சித்திர முரசு - ஸ்ரீநிவாஸ் அறிவரசன்
[1]
காவியத்தின் கண்ணுக்குத் தெரியும் பரப்பாக மொழி இருக்கிறது. திரையில், நூலில்
அதைத் தொடமுடியும். வாசித்தால் நல்ல சப்தம் கேட்கும்.
நல்வாசிப்போ மனனமோ கொண்டு அதை அதன் உண்மை வடிவில் நம்முடன் வைத்துக்கொள்ள
முடிகிறது. அனைத்தையும் தாண்டி அது அங்கு அப்படி இருப்பதால் மீள நிகழமுடியும்
எனும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது.
நம் அருகில் இருக்கும் சொல் அருகிலிருக்கிறது. முகமனுரைத்து பேசத் தொடங்குகிறது.
எங்கோ செல்கையில் எதிரில் வருகிறது. உறங்கி விழிக்கையில் உடனெழுகிறது. தன்
சகசொற்களுடன் வரைமுறையற்று முயங்கி புது தோற்றங்கள் கொள்கிறது. அன்றாடத்தை
அமைக்கும் கூறுகளில் ஒன்றாக எங்கோ மறைந்து வெளிப்படுகிறது. பொழுதுகள் அதன்
உருவடிவம் புகைந்து சந்தமும் ஒலியும் மட்டும் சூழும் வாய்ப்பையும் நல்குகின்றன.
இந்தச் சொல் எனும் அடிப்படை கவிதைக் கருவியிலிருந்து கவிதையும் கதையும்
தப்பவியலாது. ஒரு சொல் என்பது தன்னளவில் எண்கீறிப் பல்கும் சித்திரமும் ஒலியும்.
ஆயிரம் முறை கதைசொல்லி, வாழ்ந்து,
அவதானித்து, மீள நிகழ்த்தி இதன் சரியான வெளிப்பாடுகளுக்கான
அழகியல்களை மரபு வளர்த்தெடுத்திருக்கிறது. ஆனால் ‘வெண்முரசு’ போன்ற ஒட்டுமொத்த
மரபை மீளுருவாக்கம் செய்யக்கூடிய ஒரு நவீன காப்பியம், கதைகளோடு ஒரு பகுதியாக கதை சொல்லலையும் மொழியையும்
முன்னகர்த்துகிறது.
‘வெண்முர’சின் மொழி சாதாரணமாக எந்த நவீனத் தமிழ் இலக்கியத்திலும் பயிலாத நடை கொண்டது.
பலவகையான அலங்காரங்கள் கொண்ட அதை அணிமொழி என்று சொல்லலாம். செவ்விலக்கியம்
தேர்ந்துகொள்ளும் மொழி என்பது அதன் பேசுபொருட்கள் அனைத்தையும் தொடர்புறுத்த
வாய்ப்பளிக்கும் மொழி. மண்ணில் உள்ள அனைத்தையும் உணவாக்கிக்கொள்ளும் ‘வெண்முரசு’
மொழியின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்திக்கொள்ள விழைகிறது. உடல் மரபெனவும்
உட்கூறுகள் நவீனமெனவும் தோற்றுவிக்கும் இயல்பு அவ்விரண்டு வகையான கவியியல்களின்
சாத்தியங்களை விரிவாக எடுத்தாள்வதால் அதில் கைகூடுகிறது. நினைக்க நினைக்க மனம்
உறையச் செய்யும் வீச்சும், ஆழமும்,
நுண்மையும் கொண்டது.
முதலில் அது சொல்லவரும் அனைத்தையும் தமிழில் சொல்லவேண்டும் என்பதில்
பேசுபொருட்களுக்கான இணைத்தமிழ்ச் சொற்களைக் கொண்டுவருகிறது. ரிஷிகள் படிவர்களென,
அஷ்டதிக்கஜங்கள் திசையானைகள் என,
ராசிச்சக்கரம் நிலைத்திகிரிக்களம் என,
துர்க்கை கலைஊர்கன்னி எனச்
சொல்லப்படுகின்றன. ஒரு வகையில் மரபின் களஞ்சியத்திற்குள் கவிஞன் கைகோட்டி அளைவதன் தொடக்கம் என இதைச் சொல்லலாம்.
