வியாபாரியிலிருந்து வாசகனான கதை - வெண்முரசு செந்தில்


பள்ளிக்கூடம் நுழைவும் நுகர்வும் அறியா நான், ஒரு புத்தக வியாபாரியின் மகன் என்னும் உறவைத் தவிர எனக்கும் வாசிப்புக்கும் ஏழாம் பொருத்தம்தான். பழைய புத்தக விற்பனையாளரான என் அப்பாவும்  அப்படி ஒன்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படித்தவரும் இல்லை. அப்படி இருந்திருந்தாலாவாது இன்று எனக்கு இருக்கும் சிறு வாசிப்பின் உந்துதலுக்கு முன்னோரின் மரபணுவில் ஒட்டிக் கொண்டு வந்துவிட்ட குறையோ இல்லை தொட்ட குறையோ என்று எண்ணலாம். ஆனால் இது எதுவும் கிடைக்க பெறாத எனக்கு படிப்பில் எவ்வளவு அளவுகோல் இருக்கிறது என்றெல்லாம் சத்தியமாக இன்றுவரையும் உணராதவன் நான்.


‘வாங்க சார் வாங்க எந்த புக் எடுத்தாலும் ரெண்டு ரூபா சார் வெறும் ரெண்டு ரூபா. ஆவா லாட்டே லாட்டே லாட்டே. ரெண்டு ரெண்டு ரெண்டு ரூபா சார் எந்த புக்கு வேணும். ஆ வா சார். கத கவிதை கட்டுரை இலக்கியம் நாவல். ஆல் ஜெண்ட்ரல் எத எடுத்தாலும் ரெண்டே ரெண்டே.’


இப்படித்தான் புத்தகத்துக்கு எனக்கும் முதல் முடிச்சு விழுந்தது. பத்து வயதில் இருந்து பதினேழு வயது வரை சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லும் ஒரு கிளி பிள்ளையாகத்தான் இருந்தேன். வாடிக்கையாளர்கள் யாராவது ஏதாவது புத்தக பேர் சொல்லி கேட்டால் கூட ‘அதெல்லாம் தெரியாதுங்க சார் தேடி பாருங்க இதுல இருக்கறதுதான் புக்கு’ என்று கூறி விட்டு மீண்டும் ‘லாட்டே’ என்று கூவத் தொடங்கி விடுவேன்.


வழக்கம் போல் அன்றைக்கும் ஒரு கஸ்டமர் ஒரு புத்தகத்தின் பேரை கேட்கவும் நான் வழக்கமான பதிலையே சொல்லிவிட்டு அவர் கையில் எடுத்து வைத்து இருந்த ஐந்து புக்குக்கு பத்து ரூபாய் வாங்கிக் கொண்டேன். பிறகு அவர் சற்று நேரம் என்னைப் பார்த்து விட்டு ‘என்ன படிக்கிற தம்பி’னு கேட்டார்.


‘படிக்கறதெல்லாம் இல்லைங்க சார் விக்கிறதோட சரி’.


‘நான் அத கேட்கலப்பா நீ எத்தனாவது படிக்கிறன்னு கேட்டேன்.’


‘இல்லைங்க சார் ஸ்கூலுக்கெல்லாம் போகல கடையில இருக்கறதோட சரி’ என்றபின் நான் மீண்டும் ‘ஆ லாட்டே’ என்று கூவத்தொடங்கினேன்.


‘இல்லை தம்பி பார்த்த படிக்கிற பையன் போல இருக்க. படிப்பு வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா?’னு கேட்டுட்டு அடுத்து அவருக்கு பிடித்தமான எதுனா புக்கு கிடைகிறதான்னு தேடி பார்த்துட்டு அதற்கு மேல் எதுவும் கிடைக்காமல், ‘சரிப்பா நாளைக்கு வரேன் எதுனா புதுசா வந்தா எடுத்து வை. அப்புறம் படி. எதுனா எடுத்து படி படிப்பு ரொம்ப முக்கியம். அதெல்லாம் உனக்கு இப்ப தெரியாது பின்னால வருத்தப்படுவே’ன்னு சொல்லிட்டு ‘வரம்பா’னு கிளம்பி போயிட்டார்.



