகரங்களும் தராசின் இரு தட்டுகள் போல ஒன்றை ஒன்று சமன் செய்வதை உணர்கிறார். ”கல்கத்தா புதுமை மோகம், ஐரோப்பியமயமாதல் ஆகியவற்றுக்கான வேகம் கொண்டது. நாக்பூர் மரபுசார்ந்த நோக்கு, இந்தியத்தன்மைக்கான பிடிவாதம் ஆகியவை கொண்டது. ஆரம்பகால காங்கிரஸ்காரர்களில் வங்காளிகளில் மிதவாத நோக்குள்ள கனவான்கள் என்றால் திலகர் கடுமையான மரபுநோக்குள்ள போராளி. கல்கத்தா கம்யூனிசத்தை நோக்கிச் சென்றபோது நாக்பூர் இந்துமகாசபையையும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் உருவாக்கியது.” என்று அந்த இரு நகரங்களை உருவகிக்கிறார். இவ்விதமான பண்பாடு, வரலாறு குறித்த பின்புலத்தோடு உருவாக்கும் இணைப்புகள் மிக முக்கியமான திறப்புகளை அளிக்கின்றன.



திசைப்பயணங்கள்


உலகம் தகவல் வெளியாக சுருங்கிவிட்ட இன்றைய யுகத்தில் எந்த ஒரு புதிய நிலத்தையும் தொழில்நுட்ப உதவி கொண்டு நாம் இருக்கும் இடத்தில் இருந்தபடியே ‘தெரிந்துகொள்ள’ முடியும். நாம் ஒரு போதும் காணச் சாத்தியமில்லாத கோணங்களில் இருந்தும், நுண் நோக்குக் கருவிகள் கொண்டும் செயற்கைக்கோள் உதவி கொண்டும் அணுகியும் விலகியும் மெய்நிகர் உலகைக் காணக் கூடிய சாத்தியங்கள் நமக்கு இருக்கின்றன. அப்படி இருக்க ஒரு புதிய நிலத்தில், வேற்று தேசங்களில் பயணம் செய்யும் போது ஒரு பயணி அடைவது என்ன? அதை பிறிதொருவருக்கு சொல்லும்போது எவை முக்கியமானதாகின்றன? 


புதிய மண்ணில் சென்று நிற்கும் ஒருவன் தகவல்களின் தொகுப்பான மூளையுடன் மட்டும் அங்கு சென்று நிற்பதில்லை, நுண்ணுணர்வுகளின் தொகுப்பாக, ஒரு பண்பாட்டுத் தன்னிலையாக சென்று நிற்கிறான் என்கிறார் ஜெயமோகன். ஜப்பானிலும், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், கிழக்காசிய நாடுகளிலும் மேற்கொண்ட பயணத்தின் சித்திரங்கள் ஒரு வழக்கமான பயண எழுத்திலிருந்து முற்றிலும் மாறானவை.


இளம்வயதில் வீட்டில் இருந்த ஒரு சிறிய மூக்குக்கண்ணாடியில் இருந்து ஜப்பானை உருவாக்கிக் கொள்ளவும், எங்கோ ஒரு தொலைதூர தேசத்தில் கண் விழிக்கையில் வேளிமலையை அங்கே கண்டு கொள்ளவும் அறிந்த மனம் இவருடையது. இந்த மனம் நமது பண்பாட்டுக்கு முற்றிலும் அயலான ஒரு நிலத்தை எந்தப் புள்ளிகள் வழியாக அணுகுகிறது என்ற பார்வையோடு அந்த எழுத்துக்களை வாசிப்பது, ஒரு கலைஞனின் அகம் செயல்படும் விதத்தை அருகிருந்து பார்க்கும் வாய்ப்பாக இருக்கிறது. 


