கிறிஸ்துவுக்கு அணுக்கமான அண்ணன் - காட்சன் சாமுவேல்
கிறிஸ்துவுக்கு எவரிடமும் காழ்ப்புகள் இல்லை. வெள்ளையடிக்கப்பட்ட
கல்லறைகளுக்கு எதிரே அவர் கிளர்ந்தெழுந்தாரே அன்றி எவ்வகையிலும் காழ்ப்புகளையும்
சுமந்தலைந்தவர் அல்ல. ஜெயமோகன் அண்ணனின் எழுத்துகளில் அவருக்கு கிறிஸ்து மீது
இருக்கும் தீராத அன்பும் இணக்கமும் கிறிஸ்துவும் அவரில் அன்புகொண்டுள்ளார் என்பதை
மெய்ப்பிக்கும்.
நானறிந்த கிறிஸ்தவ நண்பர்களுள் வெகுசிலரே ஜெயமோகன் அண்ணனுடைய எழுத்துகளை
வாசிக்கிறவர்கள். அதிலும் இருவர் அண்ணனுடைய எழுத்துகள் வழியாக என்னைக்
கண்டடைந்தவர்கள்.
என்மீது அன்பு பாராட்டும் ஓய்வுபெற்ற போதகர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஜெயமோகன்
அவர்களது எழுத்துகளை தாம் வாசிக்கவில்லை எனினும், பலர் அவரைக் குறித்து எழுதிய விமரிசனங்களை
வாசித்திருப்பதாகச் சொன்னார்கள். அன்னார், சமயங்களுக்கிடையேயான உரையாடலை முன்னெடுப்பவர், என்னைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவர்களுக்கும் பிற சமய
நண்பர்களுக்கும் வெகு அணுக்கமானவர், அவரே இந்து சமயப் பின்னணியிலிருந்து கிறிஸ்துவைக் கண்டடைந்து பல வருடங்களாக
குமரி தென்னிந்திய திருச்சபை குமரிப்பேராயத்தில் பணி நிறைவு பெற்றவர்.
குமரி மாவட்டத்தில் வாழும் ஜெயமோகன் அவர்களின் கிறிஸ்தவப் பார்வை, பங்களிப்புகள்
என்ன என்ற வரியில்கூட ஒரு கட்டுரை இதுவரை சமர்பிக்கப்பட்டிருக்காது என்பதை அப்போதுதான்
நான் புரிந்துகொண்டேன். ஓய்வு பெற்ற அந்த போதகரை எட்டிய விமரிசனங்கள் எவ்விதம் அமைந்திருக்கும் என்பது தெளிவு. ஆகவே
கிறிஸ்தவம் குறித்த அவரது கருத்துகளைத் தொகுப்பது அவசியம் எனக் கருதுகிறேன். எனது
வாசிப்பில் என்னைக் கவர்ந்தவற்றுள் ஒருசில வரிகளையும் அவரோடு தனிப்பட்ட முறையில்
நான் பழகியவற்றையும் இங்கே பதிவுசெய்வது நான் ஜெயமோகன் அவர்களை எப்படி
உள்வாங்கிக்கொண்டேன் எனக் கூறப் போதுமானது.
எனது இறையியல் கல்வியின் இறுதியாண்டில்தான் ஜெயமோகன் அண்ணன் குறித்து ‘சங்கச்
சித்திரங்கள்’ வாயிலாக அறிகிறேன்.