ஆனால் எனக்குத்தான் அதன் பிறகு ‘லாட்டே’ன்னு குரல் கொடுக்க வரல. முதல் முறையாக சலனம் இல்லாமல் தியானத்தில் இருப்பது போன்ற நீண்ட அமைதியில் ஆழ்ந்தேன். ஆம் நான் படித்த முதல் புத்தகம் மௌனம். ஆனால் அமைதி இல்லை. என்ன படிக்கலாம் எத படிக்கலாம்னு அப்படி இப்படி என்று ஒரு அரைநாள் கடந்து விட்டது. பிறகுதான் உள்ளேயிருந்து ஓங்கி ஒரு குரல் ஒலித்தது ‘அட மண்டு உனக்குத்தான் படிக்கவே தெரியாதே. அப்புறம் எத படிக்கலாம் எப்படி படிக்கலாம்னு கனவு’னு. அந்த ஒலி பெருகி ஒலிக்க எங்கயும் யாரும் அற்ற அமைதியான கிணற்றில் முங்கி எழுந்து தலையை சிலுப்பிக்கொள்வது போல் உதறிக் கொண்டேன்.


தொண்ணூறுகளிலெல்லாம் மதியம் மூன்று மணியளவில்தான் கடை போடுவோம் காலையில். பழைய காயலான் கடை கடையாய் போய் கடைகளில் எடையில் போடும் புக்கெல்லாம் அன்றைய வியாபாரத்துக்கு கொண்டு வருவோம். அன்று இரவு கடையை அடுக்கி தார் பாய் மூடி கட்டி விட்டு நான் ஒரு இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். சென்னையாக இருந்தாலும் எங்கள் வீடு ஓலை குடிசைதான். கரண்ட் கனக்ஷனும் கிடையாது. அதனால் சிம்மினி விளக்கின் ஒளியில் என் முதல் வாசிப்பை சுவாசிக்க தொடங்கினேன்.


முதல் மூன்று நாளும் படங்களைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தேன். அதற்குள் எனக்கும் மாயாவிக்கும் ஒரு இணக்கம் நிகழ்ந்தது. பிறகு அவர் ஈரோவில் பயணம் செய்கையில் கூடவே தேவிலும் ஓடும். அப்படி அவர்கள் போகும் போது கீழே எதையோ இறைத்துக் கொண்டே செல்ல நான் அதை உணர மூன்று நாட்கள் ஆகியது அது என்னவென்று கொஞ்சம் கூர்ந்து பார்த்தேன் எல்லாம் முத்து முத்தா கருப்பு நிறத்தில் எழுத்து வைரங்கள். ஒவ்வொன்றாக மின்ன எப்படியோ ஒரு பத்து நாள்ள மொத்தத்தையும் சுரண்டி எடுத்துட்டு அடுத்து அடுத்து மாயாவி, கார்த் விண்வெளி வீரர் பிளாஷ் கார்ட்னு என்னுடைய காமிக்சின் அளவு கூடிக்கொண்டே போனது.


ஒரு மூன்று வருட காலம் காமிக்ஸில் மட்டும் கவனம் செலுத்தி கற்று ஓர் அளவுக்கு தங்கு தடையின்றி இன்றைய தமிழை படிக்கும் அளவுக்கு வந்தடைந்தேன். பிறகு இரண்டாயிரம் வாக்கில் ராஜாஜி அவர்களின் வியாசர் விருது எடுத்துக் கொண்டு எனக்கு நானே ஒரு சவால் விடுத்து கொண்டு வாசிக்க முனைந்தேன். காரணம் முதல் முறையாக ஒரு கனமான அதிக பக்கம் உள்ள புக்கை படிக்க எடுத்ததுதான்.



