உரையாடும் ஜெ - சந்தோஷ் லாவோஸி
நிராகரிப்பின் வழியாகவே வாழ்வை அறிந்துகொண்டிருந்தேன். பள்ளியில் பருமனாக இருந்ததால், கேரளாவில் தமிழன் என்பதால், தில்லியில் ஹிந்தி தெரியாததால், கல்லூரியில் மற்றவர்களின் பகட்டு வாழ்வியலுக்குள் ஒன்ற இயலாததால் என என்னை புறம்தள்ள சகமாணவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன. தனிமையில் எனது தன்மதிப்பும் வலுவிழந்துகொண்டிருந்தது.
அதிலிருந்து வெளிவந்து என்னை நான் கண்டடையும் முதல் கண்ணியாக டிவிட்டர் அமைந்தது. 2011 காலகட்டத்தில் செயல்படத் தொடங்கி, சில மாதங்களிலேயே பரவலாக அறியப்பட்டேன். எனது மொழித் திறன்களை கண்டடைந்தேன். ஆயினும், விரைவிலேயே அந்தச் சூழலும் எனக்கு அந்நியமாகியது. அரசியல் சரிகளைத் தாண்டி பேசும்பொழுது, அவர்களும் என்னை நிராகரிக்கத் தொடங்கினர். அதே காலகட்டத்தில் MBA வகுப்புகள் தொடங்கின. நிராகரிப்பில்லாத முதல் சூழல், ஆனாலும், சினிமா, கால்பந்து, series, வீடியோ கேம், மது என எதன் அடிப்படையிலும் நண்பர் குழுக்களில் இணைய இயலவில்லை. தனித்திருந்தேன். ஓரளவிற்கு முயன்று அவர்களுடன் Big Bang Theory பார்ப்பது, அடிக்கடி சினிமாக்களுக்குச் செல்வது என இணைய முயன்றாலும், ஒரு நிறைவின்மை.
பள்ளிகளின் நிராகரிப்பை ‘இது எனது இடமல்ல’ என கடந்து வர முடிந்தது. ஆனால், இணையம் மற்றும் முதுகலைக் கல்லூரி இரண்டுமே என்னை ஏற்ற சூழல்கள். ஆனாலும், அவற்றின் மைய ஓட்டத்தில் இணைய இயலவில்லை என்பது எனது குறைபாடா? எனது தேடல்கள், எனது விருப்பங்கள், எனது கேள்விகள் தவறானவையா? என பல குழப்பங்கள்.
அந்தக் காலகட்டத்தில்தான் ஜெவின் ‘சராசரிகள்’ என்ற கேள்வி பதிலை வாசித்தேன். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட சிலர், விதி சமைப்பவர்கள் போன்ற கட்டுரைகள். அன்றிலிருந்து 2018-ல் ஜெவை சந்திக்கும் வரை, நான் சோர்ந்து போகாமல் இருப்பதற்கும், எந்தச் சூழலிலும் தலை குனியாமல் நிற்பதற்கும் ‘நான் சராசரியல்ல’ என ஜெ கொடுத்த நம்பிக்கையே முதல் காரணம்.
ஜெவை முதன்முதலில், விலகியிருந்து 2018-ல் சந்தித்தேன். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு நாமக்கல் புதிய வாசகர் சந்திப்பில் கிடைத்தது. எனது வாழ்வை மாற்றியமைத்த இன்னொரு தருணம் அது. சரியான வாழ்க்கையா என்ற கேள்வி பதிலில் ஜெ கூறியிருக்கும் கருத்துக்களை நேரடியாக அவரது சொற்களில் கேட்டேன். சம்பளத்திற்காக மட்டுமே செய்த வேலையை விட்டுவிட்டு, மனதிற்கு நெருக்கமான செயல்களில் இன்று என்னை நான் ஈடுபடுத்திக்கொண்டிருப்பதில் ஜெவின் தாக்கம் மிக அதிகம்.
இன்று நான் வாழும் வாழ்வு, எனது மனநிறைவு என அனைத்தும் ஜெ அளித்தது. எனது தந்தையின் இடத்தில் அவரை வைத்திருக்கிறேன்.