பார்வதிபுரத்தில் ஒரு எழுத்தாளரா? எனது சொந்த ஊரான பெருவிளைக்கு அருகில்தானே இருக்கிறார் என்றுதான் அவரைச்
சந்திக்கச் சென்றேன். அன்று அவர் உலக எழுத்தாளர்களுக்கான ஒரு கலைக்களஞ்சியம் உருவாக்கும் முயற்சியில்
இருந்தார். அன்றுமுதல் இன்றுவரை அவரது வீட்டில்
நான் சென்று சந்தித்து வருகிறேன். குமரி மாவட்டத்தில், நான் எவ்வித முன்னறிவிப்புமின்றி செல்லும்
ஒருசில வீடுகளில் அண்ணனுடைய வீடு முக்கியமானது. எனது குடும்பத்தினரையும் தவறாது
அழைத்துச் செல்லும் வீடுதான் அது. என் குழந்தைகள் ‘ஜி மோகன்’ அங்கிள் வீட்டிற்கு
குதூகுலத்துடன் வருவார்கள். அவர் குழந்தைகளுக்கும் மிக நெருக்கமானவர்.
இறையியல் கல்வி என்னை சற்று நின்று நிதானிக்கச் செய்ததால் அண்ணனுடைய எழுத்துகளை
என்னால் விருப்புடன் தொடர முடிகிறது. மேலும் அண்ணன் குமரி மாவட்டத்தைச்
சார்ந்தவரானபடியால் இங்குள்ள சமயப் பின்னணியங்கள் சார்ந்து அவரது அவதானிப்புகள்
எவ்வளவு உண்மையானவை என என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். ஒருவேளை அவரது
வாசகர்களால் அவரைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் இக்கட்டுரை அவரைப் புரிந்துகொள்ளத்
தவறியவர்களுக்காக ஒரு துவக்கமாக அமையுமே என்ற எண்ணத்தில்தான் இதனை எழுத முற்படுகிறேன்.
ஜெயமோகன் அண்ணனுடைய எழுத்துகளில் எனது நினைவில் நின்று நான் சொல்லத்தக்க சில
கட்டுரைகள் உண்டு. ஆனால் குறிப்பிடும்படியாக அவர் என்னோடு பேசிய உரையாடல்களும்
என்னைக் குறித்து அவர் எழுதிய வார்த்தைகளுமே அவர் கிறிஸ்துவர்களுக்கோ ஏன்
கிறிஸ்துவுக்கோ எதிரான செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவரல்ல என்பதை வெளிப்படுத்தும்.
அவ்வகையில் அவர் “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!” (யோவான் 17: 21 திருவிவிலியம்) என்ற கிறிஸ்துவின் வார்த்தையினை தன்
வாழ்வில் கடைபிடிக்கும் ஒருவராக இருப்பதையே பார்க்கிறேன்.
2008ஆம் ஆண்டு நான் மார்த்தாண்டம் பனைத்தொழிலாளர்
வளர்ச்சி இயக்கத்திலிருந்து மாறி, மும்பை மெதடிஸ்ட் திருச்சபையில் என்னை இணைத்துக்கொண்டபோது என்னோடு இணைந்து
மகிழ்ந்தவர் அண்ணன்தான். எனக்கேற்ற துறையாக அவர் இதனைக் கண்டதுகூட எனக்கு ஓர்
ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. “அவரைப்பற்றி எண்ணும்போதெல்லாம்
அவருக்குப் பொருத்தமான சிறந்த பணி போதகர்பணிதான் என்று எனக்குத் தோன்றும்.”
ஏனென்றால் எனது குடும்பத்தினர் மட்டுமே நான் போதகர் ஆகவேண்டும் என
எண்ணியிருந்தனர். நான்கூட அதனை எண்ணியிருக்கவில்லை. மூன்றாம் தலைமுறையாக எனக்கு
இவ்வாய்ப்பு அமைந்தது நல்லூழ் என்றாலும், அண்ணனின் வார்த்தைகள் ஓர் ஆசீர்வாதமாகவே அமைந்தது.
அன்று மட்டும் அவர், “இவன் போதகர் பணிக்குச் சரிப்படமாட்டான்” என்று
கூறியிருந்தால், போதகப் பணியினைகூட
விட்டுவிடத் தயங்கியிருக்கமாட்டேன். எனக்கே நன்றாகத் தெரியும், பாவிகள்மீது அன்பு பாராட்டும் ஆண்டவர் என்னை
இப்பணியில் இணைத்துள்ளாரே அன்றி, எனது நற்செயல்களாலோ அல்லது எனது திறமைகளினாலோ அல்ல. அவ்வகையில் என்னைக்
கூர்ந்து அவதானித்த ஒரு மூத்த அண்ணனாகவே அவர் செயல்பட்டிருக்கிறார் என அறிவேன்.
