ஞானசபை - சா. ராம்குமார்



1997 ம் வருடம் எழுதப்பட்ட விஷ்ணுபுரம் நாவல் எனக்கு இன்றும் வியப்பாகவே உள்ளது. அந்த ஆச்சரியத்திற்கு காரணம் அதன் புதுமையோ, பரந்த வீச்சோ, அடர்த்தியோ, அந்தக் கனவின் பிரும்மாண்டமோ கூட இல்லை. காலத்தைக் கடந்து நிற்க இயல்பிலேயே அதனுள் பல அடுக்குகளை கொண்டுள்ளது என்பதில்தான் எனது வியப்பு உள்ளது. தனது கனவை அந்த அடுக்குகளுக்குள் கூர்மையாகவும் அடர்த்தியாகவும் செதுக்கியிருக்கிறார். முக்கிய படைப்புகளும் காவியமாக உருமாறும் இடம் அது. 

நாவலுடைய பல்வேறு அடுக்குகளுள் மொழி என்பதை ஒரு அடுக்காகக் கொண்டால், ஏன் அப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆசிரியரே முன்னுரையில் எழுதியிருக்கிறார். தனது வாசகர்களுக்காக எழுதுவதைவிட வாசகர்களை உருவாக்க எண்ணி எழுதப்பட்டிருக்கும் மொழி அது. வடமொழிச் சொற்கள மிகுதியாக இருந்த மணிப்பிரவாள நடை 1980களிலேயே மிகவும் குறையத்தொடங்கிவிட்டது. 1990களில் தமிழ் இலக்கிய சூழலில் கிட்டத்தட்ட இல்லை என்றுதான் சொல்ல முடியும். இந்த நாவலின் மொழி புதிய ஒரு நடையை கொண்டிருக்கிறது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் பயணிக்கும்போது நான் விசித்திரமாக கண்டது இராமேஸ்வரம்.  முதன்முறையாக தமிழகத்தில் தமிழ் அல்லாத பிறமொழி பேசும் மக்களை கனிசமான அளவில் அங்குதான் கண்டேன். கோவில் முழுக்க வடமொழியின் சப்தம். அதைவிட விசித்திரமாக உணவு விடுதியில் சிற்றுண்டிக்காக அமரும் போது பதினைந்து வயதிருக்கும் ஒரு சிறுவன் பேசிய ஹிந்தி. நான் ஹிந்தி பேசுபவனோ என்று எண்ணி அப்படி கேட்கத்தொடங்கினான். அந்தச் சிறுவன் மதுரைக்கு கூட சென்றது கிடையாது. இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு காசியில் அவ்வளவு மொழிகளைக் கண்டேன். 

வரலாற்றில் முக்கியமான ஒரு கோவில் நகரத்தில் ஒன்றிற்கும் மேலான ஆட்சிமொழியும் பலப்பல மக்கள் மொழியும் இருந்திருக்கும். இந்த நாவலை வாசிக்கும் பொழுது அந்த நகரத்தின் புராணமும் பல்வேறுதரப்பட்ட மக்களும் இந்த மொழியின் ஊடாக நமக்குள் தெளிகிறார்கள். 

ஜெயமோகனின் வெண்முரசைக் கொண்டு விஷ்ணுபுர நாவலின் மொழியை இன்னும் கூட ஒப்பாய்வு செய்யலாம். ஆசிரியரின் மொழியும் இந்த இருபத்தைந்தாண்டுகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டுள்ளது. உரைநடையில் பெரிய மாறுபாடு இல்லை என்றாலும் மொழியில் ஒரு மாற்றத்தை வாசிக்க முடிகிறது. இது தமிழ் புனைவுலகில் தனித்தமிழ் சொற்கள் முழுமையாக ஏற்கப்பட்ட சூழலைக் காட்டுகிறது. ஆனால் வெண்முரசு வந்த புதிதில் அதே மொழி மிகவும் பழமையாக உள்ளது என்ற கருத்தும் இருந்தது. எனக்கு அப்படி தோன்றவில்லை. எந்த ஒரு மொழியில், நடையில் ஒரு படைப்பை எழுத வேண்டும் என்பது அந்த எழுத்தாளருடைய விருப்பத்தை பொறுத்தது. அந்தப் படைப்பிற்கு அது எந்தளவு நேர்மையாக இருக்கிறது என்பது மட்டுமே விவாதப்பொருளாக இருக்க முடியும்.

