ஆரண்யகம் - ஏ. வி. மணிகண்டன்

2010-ல் பெங்களூரு வந்த பிறகு நானும் என் ஓவியக்கல்லூரி நண்பனும் இங்கிருக்கும் காட்சிக்கூடங்களுக்கு அவ்வப்போது சென்று கொண்டிருந்தோம். காட்சிப்படுத்தப்படிருந்த ஒவியங்கள் சிற்பங்கள் எதுவும் எங்களுக்கு புரியவில்லை. பெரும்பாலான காட்சிகளில் ஒவியங்களே இல்லைநிறுத்தற்கலைகளே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஒவியம் இறந்துவிட்டதுபுகைப்படம் இறந்துவிட்டது என்று மேலைநாட்டு கலை ஊடகங்கள் விவாதித்துக்கொண்டிருந்தன. கல்லூரியில் படித்த கலை வரலாறு பதினெட்டாம் நூற்றாண்டின் மனப்பதிவு வாதம்மன வெளிப்பாட்டு வாதம் ஆகியவற்றோடு நின்றிருந்தது. நடுவே இருக்கும் நூற்றைம்பது ஆண்டுக்கான கலை வரலாற்று இடைவெளியை நிரப்பிக்கொள்ளத் தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தோம்.  இந்தத் தெளிவு - வரலாற்று இடைவெளி என்பதே - கூட அன்று இல்லை. நாமும் கலைதானே படித்தோம்இவற்றை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லைஇவற்றோடு அடையாளப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பது பெரிய அவமானமாகவும் இயலாமையாகவும் இருந்தது. 


கவின்கலைக் கல்லூரி பேராசிரியர் ஒருவரைச் சந்தித்து இது குறித்து உரையாட, ஓர் ஓய்வு நாளில்நகரின் மறுஎல்லையிலிருக்கும் அவர் வீட்டுக்குச் சென்று இரண்டு மணிநேரம் காத்திருந்து, பிறகு அவரிடம் இதைப்பற்றிக் கேட்டோம். என் சகல துயரங்களிலிருந்தும் அவர் விடுவித்துவிடுவார் என்பதைப்போல நம்பிக்கையோடு காத்திருந்தேன். அவர், "இப்போ என்ன ட்ரெண்டுன்னா பாஸு, நீங்க அழகா எதுவும் பண்னக்கூடாது. அசிங்கமான ஒண்ணை, ரொம்பக் க்ளோஸ்-அப்ல போஃட்டோ எடுக்கணும். ஒரு ஃபோட்டோல்லாம் இப்ப வைக்க முடியாது. ஆறு ஏழாதான் வைக்கணும். ஒவ்வொண்ணும் ஒரு மாதிரி இல்லாம, ஒரே சப்ஜெக்ட் ஆனா வேற வேற ஆங்கிள். இப்படிதான் போகுது இப்போ" என்றார். நகரம் எவ்வளவு நீளமானது என்று தோன்ற கசப்போடு திரும்பி வந்த அந்த இரவு, இன்றும் நினைவிலிருக்கிறது. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள மேலும் ஆறு வருடங்கள் ஆனது. புரிந்ததும்  கலையை, தத்துவத்தை தகவல்களாக அறிந்துகொள்வது எப்படி வெளிப்படுகிறது என்பது திகைப்பையே உருவாக்கியது.

 


*

 

