ஒளி பாய்ச்சிகள் - வெண்முரசின் துணைப் பாத்திரங்கள் - கா. சிவா


மந்திரத்தை உச்சரித்து தேவர்களை வரவழைத்து அவர்கள் மூலமாக பிள்ளைகள் பெறுவது, பெருந்துயரின்போதும் அறத்தை கைவிடாதிருத்தல், உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் இலக்கை நீருக்குள் தெரியும் பிம்பத்தை நோக்கியே வீழ்த்துவது, கரு கலைந்து உதிர்ந்த குருதியிலிருந்து நூறு மைந்தர்களை உருவாக்குவது, அப்படி உருவான நூற்றுவரையும் ஒருவரே கொல்வது...  இம்மாதிரியான பலப்பல உச்சபட்ச புனைவுகள் எனத் தோன்றும் வாழ்க்கைத் தருணங்களின் தொகுப்பாக உள்ளது வியாசர் இயற்றிய மகாபாரதம். இதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் புராண நாயகர்கள், அவர்கள் இயற்றுவதை சாதாரணமானவர்களால் ஆற்ற இயலாது என்ற கருத்தையே மகாபாரதத்தை அறிந்த பெரும்பாலானவர்கள் கொண்டிருக்கிறார்கள்.  மகாபாரதத்தில் படைக்கப்பட்ட அனைவருமே மாமனிதர்கள் போல உள்ளதால், வாசிப்பவர்கள், தங்கள் தலையை உயர்த்தி வியப்புடன் வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே இருக்க இயலும். 


இந்நிலையில், மகாபாரதத்தை வெண்முரசு எனும் நவீன காப்பியமாக எழுதத் தொடங்கிய ஆசிரியர் ஜெயமோகன், இக்காப்பியத்தை  வாசிப்பவர்கள் இதில் தங்களையும் ஒரு பாத்திரமாக உணரவைக்க சிறப்பான உத்தியொன்றை கையாண்டுள்ளார். தன் நூலில் அதிமானுடர்களுடன் எளியவர்களையும் படைத்துள்ளதுடன் அவர்களுக்குள் உரையாடல் நிகழ்வதாகவும் காட்டுகிறார். இந்த உத்தியின் மூலம் எளிய மனிதர்களின் பாத்திரங்களுடன் தங்களைப் பொருத்திக் கொள்வதற்கும் புராண நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்கும் வாசிக்கும் அனைவருக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். இந்தப் பாத்திரப் படைப்புகளின் சித்தரிப்பு மூலம் எங்கோ தொலைவிலிருந்த மாமனிதர்கள் எல்லாம் தொட்டுணரக் கூடிய அளவிற்கு அண்மையில்  வந்துவிடுகிறார்கள். 


இவ்வாறு, வெண்முரசிற்குள் அனைவரையும் ஈர்க்கும் வல்லமையுடன் படைக்கப்பட்டுள்ள எளியவர்களின் பாத்திரங்களில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுக் காட்ட முயல்கிறேன். இப்பாத்திரங்கள் பெரும்பாலும் அரசியர்களுக்கு சேடிகளாகவும், அரச குமாரர்களின் படை வீரர்களாகவும், அரசர்களுக்கு அமைச்சர்களாகவும் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களோடு சில விலங்குகளும் துணைப் பாத்திரங்களாக முக்கிய பங்காற்றியுள்ளன. 


குகன் நிருதன்:


கங்கையாற்றில் படகோட்டும் குகன்களில் ஒருவனாக படைக்கப்பட்ட இப்பாத்திரம் அம்பை எனும் முக்கிய பாத்திரத்தின் உக்கிரத்தையும் அதன் அல்லாடல்களையும் தன் பார்வையில் வாசகர்களுக்கு உணர்த்துகிறது.


சிறு விளக்கின் ஒளியை சரியான கோணத்தில் அமைப்பதின் மூலம் பெரிய இல்லத்தின் அமைப்பை நுணுக்கமாகவும் பிரம்மாண்டமாகவும் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதுபோல, இந்த நிருதன் பாத்திரத்தின் மூலம்  அம்பையை வாசகர்களின் மனதில் நிறுவுகிறார் ஜெயமோகன். ஆசிரியர் கூற்றாக துருத்திக் கொண்டிராமல், படகோட்டியாக இருக்கும் ஒருவன் தன் பார்வை வெளிச்சத்தைப் பாய்ச்சி அம்பை எனும் ஆணிவேரான பாத்திரத்தின் கொந்தளிப்பையும், அது தாளமுடியாத உச்சத்தை அடைந்தபோது அவள் வெந்து தணிவதையும் காட்டுவது சிறப்பான கூறுமுறையாக உள்ளது. 


பீஷ்மரின் மனதை உலுக்கி அவரிடமிருந்து விடுபட்ட அம்பை, சௌப நாட்டு சால்வனை காண விரைந்து செல்லுமாறு குகன் நிருதனிடம் கூறுகிறாள். அப்போது எழும் "அன்னையே, படகிலிருக்கும் காற்று புடைத்த பாய்போலிருக்கிறீர்கள், நீங்களே கொண்டு சேர்த்து விடுவீர்கள்" என்ற நிருதனின் கூற்று அம்பையின் உடல் மற்றும் மனதின் துடிப்பை துல்லியமாகக் காட்டுகிறது. அதேபோல சால்வனின் கீழ்மையான அரசியல் தந்திரங்களைக் கண்டு அருவருத்த அம்பையை திரும்ப அஸ்தினபுரிக்கு அழைத்துச் செல்லும்போது "நெய்விழும் தீ போல அவ்வப்போது சிவந்தும், மெல்ல தணிந்தாடியும், சுவாலையென எழுந்தும் படகுமூலையில் அவள் அமர்ந்திருக்கையில் படகு ஒரு நீளமான அகல்விளக்காக ஆகிவிட்டது" என்று  நிருபனுக்கு தோன்றியதாகக் காட்டுகிறார் ஆசிரியர். இரவில், சிற்றகலின் ஒளியில் சிற்பத்தின் மர்ம அழகைக் காணும் பரவசத்தை நிருதனின் விழிகளின் வழியே தெரியும் அம்பையைக் காணும்போது அடைகிறோம். 