உதாரணமாக ஜப்பான் செல்லும் போது, ஜப்பான் எவ்விதம் தன் இளமைப் பருவத்தில் பொருட்களாக, பெயர்களாக நினைவில் வந்து சேர்ந்தது என்னும் ஒரு சிறு நினைவுக் குறிப்புடன் தொடங்குகிறார். பின்னர் ஜப்பானிய இலக்கியமும் ஜென் தத்துவமும், அதிலிருந்து கீழை-மேலை தத்துவ சிந்தனைகளுக்கிடையேயான அடிப்படை வேறுபாடு;. ஜப்பானியத் திரைப்படம், ஜப்பானிய ஓவியம் என்று அவரது மனம் ஜப்பான் பற்றிய கீற்றோவியத்தை உருவாக்கிக் கொள்கிறது. பாஷோ, கோபயாஷி, கவபத்தா ஆகியோர் சந்திக்கும் ஒரு புள்ளியைத் தேடி இப்பயணம் என வகுத்துக் கொள்கிறார். இதன் மூலம் குறிப்பிட்ட காலவரையறை கொண்ட பயணத்தின், சிறு சாளரம் வழி காணும் புதிய நிலத்திலும் ஒரு ஒட்டுமொத்தமான அறிதலை உருவாக்கிக் கொள்கிறார்.


ஜப்பானில் நண்பர்கள் அங்கு அன்றாட அலுவல்களில் கூட காணப்படும் நெகிழ்வில்லாத முறைமைகளைப் பற்றி குறிப்பிடும் போது, அதை ஜப்பானிய வரலாறு குறித்த புரிதலோடு, அதன் சாமுராய் போர் பாரம்பரியத்தையும் பௌத்தமும் ஷிண்டோ மதமும் இணைந்து உருவாக்கியளித்த தத்துவ பின்புலத்தில் வைத்து அப்பண்பாட்டை விளக்குகிறார். இது ஒரு தெளிவான பார்வையை அளிக்கிறது. 


ஜப்பான் போன்ற வலுவான போர்ச்சமூகங்கள் கலைகளை உருவாக்கும் ஆற்றல் குறித்த அவதானிப்பும் ஒரு தேசத்தில் புராணங்கள் இல்லாதிருப்பது எவ்விதம் அப்பண்பாட்டை பாதிக்கிறது என்னும் அவதானிப்பும் மிக முக்கியமானவை. உலகளாவிய அங்கீகாரம் என்பது ஜப்பானிய இலக்கியத்தையும் திரைப்படங்களையும் நிர்ணயிக்கும் போக்கை சுட்டிக்காட்டுகிறார்.


கலை, தத்துவம், வரலாறு என அனைத்திலும் இவர் கொண்டிருக்கும் அறிவுச் சேகரமும் கூரிய அவதானிப்பும் முயங்கி புதிய திறப்புகளை சாத்த்யமாக்குகின்றன.


அடுத்ததாக புறவயமான அவதானிப்புகளை அதன் சாராம்சத்தைத் தொட்டறிந்து தொகுத்துக் கொள்ளும் திறம். உதாரணமாக ஜப்பானிலுள்ள வீடுகளைக் கண்டதும் அவற்றுக்கும் ஐரோப்பிய நாடுகளின் நவீன வீடுகளுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகளை அவரது உள்ளம் துளாவுகிறது. எடையற்ற அவ்வீடுகள் அவ்விதம் கட்டப்படுவதன் காரணம், எந்நேரமும் சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்கக் கூடிய நிலம் என்னும் தகவலை, ”ஆழத்தில் எரிமலைகள் குமுறும் நிலையற்ற மண் மேல் எழுந்த பண்பாடு” என்ற வரியாக்கிக் கொள்கிறது அவரது அகம். அதுவே ஜப்பானில் எழுந்து வந்திருக்கும் பண்பாட்டின், கலைகளின் சாரம். இவ்விதம் தொகுத்துக் கொண்டுவிட்ட அறிதல் ஒருபோதும் மறப்பதில்லை.


