சாமானியனை சாதகனாக்கும் எழுத்து - செளந்தர்


“அம்மு, வாய்ல கை வச்சு எச்சில் பண்ணாத” என்று ஐந்து வயது முதல் நம்மை நோக்கிச் சொல்லப்படும் அறிவுரைகள், அறவுரைகள், கடைசி மூச்சைக்கூட எப்படி விடவேண்டும் எனச் சொல்லி, நம்மை எரிச்சலடையச் செய்பவை. ஏன் நாம் அறிவுரைகள் மீதும் அறவுரைகள் மீதும் ஒவ்வாமை கொள்கிறோம்?

ஒன்று, அதை சொல்பவரின் தகுதி மீது நமக்குள்ள விலக்கம்.

அடுத்தது, அந்த அறிவுரை எனக்கானதல்ல எனும் உறுதிப்பாடு.

இவையிரண்டும், நம்மைத் தேடிவரும் அறிவுரைகள் மீது மட்டுமல்ல, நாம் தேடிச்சென்று அடையும், சுயமுன்னேற்ற நூல்களிலும் சுயமுன்னேற்றப் பேச்சாளர்களின் உரைகளிலும், அறிஞர்கள் என நாம் சென்று அமரும் பெரிய மனிதர்களிடமும்கூட சில நாட்களில், இந்த ஒவ்வாமை நிகழ்ந்துவிடுகிறது. விலகத் தோன்றுகிறது.

எனினும் ஆழத்தில் எங்கோ நாம் உறுதியாக ஒன்றை நம்புகிறோம். அது 'பணிதல்', முற்றாகப் பணிதல். நம்மை ‘ஒப்புக்கொடுத்தல்’ நிகழவேண்டும் என.

ஒவ்வொரு கற்றலின்போதும் கூர்கொள்ளும், ‘நான்’ எனும் ‘தன்முனைப்பு’.

தன் சிரம் தாழ்த்த, மேற்கொண்டு நடந்து செல்ல, ஒரு காலடியைத் தேடுகிறது.

அப்படி ஒன்றைக் கண்டுகொள்ளுதல் வரம் என, நல்லூழ் என நம்பமுனைகிறது.

அப்படித் தேடிக்கண்டடையப்பட்ட ஒரு ஆசிரியர், தானும் ஒரு சாதனை மார்க்கத்திலிருந்து அதைப் பிறழாமல் பின்பற்றிக் கடைத்தேர்ந்து, அல்லது தீவிரமாகக் கடைபிடித்துக்கொண்டிருப்பவராகவும் இருக்கிறார் என்றால் சாமானியனாக உள்ளே வரும் ஒரு மனிதனையும் 'சாதகனாக' மாற்றிவிடுகிறார்.

ஏனெனில் 'நீங்கள் சாதகனாக' மாறாதவரை வாழ்வில் எந்த 'மாயமும்' நிகழ்ந்துவிடாது என்பது நம் மரபுகள் அனைத்தும் சொல்லும் அடிப்படை.

என்ன மாயம் நிகழவேண்டும்?

யுவால் நோவா ஹராரி வெற்றிகரமான தன்னுடைய மூன்று புத்தகங்களின் 'சாரமாக' சிலவற்றைச் சொல்கையில், மனிதர்கள் தங்களைத் தொடர்ந்து 'அவதானிப்பதன்' மூலமாகவும் தொடர்ந்து 'மறுகண்டுபிடிப்பு' செய்வதன் மூலமாகவும் மட்டுமே கட்டற்ற நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்தும் மனக்கொந்தளிப்பான வாழ்க்கை சூழலிலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள முடியும் என முடிக்கிறார்.

ஆக, இந்த உலகில் தொடர்ந்து நம்மை நோக்கி வீசப்படும் அபத்தங்களிலிருந்து தற்காத்துக்கொள்வதும் மனதை, சிந்தனையை, நேர்நிலைகளை நோக்கித் திருப்பிவிடுவதும், அதன் மூலம் நாம் அடையும் உற்சாகமான மற்றும் அந்தரங்கமான ஆன்மிக உணர்வும் மட்டுமே இனிவரும் காலங்களில் 'மாயம்' எனத் திகழும்.

முன்னர், இந்த மாயத்தை நிகழ்த்துபவர்கள், ஆன்மிக குருமார்கள், ஞானியர்கள், மற்றும் தத்துவவியலாளர்களாக இருந்தனர், இன்று அவர்கள் கைகளிலிலிருந்து படிநிலையில் அடுத்து இருக்கக்கூடிய துறைசார் வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்களின் கைகளுக்கு வந்துசேர்ந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, கலை -இலக்கிய மரபில், இது மாபெரும் ஆசிரிய வரிசையை உலகம் முழுவதும் உண்டாக்குகிறது.

ஒரு உரையாடலில் ஜெயகாந்தனிடம், பாரதி இவ்வளவு தீவிரமாக எழுதியிராவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும்? என்று கேட்டதற்கு சற்றும் தயங்காமல், “அவனுடைய தொடர்ச்சியாக, அவன் எழுதிய அனைத்தையும், நான் எழுதியிருப்பேன்” என்று முழங்கியிருப்பார்.

இதுதான். அந்த ஆசிரிய மரபு அல்லது மாயம் நிகழ்ந்த தருணம்.

அதே ஜெயகாந்தன்தான் தன்னுடைய பேட்டி ஒன்றில், எழுத்தாளர் ஜெயமோகனைக் குறிப்பிட்டு, “நீண்ட ஒரு இந்திய மரபின் தொடர்ச்சியை, அவன்கிட்ட பார்க்கிறேன், நான் இத பல அர்த்தத்துல சொல்றேன். அவன் ஒரு யூனிக்” என்று முடித்திருப்பார்.

இங்கிருந்துதான், நாம் ஜெயமோகன் அவர்களை, நம் வாழ்வில் எங்கே பொருத்திக்கொள்வது? என்கிற கேள்வியை எழுப்பி, விடைகாணவேண்டியுள்ளது.

ஜெ.மோ,வை வாசிக்கக்கூடிய அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவருடைய தனிப்பட்ட வாழ்வின் இளமைக்கால ஊசலாட்டங்களும் கொந்தளிப்பும்.


அவற்றில் பெரும்பாலானவை ‘புறப்பாடு’ நூலின் இரண்டு பாகங்களிலும் பதிவுசெய்யப்பட்டிருக்கும். அதைப் படிக்கக்கூடிய எந்த வயதினரும் திகைப்பையும் தனக்கே நிகழ்ந்துவிட்ட பாவனையையும் அடைவார்கள் என்பது ஜெயமோகனின் எழுத்தால் சாத்தியமானது. ஒருபுறம் அதற்கு இணையாகவே நாம் அனைவரும் வெவ்வேறு வகையில் அதே அலைக்கழிப்புக்கும் அவஸ்தைகளுக்கும் ஆளாகியிருக்கிறோம் என்பதே உண்மை.

ஆக, 'அவர் நம்மைப்போல' என்கிற உணர்வு ஒட்டிக்கொண்ட உடனேயே, அதிலிருந்து அவர் இன்று என்னவாக, உருமாறியிருக்கிறார் என்கிற கேள்வியும், கூடவே அவர் அடைந்த உச்சங்களையும், தமிழ் இலக்கிய சாதனைகளையும், எண்ணி வியந்து, 'நம்மால் இதெல்லாம் முடியாது' எனப் பின்னகர்கையில், அதற்கான விடையென, நம்முடன் உரையாட, வல்லமைமிக்க எழுத்துடனும் நட்புடனும் அருகில் வருகிறார்.

அவருடைய ‘தன்னறம்’, ‘தன்மீட்சி’, பிற வாழ்வியல் கட்டுரைகள் என கிட்டத்தட்ட இந்தச் சமூகத்துடன் கடந்த 20 வருடங்களில் தொடர்ந்து பேசிய ஒரே மனிதர் என நிச்சயமாகச் சொல்லமுடியும்.

வாழ்வியல் கொள்கைகளுக்கு ‘தன்னறம்’ எனும் 'சுதர்ம' கொள்கையை முன்னிறுத்தி எழுதி தள்ளிக்கொண்டிருக்கும். அதேவேளையில், தத்துவார்த்தச் சிக்கல்கள் கொண்ட நடுத்தர சாமானியருக்கு அவர் வழங்கியது அளப்பரியது.

பெற்றோரையும் பெரியோரையும் பேணுதல், பராமரித்தல்       என்கிற நடுவயது மனிதர்களின் சிக்கல்களுக்கு, நேரடியாக எந்தவித ‘அன்பே உருவான தாய் - மகன்’ போன்ற 'மோஸ்தர்கள்' எதுவுமின்றி, ஒரு மனிதரின் பெற்றோர்சார் கடமைகள், நிராகரிப்புகள் என முன்வைப்பது புதிதாகப் படிக்கவரும் ஒருவருக்கு, திகைப்பையும் ஒவ்வாமையையும் கூட ஏற்படுத்தலாம். எனினும் அதுவே நிதர்சனம்.

தமிழில் இதுவரை எங்குமே நிகழாத, கிட்டத்தட்ட ராமானுஜருக்குப் பின்னர் எனலாம், தத்துவார்த்த விவாதங்கள் ஜெயமோகன் இணையதளத்தில் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன.

உலகின் எந்த தத்துவ ஞானியின் உரையாடலையும் இங்கே ஒருவர் கண்டுகொள்ள முடியும். பெரும்பாலும் அது ஜெயமோகன் சொல்ல, நாம் கேட்டுக்கொள்வது போல இருக்காது.

ஒரு நட்பார்ந்த கேள்வியாகத் தொடங்கி, முப்பது நாற்பது நபர்களின் உரையாடலாக மாறி, இறுதியாக, திரண்டு வந்த 'துளி ஞானம்' என முடியும். இப்படி ஒவ்வொரு தளத்திலும் நிகழ்வதைப் பார்க்கமுடியும்.

தன் வாழ்வு முழுவதையும், இலக்கியம் சார்ந்த தவமென மாற்றிக்கொண்ட இவரைப் பின்தொடர்ந்து எழுந்து வந்திருக்கும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் பட்டியல் இன்று தமிழ்வெளி முழுவதிலும் காணக்கிடைப்பது. மாதம் ஒருவரையாவது 'தொடர்ந்து எழுதுங்கள், எழுதி உங்களைக் கண்டுகொள்ளுங்கள்’ எனச் சொல்லாமல் இருந்ததே கிடையாது.

நடுத்தர வயதினரின் பொறுப்புகள், சிக்கல்கள் சார்ந்து முன்வைக்கும் தீர்வுகளுக்கு இணையாகவே முதுமைசார் பிரச்சனைகள் பற்றி அந்த வயதினர் நிகழ்த்திய எண்ணற்ற விவாதங்களும் தீர்வுகளையும் இணையத்தில் காணமுடியும்.

'தீர்வுகள்' என நான் இங்கே குறிப்பிடுவது. 'இதைச் சாப்பிடு பித்தம் தணியும்' என்கிற மருத்துவார்த்த போதனையானப் பிரசங்கங்கள் அல்ல. மாறாக தொடர் உரையாடல்கள்.

ஓர் உதாரணம்.

எம்.ஏ.சுசிலா அம்மா அவர்களுடையது.

தன்னுடைய பணிஓய்வுக்குப் பின்னர் செய்வதற்கு ஏதுமற்ற நிலையில் அதேவேளையில் இலக்கியத் திறமையும் அறிவும் கொண்டவராக ஜெயமோகனைச் சந்திக்கிறார். அவர் தூண்டுதலில் ரஷ்ய இலக்கியங்களை அதிலும் தஸ்தயெஸ்கியை முழுமையாக வாசித்து, ரஷ்யாவுக்கே நேரில் சென்று மேலும் பல அனுபவங்களைப் பெற்று, ‘இடியட்’ நாவலை 'அசடன்' என மொழிபெயர்ப்பு செய்கிறார். இந்த செயல் அவர் தன் வாழ்நாள் முழுவதும் செய்த நற்பணிகளுக்கு இணையாக பெரும் அகவிடுதலையைத் தருகிறது.

அவருடைய வாசக நண்பர்களில் காலை ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்து வாசிப்பவர்கள், பயணத்தின்போது வாசிப்பவர்கள், தற்காலிக விடுப்பு எடுத்துக்கொண்டு எங்கேனும் போய் வாசிப்பவர்கள் என ஒரு மாபெரும் கூட்டம் உள்ளது போல.

'வெண்முரசு' எனும் அவருடைய வாழ்நாள் சாதனையின்போது ஒவ்வொரு நாளும் இரவு 12 மணிக்கு அவருடைய தளத்தில் வெளிவந்தவுடன் படித்துவிட்டு தூங்கச் செல்லும் என் போன்ற ஒரு பெரும் கூட்டம் இருந்தது.

அந்த 7 வருடமும் தினமும் விவாதித்தோம், முரண்பட்டோம், ஒப்புக்கொண்டோம், ஒப்புக்கொடுத்தோம் என்றே சொல்லவேண்டும். 26000 பக்கங்களை வாசித்த ஒரு நபர் நிச்சயமாகக் கொஞ்சமேனும் தனது 'சுய அபத்தங்களை'க் களைந்திருப்பார். ஏனெனில் அதன் ஒவ்வொரு பக்கமும் நமது ஆழத்தில் சென்று தைத்தது.

எம். கோபாலகிருஷ்ணன் - சௌந்தர்

‘வெண்முர’சின் ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களில் நான் யார்? நான் யார்? என ஒவ்வொரு நாளும் தேட வைத்தது. தேடிக் கண்டுகொண்டபின் அந்தக் கதாபாத்திரத்தின் ஊசலாட்டமும் அதற்கான விடைகளையும் கண்டுகொள்ள முடிந்தது.

இவ்வளவு பெரிய சாதனைகளும் உச்சங்களும் போற்றத்தக்கவைதான். ஆனாலும் ஒரு சாமானியனுக்கு அதனால் என்ன?

ஜெயமோகன் அவர்கள் இதை வெறும் எழுத்தாக மட்டும் முன்வைத்துவிட்டு அதற்கு மாறாக வேறு ஒரு வாழ்க்கையை வாழவில்லை. இன்றும் எழுத்துப்பணி, பயணம், நண்பர்கள் சந்திப்பு என அவர் வாழும் வாழ்க்கை நம்முடைய கடிகாரத்துக்கு அப்பாற்பட்டது.

எழுதுவதில் இருக்கும் தீவிரமும் முனைப்பும் நேர்மறைப் பண்பும் அவர் தனக்குத்தானே வற்புறுத்தி ஏற்றுக்கொண்டதல்ல. மாறாக இது அவருடைய குருவான நித்ய சைதன்ய யதி அவர்களின் சொல். ஆசி.

ஆகவே அலைக்கழிப்பு மிக்க இளைஞன் ஒருவனுக்கு சுயமுன்னேற்றப் புத்தகங்களும் பேச்சாளர்களும் தராத உந்துதலை ஜெயமோகனின் ‘தன்மீட்சி’யும் ‘தன்னற’மும் தருகிறது. அந்த இளைஞன் ஜெயமோகனை தான் எனக் காண்கிறான்.

நேர்மறை எண்ணங்களால் சூழப்படுகிறான் அல்லது தன்னுடைய துறையில் ஒரு ஜெயமோகன் என உயர எண்ணுகிறான். அதே மனநிலைதான் நடுத்தர வயதுடையவருக்கும் முதுமையை வரமென ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவருக்கும்.

மரபார்ந்த சிவானந்த குருகுலத்தில் பயின்றவன் நான். 12 வருடங்களாக குருநிலை சென்று தங்கி மீண்டுவந்து 'சாதகம் புரிதல்' என்றிருக்கும் ஒரு யோக ஆசிரியன் எனும் தகுதி இரண்டு முறை எனக்கு வழங்கப்பட்டதாக நினைக்கிறேன்.

ஒன்று என்னுடைய குருநாதர் சுவாமி நிரஞ்சன் அவர்கள், ஒருமுறை நான் குருகுலத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கு வந்திருந்த ஆஸ்திரேலியத் தம்பதிகளுக்கு என்னை “யோக ஆசிரியர் செளந்தர்” என அறிமுகம் செய்துவைத்தபோது. அது முதல் ஆசீர்வாதப் பெருநாள்.

அதன்பின் 12 வருடங்கள் கழித்து ஆசான் ஜெயமோகன் அவர்கள் என்னை, “யோக ஆசிரியர்” எனத் தமிழகத்திற்கு அறிமுகம் செய்துவைத்த நன்னாள்.

இது ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என உணர்ந்த என்னைப் போன்ற எண்ணற்றோர் இங்கு உண்டு. இதைச் சொல்ல எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குருவருள் என்பதைத் தவிர வேறில்லை.

எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்து ஒரு சாமானியனை 'சாதகனாக' மாற்றும் வல்லமை கொண்டது. சாதகனாக மாறாமல் இங்கு எதுவுமே சாத்தியமல்ல, சந்தோசம் உட்பட.

***
சௌந்தர்

No comments:

Powered by Blogger.