2012-ல் ஆகும்பே பயணம்தான் ஜெவுடனான இரண்டாவது சந்திப்பு. அதற்கு முன்பு ஒருமுறை விஷ்ணுபுரம் விருது விழாவில் சந்தித்தது மட்டுமே. அந்தப் பயணத்தில் நல்ல மழையில் நடந்துகொண்டிருக்கையில் சமகாலக் கலையைப் புரிந்துகொள்வதில் எனக்கு இருக்கும் சிக்கல்களை ஜெவிடம் கேட்டேன்.  ராபர்ட் ஃப்ராங்க் எனக்குப் பிடித்த புகைப்படக் கலைஞர். ஆனால் அவருடைய படைப்பைப் புரிந்துகொள்ள நான் வாசித்த நூல்களும், இணைய இதழ்களும் என்னை மேலும் குழப்பவே செய்தன. இதைச் சொன்னபோது ஜெ சொன்னார், "ஒரு கலைப்படைப்பைப் புரிந்துகொள்ள அது உருவான சமூகத்தின் தத்துவ வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். அந்தப் பண்பாட்டின் வரலாற்றை அறியவேண்டும், பிறகு குறிப்பிட்ட கலையின் வரலாறை இந்த இரு வரலாற்றிலும் பொருத்திப் புரிந்துகொள்ள வேண்டும். இம்மூன்றையும் அறியும்போது, குறிப்பிட்ட கலைஞர் எந்த தத்துவத்தின் நோக்கைச் சார்ந்தவர், எந்த அழகியல் மரபைச் சார்ந்தவர் என்பதை அறியலாம். அவருடைய கலை நோக்கு என்ன என்று துலக்கமாகும். தத்துவத்திலேயே ஒரு பண்பாட்டின் சிந்தனைகள் வேர்கொள்கின்றன. முதலில் இலக்கியத்தை பாதிக்கிறது, பிறகு காண்பியல் கலைஞர்களை பாதிக்கிறது. ஏனெனில் இலக்கியம்மொழியைப் பயன்படுத்துவதால், காண்பியல் கலைகளைவிட, தத்துவத்துக்கு நெருக்கமாக இருக்கிறது" என்று. அந்த மழையில் காட்டுக்குள் அடித்தது  ஒரு மின்னல்.

 

திரும்பி வந்து ஐரோப்பிய வரலாற்றை, அதன் இலக்கிய அலைகளை, பின் ஓவிய, புகைப்படக் கலை வரலாற்றைப் பயின்றேன். இரண்டு வருடங்களாகியது.

 

சமகால புகைப்படக்கலையில் பொதுப்போக்காக இருந்ததும் அதன் பிரதான அழகியலை உருவாக்கியதும் ஜெர்மானிய சிந்தனைப் போக்கு. கருத்தியற்கலை என்பதன் வெளிப்பாட்டை சுருக்கமாக, வெறும் வடிவமாகப் புரிந்துகொண்டதே மேலே சொன்ன பேராசிரியர் விளக்கியது என்பதை 2014-ல் புரிந்துகொண்டேன்.


*


2014-ல் என்னுடைய குடும்பத்தில் ஒரு அகால மரணம். அது என்னை உள்ளூற உடைத்திருந்தது. அந்த தீபாவளிக்கு வீட்டுக்குப் போகப் பிடிக்காமல் பாதாமி சென்றிருந்தேன். அங்கே  ஒரு அந்தியில் தற்செயலாக நடராஜர் சிற்பத்தின் கீழ் அமர்ந்திருந்தேன்.

 

கைகளை வீசி ஈசன் ஆடும் நடனத்துக்கு வலதுபுறம் சூரியன் மறைந்துகொண்டிருந்தது. வீசிய கைகள் வானத்தை வாரியதைப்போல மேகங்கள் எதிர்த்திசையில் தீற்றலாய் நீண்டிருந்தன. குருதி போன்ற கதிர் அணைந்துகொண்டிருந்தது நர்த்தன சுந்தரனுக்கு அருகில். பதற்றமாய் உணர்ந்தேன். அன்றைய இரவு உறங்க முடியவில்லை. காய்ச்சலைப் போலவேயான ஒன்று. உறங்க முயலும்தோறும் அந்த அந்தி கனவாக வந்து நடுக்கத்தைக் கொடுத்தது. ஓரிரு நாட்களில் மரணம் உருவாக்கியிருந்த இழப்பு சமன் ஆகியிருந்தது.  ஆனால் அந்த அனுபவத்தை புறவயமாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. கலையாக ஆக்கும் அளவிற்கு வடிவம் சார்ந்த தெளிவின்றிருந்தது.

 

அந்த அனுபவத்தைப் புரிந்துகொள்ள என்ன செய்யவேண்டும் என எண்ணினேன்.  சமகாலக் கலையின் போக்குகளில் அதற்கு இடமுண்டா என ஆராய்ந்தேன். புகைப்படக் கலை போன்ற சிக்கலான நவீன வடிவத்தில் தத்துவார்த்தமான விஷயங்களை, அதிலும் இந்திய மரபின் நோக்கைக் கொண்ட இத்தகைய அனுபவங்களை வெளிப்படுத்துவற்கு வடிவம் மற்றும் பேசுபொருள்கள் சார்ந்த சிக்கல்கள் இருந்தன.

 


மீண்டும் ஒரு நெடும்பயணம்.