இதுவே வேறு யாராக இருந்தாலும், தனது பேச்சு சாதுரியத்தால் கிறிஸ்துவை விட்டே என்னை விலக்கியிருக்க முடியும்.
வாழ்க்கையில் அலைபாய்ந்து நிற்கும் ஒருவனை திசைமாற்றிவிடுவது ஒன்றும் சிரமம் அல்ல.
கிறிஸ்தவ ஆலயங்களில் நிகழும் அரசியல்களை அண்ணன் அறியாதவரல்ல. ஆனால், அவை எனது ஆன்மப்
பயணத்தை எவ்வகையிலும் பாதித்துவிடக்கூடாது என்ற பிரார்த்தனையுடன் கூடிய உற்ற
சகோதரனின் பதைபதைப்பு மட்டுமே அவருக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
பெரும்பாலும் அண்ணனது எழுத்துகள், அவரையும் மீறி நிகழும் தருணங்களாக அவர் குறிப்பிடுவதை நாம் காணலாம்.
அவ்வகையில் அவர் தனது முழுக்கோடு ஒய். எம். சி. ஏ. அனுபவங்களைப்
பதிவுசெய்திருப்பது முக்கியமானது. தனது ஆரம்ப வாசிப்பு நிகழ்ந்த இடமாகட்டும்,
தனது தாய் மூலம் அவர் பெற்றுக்கொண்ட
வாசிப்பனுபவங்களாகட்டும், வாசிப்பின்
வாசனையே அன்றி இருந்த தனது தந்தை, நண்பர்கள் மற்றும் அவரது புறச்சூழலாகட்டும், எல்லாவற்றையும் அவர் பிரித்து நம்முன் வைக்கிறார். ஒரு கட்டத்தில், லண்டன் மிஷன் சங்கத்தார் குறித்தும்கூட நகைச்சுவை
இழையோட பெருமிதப்பட்டிருப்பதையும் வாசித்திருக்கிறேன். கிறிஸ்தவத்தின்
பங்களிப்புகளையோ அல்லது கிறிஸ்துவின் ஆன்மாவையோ அவர் பெரும் மரியாதையோடு குறிப்பிடுவதையும்
பொதுவிடங்களில் முன்வைப்பதையும் தொடர்ந்து அவரது எழுத்துகளில் பார்க்கலாம்.
2012ஆம் அண்டு என நினைக்கிறேன், அவர் ஆப்பிரிக்காவிற்கு மும்பை வழியாகச் செல்லுகின்ற
தருணம். மும்பையிலுள்ள கிறிஸ்தவ போதகர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஓர் அமர்வினை
நிகழ்த்தக் கேட்டுக்கொண்டேன். சென்னை விமானம் மும்பையில் தரையிறங்கி, ஆப்பிரிக்கா செல்லும் அடுத்த விமானத்தைப்
பிடிக்கும் முன்பாக ஒரு நிகழ்விற்கு வந்து பேசிச் சென்றார்கள். தமிழ்
இலக்கியத்தில் காணப்படும் கிறிஸ்தவம் என்ற ஒரு பார்வையினை முன்வைத்தார்கள்.