வாசிக்க தொடங்கி இரண்டு வாரத்தில் முடித்த பிறகுதான் உண்மையான வாசிப்பின் உன்னதம் என்னவென்று உணர்ந்தேன். அதிலும் கிருஷ்ணரையும் அபிமன்யுவும் மிகவும் பிடித்து விட்டது. அடுத்து கையோடு சக்கரவர்த்தி திருமகனையும் புசித்து விட்டு மேற்கொண்டு ஆரம்பத்தில் தோன்றியது போல் இனி என்ன படிப்பது என்ற புரிதலற்று கையில் கிடைப்பதையெல்லாம் உண்டு செரிக்காமல் இருந்தேன். அதில் அதிகம் சுயமுன்னேற்றம் சார்ந்தவைகள்தான். காரணம் எனக்கு எந்த எழுத்தாளரை படிக்கணும் எதை சார்ந்து படிக்கணும் என்ற அறிதலும் இல்லை.


அப்படி இருக்கையில் நான் வாசிப்பதை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டு இருந்த வாடிக்கையாளர் ஒருவர் ‘ஏம்பா எப்பவும் இந்த மாதிரி புக்கையே படிக்கிறியே, வேற மாதிரி எதுனா எடுத்து படிக்கலாமே’னு கேட்கவும் ‘நான் இல்லை இந்த மாதிரி புக்கல்லாம் படிச்சா வாழ்க்கையில கொஞ்சம் முன்னேறலாமுன்னு இந்த மாதிரி படிக்கிறேன்’னு சொன்னேன்.


‘அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாதுப்பா, நம்ப வாழ்க்கையில எப்படி முன்னேறறதுங்கறது அவங்க சொல்றதை பின்பற்றுவதில் இல்லை. நாம நடந்துக்கிறதுலதான் இருக்கு அப்படியே இருந்தாலும் சும்மா எப்பவும் இந்த மாதிரியே படிக்கணும்னு இல்லை. சும்மா ஒண்ணு ரெண்டு படிச்சா போதும் நல்ல கத்திய ஓரிரு முறை தீட்டினால் போதும். சும்மா தீட்டினே இருந்தா தேஞ்சி ஒடஞ்சி போகும். அதனால நீ இலக்கியம் சார்ந்து படியென்று’ ஓதி விட்டு போயிட்டார். ஆனால் எழுத்தாளர்கள் பெயரே தெரியாத எனக்கு இலக்கியம் என்றால் என்னவென்றே புரியாத புதிய பூதம் ஒன்று பிடித்து கொண்டது.


அதனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் குழப்பநிலையில் நின்றுகொண்டு இருந்தேன். அப்படி இருக்கையில்தான் ஒரு நாள் ஒருத்தர் சில பழைய புத்தகங்களை கொண்டு வந்து ‘என்கிட்ட கொஞ்சம் புக்கசல்லாம் இருக்கு அதை நீங்க விலைக்கு எடுத்துப்பிங்களா’வென்று. கேட்டார் நானும் ‘குடுங்க என்ன புக்ஸ்னு பாக்கிறேன். எனக்கு போற மாதிரி இருந்த வாங்கிப்பேன்’ என்று சொல்லி பையைத் திறந்து பார்த்தேன். ஒரு பத்து புத்தகங்கள் இருந்தது அனைத்தும் சாண்டில்யன் புத்தகங்கள். ஒரு விலை போட்டு மொத்தமாக வாங்கிக்கொண்டேன். அப்பதான் சட்டென்று  புரைக்கேறியது போல் ஒரு நினைவு வந்தது. ‘தம்பி சாண்டில்யன் புக்கு எதுனா இருக்கா’ என்று அடிக்கடி கேட்டது நினைவுக்கு வரவும் சரி சாண்டில்யன் சாண்டில்யன் என்று கேட்டுக்கொண்டு வர்ராங்களே அப்படி என்னதான் இருக்கிறது இதில் என்று முதல் புக்காக யவன ராணி எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.