 *


அந்த வருடம் நான் மதுரைக்கு ரயிலில் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவர் மும்பையில் ஒரு ஆசிரியரிடம் பனிரெண்டு வருடங்களாக  குருகுல முறையில் இசை கற்றுக்கொண்டிருந்தவர். பனிரெண்டு வருடங்கள் எனில் அப்போதே அவர் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தான் பயிற்சி செய்வதை பதிவு செய்யக்கூடாது எனவும், ஆசிரியர் முன்னின்றி, பயிற்சியைத்தவிர வேறு எங்கும் பாடக்கூடாது எனவும் ஆசிரியர் உறுதிச்சொல் வாங்கியிருந்தார் என்றார். எவ்வளவு நாட்களுக்கு என்ற கேள்விக்கு, "அவர் சொல்லும் வரை, காலமெல்லாம் இல்லை" என்றார்.

 

சில நாட்களுக்கு முன்பு கடைத்தெருவில் கண்டது, நடைபாதைக்கடையில் விற்கப்படும் அணிகலன்களைக் கண்ட பெண் ஒருத்தி கணநேரம் ஒரு காதணியை எடுத்து அணிந்து ஒரு தற்படம் எடுத்துக்கொண்டு காதணியைக் கழற்றி கடையிலேயே போட்டுவிட்டுப் போய்விட்டாள்.

 

கலையிலும் இலக்கியத்திலும் இயங்குபவர்கள் உள்ளூர ஒரே நேரத்தில் தாழ்வுணர்ச்சியிலும் மேட்டிமை உணர்ச்சியிலும் தடுமாறிக்கொண்டிருக்கையில் பொது அடையாளத்தை உருவாக்கி முன்னிறுத்திக்கொள்வதன் வழியாக எளிதாகத் தன்னைப் புனைந்துகொள்ள முடிகிறது என்பது பெரிய விடுதலை. ஆகவே தனித்திருத்தலின், விழித்திருத்தலின் வழியான கலை கூட்டுக்களியாட்டத்தின், கேளிக்கையின் வழியாக ஆகியிருக்கிறது. முந்தைய தலைமுறைகளிலிருந்த மாணவப்பருவம் என்பது இல்லாமலேயே ஒருவர் நட்சத்திரமாகிவிட முடியும் என்ற வாய்ப்பு இன்று இருக்கிறது. ஆகவே பயிற்சிக்காலம் முடியும் முன்பே முதலில் கேம்பஸ் இண்டர்வியூ என்று நம் வாசலைத் தட்டுவது இந்த சாத்தானின் முகவர்கள்தான்.

 

ஒருவர் கிஷோரி அமோங்கராவதும் சூப்பர் சிங்கராவதும் ஒன்றோ அல்லது தற்செயலோ அல்ல. இருவரும் அடுத்தடுத்ததாக யூட்டியூபின் பரிந்துரையிலிருந்தாலும்கூட. ஆனால் அதைச் செய்ய வைப்பது எது?


*


நான் செய்ய விரும்பிய கலை வடிவை 2016 காலகட்டத்தில் எட்டிவிட்டிருந்தேன். ஏறத்தாழ நாவலைப் போன்ற விரிவான கோணங்களில் ஊடாடும் புகைப்பட நூல் என்பதாக இருந்தது அது. புகைப்படக்கலையில் அதற்கான முன்னோடி நூல்கள் அதிகமில்லை, புகைப்படம் பிரதானமாக காண்பியல் கலை மரபிலிருந்து வருவதாக, ஆகவே கவிதைக்கு, அல்லது நவீன நாவலுக்கு அருகிலிருப்பதாக, ஒற்றைப் படிமம் கொண்டதாகவோ அல்லது கவித்துவமான ஒற்றைக் கோணம் கொண்டதாகவோதான் இருந்துவருகிறது. நாவலின், தத்துவத்தின் பாதிப்பை அழகியலாகக் கொண்ட நூல்கள் அரிது. அவையும் கீழை மரபின் எந்தத் தடயமும் இல்லாதவை. இந்தச் சூழலில் நான் உருவாக்கிய நூலை, புகைப்படக்கலை உலகைச் சார்ந்த முன்னோடிகள் சிலரிடம் காட்டி மதிப்பீட்டைப் பெற முயன்றபோது ஏன் இத்தனை விஷயங்களைச் சொல்லவேண்டும், எளிமையாக ஆக்கி ஒற்றைப் படிமத்தை மட்டும் காட்டலாம் என்றும், பொதுப்போக்கின் சில கூறுகளை [நகரமயமாதல் போல] மட்டுமே அதிலிருந்து பிரித்து விரிவாக்க வேண்டும் எனவும் கூறினர்.  நூலின் மையம் நவீனத்துவ அழகியலின் தரிசனம் இல்லை என்பதால் நான் அவற்றைச் செயல்படுத்த முயலவில்லை, அது அவர்களுக்கும் பிடி கிடைக்கவில்லை. சரியாக வந்திருக்கிறது என நான் உறுதியாக நம்பியதும், புரியவேயில்லை என்ற விமர்சனங்களும், என் கலைத்திறன் மீதே ஐயத்தை உருவாக்கியிருந்தன. அடுத்து என்ன செய்வதென்பதைச் சிந்திக்கவேண்டிய சிக்கல் உருவானது.