இப்படிக் குறிச்சொற்களுக்கு இணை கிடைக்காதபோதோ கவிஞன் அவனே உருவாக்குகிறான் (Neologisms).
அமாவாசை கருநிலவுநாளாக, மந்திராலோசனை அரசுசூழ்தலாக, ராஜநாகம் அரசநாகமாக, உறவுகள் குருதிச்சுற்றமாகத் தோன்றி வருகின்றன. இன்னும் சற்று முன்னகர்ந்து அதிகம் புழங்கப்படும்
தமிழ்ச் சொற்களையே புதிய அனுபவமாக்க அதை வேறொன்றாக்குவதையும் பார்க்கிறோம். உலகம்
புடவி என்றும், காளைத்திமில்
புள்ளிருக்கை என்றும், கண்ணீர்
விடுதல் கலுழ்தல் என்றும், யோசிப்பது
அகச்சொல்லோட்டம் என்றும், அகவல்பா
மயில்நடைத் தாளம் என்றும் ஆகின்றன.
மரபா உருவாக்கமா என்று மயங்க வைக்கும் தோரணை கொண்ட சொற்களே ‘வெண்முர’சில்
அதிகம் என்று தோன்றுகிறது. அகமொழியின் விரைவை மொழிவளம் தன்னில் விளைவித்ததன்
தோற்றமாக இருந்துகொண்டிருப்பவை. மிக இயல்பாக பாடுபொருளின் உறுப்பாக, வரப்பில் கொக்குபோல வரிகளில் எளிதாக கடந்து
செல்லும் தன்மையுடன் அமர்ந்திருக்கும் சொற்கள் பல்லாயிரம் உண்டு. வாய்மணம்,
அரசப்பெரும்படகு, வில்வல்லவன், குதிரைமறம்,
பூசெய்கை, ஆடலுக்கதிபன், விண்குறி, எரிசூழ்கை, பயிற்சிமுதிர்வு,
இரவாடுதல் என.
மரபின் சொற்களை, வெளிப்பாடுகளை அதே வடிவில் எடுத்தாளும் இடங்கள் முரசின்
நாவல்கள்தோறும் நிரம்பியுள்ளன. மரபில்
எழுந்த ஒரு கனிவுக்கு, அது கொண்ட
முதிர்விற்கு, கண்டடைந்த
காட்சிக்கு ஒரு வணக்கம் போலப் பின்தொடர்பவை. எங்கோ ஒரு சூதர் மது அருந்திவிட்டு
‘இசையெனும் சேர்ந்தாரைக்கொல்லி’ என்று வருந்துகிறார். இளநாகன் உணவுண்ணும் ஒரு
அறப்புரையில் உணவுண்பவர்கள் ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டுகிறது’ என்று தொடங்கும்
பேச்சு நீளமான அருகப் பகடியாகவே மாறுகிறது. பல பணிகள் ஆற்றி பொழுதுகள் நீண்டபிறகு
ஒருவனின் உள்ளம் ‘கைவிடு பசுங்கழை’ என மீள்கிறது. மழைப்புயல்களுக்கு நடுவே
உலகத்தைப்பற்றிப் பேசும் ஒருவர் ‘மூவா முதலா’ இயற்கை என்கிறார். இருட்கனி, கண்ணிநுண்சிறுதாம்பு என ‘வெண்முர’சின் பல
அத்தியாய, நாவல் தலைப்புகள்
ஆகியவற்றின் பின்னணி நாமறிந்தவை.
இவை தாண்டி இதன் பலவிதமான நடைகளில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் அதன்
கவிவீச்சு (flare). ஒரு
காட்சியென, உணர்வென விரியும் சொற்கள்,
அப்படி வெளிப்பட்டிருப்பதால்
மேலெழக்கூடிய சொல்லிணைவுகள், சாதாரணமான ஒரு வெளிப்பாடுகூட இருக்கலாகாது என்ற
அருத்தியின், மொழியெனும் கனவு
ஊர்தியில் ஏறி விரைந்த உத்வேகத்தின் தடங்களாக ஒளிர்பவை. குறிப்பாக இயற்கையை
எழுதுகையில் இது இன்னும் கூர் கொள்கிறது. மென்சேற்றுக்கதுப்பு, பனியீரம், வன்வடிவம், மழைமணல்கீற்று, அல்லிவட்டச்சிறுகுழி,
விண்ணகப்பேராற்றல் போன்றவை.