புத்தகத்தில் இருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. ஒரு கட்டத்தில் பிட்டத்தில் வலியெடுத்து போதும் என்று மூடி வைக்கும் பொழுது இருநூத்தி அறுவது பக்கத்தில் நிறுத்தினேன். அதில் இரும்பிடைதலையாரும் இளஞ்செழியனையும் ஹிப்பலாசுவையும் விடாமல் அவர்கள் எங்கு சென்றாலும் கூடவே செல்வது, எது பேசினாலும் அதில் நானும் கலந்து கொண்டு என்கருத்தை எனக்குள் வைத்துக்கொண்டு அவர்களுடன் மூன்று நாட்கள்  இருந்தேன். அதில் இளஞ்செழியன் மேல் ஹிப்பலாசு வைக்கும் நம்பிக்கை ஹிப்பலாசு பதிலுக்கு இளஞ்செழியன் மீது நன்றி பக்தியென்று சென்று கொண்டே இருக்க  அதற்குள் அவர்கள் முற்றும் கூறி விட்டார்கள்.



அடுத்த ஒரு வருடத்தில் சாண்டில்யன் அவர்கள் புத்தகம் அனைத்தையும் படித்து முடித்து விட்டு அவரை மானசீகமாக நினைத்து தூரிகையால் வருடிக் கொண்டு இருந்தேன். அடுத்து யார் கையைப் பிடித்து நடப்பது என்று தெரியாமல் மீண்டும் மீண்டும் அவருடைய படைப்புகளின் மன்னன் மகள், கன்னி மாடம், மலை வாசல், கடல் புறா, ராஜமுத்திரை, ஜலத்தீபம், ஜீவபூமி போன்ற முக்கிய படைப்புகளை தொடர்ந்து மறு வாசிப்பில் சுழன்று கொண்டு இருந்தேன். எப்படியோ ஒரு கட்டத்தில் அவரை விட்டு அடுத்த ஜம்பில் கவிஞர் வாலி ஐயா அவர்களின் சிறிய கவிதை புத்தகம் ஒன்று கிடைத்தது. பொய்க்கால் குதிரை. நான் படித்த முதல் கவிதை புத்தகம் அதுதான். அதில் உள்ள கவிதைகளில் உள்ள யதார்த்தம் என்னை அவரை நோக்கி நகர்த்தியது. அதில் இரண்டை மட்டும் பதிவிடுகிறேன்.


மரங்கள் தமக்குள் முனகி கொண்டன இந்த மனிதர்கள் நம்மை கொண்டு எத்தனை சிலுவைகளை செய்து விடுகிறார்கள். ஆனால் தம்மை கொண்டு அவர்களால் இன்னமும் ஓர் ஏசுவை தயாரிக்க இயலவில்லையே! அது ஏன்.


அடுத்து


நான் 
வாசிப்பதும்-சு
வாசிப்பதும்-விசு
வாசிப்பதும்-
உன்னையே!தமிழ் 
அன்னையே! தீஞ்
சுனையே! கா
என்னையே..


அவரிடம் சில நாள் மாணவனாக இருந்து விட்டு  சுஜாதாவை வந்து அடைந்தேன். இங்கு அங்கு என்று இல்லாமல் புத்தனுக்கு போதி மரம் போல். இந்த பித்தனுக்கு நான் வாழும் உலகம் ஒரு உலகமே இல்லை. இங்கு வாழும் மனிதர்கள் எல்லாம் புறத்தால் அறத்தை அணைத்துக் கொண்டு அகத்தால் அழுக்கடைந்தவர்கள் என்று காட்டியது ஏழாம் உலகம். வாசித்ததும் அகம் பதற தொடங்கியது. இதுவரை நான் வாசித்தது அனைத்தும் என் தனிமையையும் பசியையும் கவலையையும் மறக்க. படித்த ஒரு எழுத்து போதையில் ஆழ்த்தி இருந்தது. ஆம் சிலரோ பலரோ தங்கள் துன்பங்களை மறைக்கவோ அல்லது இன்பத்தை மேலும் கூட்டிக் கொள்ளவோ குடிப்பார்கள். ஆனால் என் போதை படிப்பதில் இருந்தது. ஆமாம், மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் சில தருணங்களுக்கு தங்களை மறந்து இருக்க கொடுத்தது தற்காலிக மயக்க நிலையைத்தான். ஆனால் ஜெ அண்ணா அவர்கள் எனக்கு அளித்தது நிரந்தர தியான நிலை. எந்த படைப்பை எடுத்தாலும் அதில் மனிதர்களின் மனஇயல்பை கண்ணில் விழுந்த தூசியை ஊதி எடுப்பது போலவோ அல்லது முள்ளை வாங்கிக் கொண்டு செல்லும் வழி எங்கும் வலியால் தாங்கி தாங்கி நடக்க வைக்கும் முள்ளை இடுக்கியால் வெளியே எடுப்பது போல் அவர் எழுத்தின் மூலம் நயமானவர்கள் நாம் என்னும் மிதப்பில் திரியும் நம் அகத்தில் உள்ள நஞ்சை நமக்கு சுட்டி காட்டுபவர். ஏழாம் உலகத்தில் ‘என்னவே ஏறப்பாளி வார்த்தை பல்லை தாண்டி வருதுவே நாக்கை உள்ளவெய்யும்’. ‘இந்த காலத்துல எல்லாபையலுவளும் ஏறப்பாளிகதேன். நான் வெளி உருப்படிகளை கொண்டு எடுக்கிறேன். நீறு கோயில் உள்ளேயிருந்து தட்டேந்தி எடுக்கீறரு அவ்வளவுதான். இதுல நீறும் ஏறப்பாளிதேன் என்னவோ பெரிசா பேசவந்துட்டவே.’