 

அந்த வருடம் வீட்டுக்கு வந்த ஜெவிடம் நான் என் நூலைக் காட்டினேன். பார்த்துவிட்டு இது வெறும் புகைப்பட நூலல்ல, ஒரு டெக்ஸ்ட் என்றார். நம்பாமல் நன்றாக இருக்கிறதா என மீண்டும் சன்னமாகக் கேட்டேன். இது ஒரு முழுமையான டெக்ஸ்ட் என்று சற்று அழுத்தமாக மேலும் சன்னமாகக் கூறினார். அவ்வளவேயான சிறிய உரையாடல்தான் அது. ஆனால் எனக்கு நிறைவைத் தந்தது. இந்த நூலென்று இல்லை, இனி செய்யப்போகும் எந்த நூலையும் நான் விரும்பும் வண்ணம் மட்டுமே உருவாக்குவேன். அவை எழுப்பும் கேள்விகளும், கேள்விகளுக்குத் தரும் விடைகளும் மட்டுமே முக்கியம். பிற அனைத்தும் பொருட்டல்ல. அவை பிரசுரமாவதும் காட்சிப்படுத்தப்படுவதும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நிகழட்டும் என்ற மனநிலைக்கு வந்தேன். அது அதிகம் இழப்புகளை உருவாக்கும் என்று தெரிந்தாலும்கூட வேறு எப்படியும் என்னால் இருக்கமுடியவில்லை. அதற்குப் பிறகு பல நூல்களையும் உருவாக்கிவிட்டேன். அந்தப் பயணங்கள் அனைத்தும் இந்த நிலையிலிருந்து இறங்கிவிடாததாகவும் மேல்நோக்கிய ஒன்றாகவுமே இருந்தன.


 


ஆசிரியர் என்பவர் மெல்ல மெல்ல நம் இருப்பின் ஒரு மானசீகமான ஒரு பகுதியாக ஆகிவிடுகிறார். ஜிபிஎஸ்ஸை பொருத்தி விடப்பட்ட ஆடுகள் வழி தவறுவதில்லை. அவருடன் நேரடித் தொடர்பிலேயே இல்லாதபோதும் அவருடைய கண்கள் வழியாகவே அனைத்தையும் காண்கிறோம். நம் நோக்கை அவர் வடிமைக்கிறார். அந்த அருவ இருப்புநான் செய்யும் இதை ஏற்றுக்கொள்ளுமா, அவரிருந்தால் இதைத்தான் செய்திருப்பாரா என எண்ண வைக்கிறது. அது படைப்பு சார்ந்த விஷயங்களை முடிவு செய்யவதில் ஆளுமை செலுத்துகிறது. கலையைத் தவிர்த்த பிற விஷயங்கள் கலையின் மீது ஆதிக்கம் செலுத்த முனையும்போது அவற்றின் கண்களைப் பார்த்து மறுக்கும் வல்லமையைத் தருகிறது. அப்புறம் வந்து அந்த அருவ இருப்பிடம் அழுதுகொள்ளக்கூடச் செய்யலாம். செய்யும் ஒவ்வொரு படைப்பையும், கலை சார்ந்த விஷயங்களில் எடுக்கும் முடிவையும் அதன் முன்பு எந்தத் தயக்கமும் கூச்சமும் இல்லாமல் பெருமிதமாக மட்டுமே வைக்க முடியுமெனில், நானறிந்த வரையில் என் தேடல்களும் குழப்பங்களும் உண்மையாகவே இதில் வெளிப்பட்டிருக்கின்றன என்று உணர்ந்து சொல்ல முடியுமெனில் அதுவே சாதனை என எண்ணுகிறேன்.