‘தாடிநிழல்வலை’ என்பது ஒவ்வொரு இளைஞனிலும் முதியவரிலும் சூதரிலும்
ஒளிமாறுபாடுகளிலும் மனவுணர்வுக்கு ஏற்றபடி வந்துகொண்டே இருப்பது.
நாவிரைவு, சொல்வன்மை,
சொல்தேர்திறம் போன்றவை சூதர்களின்
எழில்சொற்கள். ‘வெண்முர’சில் சூதர்கள் மொழியை வெளிப்படுத்தும் திறம் குறித்தே
நிறைய கவனிக்க உள்ளது. அதேபோல, ‘வெண்முரசு’ கவிமொழியின் இன்னொரு முகமாக அது தர்க்கத்தை, கருத்தை சொல் தீண்டும் நுட்பத்தையும்
சொல்லவேண்டும். ‘சொல்வளர்காடு’, ‘கிராதம்’ என்று ‘இமைக்கண’த்தில் இந்த மொழி
அதன் உச்சத்தை அடைகிறதென நினைக்கிறேன். மொத்த இமைக்கணத்தையும் துயரின் விவாதம்
எனக் கொண்டால், அதன் தத்துவச்சூழ்தலைத்
தாண்டி ஒவ்வொரு கதாபாத்திரம் வெளிப்படுத்தும் சொல்லும் அத்தனை தீவிரத்துடன் வந்து
நிற்பதைப் பார்க்க முடிகிறது. உரைநடையில் செய்யுளின் கூர்மையும் செறிவும் அமைந்த
பக்கங்கள்.
எல்லாவற்றையும் பேசும் ‘வெண்முர’சில் மொழி குறித்த பிரக்ஞை எப்படியெல்லாம்
வெளிப்படுகிறது என்பதைப் பார்ப்பது இந்தச் சித்திரங்கள் சென்று சேரும் ‘மொழி’
எனும் அந்த ஒட்டுமொத்தத்தை அறியும்
பயணமாகக்கூட ஆகலாம். தத்துவ விவாதங்களில்,
அரசுசூழ்தலில், உரையாடலில் சொல்தேரும் விதம் குறித்த விவாதங்கள், உவமைகள் குறித்த பேச்சுகள், வியாசரின் கற்பனை, உக்கிரசிரவஸ் சௌதியின் மொழி என்று இதற்கு ஒரு
விரிந்த களம் உள்ளது.
இன்னொரு புறம் அனைத்தையும் நழுவ விட்டு இதே மொழியில் பீமனின் குரங்குத்தனத்தை,
இரண்டாம் தலைமுறை கௌரவர்களின்
அதகளத்தை, ‘மாமலர்’ முண்டனின்
நக்கலை அது நடித்துக் காட்டுகிறது. ‘வண்ணக்கட’லின் பிரம்மம் பிறக்கும் பகுதியும்,
வாலி சுக்ரீவ பிரஹசன நாடகத்தின்
துடுக்கும், மொழி விளையாட்டுகளும் அபாரமானவை.
விப்ரரின் ‘திருதா’ விளியும், மூத்த யாதவனின் ‘முந்துசினமும்’ புன்னகைக்க வைப்பவை. மொழி தொடர்ந்து
உருமாறிக்கொண்டே இருப்பதற்கான வழிகள் கண்டடையப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
‘மீனாமைபன்றிச்சிம்மக்குறியோனாக’ என்னும் வெளிப்பாடு எழுந்த உள்ளத்தில்
எழுந்திருக்கக்கூடிய துள்ளலை உணரமுடிகிறது. இவை போன்று வெறும் மொழித்திறன்
வெளிப்பாடென தோன்றச்செய்பவையும் உள்ளன. ஆனால் இது ஒருவகை நுண்மையாக்கத்தின்
இயல்பு. ஏற்கெனவே அடைந்திருப்பதை இன்னும் சற்றுதூரம் எடுத்துச்செல்வது. மரபின்
மனம் நேரடியாக நவீனக் கவிதைக்குத் தாவும் வெளிப்பாடுகளாகவும் இவை உள்ளன.