இன்னோரு எடத்துல புது உருப்படிகளை பார்க்கும் போது கைகால்களை உடைத்து கண்களில் ஈயத்தை காய்ச்சி ஊத்தி இருப்பார்கள் ‘என்னவே. இப்படி இருக்கு நாளப்பின்ன பிணக்கு வந்தா யாருவே தாலி அறுக்கறது. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது பெத்தவங்களே வந்தாலும் இதுங்க எங்க புள்ளைங்க இல்லைனு சொல்ற அளவுக்கு தொழில் சுத்தமாக்கும்’ னு சொல்லும் போது ஆறு வயதில் வீட்டை விட்டு ஓடிய எனக்கு இந்த வயதில் உடல் நடுக்கு கொள்கிறது.



விஷ்ணுபுரத்தில் பிங்கலன் தான் யார்னு தன்னை தேடி அலைவது அது பிங்கலனா இல்லை வாசிக்கும் அனைவருமா. வெண்முரசில் இந்திரபிரஸ்தம் போகும் துரியோதனன் வழுக்கி விழுந்து சித்தம் பிறழ்ந்து பிதற்றும் போது என்னதான் கலி மைந்தனாக இருந்தாலும் அவர் மேல் நமக்கு ஒரு கழிவிரக்கம் வரும்போது நம்மையறியாமல் ஒரு உச்சு கொட்டுவோம். அப்பதான் நம்ம மனசுலயும் கொஞ்சம் ஈரம் உள்ளதை நாம் உணரும்போது நம்மையறியாமல் நம் ஆழ்மனதை உணர்த்தும் ஒரு  நிதர்சன படைப்பாளியை அடைந்ததில் பூர்வோத்ம புண்ணியம் என்பார்களே அது இதுதான் என்று அகத்தில் அமைதி உருக்கொள்ள இனி வேறு யாரை கற்கவும் காலமில்லை. இருக்கும் காலம் வரை இவரை கற்று கொண்டு சென்றாலே போதும். சரஸ்வதி மோட்சம் மிச்சம் இல்லாமல் கிட்டும். ஏன் என்றால் இங்கு ஆண்பால் வடிவில் உள்ளவள் அன்னை சரஸ்வதியேதான்.

***

'வெண்முரசு' செந்தில்

1 comment:

  1. தங்களது மொழி நடை மிகவும் எளிமையாகவும் மற்றும் அழகாகவும் உள்ளது.
    கடைசி வரிகள் உண்மை உண்மை
    "சரஸ்வதி மோட்சம் மிச்சம் இல்லாமல் கிட்டும். ஏன் என்றால் இங்கு ஆண்பால் வடிவில் உள்ளவள் அன்னை சரஸ்வதியேதான். "

    ReplyDelete

Powered by Blogger.