 

சொல்லப்படும் அளவுக்கு இது எளியதுமில்லை. அறிதலின் பரவசமும் தனித்திருத்தலின் தவிப்பும் இருவேறு திசைகளில் இழுக்கக்கூடியவை. நல்ல படைப்பென்று உணரும் பொழுது அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் எனத் தோன்றாமலிருக்காது. உலகம் அங்கே கொண்டாட்டமாக இருக்கையில் நள்ளிரவில் என் அறையில் மட்டும் மஞ்சள் விளக்கு வடிந்துகொண்டிருக்கிறது என்று தோன்றத்தான் செய்யும். ஆனால் முதன்மையான விளைபொருள்  கலையில் இயங்குவது மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த அருவ இருப்பு தன் அருகாமையால் அதைத் தருகிறது. தீராத்தனிமையில் பாடலின் முணுமுணுப்பென உடன் வருவது.

 

இன்று யோசிக்கையில் இன்னமும் பத்து வருடம் கழித்து அந்த  நூல் வெளிவந்தாலும் ஒன்றுமில்லை, அதை வெட்டி வெளியிட்டிருந்தால் அந்த மேடையில் யாருடைய சட்டைக்குள்ளாகவோ நிற்கும் ஒருவனைப்போல நானில்லை நானில்லை என்று உள்ளுக்குள் அரற்றிக்கொண்டே இருந்திருப்பேன் எனத் தோன்றுகிறது. ஆசிரியரின் முன் நான் ஒரு நல்ல நூலைச் செய்தேன் என நிறைவாக நின்ற அந்தத் தருணம் இவை எதற்கும் ஈடாகாது.

 

முற்றிலும் அடையாளம் சார்ந்த வாழ்க்கை முறையைக் கொண்ட ஒரு காலத்தில் அடையாளங்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பது  சந்தையில் தியானம் செய்வது.  எவ்வளவு அமைதிக்கு முயல்கிறோமோ அவ்வளவு இரைச்சலைத் திணிப்பதும், எவ்வளவு இரைச்சலிருக்கிறதோ அவ்வளவு அமைதி தேவையாகவும் ஆவது. டார்க்காவ்ஸ்கி, கலைஞனுக்குத் தேவை சமூக உரையாடல் இல்லை, தனித்திருப்பது என்கிறார். அவர் உத்தேசிப்பது தன்னைப் புனைந்துகொள்வதை விடுத்து தனித்திருந்து ஆராய்ந்துகொள்வதை. அறிவால் அல்ல, அறிவை அதைவிட பெரிய ஒன்றின் முன் தன்னிலையை மண்டியிடச்செய்துதான் கலையை உருவாக்க முடியும். அறிவை அங்குசமாக்குபவர் அந்த யானையை மண்டியிடச்செய்யலாம். ஆனால் யானையையே மண்டியிடச்செய்வதால் அங்குசம் ஒன்றும் அரிய ஒன்றாகிவிடுவதில்லை.

 

அறிவு நம்மை நோக்கி வரும்போதே நூறு கைகளையும் விரித்துக்கொண்டே வருகிறது. நம்மின் பகுதியாகவே மாயம் காட்டுவது. ரத்னாபாயின் ஆங்கிலத்தைப்போல. அறிவின் சிறு துளி போதும்சந்தையை வாங்கித் தருகிறேன் என்பது.  ஆனால் அங்குசத்தை வைத்திருப்பவனுக்குத் தேவை சந்தையல்ல. பகலில், சந்தையின் இரைச்சல் எட்டாத உயரத்தில் மிதந்து செல்ல ஒரு யானை. இரவில் தனிமையின் குளிருக்குக் கிழித்துப் போர்த்திக்கொள்ள ஒரு யானைத்தோல். சந்தையையே வாங்கினாலும் குத்தி மண்டியிட வைக்க யானையற்றவன் துயரம் தீராதது.

 

அங்குசத்தை அடைவதைவிட ஆயிரம் மடங்கு கடினம் தனக்கான யானையைக் கண்டடைதலும், அதைக் கிழித்துப் போர்த்திக்கொள்வதும்.