அப்படியான ஒரு பார்வையே அன்று அங்கிருந்த எவருக்கும் இருந்திருக்கவில்லை. ஆனால்,
அவர் அந்த நிகழ்ச்சிக்கு
ஒத்துக்கொண்டது, பேசுபொருளாகக்
கொண்டது எல்லாம் கிறிஸ்துவர்கள்மீதும் கிறிஸ்துவின்மீதும் ஆழ்ந்த நம்பிக்கையைக்
கொண்டுள்ளதாகவே நான் உணருகிறேன். அந்த நிகழ்ச்சியில் அவர் கிறிஸ்தவ விழுமியங்கள்
குறித்து மிகச் சிறப்பாகப் பேசினார். இறுதியில் எங்களிடம் அவரது பயணத்திற்காக
பிரார்த்தனை ஏறெடுக்கக் கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்தவ மதம் அன்பு, தியாகம், சேவை இவைகளை முன்னிறுத்தும் ஒன்று என்பதில்
அண்ணனுக்கு முழு நம்பிக்கை உண்டு. ஆனால், கிறிஸ்தவர்கள் இவ்வித விழுமியங்களை விட்டு திசைமாறிச் செல்லும்போது அவை
நிகழ்த்தும் பண்பாட்டு அழிவுகள், ஆதிக்கம் போன்றவற்றைக் குறித்து அவர் ஐயப்படுவதையும் முன்வைக்கிறார். அதனை
எவரும் குறைகூற இயலாது. கிறிஸ்துவின் அன்பினால் கட்டப்பட்ட திருச்சபை, தனது நிலைப்பாட்டை
காண்ஸ்டன்டைன் என்ற அரச வழிமுறைக்கு மாற்றிக்கொள்ளும்போது நிகழும் ஆதிக்க
உணர்வுகள் பிரத்தானியர்களின் வழி நம்மை வந்து எட்டியதை சுட்டிக்காட்டுவது சரியானது
என்றே எண்ணுகிறேன்.
மதமாற்றத் தடைச்சட்டம் வந்தபோது அண்ணன் நாகர்கோவிலில் உள்ள கலை இலக்கியப்
பெருமன்றத்தில் உரையாற்றி அதனைப் பதிவுசெய்தார்கள். கிறிஸ்தவர்களை விரும்பாதவர்கள்
உள்ளூர மகிழ்ந்திருந்த தருணம். ஆளும் கட்சி ஆதரவு இருந்ததினால் சிலர்
வெளிப்படையாகவே மதமாற்றத் தடைச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். கிறிஸ்தவர்கள்
கொந்தளித்துப் போயிருந்த நேரம். அச்சூழலிலும் ஒற்றைப்படையான பார்வையோடு அல்லாது,
ஏதோ முகத்தைக் காட்டவேண்டியதற்காகப்
போய்வரும் எளவு வீட்டிற்குச் செல்வதைப் போலல்லாது, அவர் ஆற்றிய உரை தெளிவானது. எந்த கிறிஸ்தவ போதகர்
ஏறெடுத்த மன்றாட்டிற்கும் மேலானது. மாய்மாலமற்றது. இன்று, இந்த விழுமியம் பல கிறிஸ்தவர்களிடம்கூட இல்லை.
பல்வேறு வகைகளில் மழுப்பும் தன்மை கூடியிருக்கிறது.
இன்று பாரம்பரியத் திருச்சபைகள் அவரது கருத்துடன் ஒன்றியிருந்தாலும், பல்வேறு கிறிஸ்தவர்கள் அவருடன்
முரண்படுவதற்குக் காரணம், மத
அடிப்படைவாதம் மட்டுமே என்கிற கசப்பான உண்மையினை மறந்துவிடக்கூடாது. இவ்வித
அடிப்படைவாதங்களால் சமாதானம் அல்ல, பிரிவுகளும் பிளவுகளும் ஏற்பட்டு இந்த நாடு
சிதைந்துவிடும் ஆபத்து நெருங்கியிருப்பதை அவர் மீண்டும் மீண்டும்
சுட்டிக்காட்டுகிறார்.