மேலும், நிருதனின் சிறிய பாத்திரத்தை இராமாயணக் குகனின் வழித் தோன்றலாகவும் காலாதீதமாக குகர்கள் குடியில் நிருதன்கள் தோன்றிக் கொண்டேயிருப்பதாகவும் படைத்திருப்பது ஜெயமோகனின் எழுத்துச் சாதுர்யத்திற்கு சான்றாகும்.


பெருந்தோழி மாயை: 


திரௌபதியின் அணுக்கச்சேடி என அறிமுகமாகி பின் பெருந்தோழியாகி, முடிவில் திரௌபதிக்குள்ளேயே ஐக்கியமாகும் பாத்திரமாக மாயை படைக்கப்பட்டுள்ளாள். 


திரௌபதியால் தன் நிழல் எனக் குறிப்பிடப்படும் இப்பாத்திரம் ஆளுயர ஆடியென அமைந்து திரௌபதியை வாசகர்களுக்கு  அணுக்கமாகக் காட்டுகிறது.  எப்போதுமே சக்கரவர்த்தினியின் நிமிர்வுடன் திகழும் திரௌபதி, கர்ணனை நேரில் கண்டபோது முதல்முறையாக அதிலிருந்து சற்று இறங்கி காதல் கொள்ளும் கன்னியென ஆவதை உவகையும் வருத்தமும் கலந்த உணர்வுடன் பிரதிபலிக்கிறாள். 


யாரை மணந்து கொள்வது என திரௌபதியின் மனதில் ஏற்படும் குழப்பத்தினை மாயை பாத்திரத்தின் சொற்கள் வழியாக காட்டுகிறார் ஆசிரியர்.  "கர்ணன் சிறந்த காதலன். துரியோதனன் சிறந்த அரசன். அர்ச்சுனன் காமத்திற்கு சிறந்தவன். பீமன் சிறந்த வாழ்வை கொடுப்பவன். தர்மன் சக்கரவர்த்தியாகக் கூடியவர். இவர்களில் ஒருவரையே  தேர்வு செய்யவேண்டும்" என மாயை உரைக்கும்போது "ஐவருமே இருந்தால் நன்றாக இருக்குமென" திரௌபதி கூறுகிறாள். திரௌபதியின் சிந்தனை மாயை பாத்திரத்தின் மூலம் துல்லியமாக காட்டப்படுகிறது.


திருமணத்திற்குப் பின் அர்ஜுனனுடனான முதல் கூடுகைக்காக திரௌபதி வரும்போது, இவளுக்கு முன்னதாகவே வந்து அர்ஜுனனை கூடிவிட்டுச் செல்கிறாள் மாயை. இதன் மூலம், திரௌபதியின் மனதில் எப்போதும் அழியாத வெறுப்பையும் சினத்தையும் அர்ஜுனன் மீது உண்டாக்குகிறாள். திரௌபதிக்கு மிகப்பிரியமான அர்ஜுனன் மீது அவள் கசப்புடன் இருப்பதற்கு காரணமாக இந்த புனைவு உத்தியைக் கையாண்டுள்ளார் ஆசிரியர். "யாரை மிக அதிகமாக விரும்புகிறோமோ அவரின் மீதே பெரும் வெறுப்பும் தோன்றும்" என்பது அர்ஜுனன் கூற்றாக வருகிறது.


அஸ்தினபுரத்தின் சூதுக்களத்தில் அத்தனை பேருக்கு மத்தியில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்டபின் பீமனும் அர்ஜுனனும் சூளுரைக்கிறார்கள். அப்போது அங்கு நுழையும் மாயை "அவையோர் அறிக! இது பாஞ்சாலமண்ணை ஆளும் ஐங்குழல்கொற்றவையின் வஞ்சினம்! ஐந்து தேவியரின் அழியாச்சொல் இது. இன்று அவிழ்ந்தது அன்னையின் ஐங்குழல். இனி அது அவையமர்ந்த அரசன் துரியோதனனின் ஆக்கைக்குருதியும் அவன் இளையோன் துச்சாதனனின் நெஞ்சத்து நிணமும் கலந்து பூசப்பட்டபின்னரே அது சுருள்முடியப்படும். பாஞ்சாலத்து ஐந்தன்னையர் ஆலயத்து மூதன்னையர் வந்து குருதிதொட்டு எடுத்துக்கொடுக்க பின்னி அமைக்கப்படும். கௌரவ நூற்றுவரும் மண்மறைந்தபின்னரே அதில் மலர்சூட்டப்படும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று உரைப்பதாக ஆசிரியர் காட்டுகிறார். சூளுரைப்பது திரௌபதியல்ல, ஒரு பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஒட்டுமொத்த  பெண்ணினத்தின் சார்பாக எழுந்த குரல் எனக் காட்டுகிறார். 


பாண்டவர்களுடன் திரௌபதியும், நகர்நீங்கியும் முகம் மறைத்தும் வாழ்ந்து திரும்பி வரும்வரை, அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் எழுந்து வஞ்சினமுரைத்த அதே உச்ச உணர்வுநிலையில் அணங்கு கொண்டு எவர் விழியையும் நோக்காமல் குருதி அன்றி பிறிதெதையும் நோக்கா விழிகளுடன் ஒவ்வொரு கருநிலவு நாளிலும் கொற்றவைக்கு குருதி அளித்து வணங்குவதை மட்டும் இயற்றுபவளாக, மாயை இருக்கிறாள்.


காடுகளிலும் நகர்நீங்கியும் வாழ்ந்ததில் பேரன்னையெனக் கனிந்த திரௌபதி படை எழுவதற்கு வஞ்சினம் உரைக்க மறுக்கிறாள். எனவே படையெழுகைக்கு முன் நடைபெறும் கொற்றவை பூசனைக்கு மாயையை அழைத்து வருகிறார்கள். குருதிப்பலி கொடுத்து வேள்வி நடக்கும் அந்நிகழ்வில் வெறியாட்டுடன் வேள்விக்குளத்தினுள் தானும் ஒரு அவியாக விழுந்து உருகி மாய்கிறாள் மாயை. அதைக் கண்ட திரௌபதி வஞ்சினம் உரைத்து படைகளுக்கு எழுச்சியூட்டுகிறாள். 


