கொற்றவை - நீலி எனும் தொல்சரடு - ரா. கிரிதரன்
தொல் அறம் - கொற்றவை நாவல் வடிவம்
சிலம்பு கூறும் அரசியல் பார்வையைக் கைவிட்டு, தொன்மம், மொழியியல், வரலாறு போன்றவற்றின் கலவையான பார்வையோடு கொற்றவையின் தொடக்கம் உள்ளது. நாவல் எடுத்துக்கொள்ளும் களம் மிகப் பெரியது. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பதோ ஒரு பத்தினியின் கோபம் எங்ஙனம் ஒரு அரசாட்சியையும் நாட்டையும் அழிக்கும் என்பதோ நூலின் பிரதான நோக்கமன்று. கொற்றவை நாவலின் களம் தமிழ் மொழியின், தமிழர் எனச் சொல்லப்படும் தொல்குடியின் குடித்தோன்றல், வளர்தல், பல முறை அழிதல் கதையைச் சொல்வதே ஆகும். அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி சிலம்பு கதையாக வளர்கிறது.
தென்குமரி நிலத்தின் வரம்பு பற்றிய ஒரு தொன்மம் இன்று வரை தமிழக வரலாற்றின் ஆரம்பகட்டமாக சொல்லப்படுகிறது. பஃறுளி ஆறை எல்லையாகக் கொண்டு இன்று இருக்கும் தமிழ் நிலத்திற்குக் கீழே பரந்துவிரிந்த தமிழ் நிலம் ஒன்று இருந்ததாகவும் அதன் பல்முறை அழிவே தமிழர் இனத்தை மேற்கு நோக்கி நகரச் செய்தது எனவும் ஒரு வரலாற்று நம்பிக்கை நிலவுகிறது. அதை நிறுவுவதற்கு மொழி சார்ந்து, கடல்வரைபடம் சார்ந்து பல ஊகங்கள் நம்மிடையே இருக்கின்றன. அதற்கான நேரடியான ஆதாரம் எதுவும் இல்லாவிட்டாலும் ஒரு பழைய நிலத்தின் எச்சமே இன்றைய தமிழ் சமூகம் எனக் கொள்வதில் பல கற்பனை சாத்தியங்கள் அடங்கியுள்ளன. புதுமைப்பித்தனின் கபாடபுரம் அப்படிப்பட்ட ஒரு சித்திரத்தைக் காட்டுகிறது. கொற்றவை அக்கற்பனையை தமிழ் மொழியின் வளர்ச்சியோடு இணைத்து ஒரு வரலாற்று சாத்தியத்தை நமக்கு அளிக்கிறது. அது மிக அழகான கற்பனையாக விரிந்திருக்கிறது. தொல் தமிழ் நிலத்தின் பெருமையைக்கொண்டு பல பிரிவினைக் கோட்பாடுகள் கடந்த நூறு வருடங்களாக உருவாகி இருக்கிறது.
அடிப்படை ஒலியன்களிலிருந்து மொழியைக் கட்டமைக்கும் சித்திரம் ஆரம்பப் பகுதிகளில் வருகின்றன. அ, இ, உ எனும் மூன்று ஒலியன்களிலிருந்து உருவான ஆதிச்சொல்லான அம்மா எனும் சொல்லைச் சுமந்த முதல் குடிகள் மந்திரமாக உச்சாடனம் செய்து தங்கள் குறிச்சொல்லாக அதை மாற்றியிருந்தனர். கடற்கோள் நிகழாத விரிந்த நிலப்பரப்பின் தென் கிழக்கே அவர்கள் மதுரை எனும் நகரை ஆண்டுவந்தனர். அவர்களிடம் அன்று இருந்தது எல்லாம் சில ஒலியன்கள் மற்றுமே. ஆனால் எல்லையற்ற இயற்கையை செவி மடுத்தனர். கடல் அலையிலிருந்தும், சங்கிலிருந்தும், கடல் ஆழத்திலிருந்தும் தங்கள் மொழிக்கான சொற்களை அவர்கள் கண்டடைந்தனர்.