இதே போல, பலவற்றை சொல்லலாம் - ஜென் ஆலயத்தில் இருக்கும் ஒரு துப்பாக்கியை, முழு வெடித்திறனுடன், குண்டு நிறைக்கப்பட்டு ஒருபோதும் வெடிக்காமல் அமைந்திருக்கும் துப்பாக்கி என உருவகப்படுத்தி விடுகிறார். ஜப்பானிய மடாலயத்தில் சால மரமும் போதி மரமும் அங்கு வளரும் வேறு மரங்களால் நிகர் செய்து கொள்ளப்படுவதைக் கண்டு ’ஜென் என்பதும் பௌத்தத்துக்கு பதிலாக வைக்கப்பட்ட இன்னொரு பௌத்தம்’ என உருவகிக்கிறார். ஜப்பானின் அருங்காட்சியகம் ஒன்றில் அருமணிகள் பொறிக்கப்பட்ட கடானா வாளுறைகளை பார்த்ததும் ’வன்முறைக்கு மேல் ஏற்றப்பட்ட அணிகள்’ என்று பண்டைய காவியங்களோடு நிகர் வைக்கிறார். ஒரு ஜென் துறவி ஒரு பொற்கோவிலை எரியூட்டியதை ஒரு கதைக்கான முதன்மைப் படிமமாக அடையாளம் காண்கிறார். இவை அனைத்திலும் ஒரு அதிஅற்புத வரம் பெற்ற படைப்பு மனம் இயங்கும் விதம் புலனாகிறது.


ஒரு நாட்டின் பண்பாட்டை அறிதல் என்பது பயணத்தின் ஊடாக நாம் பெறும் அனுபவத்தையும் நாம் தெரிந்து கொண்ட தரவுகளையும் படிமங்களாக்கி ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்வது. அதையே இந்தக் கட்டுரைகள் வழி அறிகிறோம்.  



அலைதல் அமைதல் 


ஆன்மீகமான தேடல் என்பது அனைத்துக்கும் அடிப்படையான, சாராம்சமான வினாக்களை எழுப்பிக் கொள்ளுதலும் அதற்கான விடைகளைக் கண்டடைதலும் என சொல்லலாம். பயணங்களில் அள்ளிக்கொள்ளும் அவதானிப்புகளை அவரது ஆழ்மனம் ஆழ்ந்த சித்திரங்களாக படிமங்களாக மாற்றிப் பாதுகாத்துக் கொள்கிறது. அது தக்கதருணத்தில் உருவகங்களாக, ஆன்மீக அறிதல்களாக, மகத்தான படைப்பு வெளியாக மேலெழுந்து வருகிறது.

  

தன் முன் வரும் எந்த ஒரு துளியில் இருந்தும் மாபெரும் கேள்விகளை எழுப்பிக் கொள்கிறார். கண்முன் காணும் புறவுலகில் இருந்து சேகரிக்கும் துளிகளை பலதுறை சார்ந்த ஆழ்ந்த அறிவுப்புலத்தில் பொருத்தி இவரது மனம் அதற்கான விடையை வேகமாகவும் எளிமையாகவும் கண்டடைகிறது. அன்றாட நடையில் கண்ணில் படும் இயற்கையில் இருந்து பிரபஞ்ச விரிவையும் காலமில்லாப் பெருவெளியையும் விரித்துணர்ந்து கொள்ளும் திறம் இவருடையது. 


இங்குள்ள வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் நிகழ்வையும் தத்துவப் புலத்தில் வைத்து அறியவும் வகுத்துக்கொள்ளவும் முனைகிறார். அந்த அறிதலை பல துறைகளின் உண்மைகளோடு பொருத்திப் பார்த்து அதில் கிட்டக்கூடிய விடைகளை நோக்கி, என்றுமுள்ள பேருண்மைகளை நோக்கி , முழுமுதல் உண்மையை நோக்கி இவர் அகம் பயணித்துக் கொண்டே இருக்கிறது.


பெலும் குகைகளில் உள்ளே சென்று அந்த குகைகளை கொத்துவிளக்குகள் போலத் தொங்கும் கூம்புகள், பட்டுதுணியை வளைத்து செய்த பந்தல் அலங்காரம் போல நீரின் செதுக்குவடிவங்கள், போர்வை போர்த்திய குழந்தைகள், சேற்றுக்குள் நிற்கும் எருமைகள், மத்தகம் மட்டும் நீட்டும் யானைகள் என ஒரு குழந்தை வியந்து கொண்டே செல்வதைப் பார்க்கலாம். 