போர் தொடங்கி, பெரும் மனித இழப்புகளுக்குப் பின் துச்சாதனின் மார்பை தன் கரங்களாலேயே பிளந்து இதயத்தை அகழ்ந்து அதில் பெருகிய குருதியை சுவைத்து விட்டு அங்கு கிடக்கும் தலைக் கவசத்தில் குருதியை அள்ளிக் கொண்டு திரௌபதி இருக்குமிடத்திற்கு வருகிறான் பீமன். ஆனால், அக்குருதியைக் கண்டவுடன் அச்சத்துடன் பின்னடைகிறாள் திரௌபதி. குந்தியும் பீமனை ஏசுகிறாள். அப்போது திரௌபதிக்குள் எழும் மாயை "நான் விண்ணில் இத்தருணத்திற்காகக் காத்திருக்கிறேன். விடாய்கொண்டு குருதிக்காக நோற்றிருக்கிறேன்" என்று  உரக்கக் கூவியபடி அக்குருதியை அள்ளி கரிய மெழுக்கை அவள் கூந்தலில் நீவினான். அவள் வெறித்த விழிகளுடன் குனிந்து தன் இரு கைகளாலும் அக்கலத்திலிருந்த குருதி விழுதை அள்ளி தலையிலும் கூந்தலிலும் பூசிக்கொண்டாள். இரு கைகளையும் முகத்திலும் நெஞ்சிலும் அறைந்தாள். இளிப்பு மேலும் பெரிதாக “கொழுங்குருதி! ஆம், கொழுங்குருதி!” என்றாள். அவளின் சூளுரையை நிகழ்த்திய நிறைவுடன் பீமன் கிளம்பினான், இன்னும் எஞ்சிய செயல்களை முடிக்க.


ஆசிரியர் ஜெயமோகன் மாயை கதாபாத்திரத்தின் மூலம் திரௌபதி பாத்திரத்தின் இருவேறு மனநிலைகளையும் துல்லியமாக வாசகர்களுக்குக் காட்டுகிறார். பேரன்னையாகவும் கொற்றவையாகவும் திகழும் பாத்திரத்தின் பெருஞ்செயல்களை விவரிக்க மாயை பாத்திரத்தை படைத்தது அவரது மேதைமைக்கான சான்றுகளில் ஒன்று.


செவிலித்தாய் அமிதை:


தான் ஈன்ற மகன் சில நாட்களில் மாண்டுவிட, சிறு குழவியாக இருந்த ருக்மிணிக்கு பாலூட்டும் அன்னையாக அமைகிறார் அமிதை. ருக்மிணியின் இருபாதங்களிலும் இருக்கும் சங்கு மற்றும் சக்கர முத்திரைகளைக் கண்டு இவளை மணக்கப் போகிறவன் சாதாரணன் அல்ல என்பதை தெளிகிறார். 


ருக்மிணியை சிசுபாலனுக்கு மணமுடிக்க அவளின் சகோதரன் ருக்மி முனையும்போது அமிதை ருக்மணியிடம் "உன்னை மணக்கிறவன் சிசுபாலன்  போன்ற எளியவன் அல்ல" எனக் கூறுகிறாள். ருக்மணிக்கு இந்தக் கூற்றில் பெரிதாக நம்பிக்கையில்லை.


அந்நாட்டில் நடக்கும் பெரும் உண்டாட்டின்போது தென்படும் சூதனொருவன் “விண்நீலம், விரிகடல்நீலம், விழிநீலம், விசும்பு எழுந்த மலர்நீலம்” என்று கள்மயக்கில் குழைந்த குரலில் கூறியதைக் கேட்டு மின்னதிர்வு பெற்றதென உடலும் மனமும் உலைகிறாள் ருக்மிணி. 


அதன் பிறகான ருக்மிணியின் இங்கில்லாதிருக்கும் இருப்பை, பரிதவிப்பை, அகமகிழ்வை செவிலித்தாய் அமிதை மூலமாகவே வாசிப்பவர்களுக்கு கடத்துகிறார் ஆசிரியர். ருக்மிணியை மணக்கப் போகிறவன் இளைய யாதவன்தான் என்று உணர்ந்தபின் வேறொரு காலத்தில் வாழும் ருக்மிணியை அவனிடம் சேர்க்கவேண்டுமே  என அமிதை படும்பாடுகளை நாமும் படுகிறோம்.   


ருக்மிணி ஒரு பித்தியைப்போல ஒளி ஒழுகிச்செல்லும் வரதாவைக்  கண்டபடி காலாதீதத்தில் வாழ்ந்துகொண்டிருக்க, அமிதை தன் மகளை இளைய யாதவனின் அரசியாக அவனிடம் கையளிக்கும் தருணத்தை எண்ணியபடி துயருடன் விழிநீர் வழிய துடித்துக் கொண்டிருக்கிறார். ருக்மணியின் பொற்சலங்கையிலிருந்து விழுந்த இரு மணிகளை தன் ஆமாடப் பெட்டியில் பத்திரப்படுத்துகிறார்.


ருக்மிணியை கவர்ந்து செல்வதற்கென குறிக்கப்பட்ட நாளும் வருகிறது. ஒன்பது அன்னைகளை தொழும் நிகழ்வு அன்று. ஒன்பதாவது அன்னையின் ஆலயத்திற்கு பின்புறம் வரதா நதியின் சிறிய சுழிப்பிடம் உண்டு. அந்த இடத்தில் இளைய யாதவன் ருக்மணியை கவர்ந்து செல்வதாக திட்டம். இதை எதிர்பார்த்து தன் படை வீரர்களுடன் ருக்மி, ருக்மணியை பின் தொடர்கிறான். 


எல்லாம் நலமாகவே நிகழவேண்டுமென துடித்துக் கொண்டிருக்கும் அமிதையிடம் "நலம் திகழ்க அன்னையே" என ருக்மிணி கூறுகிறாள். இதைக் கேட்ட அமிதை "நா பட்ட கண்டாமணி வளையமென நெஞ்சதிர்ந்தார்" என ஆசிரியர் குறிப்பிடுகிறார். ருக்மிணி உலகாளும் தேவியர்களில் ஒருத்தி, அவளை பாலூட்டி வளர்த்த பெரும்பேறு தனக்கு கிட்டியுள்ளது என்பதை உணர்ந்த அமிதை நிலையழிந்து விழலாகாது என தனக்குள் உறுதி கொண்டு படகிலிருந்து இறங்கிவந்த இளைய யாதவனை நோக்கினார். பீலி விழி திறந்திருக்க இமைவிழி சரிந்திருக்க உடல் நீலம் ஒளிர வந்தவனை முதல்முறையாகப் பார்த்தபோதும், எப்போதும் உடனிருந்தவன் போலத் தோன்றினான். விண்ணிலிருந்து இறங்கியவன் எனத் தோன்றியவனை நோக்கி இருகரம் கூப்பி தவம் இயற்றுபவள் போல் சிலைத்திருந்த ருக்மிணியின் இடை பற்றி தூக்கி புரவியிலேற்றிக் கொண்டான். ருக்மிணியின் வலக்கரத்தை தன் இடக்கரத்தில் பற்றியபடி புரவியில் சென்ற இளைய யாதவனைக் கண்டு விழி சொரிய உணர்வற்றிருந்தார் அமிதை. 