கொற்றவை நாவல் நீர், காற்று, நிலம், எரி, வான் என ஐந்து பகுதிகளாக உள்ளது. தமிழின் ஐவகை நிலங்களின் தோற்றம், வாழ்வு, திரிபு நிலைகள் போன்றவற்றைக் கொண்டு தமிழர் தொல் குடியின் இடப்பெயர்வு கதையை நீர் சொல்கிறது. நீரே இடப்பெயர்வுக்கு முதல் காரணம். கடல்கோளும், நிலச்சீற்றமும் கொண்ட தென் தமிழ் நிலம் பரதவரின் ஆதி நிலமாக இருந்த நாள் முதல் மொழியின் முதல் ஒலிகள் உருவாகத் தொடங்கின. அ, இ, உ மந்திர உச்சாடனமாக ஒலித்து அம்மா என ஆகும் போது கன்னி எனும் பெருந்தெய்வம் அம்மண்ணில் தோன்றிவிட்டாள். முதல் தமிழ் நிலத்திலிருந்த மூத்த அன்னையின் வாயிலிருந்து வந்த மொழியறியா சொற்களில் அவள் நிறைந்து நின்றாள். நம் வரலாறும் மொழியும் அறிந்த முதல் குடிகளுக்கு முந்தைய மூத்தவர்கள் இருந்தனர் எனும்படியான ஒரு கற்பனையைக் கொண்டு கொற்றவை எழுகிறது.
நிலம் மாறி, இனம் கலந்து, தொழில் திரிந்து செல்லும் குடிகளுடன் தாய் தெய்வமும், மொழியின் ஆதி ஒலிகளும் கூடவே செல்கின்றன. நீர் எனும் முதல் பகுதி தமிழ் வரலாற்றினைப் பிணைத்து சொல்லப்பட்டிருப்பதால் சிலம்பின் முன் கதை எனக்கொள்ளும் முகாந்திரம் இருந்தாலும் இது தமிழின் வளர்கதை என்பதாகத் தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஆசிரியரின் கற்பனை கிடைக்கும் வரலாற்றுச் சான்றுகளை விட அதிகம் இருப்பதால் இந்த புதுக்காப்பியம் சிலம்பிலும் நம் வரலாற்றிலும் இருக்கும் பல இடைவெளிகளை நிரப்பும் மாற்று வரலாற்றுக் காப்பியமாகிறது. எழுத்தாளர் இப்படி ஒரு சுதந்திரம் எடுத்துக்கொள்ளலாமா எனும் கேள்வியை நாம் இன்னும் பல ஆண்டுகள் பேசிக்கொண்டிருப்போம் என நினைக்கிறேன். புனைவின் விதிகள் தெரிந்தவர்களை இப்படிப்பட்ட மாற்றுப்புராணக்கதைகள் ஆச்சர்யப்படுத்தாது. ஆசிரியர் கற்பனைத் திறனையும், கலைப்பார்வையையும் அது பிரமிக்க வைக்கும். முழுவதும் தனித்தமிழில் எழுதப்பட்ட இந்த நூல் தமிழ் மொழி, நிலம், பண்பாடு மாற்றங்கள் பற்றிய ஒரு தொகை நூல் எனக் கொள்ளும் வகையில் இப்பகுதி அமைந்துள்ளது. கண்ணகியின் பிறப்பும் அவளது கால் சிலம்பு கடலன்னையின் பரல்களால் செய்யப்படுவதையும் இந்திர விழாவில் காண்கிறோம்.