 *


இசைக்கலைஞரும் பயிற்றுனருமாகிய ஆன்றெஸ் ஸ்கிர்ஃப் பியோனோவின் கலை வகுப்புகளில் ஒன்று [https://www.youtube.com/watch?v=2KRpwgBlrq0] அவருடைய மாணவர் விக்டோர் மாஸ்லோவுடன் இணைந்து பீத்தோவனின் இசையை வாசிப்பது. அந்த வகுப்பு ஆசிரிய மாணவ உறவின் படிமம் என எனக்குத் தோன்றியது. அதில் வாசிக்கும் விக்டோர் மாஸ்லோ தன்னளவில் ஒரு மேஸ்ட்ரோ. ஆனாலும் அவருக்கு வாசித்துக்காட்டும் ஸ்கிர்ஃபிடம் இருக்கும் ஒன்று இல்லாமலிருக்கிறது. விக்டர் இசையை வாசிக்கும்போது இசை அவருடைய உடலை வளைத்து ஒடித்து வெளிப்படுகிறது. கண்களை மூடிக்கொண்டு வாசிக்கிறார்.

 


இளமையில் நமக்குள் கலை இப்படிதான் நிகழ்கிறது. அது நம்மை கைகளில் எடுத்துக்கொள்கிறது. நாம் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு தன்னை இழந்து வாசித்தாலும் ஒரு பிசிறு இருந்துகொண்டே இருக்கிறது, அது நம்முடைய தன்னிலை. மூடியிருக்கும் கண்களின் அடியில் நாம் நம் விழிகளை அகலத்திறந்து படைப்பின் வழியாக இந்த உலகை பார்த்துக்கொண்டிருக்கிறோம், உண்மையில் இந்த உலகைக்கூட அல்ல, காண்பதனைத்தும் நம்மையே. கலையை நம் அகங்காரம் கையிலெடுத்துக்கொண்டு நம் உருவத்தை திசை எட்டிலும் ஒளிரச்செய்து காட்டுகிறது. நமக்கும் இசைக்கும் நடுவே தன்னிலை தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அது ஒரு துளிக்கணம் இசையை நீட்டிவிடுகிறது அல்லது குறைத்துவிடுகிறது.


 *


அறிவைக் கடக்கும் வழி பக்தி என்பது நம் மரபின் விடை. உலகெங்குமே கலையில் அதுவே வழியாக இருக்கிறது. பிறவிக்கலைஞனான மாஸ்லோ ஸ்கிர்ஃபிடம் வாசிப்பதை, ஆசிரிய மாணவ உரையாடலுக்கு வெளியே நின்று பார்க்கும் நமக்கு, அவர் மிகுந்த அசட்டுத்தனமான பணிவோடிருப்பதைப் போலவும், ஸ்கிர்ஃப் இரக்கமற்றிருப்பதைப் போலவும் தோணக்கூடும்.

 

மாஸ்லோவின் கண்கள் மூடிக்கிடக்கையில் ஸ்கிர்ஃப் மிகுந்த கறார்த்தன்மையுடன் அவரைக் கண்காணிக்கிறார். லௌகீக உலகில் தந்தை மகனைப் பார்க்கும் பார்வையைப் போன்றிருக்கிறது. ஆனால் அவர்தான் மாஸ்லோவை விண்ணில் வீசுபவராகவும் ஆகிறார்.

 

யானையைச் சந்தையில் கண்டடைய முடியாது என்கிறார் ஆசிரியர். கணந்தோறும் மாறும் நகரத்து சந்தடிகளிலிருந்து எப்போதும் மாறாத அடர்வனத்திற்கு இட்டுச்செல்கிறார். கண்ணை மூடிக்கொண்டு காட்டைக் கற்பனை செய்துகொள்ளாதே, என் கை ஒளியில் மின்னும் காட்டைப்பார் என்கிறார். அதுவே நாம் காணும் காடு. நம் கற்பனையில் இருக்கும் காடு அல்ல, சூழல் தந்ததும் அல்ல அது. அதைக் கண்டவனே காட்டைக் கண்டவனாகிறான்.

 

ஆனால் உண்மையில் அங்கே ஆசிரியருமில்லை, மாணவருமில்லை. பீத்தோவன் இரண்டாகப் பிரிந்து மூத்தவனாக மாற்றங்கள் சொல்கிறான், இளையவனாகக் கற்றுக்கொள்கிறான். மூத்தவன் அடர் கானகத்திற்குள் கைவிளக்கேந்தி முன்செல்கையில் பின்தொடர்ந்து செல்கிறான் பின்னவன். அங்கே நிகழ்வது அறிவின் ஒளி பட்டு விரியும் காடு. அதைக்கண்டு விரியும் கண்கள். ஒளியும் கண்ணும் மட்டுமே எஞ்சும் ஒரு இருட்காடு, மெல்ல அது ஒளியாலான ஒரு காடாகிறது.

 

ஆசிரியனின் மீதான வெற்று பக்தியால் அதை மாணவன் செய்வதில்லை. புதியவற்றைக் காட்டும் கைவிளக்கொளியால் ஆசிரியன் அறிவின்மையை அறிவென ஒளிரச் செய்கிறார். ஒளிரச்செய்வதால் அவர் வழிநடத்துகிறார். அது ஒளிக்கும் கண்ணுக்குமான உரையாடல், இருளிலிருந்து ஒளிக்கு ஒரு பயணம். எஞ்சுவது ஒளியைப் பின்தொடரும் இரு கண்கள் மட்டுமே.

 

இந்த இடத்தை இசையின், கலையின் உள்ளே நின்று மட்டும் புரிந்துகொள்ள முடியும். வெளியே இருப்பவர்களுக்கு அது அசட்டுப் பணிவு எனவும், ஆசிரியனின் அதிகாரம் எனவும் மட்டுமே பொருள் கொள்ளும். அறியாமையின் காட்டைஅதன் இருளை அறியாதவர்க்கு ஒளியும் கண்ணும் பொருளாவதில்லை. ஒளியே கண்ணாகிறது, இருள் கண்ணை பயனற்றதாக்குகிறது. இதை நூல்களிலிருந்தோ பயிற்சியிலிருந்தோ அடைய முடியாது. நூல்களும், பயிற்சிகளும் நிறைவுற்ற பிறகு தொடங்கவேண்டிய இடம்.



 *


ஸ்கிர்ஃப் வாசிக்கும்போது கண்களை நன்கு திறந்து வாசிக்கிறார். பியோனோ கட்டைகளின்மீது அவர் விரல்கள் போவது, குளக்கரை மரக்கிளைக்கொப்பின் நுனி நீருக்கு சற்று மேலே தாழ்ந்திருக்கையில் அதை ஒடிக்காமலும் நீருக்குள் அமிழ்த்தாமலும் அமரும் பறவை போல அமர்ந்து செல்கிறது. அத்தனை விழித்த கண்களுக்கு அப்புறமும் அங்கே ஸ்கிர்ஃப் இல்லை, இசை மட்டுமே இருக்கிறது. ஓரிடத்தில் ஸ்கிர்ஃப் சொல்கிறார், "நான் உன் வாசிப்பில் இசைக்குறிப்பை மட்டும் கேட்கிறேன். நட்சத்திரங்களைக் காணவேண்டும்" என. ஒரு ஹைக்கூ உண்டு, 'அவன் நடக்கும்போது நீர் அலையெழுப்புவதில்லை, புற்கள் நசுங்குவதில்லை' என. நடப்பவன் நீரின் மேலே நீராகவும் புல்லின் மேலே புல்லாகவும் ஆகையில் அங்கே இயற்கை திகழ்கிறது. இசையில் குறிப்பு மறைந்து நட்சத்திரம் ஒளிர்கிறது. நம் தன்னிலை மறையும் தருணம், தனிக்கிணறு ஆழத்து நீரோட்டமாவது.

 

குறிப்பைச் சரியாக வாசிப்பது பயிற்சி. பீத்தோவனை அடைவது. குறிப்பைக் கடந்து வாசித்தலென்பது பீத்தோவன் கண்ட நட்சத்திரத்தை வாசிப்பது. அங்கே ஆசிரியர் நட்சத்திரத்தைச் சுட்டும் விரலாகிறார். கலையில் இதை சாத்தியப்படுத்தும் பொருட்டே தன்னிலையை உதறவும், தேவைப்படின் அறிவையும், அடைந்தப் பயிற்சியை உதறவும் கற்கவேண்டியிருக்கிறது.  ஒரு கணம்தான் அந்த அறிதல் நிகழ்வது. இசைக்குறிப்பை அடைதல் படிப்படியாக நிகழ்வது.  நட்சத்திரத்தை வாசித்தல் என்பது கணநேரத்தில் நிகழ்வது.

 

நட்சத்திரமாக ஒருவருக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. 'பிரபல நட்சத்திரமாகும்' ஒருவரிடம் நட்சத்திரம் இசைக்குறிப்பாக எஞ்சுகிறது. தன்னை இழந்து இசைக்கும் ஒருவர் நட்சத்திரத்தை வாசிக்கிறார். அப்போது அவரும் நட்சத்திரத்தின் ஒரு பகுதியாகிறார்.

 

கலையைப் பயிலும் காலத்தில் அப்படி ஒரு அனுபவம் அமையும். கலை என்பது வரலாறல்லவடிவமல்ல, பயிற்சியல்ல ஒரு வாழ்க்கை நோக்கென்று அறிதல். அறிவிலிருந்து அறிதலை எதிர்கொள்ளாமல், அறிதலிலிருந்து அறிவுக்குச் செல்லுதல். அதில் அமைவது நெடும் பயணம். ஆனால் அறிவை அடைந்தவுடன் நம் மனம் கிளம்பு கிளம்பு என்கிறது.

 

இரண்டுக்கும் நடுவேயான காலம் நீண்டதும், மின்னற்பொழுதேயானதுமான தூரம். நெடுங்காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம், ஆனால் ஏதேனும் ஒரு கணத்தில் நிகழும்.

 

2017-ல் ஹோய்சாள கலைவெளிப்பயணம் ஒன்றில் ஜெ பிரம்மனுடைய சிற்பத்தின் முன் நிற்கையில் கேட்டார், பிரம்மன் ஏன் தாடி வைத்திருக்கிறார் என்று. எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரே தொடர்ந்தார். "உலகைப் படைத்தவன் கவிஞன், இவ்வுலகம் அவன் கவிதை." மேலே சென்று பிரம்மனுடைய சிற்ப இலக்கணத்தை விவரித்தார். "பிரம்மன் நந்தி யாழும், மணிமாலையும், யோக தண்டமும், அமுத கலசமுமாக நின்றான். இசையின் இனிமையும், தியானத்தின் ஆழத்தையும், படைப்பே வாழ்க்கை நெறியென்றாகும் யோகமும், அமுதென்று ஆகும் ஞானமும் கவிஞனின் இலக்கணங்கள்" என்றார். ரிஷியல்லாதவன் கவியல்ல என்ற வரி திறந்துகொண்டது. பாதாமியில் எனக்கு நிகழ்ந்த அந்த அனுபவம் பொருளாகியது. ஹோய்சாளர்களின் வரலாறும், இந்திய சிற்பவியலும் அதன் அழகியலும் உதிர்ந்துபோய், கலையின் நடனமும் இருப்பின் மரணமும் ஒன்றாகும் ஒரு தருணத்தினை அடைந்தேன்.

 


அங்கிருந்து மீண்டும் ஒரு நெடும் பயணம். எனக்கான யானையைக் கண்டடைந்துவிட்டேன். அதைப் பழக்கித் தோலுரித்து துகிலாக்க வேண்டும். அது ஒரு வாழ்நாள் பயணம். ஆனால் யானையைக் கண்டுவிட்டேன்.

 

அறியாமையின் இந்தக் காடு  அமுதத்தின் ஒளிமிக்கதாக ஆவது அறிவினால். அதை அடைய அறிவைக் கண்ணாக ஆக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அறிவைக்கொண்டு அல்ல, கற்பனையைக்கொண்டு அல்ல, நம் இருப்பைக்கொண்டு அறியவேண்டியிருக்கிறது. ஆசிரியன் நம் கண்ணென அமைந்து இருளில் ஒளியைப் பொழியச்செய்து காட்டைக் காட்டுகிறான். இருளிலிருந்து ஒளிக்கு என்பது அறிவின்மையிலிருந்து அறிதலுக்கும், இறப்பிலிருந்து இறவாமைக்கும் ஆன பயணம்.  அந்தக் காட்டின்மீது யானையின் தோலென கவிந்திருக்கும் வானின் எண்ணற்ற நட்சத்திரங்களில் பீத்தோவனும் பிரம்மனும் இரு நட்சத்திரங்கள்.



***

1 comment:

  1. ஆசிரிய-மாணவ உறவைப்பற்றிய அற்புதமான கட்டுரை. குறிப்பாக ஆசிரியரின் கண்கள் நமதென ஆகும் இடம் பற்றிய விவரணைகள். புகைப்படங்கள் அற்புதம், கருவி ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல.

    ReplyDelete

Powered by Blogger.