[2]
புறவுலகத்தை, இயற்கையை
எழுதுவது என்பது ஓர் எழுத்தாளனுக்கு புதுமையையும் அவனுடைய இருப்பையுமே நேரடியாக
எழுதுவது. இலக்கியம் தொடங்கிய காலம் முதல் அதில் இயற்கை இருந்துகொண்டிருக்கிறது.
ஆனால் அதை எழுதுவதற்கு அடிப்படையில் அதற்கு அருகில் எப்போதும்
இருந்துகொண்டிருக்கும் மனம் தேவையாகிறது. மீண்டும் மீண்டும் இத்தனை ஆயிரம்
பக்கங்களில் மீள நிகழாதபடி புதிதாக எழுதப்பட்ட இந்தச் சித்திரங்கள் அதன் அருகாமையை
எப்போதும் உடன் விழையும் ஒரு மனத்தால் எழுதப்பட்டுள்ளது. ‘வெண்முரசு’ தாண்டி
ஜெவின் நாகர்கோயில் மற்றும் பயணச் சித்திரங்களில் தொடர்ந்து இயற்கை பெரும்
பரவசத்துடன், அதன் ஒரு
பகுதியாக தன்னை உணரும் ஒரு மனதின் அருகாமையாக வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. சாதாரணமான
தகவல்கள்கூட அபாரமான கவிதைகள் என மயங்க வைக்கும் மொழிக்கீற்றுகள் கொண்டவை. அதை
இயற்கை பார்த்தலின் சித்திரங்கள் என்று கொண்டால், ‘வெண்முர’சில் இருப்பது சாராம்சமான இயற்கை என்று
தோன்றுகிறது.
ஒருவகையில் காவியகர்த்தனின் இயற்கை அது. இயற்கையிலிருந்து இன்னும் பெற விழைவது,
இன்னொன்றுக்கு அருகிலிருப்பது,
இன்னொன்றாவது. இந்தக் காவிய இயற்கை
முதன்மையாக அதன் கற்பனை விரிவுக்காக, அது அளிக்கும் சாத்தியங்களை மொழி எதிர்கொண்டதன் சிறப்புக்காக முக்கியமானவை.
விரிந்த நிலக்காட்சியில் காந்தாரப் பாலையில் பீஷ்மர் செல்வது, மழைவிற்கள் எழ காண்டீபன் பிறக்கும் மலர்வெளி,
இளம் பாண்டவர்கள் கடந்துவரும்
சதசிருங்க வனப்பாதை, மரங்கள்
வழியே இடும்பனுடன் போரிடும் பீமன், மாபலியின் நெட்டுயிர்ப்பில் முளைத்த மரங்களோடு எழுந்து நிற்கும் ஏகலைவனின்
ஆசுரம், தாடியுடன் பனிமலைகள்
வழியே செல்லும் அர்ஜுனன், இமைக்கண
சிகண்டி காணும் மருதநிலம், மழைக்காட்டில்
உடைந்த பேருருவச் சிலையின் முகத்தின் மேல் நிற்கும், விளையாடும் இளநாகன் என்று இயற்கை கீற்றுகளாகவும்
முழுமையாகவும் உடனிருந்துகொண்டே இருக்கிறது.
இதையே அது உருவாக்கும் புறவுலகத்தின் அனைத்திற்கும் சொல்லலாம். நகரங்கள்,
கோட்டைகள், உணவுகள், திருவிழாக்கள், போர்கள்
என்று வெளியே நிகழும் ஒன்றை யதார்த்த நிலவுலகில் நிலைபெறச்செய்ய ‘வெண்முரசு’
முதலில் விரிவான தகவல்களை நம்பியுள்ளது. அதே நேரம் அது ஒருவகை பழங்காலத்
தோற்றத்தையும் தவறவிடாமல் இருக்க விழையும்போது, மரபிலக்கியங்களின் கூறுமுறைகள் பயில்வதைக்
கவனிக்கலாம். முதன்முறையாக யானைகளின் நகரமாகிய அஸ்தினபுரி வர்ணிக்கப்படுகையில் இவை
சற்றே கலந்திருக்கின்றன. அங்கு, ‘யானைகளின் மதத்தில் மொய்க்கும் ஈக்களின்
ரீங்காரம் மலர்ச்சோலைகளின் தேனீக்களின் ரீங்காரத்தைவிட ஓங்கி ஒலித்தது’
நேரடியாக கம்பனை நினைவூட்டுவது.