அப்போது, ஒளி மிக்க பற்களுடன், அணுக்கமான விழிகளுடன், நன்கறிந்த நடையுடன் ஓர் இளைஞன் அருகில் வந்தான். "மைந்தா நீ..." என கேட்கவும்  "உங்கள் மைந்தன்தான் தாயே" என்று கூறியவன் எப்போதும் ஒளியேயான, இசையே ஒலியென்றான உலகிற்கு அமிதையை இடைபற்றி தூக்கிக் கொண்டு சென்றான்.   "உன் நீலப் பீலியும் வேய்ங்குழலும் எங்கே?" என அமிதை கேட்கவும், வைத்துக் கொள்கிறேன் அன்னையே என பதிலுரைத்தான் மைந்தன்  என அமிதையின் வாழ்வினை முடிக்கிறார் ஆசிரியர். 


துணைப் பாத்திரமாகப் படைக்கப்பட்ட இக்கற்பனைப் பாத்திரத்தின் முழுவாழ்வையும் நமக்குக் காட்டுவதன் மூலம் முதன்மைப்  பாத்திரமான ருக்மிணியை நமக்கு அணுக்கமானதாக உணரவைக்கிறார் ஆசிரியர். அமிதையின் உணர்வுகளுடன் நம்மையும் ஒன்றவைத்து,  புராணக்கதையினை நம் நிகர் வாழ்வினைப் போல எண்ண வைக்கும் முயற்சியிலும் வெற்றி காண்கிறார்.

     

பணிப்பெண் சுபகை:


சுபகை,  அஸ்தினபுர அரண்மனையில் பணிப்பெண்களில் ஒருத்தியாக படைக்கப்பட்டுள்ள துணைப் பாத்திரமாகும்.  அர்ஜுனனின் மனம் கவர்ந்தவளாகவும் கௌரவர்களில் ஒருவரான சுபாகுவின் மைந்தன் சுஜயனுக்கு செவிலியன்னையாகவும் விளங்குபவளாக இப்பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. 


அரண்மனைப் பணிப்பெண்களில் பெரும்பாலானவர்களைப் போலவே சுபகையும் அர்ஜுனனைக் காண துடித்துக் கொண்டிருக்கிறாள். குந்தியை சந்தித்துவிட்டுச் செல்லும் அர்ஜுனனை எதிர்கொள்ளும் அரிய வாய்ப்பு இவளுக்கு கிட்டுகிறது. இவளைக் கண்டு புன்னகைப்பவன், இவளின் பெயரைக் கேட்டவுடன் திகைத்து, திக்கித் திணறி கூறுகிறாள். அக்கணம் முதல் அவளின் உள்ளம் களி கொண்டு மயங்கித் தவிக்கிறது. தோழியர்களெல்லாம் கேலி செய்து நகையாடுகிறார்கள். ஆசிரியர் இந்நிகழ்வுகளை விவரிக்கும்போது அரண்மனையில் பணியாற்றும் பெண்களின் வாழ்வை, மனநிலையை மிக நெருக்கமாக உணரமுடிகிறது.


தோழியர்களின் முகம் நோக்க விழையாமல் இருளினுள் தனித்திருப்பளிடம், அர்ஜுனன் இவளை அழைப்பதாக தோழி உரைக்கிறாள். இவளின்  மனமும் உடலும் பொங்கிப் பொலிய அர்ஜுனனை அடைகிறாள். மறுநாள், இவளை என்ன பெயரிட்டு அழைத்தான் என்பதை, தோழியர் எத்தனை துளைத்தும் பகிராமல் மனதிலேயே பொதித்து பாதுகாக்கிறாள்.  இவளின் மனவோட்டங்களை வாசிப்பதன் மூலமாக அர்ஜுனனை அருகிலென அறிகிறோம். அதன் பிறகு வேறெந்த ஆடவரையும் தீண்டாமல் அந்த ஒரு நாளையே மனதில் மீட்டியபடி கழி(ளி)ப்பவள் சுஜாதனின் செவிலியன்னை ஆகிறாள்.


பயம் நிறை மனத்தினனாய், எப்போதும் போர்க் காட்சிகளை கனவில் கண்டு படுக்கையில் சிறுநீர் கழித்து அதனை குருதி என சாதிப்பவனாய் இருக்கிறான் சுஜாதன். இவனை பயத்திலிருந்து விடுவிக்கும் பொருட்டு அர்ஜுனனின் செவிலியன்னையான மாலினியிடம் அழைத்துச் செல்கிறாள் சுபகை. அர்ஜுனனின் கதைகள் மூலம் சுஜயனின் பயத்தை தெளிவித்தபின், காண்டீபத்தை காட்டுவதற்காக அவனை இந்திரப்பிரஸ்தத்திற்கு அழைத்து வருகிறாள். 


அச்சமயத்தில் அங்கு வரும் அர்ஜுனனை எதிர் கொள்கிறாள் சுபகை. உடல் பெருத்து, மூப்படைந்து இருக்கும் இவளை கண்டவுடனேயே அர்ஜுனன் அடையாளம் கண்டுகொள்ள இவள் முகம் சிவக்க உடல் தளர்கிறது. அவளுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் நீண்ட பிரிவுக்குப் பின் சந்திக்கும் காதலர்களுடையதையும்  விஞ்சியதாக உள்ளது. அந்த ஒரு நாளில் சுபகை கொடுத்ததும் அவன் பெற்றுக் கொண்டதும் என்ன என்பதை நாம் அறிவது நிறைவான தருணமாகும்.