"சாம்பவர்களின் காடுகள் அழிந்து வயலானபோது அவர்கள் வயல்வெளி வாவிகளின் அருகே எஞ்சிய மரநிழல்களில் தங்கள் தெய்வங்கள் கிடைக்கல்மீது நிலைக்கல்லாகக் கூசி நிற்கக் கண்டனர். சாம்பவர் குடிப்பெண்டிர் வயல்களில் நாற்றுநட்டும் களை கொய்தும் உழைக்க சாம்பவர் உழுதனர். குழந்தைகள் கன்று மேய்ததன. தங்கள் தெய்வங்களுக்கருகே புதர்க்குடிசைகளில் மண்ணில் அவர்கள் வாழ்ந்தனர். மண்ணில் உழைத்தாலும் அவர்களால் மண்ணை உரிமைகொள்ள முடியவில்லை. மண் அவர்களுக்கு அயலாகவே இருந்தது. நீரின் திரை ஒருநாள் விலகும் என்றும் அன்று அனைத்தையும் கைவிட்டு திரும்பிச்செல்பவர்கள் தாங்கள் என்றும் நம்பினர். நீருக்குள் அவர்கள் தெய்வங்கள் ஒரு போதும் தங்கள் இருக்கைகளில் நிலைகொள்ளவில்லை" (பக்:-60)
பொருளியல் ரீதியில் இனக்குழுக்கள் சமூக அடுக்குகளில் மேல்கீழாக இடம் மாறும் சித்திரத்தை இப்பகுதி தொட்டுக்காட்டுகிறது. சாம்பவரின் தெய்வமென இருக்கும் அன்னைக்கு முதல் மரியாதை செய்ய முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். மண்ணை ஆள்பவர்களுக்கே பொருள் மட்டுமல்ல நிலத் தெய்வங்களும் சொந்தம் எனும் சூத்திரம் நாவல் எங்கும் காணப்படுகிறது. பொருள்முதல்வாதப்படி வரலாற்றைக் காணும் மார்க்ஸிய நோக்கை எடுத்துக்கையாண்டிருக்கிறார் ஜெயமோகன். தமிழ் நிலத்தின் பல இனக்குழுக்களையும் அவற்றின் வளர்சிதை மாற்றங்களைக் காட்டக்கூடிய கச்சிதமான கருவியாக அவருக்கு இது அமைந்திருக்கிறது.
'காற்று' பகுதி
நாம் அறிந்த சிலப்பதிகாரக் கதைப் பகுதி இங்குதான் தொடங்குகிறது. மாசாத்துவான் மகன் கோவலனுக்கும் மாநாய்கன் மகள் கண்ணகிக்கும் நடக்கும் திருமணத்திலிருந்து இப்பகுதி தொடங்குகிறது. ஆனால், கண்ணகிக்கும் தென் குமரி நிலத்தில் ஒற்றைச் சிலம்புடன் நின்றிருந்த கன்னிக்கும் இருக்கும் தொடர்பை கண்ணகி பிறந்த நாளிலிருந்து தொடங்கிய ஒன்றாக நாவல் சித்தரிக்கிறது. அவளது கால் சிலம்பின் பரல்கள் கன்னியின் கால் சிலம்பிலிருந்து கிடைத்தவை எனும் ஒரு தர்க்கத் தொடர்பை ஆசிரியர் முன்வைக்கிறார்.
"தென்மதுரை நடுவே கண்கள் ஒளிர நிற்கும் மீன்விழியையும் தென்கடல்நுனியில் மூக்குத்தி சுடர நிற்கும் குமரியையும் அப்பால் நீர்வெளியாக நெடுமுகம் கொண்டு விரிந்த பேராச்சியையும் வாழ்த்தும் பாடலை குலப்பூசகர் நெடுஞ்சாத்தனார் சொல்ல அனைவர் கரங்களும் குவிய, மூடிய கண்களுக்குள் நெளிந்தது நீலம்."
'காற்று' பகுதி கண்ணகியின் வளர்பருவக்காலம் எனலாம். பன்னிரெண்டு வயதுப்பெண்ணாக திருமணம் முடிந்த பின் முதல் முறையாக உலகைப் பார்த்தபடி மதுரை செல்கிறாள். அவளது Rite of passage கவுந்தி அடிகள் வழியாக நடக்கிறது. சிலம்புக்காவியத்தில் கவுந்தி அடிகள் சொல்லும் கதைகள் கண்ணகியை நோக்கி மட்டுமல்ல, கோவலனின் விழுமியங்களையும் நிலைப்பாடுகளையும் குறித்தும் பேசுகிறது. அன்னையரின் தனிமை பற்றிய காவியமான கொற்றவையில் கவுந்தி அடிகள் கண்ணகிக்கென பிரத்யேகமான ஒருவராக வலம் வருகிறார். மதுரைக்குப் புறப்படும்போது கண்ணகி ஒரு சிறு பெண். அவளுக்கு உலகம் என்பது உல்லாசம் மட்டுமே நிரம்பிய இடம். கண்ணகியை சிறு வயதிலிருந்து தொடர்ந்து வருபவர் என்கிறார் கவுந்தி அடிகள். கோவலனுக்குத் தெரியாமல் அங்கு ஒரு சிறு மாற்றம் நடக்கிறது. அடிகளாக கண்ணகிக்கு பெண்ணின் உலகைக் காட்ட முடியாது எனும் காரணத்தினால் அவள் ஒரு நீலியின் வடிவாக கண்ணகியுடன் வருகிறாள். கோவலனின் கண்ணுக்கு அவள் ஒரு சமண அடிகள். ஆனால் அவளுள் இருக்கும் நீலி கண்ணகிக்கு மட்டும் தெரிகிறாள்; அவளுடன் மட்டும் உரையாடுகிறாள். கொற்றவையில் வரும் இத்திருப்பம் நாவலை ஒரு நவீன காப்பியமாக மாற்றும் மிக முக்கியமான உத்தியாகிறது. அது மட்டுமல்லாது தமிழ் நிலத்தின் தொன்மத்தோடு தொடர்புடைய ஒரு குறியீடான நீலி மற்றொரு தொன்மமான கன்னி/கண்ணகியுடன் இணையும் கலைத்தன்மை மிக அசாத்தியமான சாத்தியங்களை ஆசிரியருக்கு அளிக்கிறது. கண்ணகிக்கு ஒரு துணையாக வருபவராக இருந்தாலும் கண்ணகிக்குள் இருக்கும் நீலியை வெளியே கொண்டு வருபவளாகவும், அவளுக்குள் தமிழ் நிலத்தின் விழுமியங்கள் எனும் விதையை முளைக்கச் செய்பவளாகவும் நீலி வருகிறாள்.
தாய்தெய்வ வழிபாட்டிலிருந்து சாக்த மரபுக்கு செல்லும் ஒரு வழியைப் பற்றி கொடுங்கோளூர் பகவதி நூலில் (பக்:70) வரும் சித்திரத்துக்கு நெருங்கி வரும் ஒரு படிமமாக நீலி-கண்ணகி அமைந்துள்ளது. கண்ணகியும் சீர்மக்காவும் எனும் ஆய்வுக்கு நெருக்கமாக இதை ஜெயமோகன் படைத்துள்ளார். சக்தி தெய்வ வழிபாட்டின் பல உபாசனைகளும், கதைகளும் கொற்றவை முழுக்க வருகிறது. நீலியாக வரும் கவுந்தி அடிகள் கண்ணகிக்கு இப்படிப்பட்ட சக்தியின் பல உருக்களை அவர்கள் கடக்கும் நிலப்பகுதியின் மக்கள் கதையாகக் காட்டுகிறார். இதுவும் கொற்றவை நவீனப்பார்வை காட்டுவதற்கு இடமளிக்கிறது - பல இனங்களின் மக்களின் அறங்களும் விழுமியங்களும் பேசப்படும் போது அங்கு நிகழும் மீறல்கள் சக்தி வடிவமாக வெளிப்படுவதை அவர்களது மதுரை நோக்கிச் செல்லும் வழி நெடுக கண்ணகி காண்கிறாள். கண்ணகியைப் போல நீலியைப் போல பல பெண் தெய்வங்கள் முளைத்த மண்ணாக தமிழ் நிலம் காட்டப்படுகிறது. தனது கற்பை கொண்டு சென்ற கடல் தேவதைகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பெண் உடலளவில் இல்லாமல் உள்ளத்தளவில் பிறழ்கிறாள். தனக்கே அவள் கொடுத்துக்கொள்ளும் தண்டனையைக் காண முடியாத கண்ணகிக்கு நீலி அவள் உள்ளத்தில் நிறைந்த தீயை விளக்குகிறாள். புலையர் குலம், சாம்பவர் குலம் என வழி நெடுக பெண்களின் தனிமையும், துயரும், அவியாது கிடக்கும் காம நெருப்பும் விளைநிலங்களாக இருப்பதை கண்ணகிக்குக் காட்டுகிறாள் நீலி. அதுவழியே மாறா நெறியையும், மாறும் நெறியையும் அறிகிறாள்.
கொற்றவை நாவலில் சற்று விலக்கம் அளிப்பது கடைசி முப்பது பக்கங்களில் வரும் ஆசிரியரின் தன்னிலைக்குறிப்புகள். பெயர் சுட்டி விளக்காவிட்டாலும் இது ஜெயமோகனின் அலைக்கழிப்புகளின் ஒரு சாயை என்பதை நம்மால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. நாவலாசிரியர் தனது நண்பராக பேராசிரியரோடு கொடுங்கோளூர் கண்ணகி/பகவதி கோவிலுக்குச் செல்கிறார். அங்கு கொடுங்கோளூர் பகவதியின் பல குல வழிபாடுகளும், சடங்குகளும் சொல்லப்படும் போது அதன் தொன்மை பற்றிய ஒரு சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. தாய்தெய்வ வழிபாடு தொடங்கி, புலையர், சாம்பவர், தெய்வமாக மாறி பின்னர் பரசுராமரால் முன்னெடுக்கப்பட்ட சடங்காகவும் ஆதிசங்கரரால் வேதக்கடவுளரான துர்கை, சிவன் போன்ற தெய்வங்களுக்கு சமமாக வைக்கப்பட்டு பதிட்டை செய்யப்பட்ட தெய்வத்தின் சித்திரம் சொல்லப்படுகிறது. இவை அனைத்திலும் சாக்த வழிபாட்டின் வைதிக நியமங்கள் கைகொள்ளப்பட்டாலும் குருதிபலி, கோழி பலி, நர பலி நடந்ததற்கான சாட்சியங்கள் இன்றும் இருப்பதை பேராசிரியர் காட்டுகிறார். அது மட்டுமல்லாது, அம்மண்ணின் பல தாய் தெய்வங்கள் அங்கே உறங்காமல் விதைகளாகக் கிடக்கின்றனர். கடலலை சத்தத்தைப் பொதிந்து வைத்த கால் சிலம்பின் ஓசையை ஆசிரியர் கேட்கிறார் - பல நூறு கிலோமீட்டர்களுக்கு கடலே இல்லாத இடத்தில். அங்கிருந்து ஆசிரியரை ஆட்கொண்ட பெண் தெய்வக் கதையாக இது மாறுகிறது. அது மட்டுமல்லாது பண்டைய தமிழ் நிலத்தையும், தெய்வங்களையும், மரபையும் பிணைக்கும் சங்கிலியாக இவை மாறுகின்றன. அதன் தொடர்ச்சியை இன்றும் பல பெண்களின் சாயையில் அவர் காண்கிறார். குடும்பத்துடன் விவேகானந்தரின் சிலையை காணச் செல்லும் அவர் தனது தாயின் நினைவுகளில் அலைக்கழிக்கப்படுகிறார். கூடவே தனது சிறு புதல்வியின் கேள்வியான - ஏன் ஒரு சிறு கன்னிப்பெண் ஆழியின் சீற்றத்துக்கு நடுவே குறும்பாறையில் ஒற்றைக்காலுடன் மோனதவத்தில் நிற்கவேண்டும் - என்பதை சேர்த்து எண்ணுகிறார். அவரால் இப்பெண்களை எல்லாம் வெவ்வேறு பரு உடல்களாக நினைக்க முடிகிறதே தவிர, அவர்கள் அனைவரரையும் இணைத்திருக்கும் சரடாக தொல்கன்னி அல்லது நீலி இருப்பதை அவர் உணர்கிறார். வானில் நிறமாக மாறும் அவர்களது உணர்ச்சிகள் அனைத்தும் ஒரு புன்னகையாக நீலம் கொள்கின்றன.
ரா. கிரிதரன் - ஜெயமோகன் |
From the naming of this write-up to the make up of the narrative is very thoughtful. Such things can only be written with a deep understanding on கொற்றவை and associated books and articles. This article is the smart way to introduce கொற்றவை to the audience and about the author. நீலி, யாணை, பாம்பு ஆகியவை தெள்ளிய நீரின் அடியில் ஆடிகொண்டிருக்கும் கூழாங்கற்கள் போல ஆசிரியர் ஜெயமோகனின் எழுத்துகளில் நிகழும், ரா கிரிதரன் அவர்கள்இக்கட்டுரையில் இதை சொல்லாமல் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
ReplyDelete