ஏன் இந்த வீணான வேலை, எழுதுவதை
வைத்துக்கொண்டு வெறும் கதைகளை எழுதிவிட்டுச் செல்லலாமே என்கிற கேள்விகளை பலர்
எழுப்புவதுண்டு. கிறிஸ்தவம் குறித்து எழுத அவர் யார் எனக் கேட்போரும் உண்டு. அவர்,
தனது தகுதியினை முன்வைத்து எதையும்
கூறாமல், மனசாட்சியினை
உலுப்பும் கேள்விகளையே முன்வைக்கிறார். இவ்வகைக் கேள்விகளைத்தான் அன்று இந்தியா
வந்த மிஷனெரிகள் இந்தியச் சமூகத்தில் முன்வைத்தனர். இந்தச் சமூகத்தில்
இருந்த பிழைகள் அவ்விதம்தான் களையப்பட்டன.
“ஆனால், பாவம் நம்மிடம்
இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது.” (1 யோவான் 1: 8 திருவிவிலியம்) என்றே திருமறை விளம்புகிறது.
‘தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தாமஸ்’ என்கிற கட்டுரைதான்
அவர் எழுதியதிலேயே சற்று கடுமையானது. ஆனால் ஆழமானது. புனித தாமஸ் மீது ஒரு
வார்த்தைகூட தவறாக அக்கட்டுரையில் நாம் தேடியெடுக்க இயலாது. ஆனால், புனித தாமஸ் அவர்களின் வருகையை ஒரு வணிக ரீதியான
முதலீடாக மாற்றும் ஒருசிலரின் கீழ்மையையே அவர் சாடியிருப்பார். எனக்கு நன்றாக
நினைவிருக்கிறது, ஐக்கிய
இறையியல் கல்வியில் எங்களுக்கு முதல்வராக இருந்த முனைவர். அருட்பணி. ஞானா ராபின்சன்
அவர்களிடம் இக்கட்டுரை குறித்து பேசியபோது மெல்லிய சிரிப்போடு, “மத்தியகிழக்கைத் தவிர
அறிவோ ஆற்றலோ ஆன்மிக எழுச்சியோ உலகின் எப்பகுதியிலும் இல்லை எனச் சொல்ல வருகிறார்களா?
ஞானம் என்பது எனது முன்னோர்களிடம்
இருந்ததில்லை எனக் கூற முற்படுகிறார்களா?” எனக்
கேட்டார். “நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது” என்ற ஆமோஸ் தீர்க்கதரிசியின்
கூற்றையே தனது புத்தகத்திற்குத் தலைப்பாக
வைத்தவர் அவர். கடவுளை தங்கள் சிறுமையினால் தவறாகச் சித்தரிக்கும்
கிறிஸ்தவர்களைக் குறித்த பெருமிதம் கொண்டவரல்ல அவர்.
‘புனித தோமையர் - ஓர் அறிமுகம்’ தமிழில் கிறிஸ்தவ எழுத்தாளர்களோ அல்லது
போதகர்களோ கருத்தூன்றாத ஒரு களம். இக்கட்டுரையில் காணப்படும் திருமறை சார்ந்த
மேற்கோள்கள் போன்றவை மிகச்சரியாக இல்லையென்றாலும், (கலைக்களஞ்சியங்களிலிலிருந்து அவர்
தொகுத்திருப்பதால்) இக்கட்டுரை தோமையரை தமிழக வாசகர்களுக்கு பெருமையுடனே
அறிமுகப்படுத்துகிறது. தோமையர் குறித்த நம்பிக்கையை எள்ளி நகையாடாமல், வரலாற்றுப்
பின்புலத்தை தெளிவாகவும்
எடுத்துரைக்கிறது. கருத்தளவில்
சமநிலையுடன் நின்று பேசும் இக்கட்டுரை சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருக்கிறது.
ஜெயமோகன் யார் என்று அவரை நான் வரையறை செய்ய அவர் எழுதிய கிறிஸ்தவம் சார்ந்த
கட்டுரைகளையே ஆதாரமாகக் கொள்ளவில்லை. அவரது கிறிஸ்தவக் கட்டுரைகளை மட்டுமே கொண்டு
மட்டுமே அவரை வரையறை செய்துவிடவும் இயலாது. அவரது ‘தேசிய சுயநிர்ணயம்’ என்ற
கட்டுரைதான் அவர் யார் என நான் கொள்ளும் அளவுகோல். அவரது கருத்துகளின் தேவையும்,
அவரை மறுப்பவர்களின் அரசியலையும்
அக்கட்டுரை நமக்கு வெளிப்படுத்துகிறது. “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே,
நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும்
இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர்
என்று உலகம் நம்பும்” (யோவான் 17: 21 திருவிவிலியம்) என்கிற இயேசுவின் மன்றாட்டை ஒட்டிய கருத்துகளே அவர்
கட்டுரைகளில் மேலோங்கியிருக்கின்றன.
குமரி மாவட்டம் தனித்த ஒரு பகுதியாக இயங்கவேண்டும் என்கிற ஒரு பேச்சு இங்கே
ஓடிக்கொண்டிருக்கிறது. சிலர் இன்னும் கேரளாவுடன் இருந்திருக்கலாமே எனவும், நேசமணி எங்களை வஞ்சித்தார் எனவும் சொல்லக்
கேட்டிருக்கிறேன். எனது சித்தப்பா
ராஜாதாஸ் ராஜாமணி, ஸ்காட்
கிறிஸ்தவக் கல்லூரியின் தாளாளராக இருந்தவர், அவரைப் பொறுத்தவரையில் நேசமணி ஒரு மாபெரும் தலைவர்.
இவ்வித சூழல்களில் பேச்சை இவற்றிற்க்குள் நிறுத்திப் பூசலிடுவதை விட்டுவிட்டு,
அதனைத் தாண்டிச் செல்ல அவர்
விடுக்கும் அறைகூவல், நாம்
எவற்றை முக்கியத்துவப்படுத்தவேண்டும்? ஏன் அவற்றைச் செய்யவேண்டும் என்பதாக இருக்கிறது. ஆனால், இன்று நமது பெருமிதங்கள், ஆதர்சங்கள், நிலம்
சார்ந்து ஒரு பூசல் எழும்புமென்றால், அதன் உண்மைத்தன்மைக்குச் செல்லாமல் அதன் பயன் என்ன என்று மட்டும் பார்ப்பேன்
என்கிற பக்குவப்படாதவர்களுக்கு அவரது வார்த்தைகள் எவ்வகையிலும் உதவாது.
நேசமணியை விஞ்சும் ஒரு தலைவர் குமரி மாவட்டத்தில் இன்றுவரை எழும்பவில்லை. அதுகுறித்த
கவலை எவருக்கும் இருந்தது போலவும் தெரியவில்லை.
இன்றுவரை குமரி நிலத்தில் இருக்கும் கொந்தளிப்பு பிரிவினைகளை ஏதோ
ஒருவகையில் தூவிக்கொண்டேயிருக்கும் ஒருசிலரால் மட்டுமே நிகழ்வது. அதனைத் தாண்டி
நிற்கும் ஜெயமோகன் கிறிஸ்தவர் அல்லாதவராகவே இருந்தாலும், கிறிஸ்துவுக்கு அணுக்கமானவராகவே இருக்கிறார். “அமைதி
ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்” (மத்தேயு 5: 7 திருவிவிலியம்) என்கிற இயேசுவின் மலைப்பிரசங்கக்
கூற்றிற்கு அவர் உகந்தவராக இருக்கிறார்.
பல்வேறு கதைகளும் கட்டுரைகளும் கிறிஸ்துவத்தை மையமாகக் கொண்டு அண்ணன்
எழுதியிருக்கிறார். சாமர்வெல், தொம்பர், இன்னும் பல்வேறு
பாதிரியார்கள் மற்றும் பேராயர்களைக் குறித்து அவர் பெருமதிப்புடன்
எழுதியிருக்கிறார். சமயங்களைக் கடந்து கிறிஸ்தவர்களுடன் நட்பு பாராட்டிவருகிறார்.
என்னளவில், எப்போதும், ஜாதி ரீதியாகவோ மத ரீதியாகவோ அவர் எவரையும்
ஒதுக்கியோ இணைத்தோ வைத்துக்கொண்டதில்லை. தனது கருத்துகளுக்கு எதிர்நிலை
எடுப்பவர்களுடனும்கூட அவர் ஒரு நட்புறவை பேணமுடியுமா என்ற எண்ணத்துடனே இருப்பதை
நான் பார்த்திருக்கிறேன். என்னை அவர் வஞ்சித்தார், ஏமாற்றினார் போன்ற வரிகளை அவர் எப்போதும்
எழுதியதில்லை. அப்படிப்பட்டவர்களை அவர் மன்னித்துக் கடந்து வந்திருக்கிறார்.
‘அப்பொழுது யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது
பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில், அவர் நம்மைச் சாராதவர்” என்றார். அதற்கு இயேசு கூறியது:
“தடுக்கவேண்டாம். ஏனெனில், என்
பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார்.
ஏனெனில், நமக்கு எதிராக
இராதவர் நம் சார்பாக இருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால்
உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர், கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக
உங்களுக்குச் சொல்கிறேன்.”’ (மாற்கு 9: 37 - 41
திருவிவிலியம்)
ஒரு போதகராக நான் அவரை ஆசீர்வதிக்கத் தயங்கமாட்டேன். அதற்கான அத்தனை தகுதியும்
அவருக்கு உண்டு. யூதர்களின் ஓரிறைக் கொள்கை நிறைந்த திருமறையில்கூட, பிற நம்பிக்கையாளர்கள் குறித்த நன்மதிப்பு
மிக்க வார்த்தைகள் இருக்கின்றன. கடவுளின் அன்பைப் பகிர அழைக்கப்பட்டிருக்கும்
நாமும் அந்த நற்செய்தியைக் கூறவேண்டாமா?
பனை சார்ந்த எனது கருத்துகள் மற்றும் எனது பயணத்தை உள்ளார்ந்த அன்புடன் அவர்
வெளிப்படுத்தியது என்னளவில் மிக முக்கியமானது. எனது ‘பனைமரச்சாலை’ என்ற பயண நூல்
திருச்சபை மக்களை மனதில் வைத்து எழுதப்பட்டது, ஆனால் அதனுள் இருக்கும் இடையறாத தேடுதல் மற்றும் அர்ப்பணிப்பு
அண்ணனால் உணரப்பட்டது. திருச்சபை ‘பனைமரச்சாலை’யிடம் வந்துசேர இன்னும் காலம்
இருக்கிறது. திருச்சபையின் தலைவர்கள் பலர் இன்று என்னுடன் உடன்பட்டாலும், திருச்சபையினைக் கடந்து வந்த அண்ணனுடைய
வாழ்த்தும் தொடர் ஊக்கமும் ஒரு போதகராக நான் ஆவணப்படுத்தவேண்டிய உண்மைகள்.
எனது மன்றாடல்களில் எனது குடும்பம் மற்றும் திருச்சபையினரை நான்
முன்னிறுத்துவது போலவே அண்ணனுடைய குடும்பம், பாதுகாப்பு, பூரண ஆயுள், மற்றும்
ஆரோக்கியதிற்காக வேண்டுவது வழக்கம். அன்பே
நிறைந்த அண்ணன் ஜெயமோகன் அவர்கள் தொடர்ந்து கிறிஸ்துவுக்கு அணுக்கமானவராக
அனைவரிடமும் அன்பைப் பகிரவும், கள்ளர் குகையினைக் கண்டால் இன்றுபோல் என்றும் எழுத்து எனும் சவுக்கை
எடுக்கவும் வாழ்த்துகிறேன்.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
ஆரே பால் குடியிருப்பு,
மும்பை (28.01.2022)
***
காட்சன் சாமுவேல் (பட உதவி: விகடன்) |
அருமையான கருத்தாழம் மிக்க கட்டுரை, father🙏
ReplyDelete