காண்டீபம் நாவல் முழுவதும் பெரும் சாகசங்கள் புரியும் அர்ஜுனன் சுபகையிடம் வரும்போது எளிய மானிடனாக, வாசிப்பவர்  அனைவரும் எளிதில் கையாலேயே தொடக்கூடிய நெருக்கத்தில் வருகிறான். 


பல மனைவிகள் இருந்தாலும், எங்கெங்கோ அலைந்தாலும், மீள்வதற்கான ஓர் இடமாக சுபகை இருக்க வேண்டுமென அர்ஜுனன் விழையும் வண்ணம்  இந்தச் சிறு கற்பனைப் பாத்திரத்தை "காண்டீபம்" நாவலின் அச்சாணியைப் போல உருவாக்கி, இதுவரை காணாத அர்ஜுனனின் புதிய பரிமாணத்தை வாசகர்களுக்கு காட்டியுள்ளது ஆசிரியரின் திறமைக்கு சான்றாகும்.

      

சம்பவன் - சுபாஷிணி:


மகாபாரதத்தின் பெருவீரனான பீமனின் மற்றொரு பரிமாணம் அவனது சமையற்கலை. பீமபாகமென விளங்கும் அக்கலையினை, வெண்முரசை வாசிப்பவர்கள் உள்ளார்ந்து உணர ஏதுவாக பீமனுக்கு சீடனாக சம்பவன் எனும் பாத்திரத்தை படைத்துள்ளார் ஆசிரியர். இப்பாத்திரத்தின் பார்வை வழியாக வலிமையான பீமனின் மெல்லிய பகுதியை அணுக்கமாக உணரமுடிகிறது.


திரௌபதியும்  பாண்டவர்களும் பனிரெண்டு ஆண்டுகால கானக வாழ்வை முடித்தவுடன் விராடதேசத்தில் ஓராண்டு  மறைந்து வாழ்வதை "நீர்க்கோலம்" நாவல் காட்டுகிறது. பீமன் தனது தோற்றத்தை வலவன் எனும் அடுமனையாளனாக மாற்றிக் கொள்கிறான். அதே சமயத்தில் விராடபுரிக்கு சூதர் குலத்தைச் சேர்ந்த சம்பவன் தன் குழுவுடன்  வருகிறான். இவன், தன் சமையற்கலைக்கு பீமனை ஆசிரியராக ஏற்றுக் கொண்டவன் என்பதை கேள்வியுற்ற திரௌபதி, இவனை பீமனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறாள். 


உணவிடும் நேரமில்லாத இடைப் பொழுதில் அடுமனையை அடையும் இக்குழுவினருக்கு ஆவிபறக்கும் புத்துணவை அளிக்கிறான் வலவன். இவர்கள் உணவுண்டு அடையும் மகிழ்வைக் கண்டு நிறைவடையும் வலனின் (பீமன்) சித்திரம் அடுமனையாளர்கள் பற்றிய பெரும் மதிப்பை நம் மனதில் உருவாக்குகிறது. அக்குழுவில் இருக்கும் சுபதை எனும் சூலிக்கு தன் கைகளாலேயே உணவூட்டுகிறான் வலவன். பேருடலுடன் எதிரிகளை கொல்லக்கூடிய பீமனின் மனதிலுள்ள மென்னுணர்வுகளை கற்பனையாக படைக்கப்பட்ட இக்கதாபாத்திரங்கள் மூலம் மிக எளிதாக உணர்த்திவிடுகிறார் ஆசிரியர்.


வலவனின் ஆணைப்படி அனைவரும் நன்றென உரைக்கும் வண்ணம் சம்பவன் புளிக்காய்ச்சல் செய்தபோதும் அவனை சமையற் கலங்களை கழுவும் பணிக்கு அனுப்புகிறான் வலவன். சம்பவன் ஆசிரியரின் மேல் வருத்தம் ஏதும் கொள்ளாமல் அவரிடும் பணிகளை ஆற்றியபடி, வலவனை பற்றிக் கூறும்போது பீமனை மனதுக்கு மிக நெருக்கமானவனாக உணர்கிறோம். எளியவர்கள்மேல் பீமன் காட்டும் அன்பை, கருணையை துணைப் பாத்திரங்களின் உரையாடல் மூலமாக துல்லியமாக காட்டுகிறார் ஆசிரியர். 


முழுநிலவு நாளில் கரவுக் காட்டிற்கு செல்லும் அரசகுடும்பத்தினருடன் சென்ற அனைவருக்காகவும் சமைக்கும் பொறுப்பை சம்பவனுக்கு அளிக்கிறான் வலவன். அப்போது முதல்முறையாக சமைக்கப் போகிறவன் அடையும் பதட்டத்தை அடைந்து தன் ஆசிரியரின் சிறுகால்களை தொட்டு வணங்கியபின் பணியைத் தொடங்குகிறான். சம்பவன் சமைத்ததை உண்டவர் மகிழ்ந்து அன்னையென இவனை போற்றுகின்றனர். இவன் விழிநீர் வழிய வலவனை எண்ணிக் கொள்கிறான். 


மற்ற பாண்டவர்களுக்கு அமையாத சீடன் பீமனுக்கு அமைகிறான். பாண்டவர் விராடபுரியிலிருந்து புறப்படும் போது பீமன் சம்பவனின் செவியில் "கொல்லாதே" என்று மென்மையாக சொல்லிவிட்டு "சமைத்தூட்டுபவன் பெறுவதெல்லாம் கொல்பவனால் இழக்கப்படுகிறது மைந்தா. அரிசிப்புழுவும் காய்வண்டும்கூட உன்னால் காக்கப்படுக! விண்ணுலகிலிருந்து கைநீட்டி என்னை மேலேற்றிக்கொள்க" என்று கூறுகிறான். அவன் கூறியதென்னவென்று முழுதாகப் புரியாதபோதும் விழிநீர் வழிய பீமனின் காலடித் தடத்தை தொட்டு வணங்கினான் சம்பவன். தன் கலையின் மூலம் பெற்ற சீடன் சாம்பவன் வழியாக  பீமன் கடைத்தேறுவதாக படைத்துள்ளார் ஆசிரியர். 


சாம்பவன் பாத்திரத்திற்கு இணையாகவே சுபாஷிணி என்ற பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. அரண்மனையிலேயே பிறந்து வெளியே எங்குமே சென்றிடாமல் சேடியாக உலவும் இப்பாத்திரத்தின் வழியாக அரசியின் அணிச்சேடி சைரந்திரி என உருமாறியிருக்கும் திரௌபதியின் செயல்கள் காட்டப்படுகிறது. 


அணிச்சேடியென இருந்தாலும் சைரந்திரியின் நிமிர்வும் துணிவும் ஒரு அரசிக்குரியதென உணர்கிறாள் சுபாஷிணி. தன் பேச்சு மற்றும் செயல்களிலும் சைரந்திரியின் சாயலை அடைகிறாள். வண்ணத்துப் பூச்சியென பறக்கத் துடிக்கும் சுபாஷிணி மீதான அன்பையும் அக்கறையையும் காட்டும் திரௌபதியின் மென்முகத்தை  ஆசிரியர் காட்டுகிறார். பாரதவர்ஷத்தை ஆள்வதற்கெனவே அனலில் உருக்கொண்டவளின் இளகிய மனதை, கற்பனை பாத்திரமான சுபாஷிணியின் துணையுடன் விவரிக்கிறார். 


சுபாஷிணி சம்பவனை மணந்து, இருவரும் இணைந்து அனைவருக்கும் உணவளித்து, உண்டவர்களின் மகிழ்முகம் நோக்கி நிறைவுறுவதாக படைத்துள்ளார் ஆசிரியர். இந்தத் துணைப் பாத்திரங்களின் சிறிய வெளிச்சத்தில்,  பெரிய பாத்திரங்களின் கரவுக் குணங்கள் சிறப்பாக வெளிப்பட்டு வாசிப்பவர்களுக்கு திகைப்பையும் மலர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.


அனிலை:


மனிதர்களுக்கு நிகராகவே விலங்குகளையும்  துணைக் கதாபாத்திரங்களாக  படைத்துள்ளார் ஜெயமோகன். அதில் "திசைதேர் வெள்ளம்" நாவலில் படைக்கப்பட்டுள்ள அனிலை எனும் பெயர் கொண்ட பாஞ்சால தேச  பெண்புரவி ஒரு முக்கியமான பாத்திரமாகும். 


"வண்ணக்கடல்" நூலில் பரியேறுதல் குறித்தும், புரவி மனிதர்களை எப்படி புரிந்துகொள்கிறது என்பது பற்றியும் விரிவான சித்திரத்தை அறியலாம். இந்த அனிலை பாத்திரத்தின் மூலம் புரவிகளின் தனித்துவ குணங்களை உணரமுடிகிறது. 


மன உறுதிகொண்ட   பெண் துறவியைப்போல  காம ஒறுப்புக் கொண்டு தன்னை பேணிவரும் அனிலை, தன்னுடன் இணை சேர வரும் தன்னைவிட உயரமான வலிமையான புரவியை உதைத்துத் தள்ளி அதன் கழுத்தைக் கடித்து குருதி கொப்பளிக்க வைக்கிறது. மற்ற பொழுதுகளில் அமைதியானதாகவே இருந்தாலும் தனக்கான வழிகள் கொண்ட, இதற்கான புரவிவலவனாக பீலன் என்பவனை நியமிக்கிறார்கள். பீலன் அனிலையின் அருகில் சென்று "அன்னையே என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டியபோது தன் வாயில் பொங்கிய நுரையினை இவன் சிரசில் தெளித்து ஏற்றுக் கொள்கிறாள். இது அனிலை தன்னை அன்னையென வரித்துக்கொண்டதையும், பீலனுக்கு அருளப்போவதையும்  உணர்த்துகிறது.


பாரதப் போரில் பாண்டவப் படை சார்பாக அனிலையும் பீலனும் போரிடும் காட்சி வியக்க வைக்கிறது. கையில் நீண்ட வேலைப் பிடித்திருக்கும் பீலன் அனிலையின் வேகத்தைக் கணித்து அதற்கேற்ப செயல்படுவதும் இவன் ஈட்டியால் எதிர்ப் படை வீரனை குத்திய பிறகு அதனை திரும்ப உருவுவதற்கு ஏற்ற வண்ணம் அனிலை திரும்புவதும் அழகான காட்சிகளாக விரிகின்றன. இக்காட்சியில் புரவியும் அதில் ஊர்பவனும் ஈருடலாய் இருந்தாலும் ஒத்த சிந்தையுடையவர்கள்தான் என்பது புலப்படுத்தப்படுகிறது. நான்கு மணி நேரத்தில் மற்ற புரவிகளெல்லாம் களைப்படைந்து திரும்ப, அனிலையோ போர்க்களத்தில் வீழ்பவர்களின் கழுத்தைக் கடித்து, பீறிடும் குருதியைக் குடித்து தன் ஆற்றலை தக்கவைத்துக் கொள்கிறது.


போரில் துரியோதனனும் பீமனும் மோதிக்கொள்வதை மற்றவர்களைப் போலவே பீலனும் அனிலையும் நோக்குகிறார்கள். ஒரு கட்டத்தில் பீமன் பின்னடைய துரியனின் கை ஓங்குகிறது. கீழே மல்லாந்து கிடக்கும் பீமனை அறைய துரியன் கதையை ஓங்கும்போது, அனிலை பாய்ந்து துரியனை தள்ளிவிட்டு தாக்குகிறது.  அனிலையின் ஆவேசத்தைக் கண்டு சூழ்ந்து நின்ற பிற கௌரவர்களும் திகைத்து தயங்குகிறார்கள். பீலனும் பீமனை யாரும் நெருங்காமல் தன் நீண்ட வேலால் தடுக்கிறான்.


உயிர்தப்பிய பீமன் சிவந்த விழிகளுடன் பீலனை நோக்காமல் விம்மும் நெஞ்சுடன் நிலை கொள்ளா காலடிகளுடன் நடந்தான். அருகிருந்த காவல்தலைவன் பீலனிடம் "இனி இளைய பாண்டவரின் (பீமன்) கண்களில் படாதே. பட்டால் உயிர் தப்ப மாட்டாய்" எனக் கூற, "உயிரைக் காத்தது குற்றமா" என யோசித்து எதுவும் புரியாமல் அங்கிருந்து பீலன் அனிலையுடன் நகர்கிறான். 


உற்ற தோழர்களாக இருந்த துரியன் பீமன் மேல் கடும் குரோதம் கொள்வதற்கான நிகழ்வை இந்நிகழ்வோடு இணைத்துக் கொள்ளலாம். கௌரவர்களோடு பாண்டவர்களும் கானுலாவச் சென்றபோது துரியனைத் தாக்க வருகிறது ஒரு தாய்க்கரடி. அந்தத் தருணம் துரியனின் உயிரைக் காக்கிறான் பீமன். அப்போது பீமனை பாராட்டாமல் கடுங்குரோதம் கொள்கிறான் துரியன். அந்தத் துளிக் குரோதம்தான் வளர்ந்து மாபெரும் கடல்போன்ற இப்போர்வரை கொண்டுவந்துள்ளது. அப்போதைய துரியனின் மனதை இப்போது பீமன் உணர்ந்திருப்பான். தன் உயிரைக் காப்பவர் மீது குரோதத்தை உண்டாக்கும் அகந்தையை பீமன் கண்டுவிட்டதையே அவன் நடத்தை காட்டுகிறது. 


இந்த அனிலையின் பாத்திரம் பெயர் உட்பட அம்பையை ஒத்ததாகவே உள்ளது. அதன் துணிவும் உறுதியும் முன்னோக்கிய நடையும் அதன் செயல்களும் அம்பைக்கு நிகராகவே படைக்கப்பட்டுள்ளன. பெரும் சினத்துடன் போர் புரிந்து கொண்டிருந்த பீஷ்மர் இதன் சீற்றத்தைக் கண்டவுடன் வில்லைத் தாழ்த்தி திரும்பிச் செல்வதும் அதையே உணர்த்துகிறது.


இந்த அனிலை மற்றும் பீலன் என்ற கற்பனைப் பாத்திரங்களைப் படைத்ததன் மூலம் புரவிக்கும் அதன் மீது ஊர்பவனுக்கும் உள்ள உறவை நுணுக்கமாக விவரித்ததுடன்  துரியனுக்கும் பீமனுக்கும் வேறுபாடு எதுவுமில்லை, அன்றைக்கு கரடியிடமிருந்து துரியனால் பீமன் காக்கப்பட்டிருந்தால் பீமன் இப்போதைய துரியன்போலத்தான் உருமாறியிருப்பான் என்பதையும் வாசிப்பவர்களுக்கு உணர்த்துகிறார் ஆசிரியர்.


அசங்கனும் அவன் இளையோர்களும்:


ஒரு லட்சிய மனிதனுக்கு மைந்தனாக பிறப்பவனுக்கு ஏற்படக்கூடிய இனிமைகளையும் இன்னல்களையும் அவனுடைய மன அல்லாடல்களையும் துல்லியமாக சித்தரிப்பதற்கெனவே சாத்யகியின் பத்து மைந்தர்களை வெண்முரசில் படைத்துள்ளார் ஆசிரியர். 


இளைய யாதவருக்கு அடிமையென தன்னை பறைசாற்றிக் கொள்ளும்விதமாக கரத்தில் தொழும்பர்குறி இட்டுக்கொள்ளும் சாத்யகி, தனதென இருக்கும் அனைத்தையும் இளைய யாதவருக்கென படைக்க உறுதிகொள்கிறான். 


அசங்கன் எனும் மூத்தவனில் தொடங்கி சினி எனும் இளையவன் வரை பதின்மர் சாத்யகியின் நான்கு மனைவிகளுக்குப் பிறந்த மைந்தர்களாக உள்ளார்கள். தந்தையின் சாயல் கொண்ட அனைவரும் தனயனின் செயல்களை நோக்கி அதனை திரும்ப இயற்றும் ஆடிப்பாவைகள் போலவே உள்ளனர். எனவே, மூத்தவன் அசங்கனுக்கு தந்தையின் இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமையுடன் தன் இளையவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பும் சேர்கிறது. 


தந்தைக்காக,  யாழ் மீட்டுவதற்கு வாகாக மென்மையாக இருக்கும் தன் விரல்களால் வலிமையான வில்லைப் பயில்கிறான். எப்போதும் நகைப்புடன் விளையாடிக் கொண்டிருக்கும் இளையவர்களுக்கு முறைமைகளை பயிற்றுவிக்கிறான். இளையவர்கள் இவன் முகம் மலர்ந்திருக்கும்போது மலர்ந்தும், சோர்ந்திருக்கும்போது கூம்பியும் இருக்கிறார்கள் என்பதால் தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க பிரயத்தனப்படுகிறான். 


பதின்மருமே போருக்குச் செல்வதால்,  உடனடியாக அசங்கனுக்கும் திருஷ்டத்யும்னனின் மகள் சௌம்யைக்கும் நிகழ்த்தப்பட்ட திருமணத்தால் சகோதரர்கள் அனைவருமே திகைக்கிறார்கள். திருமணத்திற்குப் பின்  தமையன் தங்களைவிட்டு மனதளவில் விலகிவிட்டதாக இளையவர்களுக்கு  தோன்றுகிறது. சாத்யகிக்குமே அப்படி தோன்றுகிறது. 


போர்முனைக்குச் செல்லும் இளையவர்களின் உள்ளக்கிடக்கையை உணர்த்துவதற்கு ஆசிரியர் இந்த துணைப் பாத்திரங்களை பயன்படுத்திக் கொள்கிறார்.  போரின் போக்கு, அதில் தாங்கள் இயற்றுவதென்ன, தங்களால் இயல்வதென்ன என்பது எத்தனை முயன்றும்  புரிபடாமலேயே போரில் கலந்து கொள்கிறார்கள். இளையவர்கள் மட்டுமல்ல பெரியவர்களின் நிலையும் இதுதான் என இவர்களுக்குத் தெரியாது. 


இளையவர்களின் உணர்வுகளை சித்தரிப்பது மட்டுமல்லாது சாத்யகி போன்ற லட்சியவாதிக்கும் அவன் பிள்ளைகளுக்கும் உள்ள உறவு, அவர்களுக்குள் நிகழும் இணக்கம் மற்றும் முரண்பாடு போன்றவற்றையும் மிக நுண்மையாக காட்டிவிடுகிறார். மைந்தர்களின் மீது சாத்யகிக்கு முதலில் இருக்கும் விலக்கத்தையும் படிப்படியாக மனதில் ஏற்படும் மாற்றத்தையும் காட்டி இணக்கமாக நெருக்கமாக தன்னின் பிரதிகளாக அவர்களைக் காணும் நிலை வரை சாத்யகி பரிணமிக்கிறான். தந்தையாக மனதில் ஏற்படும் மெல்லிய தடுமாற்றத்தை விலக்கி படைத்தலைவனாக அவன்  நிமிர்வையும் பற்றில்லா தன்மையையும் காட்டுவதின் மூலம் சாத்யகி பாத்திரத்தின் பல பரிமாணங்களையும் இந்நாவல் காட்டுகிறது. 


இளைய யாதவரை தன் தலைவனாக மட்டுமில்லாது இறைவனாகவும் ஏற்றுக்கொண்டதன் பொருட்டு தன்னையே முழுதாக ஒப்புக் கொடுத்ததுடன் தனக்கு மிகப்பிரியமான தன் எதிர்காலமான தன் புதல்வர்கள் பதின்மரையும் போருக்கு அழைத்து வந்து இறைவனுக்கான வேள்வியில் அளிக்கப்படும் ஆகுதியாகவே அவர்களையும் முழுதளிக்கிறான். 


வெண்முரசிலுள்ள அசங்கன் மற்றும் அவன் இளையோர்களின் அத்தியாயங்களை மட்டுமே தொகுத்தால் மிகச்சிறப்பான தனித்துவம் மிக்க நாவலாக மிளிரும். துணைப் பாத்திரங்களாக அதுவும் கற்பனையில் படைக்கப்பட்ட இப்பாத்திரங்கள் முதன்மைப் பாத்திரங்களுக்கு நிகராகவே நம் மனதை ஆக்கிரமிக்கின்றன. இவர்களின் முடிவை  நினைக்கவே மனம்  அஞ்சுகிறது. அதற்காகவே வெவ்வேறு விபரங்களைக் கூறினாலும் முடிவையும் கூறித்தானே ஆகவேண்டும். பெரு வெள்ளத்தோடு செல்லும் சிறு துளிகளெனவே சென்று தந்தையின் அர்ப்பணிப்பை உலகிற்கு உணர்த்துவதற்காக குருக்ஷேத்ர வேள்வியின் பல லட்ச மானுட ஆகுதிகளோடு ஒன்றாக தங்களையும் முழுதளிக்கிறார்கள். 


இப்பாத்திரங்களை படைத்ததன் மூலம் போரில் மடிந்த பல்லாயிரக்கணக்கான இளையோர்களின் போர் பற்றிய அவர்களின் மனவோட்டத்தையும் வெந்தணலுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கும் சிற்றுயிர்களென தங்களின் இன்னுயிரை தாரை வார்ப்பதையும் காட்டி வாசிப்பவர்களையும் போர்க் களத்திற்குள் உலவவிட்டு அதன் பரவசங்களையும் கொந்தளிப்புகளையும் பொருளின்மைகளையும் மெய்யெனவே உணருமாறு செய்கிறார் ஆசிரியர்.


***


இவை வெண்முரசு நாவல் தொகுதியில் உள்ள பல நூறு பாத்திரங்களுள் சில துணை கற்பனைப் பாத்திரங்கள். இவை என் மனதிற்கு நெருக்கமானவை. மற்றொருவருக்கு அவரவர் மனநிலையைப் பொருத்து வேறு பாத்திரங்கள் அணுக்கமானவையாக இருக்கக் கூடும். 


இந்த துணைப் பாத்திரங்கள் மூலம் முதன்மைப் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார் ஆசிரியர்.  ஒற்றைப் பரிமாண படத்தின் அருகே மெல்லிய தீற்றல்களை தீட்டுவதன் மூலம் அதனை முப்பரிமாண ஓவியமாக மாற்றுவது போல துணைப் பாத்திரங்களின் உணர்வுகளையும் பார்வைகளையும் முன்வைப்பதன் மூலம் முதன்மைப் பாத்திரங்களை துல்லியமாக கண்டு, தொட்டு  உணரக்கூடியதாக உருமாற்றும் வித்தையை புரிந்துள்ளார். 


வெண்முரசு வாசித்த ஒவ்வொருவருக்கும் அம்பையை எண்ணும்போதே நிருதனும், திரௌபதியை எண்ணும்போதே மாயையும், அர்ஜுனனை எண்ணும்போதே சுபகையும், ருக்மணியை எண்ணும்போதே அமிதையும், பீமபாகத்தை எண்ணும்போதே சம்பவனும் சுபாஷிணியும், சாத்யகியை எண்ணும்போதே அவன் மைந்தர்களும் சேர்ந்தே தோன்றுவார்கள். இதற்குமுன் எங்கோ எட்டமுடியாத உயரத்தில் இருந்த அந்த முதன்மைப் பாத்திரங்கள் இந்த துணைப்பாத்திரங்கள் மூலம் நம்மில் ஒருவராகவே மாறிவிட்டார்கள். அவர்களின் மகிழ்வும் துயரும் நம்மையும் பீடித்து மகிழவோ துயருறவோ செய்கிறது. அவர்களோடு ஒருவராக பாரத கதையில் நம்மையும் ஒரு அங்கமாக உணரச் செய்கிறது. ஆசிரியர் ஜெயமோகனின் சாதனை என வெண்முரசைக் கூறுவதற்கு உள்ள பல காரணங்களில் இதனையே முதன்மையானதாகக்  கூறலாம்.


ஆக மொத்தத்தில், சிறு கற்பனைப் பாத்திரங்களைப் படைத்து அதன் மீது ஒளி பாய்ச்சி அந்த ஒளியை முதன்மைப் பாத்திரங்களின் மீது பிரதிபலிக்க வைத்ததன் மூலம் வெண்முரசு நூலின் அனைத்து பாத்திரங்களையும் விழியை கூசவைக்காத பிரமாண்ட ஒளியுடன் படைத்து நம் மனதில் நிறைத்துள்ளார் ஆசிரியர். அவரின் மேதைமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் இன்னும் பல படைப்புகளை படைக்கவேண்டுமென அவரின் அறுபதாவது அகவை நாளில் வேண்டிக் கொள்கிறேன். இன்னும் பலபல்லாண்டுகள் நீங்கள் வாழவேண்டும் எங்களுக்கு ஆசியென நூல்களை படைத்தபடி.


***


ஜெயமோகன் - கா. சிவா

No comments:

Powered by Blogger.