அதற்கு அடுத்த வரியிலேயே “ஆழ்மனதுக்குள் செல்லும் பயணம். இருண்ட வழிகள். சிதைந்த வழிகள். இருளும் ஒளியும் முயங்கும் விசித்திர உருவங்கள். கனவுகளின் நிழலாட்டம். ஆழத்தில் சதா கொப்பளிக்கும் அந்த குளிர்ந்த ஊற்று...” என அனைதையும் தியான அனுபவமாக திறந்து கொள்ளும் பெரும்தேடல் கொண்ட ஞானியின் அகம் வெளிப்படுகிறது. குழந்தைக்கும் ஞானிக்கும் மட்டுமே தெரியும் உலகம் ஒன்றில் உலவும் பயணி.


இதனால் இவரது எழுத்துக்கள் ஒன்று மற்றொன்றைப் போல இருப்பதில்லை. ஒரு பயணத்துக்கும் அடுத்த பயணத்துக்கும் இடையில் நிகழ்த்திக் கொண்டே இருக்கும் அகச்செலவு காரணமாக பயண அனுபவக் குறிப்புகளும் கூட வேறொரு தளத்துக்கு சென்று கொண்டே இருக்கின்றன. இதனாலேயே இவரைப் பல காலமாகத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் கூட, ஒரு வரையறைக்குள் அடக்கி விட முடியாத இயற்கையைப் போல இவரது எழுத்துக்களும் என்றும் புதிதாக இருக்கின்றன.


”ஆன்மிகமான தேடலுக்கு இரு கருவிகள் இன்றியமையாதவை. ஒன்று; கருத்துருவங்களையும், பிற அக நிகழ்வுகளையும் சுட்டும் மொழி. அதாவது தனியான கலைச்சொற்கள். இரண்டு; படிமங்கள் மற்றும் உருவகங்கள். பிறரிடம் கூறுவதற்கு மட்டுமல்ல, தனக்குத்தானே அவ்விஷயத்தை எண்ணிக் கொள்வதற்கும்கூட அவை தேவைதான்.” என்று ஒரு கட்டுரையில் ஜெயமோகன் குறிப்பிட்டிருப்பதையே இங்கு நினைவுகூர்கிறேன். அவை இரண்டும் கைகூடிய ஒருவர் எழுதும் போது எவ்வகை எழுத்தும் ஆன்மீகமானதாகிறது. 


புத்தரின் இருபுறத்து போதிசத்வர்களைக் குறித்து சொல்லும் போது ஒருவர் பத்மபாணி, தாமரையை ஏந்தியவர். மற்றவர் வஜ்ரபாணி, மின்னலை ஏந்தியவர். ”மிக மிக மிக மெல்ல மலரும் ஒன்று, கண்காணா கணத்தில் மலரும் இன்னொன்று. சித்தத்தில் ஞானம் உதயமாவதின் இரு கணங்கள்” என்று சொல்லக்கூடிய ஒருவரது அகம் எப்போதும் கொண்டிருக்கும் தேடலை, அதன் ஒரு சிறு கீற்றை எழுத்து வெளிக்காட்டுகிறது.  



நிலவை நோக்கியபடி விரிந்த மணல் வெளியில் நண்பர்கள் ஒவ்வொருவரும் அவரவர் தனிமையில் நின்றுகொண்டிருக்கும் ஒரு தருணம். நாம் பலரும் உணர்ந்திருக்கக் கூடிய தருணம். அது போன்ற தனிமையில் மனதில் ஏற்படும் துயரத்தின் காரணத்தை மிகக் கூர்மையாக தொட்டெடுக்கிறார். ” நம் இருப்பின் எளிமையை, நம் அகங்காரத்தின் சிறுமையை, நமக்களிக்கப்பட்ட காலத்தின் போதாமையை நாமே உணர்வதனால் வரும் துயரம் அது”. அத்தகைய ஒரு ஆன்மீகமான துக்கத்தை உணரும் கணத்தில் நம் லௌகீக வாழ்வின் துயரங்களையும் ஏக்கங்களையும் கொண்டு மனதை நிறைத்து விடாதிருக்க கலை எவ்விதம் உதவும் என்பதையும் அதில் எழுதியிருக்கிறார். இது ஒரு பயணக்கட்டுரை, உளவியலைத் தொட்டு ஆன்மீகத்தில் ஏறும் கணம். 


இவருடைய பயணக் கட்டுரைகளில் அவ்வப்போது நிகழும் திறப்புகள் இவ்வுலகு கடந்து ஆன்மீக உச்சத்தைத் தொடுபவை. அப்போது மொழி பறந்தெழும் விதம் ஒரு நீர்ப்பறவை மின்னல் கணத்தில் நீரில் மூழ்கி தன் இரை கவ்வி மேலெழுவது போன்றது. 


இந்தியப் பயணம் என்ற மிக விரிவான பயணம் ஒன்றில், ஸ்ரீசைலத்தில் நண்பர் வசந்தகுமார் இருபது வருடங்களுக்கு முன் பார்த்த கல்மண்டபம் ஒன்றை மீண்டும் பார்க்கிறார்கள். ஒரு ஆலமரம் அந்த மண்டபத்தை கற்குவியலாகச் சரித்து ஒரு பக்க சுவரை அப்படியே அள்ளி தன்னுள் விழுங்கி மேலெழுந்து நிற்பதைப் பார்க்கிறார். அங்கிருந்து ”என்ன இருந்தாலும் அது உயிர். மண்ணில் உள்ள எந்த ஜடத்தை விடவும் பிராணன் வலிமை மிக்கது என்று யோகம் சொல்கிறது.” என்ற எண்ணத்தை சென்றடைகிறார்.  


ஜப்பானின் பௌத்த ஆலயத்தில் தரையில் உதிரும் ஒவ்வொரு சருகும் அகற்றப்படும் தோட்டங்களை, ஒவ்வொரு கணமும் இடையறாது கண்காணிக்கப்படும் உள்ளத்தோடு அடையாளம் காண்கிறார், ஜப்பானிய தோட்டக்கலையை தியானத்தோடு நிகர் வைக்கிறார். 


அமெரிக்காவின் சாஸ்தா எரிமலையையும் ஜப்பானின் ஃபுயூஜியாமா எரிமலையையும் திருவண்ணாமலையையும் அனற்தூண் என எழுந்த சிவமாக உணரும் மனம்.


பயணத்துக்குப் பின் கனவுகளில் அந்நிலம் எவ்விதம் வெளிப்படுத்திக்கொள்கிறது என்பது அதை நம் ஆழ்மனம் என்னவாக்கிக் கொண்டது எனப் புரிய உதவும். ஜப்பான் ஒரு நீர்ப்பரப்பாக ஆசிரியரின் கனவுகளில் வருகிறது. பாஷோவின் கவிதையில் வரும் முகில்களும் நிலவொளியும் புதிய பொருளேற்றம் கொள்கின்றன.


அருகர்களின் பாதையில் மேற்கொண்ட ஒரு மாத கால பயணம்,  பாதங்களாக இவர் கனவில் உருக்கொள்கின்றன. குரு நித்ய சைதன்ய யதியின் பாதங்கள். ”அத்தனை பாதங்களும் நித்யாவின் பாதங்களாகத் தெரிகின்றன. அத்தனை பாதங்கள் வழியாகவும் நடந்தது ஒரே பயணம்” என்று சொல்கிறார். 


இவரது இத்தனை விரிவான பயண உலகை வாசித்த பிறகு, ஆசிரியர் ஜெயமோகன் மேற்கொண்டிருக்கும் அத்தனை அலைதல்களும் அந்தப் பாதங்களில் சென்று அமைதலை நோக்கிய பயணங்கள் மட்டுமே என்று அகம் உணர்கிறது.

No comments:

Powered by Blogger.