‘வண்ணக்கட’லில் சூதர்களின் ஒவ்வொரு வர்ணனையும் நகரங்கள் செல்லச் செல்ல இந்த
மரபார்ந்த அணிகளைத் தாண்டி வேறுவகை அணிகளாக, உவமைகளாக, படிமங்களாக மெல்ல உருமாறிவருவதைக் காண்கிறோம். முதலில் வடபுலச் சூதர்களின்
நாவன்மையில் நாம் இப்படி மதுரையைக் காண்கிறோம், ‘சிம்மமில்லா காட்டின் பெருங்களிறுபோல் இருக்கிறது
மதுரை. தலைமுறையாக எதிரிகளைக் காணாமையால் அதன் தந்தங்களின் கூர்
மழுங்கியிருக்கிறது’. புகார் கோட்டையை அணுகும் இளநாகன் குழு இப்படிப்
பேசிக்கொள்கிறார்கள், ‘“கரை
வந்து படிந்த யானை ஓங்கில் போலிருக்கிறது இக்கோட்டை” என்றான் இளநாகன். “ஆழியெனும்
கொற்றவையின் கரிய பெருங்கழல்” என்றார் சைலஜ மித்ரர். “எறும்புகள் நெல் கொண்டுசேர்க்கும்
வளை என்பர் வணிகர்” என்று சொல்லி ஒரு வணிகர் புன்னகை செய்து அவர்களைக்
கடந்துசென்றார்.’ பலவித உவமைகள் இன்னும் பலவகை தன்மைகளை பாடுபொருளுக்கு
அளிக்கின்றன. அஸ்தினபுரியை நெருங்கும்தோறும் நகர வர்ணனைகளில் அணிகளும் தகவல்களும்
மேலும் செறிவும் அருவத்தன்மையும் கொள்கின்றன.
புறமென வெளிப்படும் ஒவ்வொன்றையும் மனமே, மனமென அமைந்த மொழியே படைத்தளிக்கிறது. இங்குள்ள ஒவ்வொன்றையும் இன்னொன்றுக்கு ஒப்பிட இயலும் என்பதிலேயே இது அனைத்தையும் கோர்க்கும் ஒன்றின் பேச்சு வெளிப்படுகிறது. தொகுத்துப் பார்க்கையில் இந்த உவமைகள் மாளிகைச் சாளரம் தோன்றிய நிலவு முகங்கள் எனக் காவியம் முழுதும் பூத்திருக்கின்றன. இங்கிருப்பவற்றோடு அது உரையாடியதன் மலர்த்தடங்கள் எனவும்.
[3]
அலங்கரித்தல், அணிசெய்தல்
குறித்து நாம் ஏற்கனவே யோசித்திருக்கிறோம். ஒன்றை அணிசெய்வது என்பது அதன்
உள்ளார்ந்த வெளிப்பாடு. அந்தக் கதை தன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு
அணியும் அணிசெய்யப்படும் உறுப்புடன் மிக நுட்பமான உறவில் இருக்கிறது. அணி என்பது
தன்னளவில் தன்னந்தனியானது என்றாலும் அது இணைந்திருக்கும் உறுப்பில் அது எழுப்புபவை
அதை முழுமைக்கு அருகில் கொண்டுசெல்கின்றன. அல்லது அப்போதைய வெளிப்பாட்டு நிலையின்
உச்சத்திற்கு. இவை தாண்டி அணி என்பது தன்னிலிருந்து ஒன்றை எடுத்து முன்வைத்தல்.
இந்த அணிகளின்றி ‘வெண்முரசு’ என்ன என்னும் கேள்வி உள்ளது. உண்மையில் அப்படி
ஒன்று இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. பழைய காவியங்களின் அணிகளின் இயல்பைப்
பார்க்கலாம். அவை காட்சிகளைக் காட்டவோ, தகவல்கள் வழியாக விரிவாகச் சித்தரிக்கவோ, சென்று வாழக்கூடிய அனுபவத்தை நல்கவோ முயல்வதில்லை.
