கரம் குலுக்கி தாள் பணிந்த பயணம் - அழகுநிலா
கீழிருந்து மேல் நோக்கி வளர்வது மட்டுமே வளர்ச்சி என்பதில் நான் மிகவும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தேன். ஏனென்றால் கல்வியும் சமூகமூம் அதைத்தான் எனக்குப் போதித்திருந்தன. கல்வியில், பொருளாதாரத்தில் கீழிருந்து மேலே சென்றுவிட்டதால் வெற்றி அடைந்த பெருமிதமும் கர்வமும் கொண்டிருந்த என்னை மெல்ல அசைக்கத் தொடங்கியது அந்தச் சந்திப்பு. இப்பிறப்பில் நமது கால்களைத் தழுவும் நிலமகள்களும் கைகளை ஸ்பரிசிக்கும் மனிதர்களும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவர்களென்பதை ஆழமாக நம்புபவள் நான். அப்படி ஊழால் தீர்மானிக்கப்பட்ட அத்தொடுகை 2014 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் நூலகத்தில் நிகழ்ந்தது.
சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு விழாவிற்கு நிகழ்ச்சி நெறியாளராக பொறுப்பேற்றிருந்த நான் மேடையில் ஒலிவாங்கியைச் சோதித்துக் கொண்டிருக்கையில் விழாவின் சிறப்பு விருந்தினராக அவர் அரங்கம் புகுந்தார். அவர் முதல் அடி வைத்த தருணத்தைத் தமிழ் திரைப்பட பாணியில் சொல்வதாக இருந்தால் ஆர்ப்பரித்த கடலலைகளும் அசைந்தாடிய மரக்கிளைகளும் சிறகடித்த பறவைகளும் ஒரு கணம் அசைவற்று அப்படியே நின்று போயின. ‘நான் அசைந்தால் அசையும் இலக்கிய அகிலமெல்லாமே’ என்ற மிடுக்கோடு வாசகர் வட்ட நண்பர்கள் புடைசூழ அவர் உள்ளே வந்தார். நான் அரங்கமேடை விட்டு இறங்கி விரைந்து படிகளில் ஏறத்தொடங்கினேன். அவர் மெல்ல படிகளில் இறங்கி வந்தார். நம்மைக் கரையேற்ற மீட்பர்கள் மேலிருந்து கீழிறங்கி வருவார்களென்பது அப்போதிருந்த என் சிற்றறிவுக்கு உறைக்கவில்லை.
நண்பர்கள் என்னை அறிமுகம் செய்தவுடன் அவர் இருகரம் கூப்பி ‘வணக்கம்!’ என்றார். ஆனால் நானோ வணக்கத்தை வாயால் மட்டும் சொல்லிவிட்டு “உங்கள் கையைக் கொடுங்கள்” என்று கேட்டவுடன் அவர் புன்னகைத்துக்கொண்டே தனது வலது கையை நீட்டினார். அவரது கரம் பற்றி குலுக்கினேன். அதற்கு காரணமிருந்தது. அத்தொடுகையின் வழி அவரது சொற்கள் என்னைப் பற்றிக்கொள்ளும், நானும் அவரைப்போல முரசு கொட்டலாம் என்ற நப்பாசைதான். அப்போது அவரது ‘ஏழாம் உலகம்’ நாவலை மட்டுமே வாசித்திருந்த இந்த உருப்படியின் நப்பாசைக்குப் பின்னால் சுய ஆணவமே மேலோங்கி இருந்தது என்பதை இப்போது உணரமுடிகிறது.
முதல் சந்திப்பில் அரைகுறை வாசகியாக மட்டுமே இருந்தவள் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இரண்டாவது சந்திப்பில் ஆர்வக்கோளாறில் முதல் நூலை வெளியிட்ட எழுத்தாளராக பதவி உயர்வு பெற்றிருந்தேன். அவரைப் போல என்ன, அவரை விட சிறப்பாக எழுதிவிடலாமென்று வாசகியாய் இருந்தபோதே அத்தனை ஆணவம் கொண்டிருந்தவளுக்கு இப்போது கேட்கவா வேண்டும். ஆணவம் இருந்த அதே அளவுக்கு அச்சமும் இருந்தது என்பதை மறைக்கவோ மறுக்கவோ விரும்பவில்லை. இரண்டு சந்திப்புகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவரது சிறுகதைகளையும் குறுநாவல்களையும் வாசித்திருந்ததுதான் அந்த அச்சத்திற்கு காரணமாகும். அந்த அச்சத்தின் விளைவால் என் முதல் நூலை அவரிடம் கொடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்.
அவரது எழுத்துக்களைத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கினேன். அந்த வாசிப்பின் வழி ஓர் உண்மையைத் தெளிவாக அறிந்துகொண்டேன். தனது ஒவ்வொரு படைப்பிலும் வாசகனைப் பித்து கொள்ள வைக்கும் அந்த இலக்கிய அரக்கனைப் போல் எழுதுவதென்பது எனது வாழ்நாளில் சாத்தியமில்லை என்ற நிதர்சனம் புரிந்தவுடன் நான் கொண்டிருந்த ஆணவம் பெரும் கோபமாக உருமாறியது. அவரைக் கொலை செய்வது போல இரண்டு, மூன்று முறை கனவு கண்டிருக்கிறேன். அதற்காக குற்ற உணர்ச்சி அடைந்து கண்ணீர் சிந்தியதும் உண்டு. ஆனால் இப்போது ஃபிராய்டைக் கைகாட்டிவிட்டுத் தப்பித்துக்கொள்ளும் அறிவைப் பெற்றிருக்கிறேன் என்றால் அதற்கும் அதே அரக்கன்தான் காரணமாவார்.
அதன்பிறகுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அவரது ‘அறம்’ தொகுப்பு என் கைக்கு வந்தது. ‘உன்னதமாக்கல்’ பற்றி அறிந்திருந்தாலும் அறம் தொகுப்பின் வழியாகத்தான் எனக்குள் நிகழ்ந்த உன்னதமாக்கலை அனுபவித்தேன். ஒவ்வொரு கதையையும் பல முறை வாசித்தேன். சில கதைகளை வாசித்துவிட்டு வாய்விட்டுக் கதறி அழுதேன். அந்த கண்ணீர் எனக்குள் இருந்த அகந்தை, ஆணவம், நான் என்ற அகங்காரமென அத்தனை அழுக்குகளையும் கழுவி சுத்தப்படுத்தி என்னைப் பரிசுத்தமாக்கியது. ‘தடம்’ இதழில் வெளிவந்த நேர்காணலில் “இலக்கியத்தின் உச்சம் ஆன்மீகம்தான் என்றாலும் அது மதத்தால் முன்வைக்கப்படும் ஆன்மீகம் அல்ல. அது எழுத்தாளன் தன் உள்ளுணர்வால் கண்டடையும் மாற்று ஆன்மீகம்” என்று அவர் கூறி இருந்தார். அறத்தின் வழியாக நான் கண்டடைந்ததும் அவர் முன்வைத்த அந்த மாற்று ஆன்மீகத்தைத்தான்.
நான் அதுவரை அறிந்தவை அனைத்தும் வெறும் ஏட்டுச்சுரைக்காய் என்பதும் எனது அறிதல்கள் வெறும் அறிதல்களாகவே இருக்கின்றன என்பதும் அறிவை ஞானமாக்க நான் அதிக தூரம் செல்ல வேண்டி உள்ளது என்பதும் ‘அறம்’ எனக்கு கொடையளித்த ஒளிக்கீற்றுகளாகும். அக்கீற்றுகளை இறுகப் பற்றிக்கொண்டேன். மனம் விசாலமானது. இருள் நீங்கி வெளிச்சம் புலப்பட்டது. அதுவரை பார்க்காமல் தவறவிட்ட அல்லது பார்க்க விரும்பாத விஷயங்களை நோக்கி எனது தேடலைத் தொடங்கினேன். தொடர் தேடலில், என்னை நான் முழுமையாகக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஓர் ஆசானைக் கண்டுகொண்டேன். ‘அறம்’ தந்த அந்த மனிதர் ஆசானாக எனக்குள் விஸ்வரூபம் எடுத்து நின்றிருந்தார். ஆமாம், அறம்தான் எழுத்தாளர் ஜெயமோகனை ஆசானாக நான் வரித்துக்கொள்ள காரணமாக இருந்தது.
2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த மூன்றாவது சந்திப்பில் நான் அகத்தில் வேறு ஒருத்தியாக மாறி அவர் முன் நின்றிருந்தேன். பிரமிப்பு, வியப்பு, பிரேமை, மரியாதை, பணிவு இப்படி பல உணர்வுகளின் கலவையாக இருந்தேன். அச்சம் நீங்கி இருந்தாலும் ஏதோ ஒரு பெரும் தயக்கம் என் நூலை அவரிடம் கொடுக்கவிடாமல் செய்தது. ஆனால் என்னைப் போலவே என் முதல் நூலும் நல்லூழ் செய்திருந்தது போலும். நான் கொடுக்காமாலே அந்நூல் அவரின் கைகளைச் சென்று சேர்ந்தது. சிங்கப்பூர் படைப்புகள் குறித்த விமர்சனங்களில் ‘பறப்பதற்கு முந்தைய சிறகடிப்புகள்’ என்ற தலைப்பிட்டு என் சிறுகதைத் தொகுப்பைக் குறித்து எழுதியது அவரிடமிருந்து எனக்கு கிடைத்த மிகப் பெரிய ஆசிர்வாதம். அத்தொகுப்பு என் முதல் நூல் என்பதால் அவரது விமர்சனம் கனிந்திருந்தது என்பதைப் புரிந்துகொள்ளும் விவேகத்தையும் அவரது படைப்புகளை வாசித்ததன் வழியாகப் பெற்றிருந்தேன்.
பிறகு எனது வாசிப்பனுபவக் கட்டுரைகள் சில அவரது தளத்தில் வெளியானபோது நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. வாசகர்களின் கட்டுரையை வெளியிடுவது வழக்கமாக அவர் செய்வதுதான் என்றாலும் கவிஞர் இசையின் கவிதைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைக்கு வந்த பாராட்டுக் கடிதங்களையும் அவர் வெளியிட்டிருந்தது ஒரு சாதாரண வாசகிக்கு அவர் அளித்த மிகப்பெரிய அங்கீகாரமென மனம் நெகிழ்ந்துபோனேன்.
2019 ஆம் ஆண்டு டிசம்பரில் அவரை மலேசியாவில் சந்தித்தபோது அவரது பாதம் தொட்டு வணங்கினேன். முதல் சந்திப்பில் ஆணவத்தோடு கை குலுக்கியவள் ஆறே வருடங்களில் அவரது பாதம் பணிந்தேன் என்றால் அதற்கு காரணம் ஆசானின் சொல்லும் மொழியும்தான். சொல் வழியாக செயலெனும் யோகத்தை எனக்குள் விதைத்தவரிடம் பணியாமல் எப்படி இருக்க முடியும்? ஓர் ஆசிரியரிடம் பணிவது நாம் நிமிர்வதற்கான வழி என்பதைக் கண்டுகொண்டேன். இப்போதெல்லாம் எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் மானசீகமாக அவரது தாள் பணிந்துதான் தொடங்குகிறேன். கீழிருந்து மேல் நோக்கி வளர்வது என்பது உலகியலுக்கு வேண்டுமென்றால் சிறந்த வளர்ச்சியாக இருக்காலம். ஆனால் தன்னைத் தேடுபவனுக்கும் ஞானத்தை விழைபவனுக்கும் மேலிருந்து கீழ் நோக்கி பயணிப்பது மிக அவசியமென்பதை ஆறு வருடத்தில் அறிந்து கொண்டுவிட்டேன்.
முதல் சந்திப்பிலிருந்து இன்றுவரை மானசீகமாக அவரோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன். வாழ்வில் எனக்கு நிகழும் அனைத்து சுக, துக்கங்களையும் மானசீகமாக அவரோடு பகிர்ந்து கொள்கிறேன். அவர் எங்கோ இருந்தாலும் ஆசானாக அருகில் இருக்கிறார் என்பதே எனது ஆன்ம பலத்தைக் கூட்டுகிறது. “செயலாற்றுக! சென்று அடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக!” என்பது அவர் எனக்கு கையளித்த ஆப்த வாக்கியம். லௌகீக வாழ்வில் நான் தினசரி சந்திக்க நேரிடும் ஏமாற்றங்கள், கசப்புகள், கீழ்மைகள், வலிகள், சோர்வுகள் அனைத்திலிருந்தும் தனது சொற்கள் வழியாக என்னைத் கைதூக்கி விட அவர் எப்போதும் என்னோடு இருக்கிறார். இந்த வாழ்வில் என்னைச் சுற்றி பலர் இருந்தாலும் நான் என்றும் தனியள் என்பதை ஆசான்தான் சொல்லித்தந்தார். இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நான் ஒரு சிறு துளி என்ற தன்னுணர்வையும் பேருரு கொண்ட இயற்கையின் முன் எனது இருப்பு ஒன்றுமே இல்லை என்ற அறிதலையும் அவரிடமிருந்துதான் பெற்றேன்.
“எழுதுவது என்பது நமக்காக மட்டுமே. அதில் வளர்ச்சி என்பது நமது ஆன்மிக வளர்ச்சிதான். மற்ற அங்கீகாரங்களை நினைத்து கவலைப்படவோ சோர்வடையவோ அவசியமில்லை. எழுத்து பயணத்தில் மகிழ்ச்சி மட்டுமே அனுமதி” என்பது அவர் எனக்கு கற்றுத் தந்த பாடம். ஆரம்பநிலை வாசகியாக இருந்த நான் இன்று ஒரு பிரதியின் ஆழங்களையும் நுட்பங்களையும் ஓரளவு நெருங்க முடிகிறது என்றால் அந்த நுண்னுணர்வுக்கான அடிப்படையை அவரிடமிருந்துதான் பெற்றேன். வாசிப்பைச் சிந்தனையாக மாற்ற வேண்டிய அவசியத்தையும் அதற்கான வழிமுறைகளையும் சொல்லித்தந்தவர் அவர்தான். “ஏதாவது ஒரு வழியில் வெளிப்படுங்கள்!” என்று அவர் சொன்னதை என்னால் இயன்ற அளவு கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன். அவரால்தான் ஒரு நல்ல வாசகியாகவும் ஒரு பயணியாகவும் உருமாறினேன்.
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்று மேடைப் பேச்சாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் ஒரு காலத்தில் உரக்க கத்திக்கொண்டிருந்த நான் இன்று சோழர் கால சிற்பங்கள் மற்றும் செப்புப் படிமங்கள், கம்பனின் காப்பியம், சங்க இலக்கியங்கள் போன்ற பல பொக்கிஷங்களை உய்த்தறிந்து உணர்ந்து என் இனத்தின் பெருமையை மென்குரலில் பேச முடிகிறதென்றால் அதற்கு காரணகர்த்தா அவர் மட்டுமே.
கரம் குலுக்கி தாள் பணிந்த இந்தப் பயணத்தில் நான் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டவை ஏராளம். அதற்கு கைமாறாக நான் எதை அவருக்குத் திருப்பித் தருவது? உண்மையில் எனக்குப் புலப்படவில்லை. அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட சொற்களின் வழி வாழ்வை முன்னெடுப்பது மட்டுமே என்னால் முடிந்த ஒன்றாகும். “எனது கீழ்மைகளை மிதித்துப் போட்டு விட்டு அறத்தோடும் செயலூக்கத்தோடும் இந்த வாழ்வை வாழ முயன்று கொண்டே இருப்பேன் ஆசானே!” என்ற உறுதிமொழியோடு மானசீகமாக அவரது கைகளைப் பற்றிக்கொள்கிறேன்.
அவரது வெள்ளையானை நாவலை வாசித்தபோது அதன் மையக் கதாபாத்திரமான ஏய்டனின் வரலாற்றுப் பிரக்ஞையில் எனக்கு ஐயப்பாடு எழுந்ததுண்டு. அது எப்படி ஒரு சாதாரண மனிதனுக்கு வரலாற்றின் முக்கிய புள்ளியில் தான் நிற்கிறோமென்ற சிந்தனை எழுந்து வர முடியுமென எனக்கு நானே கேட்டுக்கொண்டதுண்டு. ஆனால் இப்போது அதே வரலாற்று பிரக்ஞை என்னுள் எழுந்து வருகிறது. உலக இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளியான ஜெயமோகன் வாழ்கிற காலத்தில், உலகின் உன்னத இலக்கியப் படைப்பான வெண்முரசு எழுதப்பட்ட காலத்தில் நானும் வாழ்கிறேனென்பது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
கடந்த ஆண்டு அவரது ‘குமரித்துறைவி’ குறுநாவலை வாசித்துவிட்டு நான் எழுதிய சிறு குறிப்போடு இக்கட்டுரையை நிறைவு செய்ய விழைகிறேன்.
“மதுரை சித்திரைத் திருவிழா சென்று ஒருமுறையாவது மீனாட்சி திருக்கல்யாணம் பார்க்க வேண்டுமென்பது நீண்டநாள் ஆசை. அந்த ஆசை அன்று நிறைவேறியது. ஆசானின் சொற்கள் வழியாக அம்மையின் திருமணத்தைப் பார்த்து “தாயே! மாமங்கலையே!” என கைகூப்பி கண்ணீர் வழிய எனை மறந்து நிற்கிறேன். என் வாழ்நாளுக்கும் இது போதும். இனிவரும் காலங்களில் மதுரைக்காரியின் திருமணத்தை நேரில் சென்று பார்க்க வாய்த்தாலும் அது நான் இன்று கண்ட காட்சிக்கு ஒரு போதும் ஈடாகாது. ‘குமரித்துறைவி’ பெண்களை விட ஆண்களுக்கு குறிப்பாக பெண்ணைப் பெற்றவர்களுக்கு இன்னும் நெருக்கமானவளாக இருப்பாள்.
வாசிக்கையில் நான் பலவித வேடங்கள் பூண்டு வாழ்ந்து களைத்து அமர்ந்திருக்கிறேன். முத்தாலம்மனாக மாறி இடுப்பில் இருக்கும் குட்டி பிள்ளையாரிடம் “இந்த கொழுக்கட்டையை சாப்பிட்டுச் செத்த சும்மா இருடா. அவ நம்மளை விட்டு போகப்போறாடா” என்று புலம்பித் தீர்த்தேன். அந்த திருவிழா கூட்டத்தில் மாபெரும் சனத்திரளில் ஒருத்தியாக இருந்து அந்தச் சிறுக்கி முகத்தை ஒருமுறை தரிசித்துவிடமாட்டோமா என ஏங்கித் தவித்தேன்.
எதைச் சொல்வது? எதை விடுவது? இந்த உலகின் கோடானு கோடி அன்னையர்களில் ஒரு துளியாக இருந்து ஜெமோவை “வாழ்க பல்லாண்டு மகனே!” என வாழ்த்துகிறேன். மறுநொடி “அவரை நான் ஆசிர்வதிப்பதா?” என மனம் திடுக்கிட்டு சின்னஞ்சிறுமியாக மாறி ஓடோடிச்சென்று என் ஆசான் ஜெமோவின் தாள் பணிகிறேன்.
சிரம் தாழ்ந்த வணக்கம் ஆசானே! பேரன்பும் பெரும் மகிழ்ச்சியும் நன்றியும் ஆசானே!
***
அழகுநிலா (படம்: தமிழ் விக்கி) |
No comments: