உரைகளின் வழி நான் கண்ட ஜெ - ரம்யா


என் இந்த வாழ்க்கைப் பயணத்தின் மிக முக்கியமான தருணம் விஷ்ணுபுரம் நாவல் என்னைத் தேர்வு செய்து கொண்டது தான். வாசித்திருந்த ஒருவாரகாலமாக பித்து பிடித்தாற் போல நடுக்கங்கொண்டு தான் வாசித்து முடித்தேன். வாசிக்கும் முன் இருந்த மலைப்பும், உட்செல்லவியலாத இறுக்கமும் அந்த நாவலை முடிக்கும் போது தளர்ந்திருந்தது. அங்கு ஓர் நிறைவின்மையைக் கை கொண்டு அலைந்தபோது வெண்முரசு என் முன் நின்றது. இன்று வெண்முரசு பயணத்தில் இருக்கிறேன். தேடல்களும் அலைக்கழிதலுமாக இந்தப்பயணம் அவரின் எழுத்துக்களில் தொடர்கிறது.

ஜெ-வை மேலும் அணுக்கமாக்கிக் கொள்ளும் பொருட்டு தான் அவரின்உரைகளைக் கேட்க ஆரம்பித்தேன்.

மிகச் சிறிய உரைகள், பேட்டிகள் என ஆரம்பித்து நான் கணடடைந்தது குறளினிது எனும் நீள் உரையை. காணொளிகளை விட, உரைகளை விட வாசிப்பதையே எப்போதும் விரும்பும் நான் முதன்முறையாக இந்த நீண்ட உரைகளை வாசிப்பிற்கிணையாக கேட்க ஆரம்பித்தேன். குறளினிது உரையின் வழியாக குறளும், வள்ளுவனும் என் முன் வேறு ஒரு பரிமாணத்தைக் காணித்து நின்றார்கள். அங்கிருந்து நான் குறளையும், வள்ளுவனையும் கண்டடைந்து செல்லக்கூடிய வேறோர் பாதையை ஜெ எனக்கு அளித்தார். பகுத்தறிவற்ற குறள் உரைகள், பகுத்தறிவின் பெயரால் அதன் உண்மைத்தன்மையைக் குலைக்கும் உரைகளுக்கு மத்தியில் நின்று வாசகப் பார்வையால் சென்றடையக்கூடிய கண்ணோட்டத்தை வழங்கினார். சூத்ரா மற்றும் மந்த்ரா என்பதைப் பற்றிய சித்திரத்தை அளித்து குறளை எப்படி ஆப்த வாக்கியமாக மாற்றி வாழ்நாளின் பாதையில் திறந்து கொள்ளச் செய்வது என்பதை உரைகளின் வழி கூறினார். மத அடிப்படைவாதிகளும், திராவிடவாதிகளும் உரைகளின் வழியாக எழுப்பிய அரணை ஜெ-வின் குறளினிது உரை தகர்த்தெறிந்து, ஒரு பின்நவீனத்துவ வாசகனுக்குத் திறந்து வைத்தது. குறளில் உள்நுழைய ஏதுவாக ஒரு பகுத்தறிவான வரலாற்றுப் பின் புலத்தை அளித்து, ஒரு சமணரால் ஆனால் தமிழ் சமுதாயத்தை நோக்கி எழுதப்பட்ட ஒரு அற நூலாக, தொகுப்பு நூலாக, முதன்மை நூலாக அதை நிறுவி, எவ்வெவ்வாறெல்லாம் அது ஒரு மூல, தொல், மாறாத் தன்மையதான நூலாக சித்தரிக்ககூடாது என்பதை புரிய வைத்தார். அங்கிருந்து குறளையும், வள்ளுவனையும் என் வாழ்க்கையின் வழியாக கண்டடையும் பாதையை நான் கைகொள்ளலானேன்.

பன்னிரெண்டு மணி நேர உரையைக் கேட்ட பின்னும் அதைத் தொகுத்துக் கொள்ள எத்தனித்து மீண்டு கேட்க வேண்டும் என்று நினைத்தபோது எந்தவித சோர்வும் எட்டவில்லை. அந்த உரையை நான் மீளக்கேட்டு, சொல்லெண்ணி தட்டச்சிட்டும் கூட வைத்தேன். ஒரு வார காலமாக குறளினிது உரை கொடுத்த அறிதலில் மூழ்கியிருந்தேன். இன்று நான் காணக்கூடிய குறளும் வள்ளுவனும் வேறு. அதில் திறக்கும் வேறு பரிமாணங்களை எழுதிக் கொண்டும், கேள்விகளை அவரிடம் கேட்டுக் கொண்டும் இந்தப் பயணம் தொடர்கிறது. அது என் வாழ்க்கைப்பாதையில் நான் அடைந்த முக்கியமான தரிசனம். 

இந்த அனுபவத்திற்குப் பின் வாசிப்பிற்கு இணையாகவே அவரின் நீள் உரைகள் எனக்கு அறிதலாக மாற ஆரம்பித்தது. ஜெ -வின் பிற நீள் உரைகளில் தனி நபரைப் பற்றிய உரைகளாக சங்கரர், ஓஷோ, வியாசர், டால்ஸ்டாய் ஆகிய உரைகள் அமைகிறது. தனி நபர்களைப் பற்றிய உரைகளில் பொதுவாக வரலாற்றுப் புலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் என்னவாக பார்க்கப்படுகிறார் என்பதை முதலில் ஜெ விளக்குவார். பொதுவாக அவரைப் பற்றிய தொன்மங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பேசி உண்மையில் அவர் என்ன? இந்த நீண்ட வரலாற்றுப் புலத்தில் தத்துவார்த்த ரீதியாக/ இலக்கியவாதியாக என்ன பொருள்படுகிறார் என்பதைப் பற்றிய மிகப்பெரிய சித்திரத்தைக் கொடுப்பார்.  உரை முடியும் போது அந்த ஆளுமையை நோக்கி செல்ல வேண்டிய ஒரு பயணத்தை தொடங்கி வைத்திருப்பார். எப்போதும் நான் வியப்பது ஜெ உருவாக்கி அளிக்கும் மறுவரையறைகளும், மறு வரலாறுகளும் என்னுள் உருவாக்கும் பயணத்தைத்தான். அந்த உரைகளின் முடிவில் ஒரு தரிசனத்தை நல்கிச் செல்வார். 

இது தவிர கீதை உரை, மரபு, பண்பாடு பற்றிய உரைகள், நவீன தமிழ் இலக்கியம் பற்றிய உரை, நாவல் கோட்பாடு பற்றிய உரை என அவர் ஆற்றிய உரைகள் யாவும் தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு பொக்கிஷமானவை.

இங்ஙனம் ஒரு வருட காலமாக அவரின் ஆக்கங்களை வாசிப்பதும், கடிதம் எழுதுவதும் உரைகளைக் கேட்பதும், தொகுத்துக் கொள்வதுமான பயணம் என்னில் நிகழ்ந்தது. ஒரு ஆளுமையின் எழுத்தின் வாயிலாக மட்டுமல்லாமல், அவரின் உரைகளின் வழி, பேட்டிகளின் வழி துலங்கி வரும் சித்திரமுமான பயணம் நிகழ்ந்து கொண்டே இருந்தது. ஆனாலும் ஒரு ஆளுமையை நேரில் கண்டு உரையாடுவது மேலும் அறிதலை வளர்க்கக் கூடியது; அது நிகழ வேண்டுமென ஜெ ஒரு வாசகர் கடிதத்தில் கூறியிருந்தார். சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோதே அதன் சமீபத்தில் நெல்லையில் மதாரின் கவிதை வெளியீட்டு விழா நிகழபோவதான செய்தி வந்தது. முதல் சந்திப்பில் நான் நேரடியாகக் கேட்ட கவிதை வெளியீட்டு விழா உரை அறிதலாக அமைந்தது. பொதுவாக கவிதை அல்லது நூல் வெளியீட்டு விழாக்களில் அந்த நூலைப் பற்றி, அதில் சிலாகித்தவை பற்றியே அனைவரும் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஜெ, அன்று நிகழ்ச்சிக்கு வரும்போது வழிபட்டு வந்த திருக்குறுங்குடி ஆலயத்தில் இருந்த கவிஞரின் சிலையின் வழி கவிஞர்களைபற்றிய ஒரு வரலாற்றுச் சித்திரத்தை அளித்து கவிதை காலகட்டங்களின் வழி நுழைந்து பின்னவீனத்துவ கவிஞர்களுக்கு வந்து சேர்ந்தார். அத்தனை பெரிய கவிதை மரபின் நீடசியாக மதாரின் கவிதைகள் எங்கு நிற்கின்றன என்பதை வாசகர்களுக்கு எடுத்துரைத்தார். அந்த முதல் சந்திப்பிற்கான கடிதம் எழுதும் முன் காணொளிக்காக காத்திருந்து மீண்டும் மீண்டும் கேட்டு தொகுத்துக் கொண்டே எழுதினேன். உரை மொத்தமே இருபது நிமிடமானாலும் அதை நான் தொகுத்து அறிந்து கொள்ள அதிக நேரம் எடுக்குமளவு அறிதலான உரை. 

ஷார்ட்ஸ் எனப்படும் மீச்சிறு காணொளிகள் (15 நொடி - 60 நொடி), 280 எழுத்துக்களை மட்டுமே கொண்டியங்கும் கீச்சு, நித்தமும் அன்றாட அரட்டைகளின் கொத்துகளாக இயங்கும் முகநூல், வாட்சப் குழுமம் ஆகியவற்றின் காலகட்டத்தில் வாழ்ந்துவரும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாம். அதிகத் தகவல் சுமையால் முன்னகர்த்தி, நகர்த்தி பார்த்துக் கொண்டு எதையும் உட்கிரகிக்காமல் மண்டையை வீங்கச் செய்யும் ஊடகம் நம் முன் நிற்கிறது. இத்தகைய துணுக்குகளை தொடர்ந்து படித்துக் கொண்டே, கேட்டுக் கொண்டே இருந்தால் மூளையின் செயல்திறன் பாதிக்கும்; வாசிப்புத்திறன் குறையும் என ஈரோடு கிருஷ்ணன் சார் கூறுவார். சிறிய உரைகளானாலும், பேட்டிகளானாலும், நீள் உரைகளானாலும் ஜெ செறிவின் மீது கவனம் செலுத்துவது அதைக் கேட்கும் வாசகர்களின் மீது, அவர்களின் நேரத்தின் மீது கொண்ட அக்கறையே. பெரும்பாலும் அவரின் உரைகளை ஒன்றுக்குமேற்பட்ட தடவை கேட்கும் இலக்கிய வாசகர்களே அதிகம். சில காணொளிகளை நிறுத்தி, ரீவைண்ட் செய்து, குறிப்பெடுத்து தான் கேட்பதாக நண்பர்கள் நாங்கள் பேசிக் கொள்வதுண்டு.

மற்றெந்த காணொளிகளையும் பார்ப்பது போல ஜெ -வின் காணொளிகளை நான் வேகம் கூட்டிப் பார்ப்பதும்(1.25x/2x) கிடையாது. அதற்குக் காரணம் ஒன்று அதன் செறிவுத்தன்மை. இன்னொன்று அவரே ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் வேகம் கூட்டி விடுவார் என்பதே. பல சமயங்களில் இறுதி வார்த்தை காற்றில் கரைந்துவிடும். அதைக் கண்டறிய காணொளியை வேகம் குறைத்து வைத்தெல்லாம் கூட கேட்டிருக்கிறேன். அவர் மொழியில் தெரியக்கூடிய சிறு மலையாளச் சாயல் ரம்மியமானது. அவருடைய புனைவுக்களியாட்டு சிறுகதைகளைப் படித்த பின்னர் அந்த மொழி எனக்கு மேலும் அணுக்கமாகியது. எந்த முன் திட்டமிடலுமில்லாமல் அவர் உரைகளின் இடையில் செய்யக்கூடிய நையாண்டிகள் மேலும் நம்மை அணுக்கமாக்கிவிடும். நீண்ட உரைகளில் நான் இவற்றை கவனித்திருக்கிறேன். கிட்டத்தட்ட நேரில் உட்கார்ந்திருக்கும் ஒரு நபர் பேசும்போது எப்படி விலக்கமுடியாதோ அப்படியே உரையிலும் எந்த விலக்கமும் அடையாமல் நம்மை பல்வகை உணர்வுகளால் கட்டி வைத்திருப்பார். தன்னுடைய உரை யார் கேட்கிறார்கள் அல்லது யார் கேட்க வேண்டும் என்பதிலும் கூட அவர் திட்டவட்டமாக இருக்கிறார். 

ஒரு வாசகர் கடிதத்தில் இதைப்பற்றிய ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்போது, கல்வி நிலையங்களில் தான் பேச விரும்பாமைக்குக் காரணம் மாணவர்களிடம் இருக்கும் ஒருவித மண்ணாந்தைத்தனம் தான் என்றார். ஆனால் பெரும்பாலும் சுயமுன்னேற்றம் சார்ந்தும், மோடிவேஷன் வகையறா சொற்பொழிவாற்றுபவர்களின் இலக்காக கல்வி நிலையத்தைச் சார்ந்த மாணவர்கள் இருப்பதென்பது இவர்களின் அறியாமையைக் கொண்டே என நான் கருதுவதுண்டு. அத்தகைய பல உரைகளை நான் கடந்து வந்திருப்பதால் அதிலுள்ள செயற்கைத்தன்மை அல்லது போலித்தன்மை அச்சமூட்டுபவை.  ஜெ பேச விரும்புவது இத்தகையோர் மத்தியில் அல்ல, இலக்கியத்தை மிகத்தீவிரமாக எடுத்துக்கொள்ளும் வாசகர் மத்தியில் மட்டுமே. தன் உரையைக் கேட்பவர்கள் யார் என்பதில் இருக்கும் திட்டவட்டமே அவரின் உரையின் நேர்த்தியை அடர்த்தியாக்குகிறது. அதே சமயம் தன் முன் அமர்ந்து கேட்கும் பொது வாசகர்களின் நேரத்தைக் குறித்து அவர் மிகவும் கவனம் கொண்டவர். 

“இன்னொருவர் பொழுதை எடுத்துக்கொள்வது, அவைமுறைமைகளை பொருட்படுத்தாமலிருப்பது எல்லாம் நேரடியாக பார்வையாளர்களை அவமதிப்பதுதான். தமிழில் நாம் எதையாவது உடனடியாக கவனிக்க வேண்டும் என்றால் இந்த மேடை நாகரிகத்தைத்தான்.” என்று உரையாளராக இருக்கும் அதே சமயம் தன்னை வாசகன் நிலையில் வைத்தும் பார்க்கக் கூடியவர்.

“நான் எப்போதுமே என்னை பேச்சைக் கேட்பவர்களின் தரப்பிலேயே வைத்துப் பார்க்கிறேன். இலக்கில்லாத பேச்சு, மையமில்லாத பேச்சு, தயாரிப்பில்லாத பேச்சு என்னை பெரும் சித்திரவதைக்குள்ளாக்குகிறது. முன்பென்றால் நான் அரங்கில் எழுந்து கண்டித்து விடுவேன். அப்படி பலரை பேச்சை நிறுத்தியுமிருக்கிறேன்.” என்று மேடைகளில் கறார்தன்மையுடன் இருந்திருக்கிறார். ஒருமுறை தன் உரையைக் கேட்க வந்த மாவட்ட ஆட்சியாளர் முன் வரிசையில் அமர்ந்து மனுக்களை வாங்கிக் கொண்டிருந்ததை மேடையில் வைத்தே கண்டித்து வெளியேறச் சொன்ன சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதுபோல பல சம்பவங்களை நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். எந்த பாரபட்சமும் இல்லாமல் தன் ஆரம்பகாலகட்டத்திலிருந்தே இந்த அநாகரிகங்களை அவர் சகித்துக் கொள்வதில்லை. அதற்கான காரணம் ஒன்று அவர் உரையின் நேர்த்திக்காக மெனக்கெடுத்துக் கொள்ளும் தயாரிப்புக் காலம், இரண்டு அதை ஆவலாக கேட்க வந்த வாசகர்களின் நிமித்தமும் தான்.

இது தவிரவும் தன்னுடைய வாசகர் ஒரு கேள்வியை எங்ஙனம் கேட்க வேண்டும், ஒரு ஆளுமையிடம் எப்படி பேச வேண்டும், எதை பேசக்கூடாது, பொது தளத்தில் எவ்வாறெல்லாம் ஒரு ஆளுமையின் நேரத்தை விரயம் செய்யக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தக் கூடியவர் ஜெ. 2021 விஷ்ணுபுர விழாவில் நிகழ்ந்த நேர்த்தியான உரையாடல்கள், உரைகள் யாவும் காலங்காலமாக அவரின் நெறிப்படுத்தலால் உருவாக்கப்பட்டது தான்.

இன்று ஜெ -வின் பெரும்பான்மையான உரைகள் யாவும் யூடியூபில் தொகுக்கப்பட்டுள்ளது. உரைகளுக்கான கடிதங்கள் அதைப்பற்றிய அறிதல்கள் என ஜெயமோகன் தளத்தில் கடிதங்கள் உள்ளன. உரைகள் பற்றிய ஜெ -வின் கட்டுரைகளும் தளத்தில் உள்ளன. அவரின் உரைகளை ஆளுமைகள், ஆன்மீகம், இலக்கியம், சமூகம் என்ற தலைப்பில்  பொருளடக்கமாகக் கொண்டு ”சொல்முகம்” என்ற புத்தகமாக பதிப்பித்துள்ளனர். ஜெ இதைப்பற்றி சொல்லும்போது  “203  உரைகள். ஏறத்தாழ இருநூறு மணிநேரமிருக்கும் என நினைக்கிறேன். இது எனக்கு ஒரு சின்ன ‘சம்மல்’ மனநிலையையே அளிக்கிறது” என்கிறார். உரைகள் கேட்பதைவிடவும் புத்தகங்கள் வாசிப்பதையே அவர் ஊக்குவித்தாலும் இந்த காட்சி ஊடக காலகட்டத்தில் இலக்கியத்துக்குள் ஒரு வாசகன் வர இவ்வுரைகள் பயன்படுகின்றன என்பது மறுப்பதற்கில்லை. 

ஜெ -வின் உரைகளை கட்டண உரைகள், நீண்ட உரைகள், மரபு சார்ந்த உரைகள், இலக்கிய உரைகள், தனி நபர் சார்ந்த உரைகள், காப்பியங்கள் சார்ந்த உரைகள், காந்திய உரைகள், புத்தக வெளியீட்டு விழா சார்ந்த உரைகள், குறு உரைகள், தன்னறம்/தன்மீட்சி சார்ந்த உரைகள் என பல வகைப்படுத்தலாம்.

தன்னறம்/தன்மீட்சி சார்ந்த உரைகளைப் பொறுத்து ஜெ -வின் உரைகளுக்கு அதிக ஆற்றலளிப்பது அவர் வாழும் தன்னறமான வாழ்க்கை எனலாம். அங்கிருந்து மட்டுமே அது உயிர்ப்புள்ள உரையாக பொருள்படுவதாக நினைக்கிறேன்.

ஆரம்பகாலங்களில் தன் ஆசிரியரான சுந்தரராமசாமியின் பாணியில் அவர் தேர்ந்த கட்டுரை வடிவங்களில் உரையைத் தயாரித்துவிட்டு அதையே பேசி வந்தார். சு.ரா-வைப் பற்றி குறிப்பிடும்போது ”சுந்தர ராமசாமி மேடைப்பேச்சுக்கே எதிரானவர். ஏனென்றால் மேடை தமிழகத்தின் மாபெரும் பொழுது வீணடிப்பாக மாறியிருக்கிறது. ஒரு மேடையில் பேசுபவர் கேட்பவரைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ள வேண்டியதில்லை என்பதே தமிழின் பொதுமனநிலை. அவர் அங்கு பேசவேண்டிய தலைப்பைப் பற்றிக்கூட பேசவேண்டியதில்லை. தனக்கு நினைவு வரும் அனைத்தையுமே அங்கு பேசலாம். பேசப்பேச எழுந்து வருபவற்றை எடுத்து வைத்துக்கொண்டே இருக்கலாம். பிறருடைய நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். மேடை உரைக்கான எந்த நெறிகளையும் பேணவேண்டியதில்லை.” என்ற வரிகளை ஜெ நினைவு கூர்வார். அப்படி நேரத்தை வீணடிக்கும் எந்த உரைகளையும் தான் பேசலாகாது என்பதில் தன் ஆரம்பகாலத்திலிருந்தே அக்கறை கொண்டிருந்தார். 

ஜெ தன் உரைகளை கட்டுரை வடிவில் எழுதிப்பார்க்கும் வழக்கத்தை ஆரம்பத்தில் கொண்டிருந்ததாகவும், அதன் பின் அவை சிறு குறிப்புகள் போதும் எனுமளவு வளர்ந்ததாகவும் இப்போதெல்லாம் மிகக் குறுகிய காலத்தில் சிறுகுறிப்புகளை மேடைகளில் வைத்தே தயாரித்துவிடும் நிலையில் இருப்பதாக எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவரின் உரைப் பரிமாணத்தைப் பற்றிக் கூறுகிறார். பத்து வருடங்களுக்கும் மேலாக ஜெ -வின் முதல் உரையிலிருந்தே அவருடன் பயணித்து வரும் விஜய சூரியன்  ஜெ உரை தயாரிக்க எடுத்துக் கொள்ளும் மெனக்கடல்களைப் பற்றிச் சொல்லும்போது “ஜெ, எப்போதும் தன் உரைகளின் நேர்த்தியின் மீது கவனமாக இருப்பார். அதற்காக விரிவான முன் தயாரிப்புகள் செய்வார். நண்பர்களிடம் சொல்லிப் பார்ப்பார். ஒரு உரையின் நேர்த்திக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு அவர் செய்வதை உடனிருந்து பார்த்திருக்கிறேன். ஆனால் ஒட்டுமொத்தமாக மேடையில் வெளிப்படும் ஆளுமையென்பது அந்த தருணத்திற்கான ஜெ. அது என்றுமே உச்சமாக இருக்கும். அதேபோல ஒவ்வொரு உரையின் முடிவிலும் அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான விமர்சனங்களையும் தவறாமல் கேட்டுக் கொள்வார். ” என்றார்.

கட்டண உரைகளில் பெரும்பாலும் தன்னைப் பற்றிய அறிமுகங்களை ஓரிரு நிமிடங்களுக்கு மேல் ஜெ அனுமதிப்பதில்லை. இரண்டு மணி நேர உரை எனின் அந்த நேரம் முழுவதிலும் அவர் உரையாற்றுவதையே விரும்புவார். நீண்ட உரைகள் யாவுமே மீளக் கட்டுரையாக எழுதக்கூடிய அளவு செறிவு கொண்டதாக உள்ளது.

தயாரிக்கப்படாத உரைகள் என்பது அமர்ந்து கேட்பவர்களின் நேரத்தை விரையம் செய்வது என்பதில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை உறுதியாக இருக்கிறார். ஒரு நல்ல கலைஞன் மதிக்கப்படுவதென்பது அவன் தன் ரசிகனை அவன் ரசனையை மதிப்பதன் மூலமாகத்தான். அன்றைக்கு அப்போதைக்கு இருக்கும் மக்களின் மன நிலைக்கு ஏற்றாற்போல தூபம்போட்டு அந்த கலையை விற்கத் தெரிந்த கலைஞன் கலைஞனாக/கலையாக காலத்தில் நிற்பதில்லை. மாறாக ரசிகனை குறைத்து மதிப்பிடாமல் கலையின் உச்ச சாத்தியத்தை ஒவ்வொரு முறையும் வழங்கும் கலைஞனே/அந்தக் கலையே காலத்தில் மிளிர்கிறது. ஜெயமோகனின் பெரும்பாலான உரைகள் வாசகர்களை நோக்கியே பேசப்பட்டது தான். ஒவ்வொரு இலக்கிய வாசகனுடைய நேரத்தையும் ஒரு இலக்கிய வாசகனாக நின்று அறிந்து அவர்களின் நேரத்தை பயனுள்ளதாக்கும் உரைகளையே அளித்திருக்கிறார். அப்படி மதிக்காமல் வெறுமே பிதற்றுபவர்களின் உரைகளிலிருந்து வெளியேறுமாறும் சொல்கிறார். 

கடந்து இரண்டு வருடமாக கொரனா நோயச்ச காலத்தில் ஜெ புனைவுக்களியாட்டு சிறுகதைகள், குறு நாவல்கள் என எழுதியதோடு ஜூம் செயலி வழியாக உரைகள் நிகழ்த்தியும், பேட்டிகள் கொடுத்தும் என வாசகர்களுடன் தொடர்பில் இருந்தார். இதில் சீவகசிந்தாம்ணி உரை, ஒளி நாடகம் ஒருங்கிணைப்பு, ஒவ்வொரு வாசகர்களுக்கும் ஒரு நாள் வீதம் நூறு பேருடன் ஜூம் செயலி மூலம் தொடர்பு கொண்டு நேர்மறை எண்ணத்தை விதைத்தல் ஆகியவை முக்கியமான விடயம்.

2021இல் மருத்துவர் ஜீவா நினைவேந்தலில் ஜெ பதினைந்து நிமிட செறிவான உரையை ஆற்றினார். அவரின் சமீபத்திய உரைகள் அனைத்துமே இவ்வாறான சுருக்க உரைகளாக மாறி வருகின்றன.  ”இத்தகைய உரைகளில் எதையும் விளக்க முடியாது. நிரூபிக்க முடியாது. பின்புலம், தனியனுபவம் ஆகியவற்றைச் சொல்லமுடியாது. ஆனால் ஒரு தரப்பை, ஒரு வரையறையை அழுத்தமாகச் சொல்லிவிட முடியும்.” என்கிறார் ஜெ.  மேற்கே புகழ்பெற்று வரும் ஏழு நிமிட உரையைப்போலவே இங்கும் நிகழ வேண்டுமென்பது அவரின் எதிர்கால விருப்பமாக உள்ளது. மேலும் மேலுமென் அவை செறிவாகவும், புதுப்பொலிவாகவும் தான் திகழ்ந்து வருகிறது. எழுத்துக்களைத் தாண்டி உரைகளின் வழியாக அறிதலையும், இலக்கியவாதி/எழுத்தாளனின் மேடைப் பேச்சின் இலக்கணத்தையும் வரையறை செய்யும் ஆளுமையாகவே ஜெ திகழ்கிறார். ஒட்டுமொத்தமாக உரைகளின் வழியாக ஜெ -வின் ஆளுமை என்பது இலக்கிய உலகில் மேடைப்பேச்சிற்கான இலக்கணத்தை வரையறை/மறு வரையறை செய்வதே. உரைகளின் வழி அவரைக் கண்டடையும் வாசகன் பயணிப்பதும் அவரின் எழுத்திற்கிணையான இனிமையான பாதையைத்தான்.

***

ரம்யா - தமிழ் விக்கி பக்கம்

ரம்யா - ஜெயமோகன்

No comments:

Powered by Blogger.