மாறாக அவை அந்த வர்ணனைகள் வழியாக அதன் பேசுபொருளை ‘நுண்மையாக்கம்’ செய்கின்றன.
புறவுலகை இன்மை நோக்கிச் செலுத்துகின்றன. கம்பனுக்கு ஒரு நகரக் கோட்டையின்
மதிற்சுவர் என்பது பருவடிவக் கட்டுமானம் மட்டும் அல்ல, அது அங்கிருக்கும் சான்றோர்கள் கற்றுணர்ந்த
ஞானத்தின் பெறுபொருளாக வந்த மெய்யுணர்வே எழுந்து நிற்பது போன்றது.
மரபின் முகம் கொண்டிருந்தாலும் ‘வெண்முர’சின் விவரணைகள் நவீன இலக்கியத்தின்
வேர்கள் கொண்டவை. செறிந்த தகவல்கள், நுட்பமான காட்சிகள் என ஒருவகையில் அதற்கு நேர் எதிரானவை. ஆனால் ‘வெண்முரசு’
அதன் எல்லையற்று விரியும் இயல்பினால் மேற்சொன்ன அந்த ‘நுண்மையாக்கம்’ எனும் காவிய இயல்பினை
அடைகிறது. சென்று வாழும் அனுபவத்தை அளிக்கக்கூடிய இந்த நுட்பமான விவரணைகள்கூட ஒரு
எல்லைக்கு மேல் அதன் தொகுப்புத்தன்மையால் ‘அருவமாக்கலை’ நிகழ்த்துகின்றன. ஒன்றின்
அனைத்து தோற்றங்களையும் சொல்லும்போது நிகழும் இதை அணிகளின் தர்க்கம் என்று
சொல்லலாம்.
ஒரு காட்சியென படிமமென நிற்கும் சொல்லிணைவுகள். தன்னளவில் பொருளேற்றம்
செய்யப்படாத முகில்களென முட்டிக்கொண்டு பல்வேறு வண்ணவடிவங்களில் காவியநிலத்தில்
சூழ்வந்து மின்னுபவை. தீயின் எடை, மலைமுடித்தனிமை, இணைப்பெருங்கரங்கள்,
இருளாழம் போல்பவை.
உயிரற்றதை, உருவமற்றதை உயிர்கொள்ளச்
செய்வதையும் இதன் ஒரு பகுதியாகவே சேர்த்துச் சொல்லலாம். ‘முதற்கன’லில் அந்த
முதற்பேரியற்கை இரு கண்கள் சுடர்விட நாகத்தின் உருக்கொண்டு தோன்றுகிறது, ‘அந்த இருள் மாபெரும் நாகப்பாம்பின்
வடிவிலிருந்தது’. ‘குருதிச்சார’லில்
குருஷேத்ரத்தின் மணற்பரு சிதலுரு கொண்டு மணல்தேடி அலைகிறது. வணங்கி எழும்
பெயர்மைந்தர்களில் சுருளவிழ்ந்து ஓடும் நாகக்குழவியை வைத்திருந்த பீமனுக்கு
மட்டும் புன்னகையை அளிக்கும் பீஷ்மரை தார்க்கிகரிடம் விவரிக்கும் சௌனகர் கரந்து
வெளிப்படும் அந்த அருவத்தையே சொல்கிறார். சிறிய கற்பனைகள் என, ஓர் எண்ணம் கதையானது போல உருவளரும்
சித்திரங்கள்.
‘அருவமாக்கல்’ பெருங்காவியங்களின் இயல்புகளில் ஒன்று. செவ்விலக்கியங்கள் அதன்
பாடுபொருட்களின் பேருருவத் தோற்றத்தைச் சொல்கின்றன. மனித வாழ்வின்
ஒட்டுமொத்தத்தையும் தாண்டி மேலெழுந்து தோற்றம் கொள்கின்றன. ‘வெண்முர’சின் கதைகள்
யதார்த்தத்திலிருந்து அதன் தேடலுகேற்றபடி விரிந்து பலவகையான விதிகள் கொண்ட
உலகங்களைச் சமைக்கின்றன. உணர்வுநிலைகளின் தர்க்கத்தின் அதீதங்களுக்கு அழைத்துச்
செல்லும் படைப்பில் அதன் அன்றாட யதார்த்தங்கள் வெளிப்படுவதை அறிய முயல்வது ஒரு
பரந்த புரிதலை உருவாக்கலாம்.
கர்ணன் பிறக்கும் நிகழ்வில் எண்ணவோட்டங்களும் பதற்றங்களும் சொல்லப்படுகையிலேயே குந்திக்கு
அந்த அறையில் நாகத்தின் வாசத்தை உணரமுடிகிறது. தகவல்கள் வழியாக கதை பறக்கத்
தொடங்கிவிட்டபின் இந்த இயல்பு கொண்ட சித்திரங்கள் நினைவா, புனைவா என்று மயங்கவைக்கும் யதார்த்தத்திற்குள்
அழைத்துச் செல்கின்றன. உணவருந்தும் துருமசேனன் அருகில் அமர்ந்து அவன் பால்யத்தின்
ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்கும் அசலையில் அவன் உடலில் ‘ஆண்புரவிகளிலும்
களிறுகளிலும் அந்த மணத்தை அவள் அறிந்திருந்தாள்’ என்று வரும்போது கதை
சிறகடிக்கிறது. சமயங்களில் இச்சித்திரங்கள் தலைகீழாகவும் வரலாம். பாறைகளாலான உலகம்
கொண்ட இளம் துரியோதனனைப் பார்த்த பிறகே மனிதர்களிடம் உறவாடும் துரியனைக்
காண்கிறோம்.
இன்னும் சில இடங்கள் உண்டு. வீற்றிருக்கும் மொத்த காவியப்பரப்பிலிருந்து
வெளியே எடுக்கத்தக்கவை. பொருள்கொண்ட பின்னரும் முழுதாக விலகாது அதே மாய ஒளியுடன்
நின்று புன்னகைப்பவை.
“நானே ஒருபோதும் நாவால் தொடமாட்டேன். ஒருநாள்
அச்சொல் என்னைக் கண்டெடுக்கும். தன்பொருளை நானாக்கும். அதுவரை நான் இங்கிருப்பேன்.
இப்பெயர் கொண்டிருப்பேன். இவையெல்லாம் செய்திருப்பேன். இவையாகி அமைந்திருப்பேன்.
ஒரு சொல்லே அனைத்துமாகும் ஓயாத விந்தையென்ன என்றெண்ணி வியந்திருப்பேன்.”
‘வெண்முர’சின் உச்ச கவிதை வர்ணனைகள் என்று சொல்லத்தக்க அனைத்துமே அருவமானதைச்
சொல்பவை. குறிப்பாக அழகை, நுண்மையை,
பரவசத்தை, வெய்துயிர்ப்பை, பெரும்காதலை, நிறைநலத்தை, குழந்தைமையை. காதல் மட்டும்தான் உண்மையில் கவிதையின் பேசுபொருளோ என மயங்கச்
செய்பவை. ‘நீல’த்தின், ‘இந்திரநீல’த்தின்
வர்ணனைகள், உணர்வுநிலைகள் பல
நினைவில் எழுபவை. மிகையென்றாத் தெரியவில்லை, திரையில், அச்சின் பக்கங்களிலேயே அவை அழகிய வடிவம் கொண்டவை எனத் தோன்றுவதுண்டு.
இவை நீலத்தின் வரிகள். கண்ணனென ராதை உணரும் சொற்கள். காவியகர்த்தனின் சொல் குறித்த பயணத்தை அறிந்தவர்களுக்கு இது இன்னுமொரு பொருள் அளிக்கலாம். ஆனால் எத்தனை முறை சொன்னாலும் குறையாத மொழியும் பேரமைதியுடன் நின்றிருக்கும் ஒன்றின் வெளிப்பாடும் இதில் உள்ளதென நினைக்கிறேன். கவிதை வைரமாக அல்லது மலராக அல்லது ஒரு துளி குருதியாக வெளிப்படவேண்டும் என்றொரு கூற்றுண்டு. இது மூன்றுமாக இங்கிருப்பது.
ஸ்ரீநிவாஸ் அறிவரசன் |
No comments: