சொல்லாலின் புடையமர்ந்து - பழனி ஜோதி



ஒரு உபயோகமான பொழுதுபோக்கு என்ற கோணத்தில் இலக்கிய வாசிப்பைத் துவங்கிய எனக்கு வாழ்வின் சாரத்தையும், வாழ்க்கையைப் பொருளுள்ளதாக ஆக்கிக்கொள்வதற்கான தேடலையும், வழியையும் கொடுத்தது ஜெயமோகனின் படைப்புலகம். பல வாசகர்களைப்போல, 2008ன் ஆரம்பத்தில் ‘தொப்பி’, ‘திலகம்’ சர்ச்சையின் மூலம் அவரை வந்தடைந்தேன். அவதூறாக இருந்தாலும் அவரிடம் என்னை ஆற்றுபடுத்தியதற்காக விகடனுக்கு இன்றும் நன்றியோடிருக்கிறேன். அவரை முதன்முறையாக வாசிக்கத் துவங்கிய அந்த இரவில் என் உறக்கம் முழுவதுமாகத் தொலைந்திருந்தது. அன்று நான் வாசித்த வரிசைகூட இன்னும் நினைவில் இருக்கிறது. ‘மாடன் மோட்சம்’, ‘அய்யப்பண்ணனும் ஆச்சியும்’, ‘மத்தகம்’, ‘ஊமைச்செந்நாய்’ என ஒன்றன்பின் ஒன்றாய். மலையிறங்கும் காட்டாற்று வெள்ளத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் சருகென உணர்ந்தேன். வெவ்வேறு வகையான எழுத்துகள். ஆனாலும் அவற்றின் தீவிரமும் அபாரமான மொழியும் அவை தொடும் நுட்பமும் நான் அதற்கு முன் அறிந்திராதவை, அனுபவித்திராதவை. ஆங்கிலத்தில் நான் வாசித்திருந்த கற்பனாவாத நாவல்களில் வரும் மாற்று உலகத்துக்குச் செல்வதற்கான எனக்கான வாயிலைக் கண்டுகொண்டதாக உணர்ந்தேன். கூடவே அவரின் ‘நற்றுணை’ சிறுகதையில் வரும் எனக்கான கேசினியையும் கொண்டுகொண்டேன், jeyamohan.in வடிவில். பல வாசகர்கள் சொல்லும் தேய்வழக்காக இருந்தாலும், அன்றிலிருந்து அவரின் தளத்தையோ, புத்தகத்தையோ படிக்காமல் ஒருநாளும் கடந்ததில்லை.

இது எனக்கு மட்டுமில்லை. என் மனைவிக்கும்தான். மகேஸ்வரி அதுவரை பாடத்திட்டத்திற்கு வெளியே அதிகம் வாசித்திருக்கவில்லை. ஜெ.யின் கட்டுரைகளும் புனைவுகளும் பல சமயங்களில் என்னைச் சுக்குநூறாக உடைத்தெறியும். பல நேரங்களில் அடர்ந்த மௌனத்துடன் என் ஆன்மாவோடு உரையாடும். நெஞ்சில் ஏறிய சொற்கள் கற்பாளமென பேரெடையுடன் கனக்கும். யாரிடமாவது இறக்கி வைக்காவிட்டால் தலை வெடித்துவிடும் போலிருக்கும். மகேஸ்வரியிடம் கதைகளாகச் சொற்களில் பகிர ஆரம்பித்தேன். அவள் சமைக்கும்போதோ, உறங்கச் செல்வதற்கு முன்னாலோ உரக்க வாசித்துக் காண்பிப்பேன். ‘அறம்’ வரிசைக் கதைகள் வந்தபோது நடு இரவில் அவளை எழுப்பி, கண்களில் நீர் திரள ‘சோற்றுக்கணக்கை’யும், ‘நூறு நாற்காலிக’ளையும் வாசித்துக் காட்டிய நாட்களும் உண்டு. தொலைக்காட்சிப் பெட்டியைச் சுற்றிப் படிந்த ஒட்டடையை சில வாரங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவேண்டி வந்தது அப்போதிருந்த இனிய பிரச்சனைகளில் ஒன்று.


அவளே ஜெ.வை வாசிக்கத் துவங்கிய மாயக்கணம் நிகழ்ந்தது காந்தி குறித்து அவளுக்கிருந்த கேள்விகளால். ‘இன்றைய காந்தி’யின் கட்டுரைகளை அவளாகவே வாசிக்கத் தொடங்கினாள். அவளுக்குள் இருந்த காந்தியின் புகை படிந்த, ஒளி மங்கிய சித்திரத்தை அக்கட்டுரைகள் துலக்கித் தெளிவடைய வைத்தன. குழந்தைகளுக்கு ‘பனிமனித’னையும், ‘அறம்’ வரிசைக் கதைகளையும் வாசித்துக் காண்பித்தாள். ஐந்து வயது ஸ்ரீராமின் Book Report ‘யானை டாக்டர்’ கதையை சிலாகித்திருந்தது. எங்கள் குடும்பத்தின் அதிகாரபூர்வமான விலங்காக யானை அறிவிக்கப்பட்டது. குழந்தைகளின் பிறந்தநாளுக்கு பரிசுக்குப் பதிலாக கென்யாவின் புகலிடங்களில் காப்பாற்றப்படும் யானைக்குட்டிகள் தத்தெடுக்கப்பட்டன.


எங்கள் வாசிப்பும் ஜெ.யின் படைப்புகள், அவர் அல்லது அவரது வாசகர்கள் பரிந்துரைத்த பிற படைப்புகள் என முன்னகர்ந்தவண்ணமிருந்தது. எங்கள் இந்தியப் பயணங்களில் இரண்டு பெரிய பெட்டிகள் எப்போதும் புத்தகங்களைச் சுமந்து வந்தன. புதுப் புத்தகங்களைப் பரப்பி வைத்து விதவிதமான வகைமைகளில் புத்தக அலமாரியில் அடுக்குவது ஒரு அலாதியான அனுபவமாயிருந்தது. வீட்டிலேயே வாசித்ததைப் பேச, பகிரத் துணையிருப்பது ஒரு கொடை. அவ்வாறு நாங்கள் வாசித்த ‘காடு’ நாவல் அளித்த உள எழுச்சி வார்த்தைகளில் விளக்க இயலாதது. குட்டப்பனை அவளுக்குப் பிடித்திருந்தது. எனக்கு குட்டப்பனையும் அதைவிடக் கூடுதலாக நீலியையும் பிடித்திருந்தது. ஒரு தியான நூலை வாசிப்பது போல் கிரிதரனாகவே என்னை உணர்ந்து, ஏதாவதொரு பக்கத்தைத் திறந்து மீள மீள வாசித்திருக்கிறேன். வாசித்து முடித்து நாங்கள் இருவரும் பேசிப் பேசிப் பெருக்கிக்கொண்டதில் பனி படர்ந்த நியூஜெர்ஸியின் குளிர்ந்த நிலத்தை, ‘காடு’ நாவலின் கஞ்சீர மரங்களும் அயனி மரங்களும் சூழ்ந்துகொண்டன.



இதற்குள் ஜெ ‘வெண்முரசு’ எழுதத் துவங்கியிருந்தார். மலைக்க வைக்கும் பெருஞ்செயல். ‘முதற்கனல்’ ஆரம்பித்தபோது, அதன் மொழியும், அதன் கனவு வெளியும் கதைமாந்தர்களும் எங்கள் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது என்றே சொல்லவேண்டும். பணிக்காக நியூயார்க் செல்லும் என் ரயில் பயணங்கள் ‘வெண்முர’சால் தித்திக்கத் தொடங்கின. ரயில் நியூயார்க் சென்றடையும்போது நான் பீஷ்மரோடு சப்தசிந்துவிலோ, அர்ஜுனனோடு காமரூபத்திலோ அலைந்துகொண்டிருப்பேன். சுற்றிலும் உள்ள மனிதர்களின் அன்றாடச் சச்சரவுகளும் சிக்கல்களும் பொருளியல் வெற்றிக்காக ஓடும் ஓட்டங்களும் மிகவும் சிறியதாகத் தெரிந்தன. அசுர வேகத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ‘வெண்முரசு’ வரிசை நூல்கள் வந்துகொண்டிருந்தன. ‘நீல’த்தின் கவிமொழியில், கனவும் பித்தும் முயங்கித் திளைக்கும் சொற்களின் இனிமையில் கழிந்த உன்னதமான நாட்கள் அவை. கண்ணன் குழலோசை எப்பொழுதுமென காதில் ஒலிக்க, ராதையென வலம் வந்த நாட்கள். அது நான் இளமையில் பயின்ற கர்னாடக இசையை மீண்டும் தொடர்வதற்கான உந்துதலைத் தந்தது. எனக்கான இசை ஆசிரியரையம் பிரபஞ்சம் காட்டித் தந்தது என்றே சொல்லவேண்டும். முதிரா இளமையில் கற்றபோது வெறும் பயிற்சியாக மட்டும் தெரிந்த இசைப் பாடங்களும் கீர்தனைகளும் இப்போது எனக்கான யோகமாய்த் தெரிந்தன. பள்ளிப்பருவத்தில் நன்றாகப் பாடி பரிசையோ, பிறரையோ கவரும் நோக்கம் மட்டுமே முதன்மையாக இருந்தது. இப்போது பயில்வது எனக்காக மட்டுமே. ஒரே ஒரு ஸ்வரத்தையோ, பிடியையோ முழுவதும் தோய்ந்து அவை தரும் உணர்வைக் கடத்தும் விதத்தில் பாடினால் போதும், அந்த நாள் முழுவதும் மதுரத்தில் நிறையத் தொடங்கியது. வாசிப்புக்கும் கனவுக்கும் கிருஷ்ண மதுரம். கூடவே தொலைந்தும் கரைந்தும் போக நாத மதுரம். வாசிப்பும் இசை பயிலலும் எனக்கான ஆன்மிகம் என்று உணர்ந்த தருணம்.

2015ல் நிகழ்ந்த ஜெ.வின் அமெரிக்கப் பயணம், அவரது படைப்பின் பிரமாண்டத்துக்கு இணையாக அவரது ஆளுமையையும் எங்களுக்குள் விஸ்வரூபமெடுக்க வைத்தது. அவரை விட்டு அகலாமல் இருந்த ஆறு நாட்கள். ‘இந்திர நீலம்’ எழுதிக்கொண்டிருந்தார். கால் கடுக்க நியூயார்க் நகரைச் சுற்றிவிட்டு நடு இரவு தாண்டி வருவோம். நண்பர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். கொட்டி முழக்கும் பேரருவியின் கீழ் நின்று குளிரக் குளிர நனைந்துகொண்டேயிருந்தோம். அகம் மலர வெடித்துச் சிரிக்க வைத்துக்கொண்டேயிருப்பார். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் இத்தனை கொண்டாட்டமானதா என்று எண்ணி வியக்க வைத்தார். கற்றலின் பேரின்பத்தை நாங்கள் உணர்ந்த கணங்கள். வீடடைந்தபின் எல்லோரும் உறங்கச் செல்ல மடிக்கணியைத் திறந்து பேசும் வேகத்துக்குத் தட்டச்சு செய்ய ஆரம்பிப்பார். கணினியின் திரையும் அவர் முகமும் ஒளிகொள்ள, எந்தக் குறிப்பும் இல்லாமல், மயனின் கையென ‘இந்திர நீல’த்தின் உலகம் கட்டியெழுப்பப்பட்டுக்கொண்டிருக்கும். காலையில் நாங்கள் எழுவதற்கு முன்னாலேயே அவரின் படைப்புத் தொழில் துவங்கியிருக்கும். செயல் யோகம் கண் முன்னால் நிகழ்வதை ஓசையெழாமல், சொல்லேதும் எஞ்சாமல் பார்த்துக்கொண்டிருப்போம்.


அவரது எழுத்து, வாசிப்பு என்பவற்றைத் தாண்டி, குழந்தை வளர்ப்பிலிருந்து பயணங்கள் வரை எங்கள் வாழ்வின் எல்லாத் தளங்களையும் மாற்றியிருந்தது. ‘தேர்வு’ என்ற ஒரு கட்டுரை போதும், குழந்தைகளின் உலகைக் கனிவோடு அணுக. தன்னறம், செயலூக்கம் குறித்த அவரது கட்டுரைகள் எங்கள் வாழ்க்கையை மறுபார்வை செய்ய வைத்தன. மகேஸ்வரி ஓவியம் வரைவதில் அவளுக்கிருந்த வேட்கையைக் கண்டடைந்தாள். ஓவிய வகுப்புகளுக்குச் சென்று முறையாகப் பயில ஆரம்பித்தாள். குடும்பத்தின் மனங்களும் அவளது ஓவியமும் ஒருசேர வண்ணம் கொண்டன. அவரது பயணக் கட்டுரைகளின் தாக்கத்தால் எங்கள் பயணங்களும் அர்த்தமுள்ளவையாக மாறத் தொடங்கின. எங்கள் பயணங்களில் காணக்கிடைக்கும் நிலக்காட்சிகளையும், மனிதர்களையும், அனுபவங்களையும் எந்த முன்முடிவுகளுமின்றி அந்தப் பயணங்கள் அளிக்கும் வெகுமதியென மனம் ஏற்கத் தொடங்கியது.




அவரது செயல் யோகம், பெருந்தொற்றுக் காலத்தின் வீடடைவை வாசிப்பின், கலைச் செயல்பாட்டின் கொண்டாட்டமாக மாற்றியது. புனைவுக் களியாட்டுக் கதைகள் படைப்பூக்கத்தின் உச்சம் தொட்டவை. இந்தக் கதைகளை அவரை அணுக்கமாகத் தொடரும் வாசக நண்பர்கள், ‘சுக்கிரி’ என்ற குழுமமாக ஒன்றிணைந்து இணையத்தில் ஸூம் செயலியின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக வாரத்துக்கு ஒரு கதை வீதம் விவாதித்து வருகிறோம். தொடர்ச்சியான உரையாடலால் அவர்களில் பலர் இன்று எங்கள் மனதிற்கினிய நண்பர்கள். இவர்களில் பலர் என்னிலும் பாதி வயதுடையோர். பொங்கிப் பெருகும் உற்சாகத்துடன் எங்களை இன்னும் இளமையாக வைத்திருக்கிறார்கள்.

ஓவியம்: மகேஸ்வரி

ஜெயமோகனின் படைப்புகளும், ஆளுமையும் எங்கள் இருவருக்குள்ளும் நிகழ்த்தியது உருமாற்றத்தை. புழுவிலிருந்து பட்டாம்பூச்சியாய் மாற நிகழும் பயணம். அவரின் படைப்புகள் சூழ்ந்த கூட்டினுள் கூட்டுப்புழுக்களாய் சொக்கிப்போய் கிடந்தோம். வெளியே வருகையில் பட்டாம்பூச்சியாய் மாறியிருக்கிறோம். எழுதிக் குவித்து, எட்டமுடியா வானத்தின் உச்சியில் அவர் சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கிறார். பட்டாம்பூச்சியாக்கி எங்களையும் பறக்க வைத்திருக்கிறார். உயரம் குறைவென்றாலும் நாங்கள் பறப்பதும் அதே வானத்தில்தானே? எங்களுக்கான விசும்பைக் காட்டித்தந்த இனிய ஆசானே, இன்னுமொரு நூற்றாண்டிரும்.
***

No comments:

Powered by Blogger.