2
எனக்கு மட்டுமல்ல, தமிழில் நுண்ணுணர்வு கொண்ட, அறிவுச்செயல்பாட்டில் பங்காற்றும் ஒவ்வொருவருக்கும் எழும் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வருகிறார். அவர்களை ஆற்றுப் படுத்துகிறார். இளம் நண்பர்கள் பலருடன் பேசும் பொழுது, என்னைப்போலவே பலரும் அவருடனான மானசீக உறவில் இருப்பதை காண்கிறேன். அவர்களுக்கு மட்டுமேயான ஒரு ஜெவை உருவகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து உரையாடல்கள் வழி ஒரு தலைமுறையை வழிநடத்தி வருகிறார். தன்மீட்சி கட்டுரைத் தொகுப்பு அவ்வகை உரையாடல்களின் சிறு பகுதி மட்டுமே. இந்தக் கட்டுரை தொகுப்புகள் முன்வைக்கும் தன்னறம் மற்றும் நுண்ணுணர்வுள்ள ஒருவன் சராசரிக்கும் மேலானவன் என்ற நம்பிக்கை அளிக்கும் தன்முனைப்பு பலரின் வாழ்வை வழிநடத்தி வருகிறது.
ஆனால் ஜெ அதோடு நிற்கவில்லை. இவ்வகை நுண்ணுணர்வு கொண்டவர்கள் சந்திக்கக்கூடிய வாழ்வியல் இடர்களுக்கு வழிகாட்டுகிறார்.
நுண்னுணர்வுகளின் அலைக்கழிப்புகளின் இடையே உலகியல் வாழ்வில் எப்படி வாழ்வது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். கல்லூரி உணவகத்தில் தன்னைவிட குறைந்த வயதுடையவர்கள் வேலை செய்வதை பார்த்து சஞ்சலமடையும் சிறுவன் முதல் அலுவலகத்தில் சரியாக வேலை செய்யாத ஊழியரை தண்டிக்கத் தடுமாறும் அதிகாரிகள் வரை அனைவருக்கும் கூற ஜெவிடம் பதிலிருக்கிறது.
தத்தளிக்கும் மனங்களிடம், நான்கு வேடங்கள், இரண்டு முகங்கள் என பொருளியல் சமன்வயத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். அதன் எடுத்துக்காட்டாக வாழ்ந்தும் காட்டுகிறார்.
3
ஒரு அறிவியக்கவாதியாக மட்டுமல்லாமல்… ஒரு குருவாய்.. வாழ்வின் அனைத்து இடர்களுக்கான கேள்விகளும் ஜெவிடம் முன் வைக்கப்படுகின்றன. அல்லலற்ற வாழ்க்கையை எதிர்கொள்வது குறித்தும் அவரது வார்த்தைகள் தேவைப்படுகின்றன.
திருமணம் செய்வதா வேண்டாமா, குழந்தைகள் வேண்டுமா வேண்டாமா, திருமணத்திற்கு வெளியேயான உறவுகள், குழந்தை வளர்ப்பு, உடல்நலன் சார்ந்த இடர்கள்… வயிற்று வலி, மூச்சு சார்ந்த பிரச்சனைகள், தூக்கம் குறித்த இடர்கள், பகலில் தூங்கக்கூடிய நிலை, டின்னிட்டஸ், உகவர்கள், முதியவர்களை கவனித்துக்கொள்ளுதல், முதுமையின் தனிமை என வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், ஜெவின் வார்த்தைகள் பல்லாயிரம் நண்பர்களை ஆற்றுப்படுத்துகின்றன.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் பரவலாக ஒரு சோர்வு நிலை நிலவியபோது, புனைவுக்களியாட்டு என தொடங்கி, வாசகர்களை படைப்பூக்கத்தின் பக்கம் திருப்பினார். வாசகர்களுக்கு கதை எழுதும் மற்றும் கதை சொல்லும் போட்டி அறிவித்தார். விருப்பமுள்ள நண்பர்களை குழுவாக இணைத்து, தமிழில் முதல் சூம் நாடகம் தொடங்கி பல ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடவைத்தார். வீடடங்கில் எவரும் சோர்ந்து போய்விடக்கூடாது என சூம் வழியே 100-க்கும் மேற்பட்ட வாசகர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடினார்.
ஆசான்.. குரு… என்பதற்கு மேல்… கனிந்த தந்தையாக நம் அனைவருக்கும் வழிகாட்டிக்கொண்டிருக்கும் ஜெவை, அவர் வழியே எழும் குரு நிறையை வணங்குகிறேன்.
Fantastic!
ReplyDelete