விஷ்ணுபுரம் நாவலின் இடைப்பட்ட பகுதியில் தத்துவங்களுக்கு இடையிலான ஞானப்பரீட்சை அதை முன்னெடுப்பவர்களால் நடத்தப்படுகிறது. ஒரு தத்துவத்தை விவாதித்து அது எந்த அளவு மொத்த பிரபஞ்சத்தையும் விளக்க முற்படுகிறது என்பதை ஆராய்ந்து கிட்டத்தட்ட அக்னிப்பரீட்சைக்கு உட்படுத்திய பின்னர் அது ஒரு தேசத்தின் ஆளும் தத்துவமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எண்ணிப்பார்த்தால் இது மிகவும் வியப்பாக உள்ளது. அதைவிட ஆச்சர்யம் அந்த தத்துவத்திற்கு நிகராக அதை முன்னிறுத்துபவருடைய ஆற்றலையும் சார்ந்து உள்ளது. உலகை ஆளும் சித்தாந்தங்கள் எவையும் இப்படி ஒரு நேர்ப்பட்ட விவாதத்தால் நிலைபெற்றவை அல்ல. பெரும் போர், பேரிழப்பு, வஞ்சகம் போன்றவற்றால் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டுள்ளது. 

கௌஸ்துபம் பகுதியில் அங்காரகன் என்னும் யானை நடக்கும் அந்த விவாதங்களை ஏதோ மனிதர்கள் கூடிப் பேசிக்கொள்ளும் காட்சியாக பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்தச் சபையை பல்வேறு கோணத்தில் இருந்து எழுத்தாளர் நம்மை அதை சுவீகரிக்க வைக்கிறார். அந்த ஞானசபையில் இந்தியாவின் அனைத்து தத்துவ மரபுகளின் பங்களிப்பும் உள்ளன. இந்த நாவல் எழுதப்பட்ட இருபத்தைந்தாண்டுகள் நிறைவடைந்த இந்த வருடத்தில் எனக்கு தோன்றியது அந்தச் சபையில் தத்துவங்களுக்கு நிகராக அறிவியல் வைக்கப்படவில்லை. அறிவியல் அன்றைய காலத்தில் கிட்டத்தட்ட அங்காரகன் போன்றுதான் இருந்திருக்க வேண்டும். 


சபைக்கு அரசராக இருந்த பவதத்தரும் சரி பிறரும் சரி உயிர் தோற்றத்திற்கான காரணம் என்ன, தோற்றம் என்ற ஒன்று உண்டு என்றால் மறைவு என்ற ஒன்று உண்டா. தோன்றுவதற்கு முன் தோற்றம் எந்த வடிவத்தில் இருந்தது என்பதை நோக்கியே விவாதம் செல்கிறது. பலர் அந்த இடங்களில் வழுவி சரியாக சொல்ல இயலாமல் தோற்றுப்போகின்றனர். அஜிதன் மட்டும் தயிருக்கு காரணம் பால் தான். எது தோன்றியதோ அதற்கு முன் எது இருந்ததோ அதுவே காரணம் என்றும் அதை அவ்வளவு ஆராய வேண்டியதில்லை என்றும் கூறி வாதத்தை வென்றெடுக்கும் வழிக்கு செல்கிறார். 

நவீன உலகின் வாசகனாக எனக்கு அறிவியலுக்கு அந்தச் சபையில் ஒரு இடம் இருந்திருக்கும் என்றால் இந்த தத்துவ விவாதம் எப்படி சென்றிருக்கக் கூடும் என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். விஞ்ஞானம் என்று அஜிதன் கூறினாலும் அது இன்றைய அறிவியலைக் குறிப்பதாக கொள்ள முடியாது. இன்றைய அறிவியல் கிட்டத்தட்ட தத்துவத்தை நெருங்கி வருவதைக் காண முடியும். வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிப்பதைவிட அப்படி கண்டுகொண்டாலும் தொடர்பில்லாமல் இருப்பதே நல்லது என்று ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறுகிறார். இது அறிவியலில் இருந்து சற்று எட்டி உளவியல், தத்துவம் பக்கம் செல்லும் முயற்சியே ஆகும். 

ஆன்மாவிற்கு மரணம் உண்டா என்ற கேள்விகள் இந்த விவாதங்களில் வருகின்றன. இன்றைய தினத்தில் இதுபோன்ற சபை அழைக்கப்பட்டு அப்படி ஒரு விவாதம் நடக்கும் என்றால் அறிவியலுக்கு நிச்சயம் ஒரு இடம் இருந்திருக்கும். அறிவியல் ஆன்மா என்பதனை மூலைக்குள் இயங்கும் ஒரு பெருங்கணக்கு என்று எளிய முறையில் விளக்க முற்படும். அந்தக் கணக்கின் வகையீடுகளை இன்றைய செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்கள் கொண்டு தொகுத்து ஆன்மாவை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள முடியும் என்று மெய்ப்பிக்க முயற்சி செய்திருக்கும். 

இந்த நாவல் எழுதப்பட்ட காலத்திலேயே பிரபஞ்ச பெருவெடிப்புப் பற்றிய தகவல்கள் வரத்தொடங்கியிருந்தன. ஆனால் இன்றைக்கு இருப்பது போல அன்று அந்தத் தகவல்கள் அவ்வளவு எளிதாக கிடைக்க்ப்பெற்றிருக்காது என்றே எண்ணுகிறேன். எனவே எழுத்தாளருக்கு அதைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஆச்சர்யமாக இந்த விவாதங்கள் யாவும் கிட்டத்தட்ட அவற்றை ஒப்புக்கொண்டது போலத்தான் செல்கிறது. வேதத்தில் இதைப் பற்றிய எண்ண ஓட்டங்கள் இருந்தாலும் பெரும்பாலான தத்துவங்களும் அதை ஏற்றுக்கொண்டு அந்தப் புள்ளியில் இருந்து விவாதங்களை வைக்கின்றன. பெருவெடிப்புக்கு மறுபக்கம் என்ன நிகழும் என்பதை இந்த நாவலின் முடிவு காட்டுகிறது. பெரும் பிரளயம் கொண்டு அனைத்துமே பஞ்சபூதங்களால் மூடப்பட்டு, நிகழ்ந்தவை அழிந்து புது நிலம் தென்படுகிறது. பிரபஞ்ச பெருவெடிப்பு என்ற அறிவியல் கோட்பாடு வந்த காலத்தில்கூட பிரபஞ்ச சுருக்கத்தைப் பற்றி அறிவியலாளர்கள் எண்ணியிருக்கவில்லை. ஆனால் இன்று அதுவே பிரபஞ்சத்தின் சாத்தியமான பாதை என்று உணரப்படுகிறது. தத்துவத்தின் முடிவு அறிவியலின் தொடக்கமா அல்லது அறிவியலின் இலட்சியமே தத்துவத்தை சென்றடைவதா என்பது சிந்தித்து விவாதிக்க இன்று சரியான காலமாக இருக்கும். 

இந்த நாவல் பின்நவீனத்துவதன்மையுடன் இருப்பதற்கு அதன் அமைப்பு முக்கிய ஒரு காரணம். விஷ்ணுபுர கோவிலில் இருக்கும் மூலவருடைய கிடந்த நிலையில் பாதத்தில் இருந்து தொடங்குவதாக அமைந்துள்ளது. ஆனால் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ள இந்த நாவலை எப்படியும் வாசிக்கலாம். ஶ்ரீ பாதத்தில் விஷ்ணுபுரத்தின் மக்கள் உள்ளனர். அதில் அவர்களுடைய வாழ்க்கை அடங்கியுள்ளது. எளிய போராட்டங்கள், வாழ்வைப் பற்றிய அங்கலாய்ப்புகள், களிப்பு என்று நகரமும் வாழ்வும் இணைந்த இடமாக உள்ளது.  கௌஸ்துபம் பகுதியில் மேலே சொன்னது போல தத்துவங்களுக்கு இடையிலான அக்னிப்பரீட்சை. இறுதியில் அஜிதனுக்கே தர்க்கத்தின் இறுதியில் எதுவும் இல்லை என்று புரிதலோடு இறுதிப்பகுதியான மணிமுடி தொடங்குகிறது. மணிமுடியில் ஶ்ரீபாதத்தில் இருந்த எளிய சிக்கல்களுக்கான விடை தத்துவ தேடல்தான் என்று எண்ணும்போது கௌஸ்துபம் வேறு ஒரு தரிசனத்திற்குள் நம்மை அழைத்து செல்கிறது. எளிய வாழ்க்கையும், தத்துவ சிக்கல்களும் காலம் உருவாக்கப்படும் வெறுமைகளுக்குள் உட்பட்டவையே என்று சொல்லிக்கொண்டு செல்கிறது. இறுதியில் அனைத்தும் மீண்டும் அழிந்து முதலில் இருந்து தொடங்கும் அந்த நிலை பெரும் வெறுமையை வாசகர்களுக்கே தருகிறது.

அனிதா அக்னிஹோத்ரி, சா. ராம்குமார்



நாவலின் மையக்கருத்தாக இந்த வாழ்வின் முடிவில்லாத சுழல் என்று எடுத்துக்கொண்டால் இந்த நாவலை எந்தப் பகுதியில் இருந்தும் வாசிக்கலாம். மணிமுடியில் தொடங்கினால் அழிந்த நிலையில் இருக்கும் விஷ்ணுபுரத்தில் யாரெல்லாம்தான் வாழ்ந்தார்கள் என்று நம்மை சற்றே ஆர்வமாக்கும். அதன் பின் ஶ்ரீபாதத்திற்கு சென்றால் அந்த பிரும்மாண்டம் நமக்கு புலப்படும். இதே நாவலை இடைப்பகுதியில் இருந்தும் வாசிக்கலாம். காலத்தால் நாவலின் முதற்பகுதி அதுவே. நாவலின் எந்தப் பகுதியில் இருந்து நாம் தொடங்கி வாசிக்கிறோம் என்பதைக் கொண்டு இந்த நாவல் நமக்கு இறுதியில் தரும் உணர்வு மாறக்கூடும். இந்த நாவலுடைய அமைப்பின் தனிச்சிறப்பாக அதை நான் சொல்வேன். காலம் என்பதே இந்த நாவலில் ஒரு விமானத்தில் இருப்பதுபோல அடுக்காக உள்ளது. அந்த காலம் என்பதை ஒரு அடுக்காக நாவலில் மட்டும் இல்லாமல் நாம் வாசிக்கும்போது அதை கடத்தியிருக்கிறார். 

தனிப்பட்ட வாழ்வில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று நமக்கு நாமே சற்றே சிந்தித்து வாசிக்க தொடங்கினால் ஒவ்வொரு காலக்கட்டத்தில் இது வெவ்வேறு உணர்வுகளை தரக்கூடும். ஒரு பெரிய ஓவியத்தைப் பார்ப்பது போலத்தான் இதை நான் உணர்கிறேன். ஒரே நாளில் சூரிய ஒளியின் தன்மையினால் நமக்கு அந்த ஓவியம் வெவ்வேறாக காட்சியளிக்கும். 

ஜெயமோகனை அறிந்த பின்னரே இந்த நாவலை வாசித்த காரணத்தினால் எனக்கு இந்த நாவலை பற்றி புதிய கேள்விகளோ விளக்கங்களோ தேவைப்படவில்லை. இந்த நாவலை வாசிக்கும் முன் அவருடைய வேறு எழுத்தக்களை வாசித்து அந்த மொழிக்கு பழகியிருந்தால் மட்டும் உதவாது. சுயபிரக்னையின் ஊடாக சில அறிதல்களை கண்டடைந்திருந்தால் இந்த எழுத்து சென்றடையும் ஆழம் காணக்கிடைக்கும். 

தனிப்பட்ட உரையாடலில் ஜெயமோகன், ‘புத்தருக்கு இந்தியாவைப் பற்றிய ஒரு கனவு இருந்தது. அதே போல எனக்கும் ஒரு கனவு உண்டு. அது மானுடத்தைச் சார்ந்தது, தத்துவத்தை சார்ந்தது’ என்று கூறினார். ஜெயமோகன், கிட்டத்தட்ட இந்தியாவை ஒரு ஓவியக்காட்சியாக காண எண்ணி வடித்த நாவல்தான் இந்த விஷ்ணுபுரம். 

ஜெயமோகனுடன் தொடர்ந்து பேசிக்கொண்டோ மின்னஞ்சல் பதிவுகள் மூலமாகவோ உரையாடுபவன் அல்ல நான். வருடத்திற்கு ஓரிரு முறை விஷ்ணுபுரம் விழாவை குறித்து மட்டுமே பேசியிருக்கிறேன். மிக அரிதாக மேகாலயாவிற்கு ஒரு முறை தனிப்பயணமாக வந்திருந்தார். காலை முதல் மறு நாள் வரை எழுத்து மட்டுமே. அவரோடு கழித்த அந்த சில நாட்கள் என்றும் நினைவில் இருப்பவை. நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பேசி இருக்கும்போது அவர் செல்லும் உயரம் வேறு. ஒருவகையில் அது கணக்கிடப்பட்டது. ஆனால் தனிப்பட்ட உரையாடல்களில் அவரோடு அவரைக் கண்டடைவது ஒரு தரிசனம்தான். தனி மனிதர் மறைந்து தூய்மையான ஒரு இலட்சியம் மட்டும் எழும் தருணம் அது. அவரை ஒரு எழுத்தாளராகவோ படைப்பாளியாகவோ மட்டும் சுருக்காமல் இலட்சியமாக பார்க்க விழைந்தால் அது தரும் உந்துதல் அளவில்லாதது. 

இந்த மொழியையும் அவருடைய எழுத்துக்களை வாசிக்க கிடைத்த இந்த வாய்ப்பையும் என் வாழ்வை முழுமையாக்கும் முக்கிய இரு அங்கங்களாக உணர்கிறேன். அறுபது வயதை கடந்து ஒவ்வொரு நாளும் கனவுகளோடும் செயலூக்கத்தோடும் சென்றுகொண்டிருக்கும் ஆசிரியருக்கு நான் எழுதிய இரு வரி பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி இங்கே

எங்கிருந்து தொடங்கினாலும் முடியாது
எவ்வளவு சொன்னாலும் தீராது

Happy Birthday Jey!

சா.ராம்குமார் 
சில்லாங்
மேகாலயா
25.05.2022

***

No comments:

Powered by Blogger.