சின்னமாகும் கழுகின் இரண்டு தலைகள் - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

ஜெயமோகன் - ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் (நன்றி: தமிழ்.விக்கி)

இரண்டு வருடம் முன் ஜெயமோகன் சாருடன் நான் ஈரட்டியில் அதிகாலை நடக்கச் சென்ற போது, “சார், ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் எனக்கு படிக்கும் போது இருந்த பரவசம் அதுக்கு பிறகு இல்லையே” என்றேன். அபத்தமான கேள்வி. ஆனால் அன்று ஜெயமோகன் அந்த கேள்வியில் இருந்து விரிந்து சென்றார்.


ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் நாவலின் மைய தரிசனம் என்ன? ஹெடோனிஸ்ட் ஆக ஹென்றி வாழ்வதில் உள்ள சிக்கல். அவன் உச்சபட்ச சிக்கலாக சந்திக்கும் மற்றொரு ஹெடோனிஸ்ட் (பைத்தியக்கார பெண்) அந்த சிக்கலில் இருந்து ஹென்றிக்கு எப்படி விடுதலை கிடைக்கிறது என்பதை விவரித்தார். அதிலிருந்து இதே கருவில் ஜெயகாந்தன் எழுதிய பாரிஸூக்குப் போ, ஒரு நாடகை நாடகம் பார்க்கிறாள் நாவல்களில் இருந்து இந்நாவலில் ஹென்றி என்ற ஹெடோனிஸ்ட் தன் வாழ்க்கை முறையில் எப்படி முழுமை கொள்கிறான் எனச் சொன்னார். பாரிஸூக்குப் போ சாரங்கனும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ரங்காவும், கல்யாணியும் ஹெடோனிஸ்டான அவர்கள் வாழ்விலிருந்து எப்படி தவறி லௌகீகத்திற்குள் வருகிறார்கள். அவர்களில் இருந்து ஹென்றி எப்படி மேலெழுந்து வருகிறான் அதில் அவன் கண்டடையும் சிக்கல் என்ன என்பதை விரிவாக பேசினார்.


பின் அந்த காலகட்டத்தில் உலக இலக்கியத்தில் எழுதப்பட்ட ஹெடோனிஸ்ட் வாழ்க்கை தொடர்பான நாவல்களில் ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் எப்படி உச்சம் பெறுகிறது எனச் சொன்னார். உதாரணமாக சோர்பா தி கிரீக் நாவலில் வரும் மைய கதாபாத்திரமும் பாரிசுக்குப் போ சாரங்கன் கண்ட அதே வீழ்ச்சியைத் தான் சந்திக்கிறது. ஹென்றி இவர்கள் அனைவரையும் கடந்து ஒரு படி மேலே வருகிறான். ஹென்றிக்கு இருக்கும் சிக்கல் மற்றவர்களை விட மேலான சிக்கல் அவன் தன்னை இழப்பது ஒரு ஹெடோனிஸ்டிடம். இந்நாவல் பற்றி சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையிலும் இவற்றைக் குறிப்பிட்டிருந்தார்.


நான் கேட்டேன், “இத்தனை முக்கியமான நாவல் உங்கள் முக்கியமான நாவல் வரிசையில் வரவில்லையே?”


ஜெயமோகன், “ஆமா, ஜெயகாந்தன் ஹென்றிய வரலாற்றுப் பார்வைல வச்சுப் பாக்கல. அப்படி வச்சு பாத்திருந்தா. இது பெரிய நாவலா விரிஞ்சிருக்கும். அப்படி பண்ணாததால இது குறுநாவலா முடிஞ்சிருது” என்றார்.


அன்று எனக்கு ஜெயமோகன் உத்தேசித்த வரலாற்றுப் பார்வை அவ்வளவு தெளிவாகப் புரிவில்லை. ஆனால் பின் ஜெயமோகனின் புனைவோடு ஒப்பிட்டு அதனை யோசித்துப் பார்த்தால் ஜெயமோகன் தன் சிறுகதைகளில், நாவல்களில் இதனையே செய்துள்ளார். தன்னுள் எழும் கேள்விக்கான விடையை இரு வழிகளிலேயே அவர் கண்டடைய முயற்சிக்கிறார். 

ஒன்று அதனை தத்துவார்த்தமாக விளக்கி அதிலிருந்து விடை காண முயல்வார் அல்லது வரலாற்றில் இருந்து விடை காண முயல்வார். அவை எளிய லௌகீக பிரச்சனையாக இருந்தாலும் அவரின் உத்தி இது தான். இதனை எழுதும் போது நான் அவரிடம் பேசிய சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்கு கூட அவர் சொல்லிய பதில்கள் நினைவில் எழுகின்றன. ஒரு முறை என் குடும்பத்தில் நிகழும் அரசியலைப் பற்றி கேட்ட போது அது எப்படி மருகத்தின் குணத்தில் இருந்து வந்தது எனச் சொன்னார்.

இந்த இரண்டு சரடில் இருந்து எழும் கேள்விகளின் விசை தான் ஜெயமோகனின் புனைவுலகில் முக்கியமாக நிகழ்ந்திருப்பதைப் பார்க்கிறேன்.


ஜெயமோகனின் காடு கிரிதரன் என்னும் தனி மனிதனின் காதல், காமம் இரண்டிற்குமான ஊடாட்டத்தைப் பற்றிய நாவல். கிரிதரனின் ஆன்ம தோல்வி எங்கே நிகழ்ந்தது, அவனின் ஆன்ம நிறைவு எங்கே நிகழ்ந்தது என்ற துழாமுள்ளின் இரண்டு எதிர் எல்லையை காணும் நாவல். தான் என்ற தன்னாணவம் ஒருவனின் வாழ்க்கை பாதையை எப்படி கட்டமைக்கிறது என்பதைப் பற்றி உசாவும் நாவல்.


இந்நாவலில் மொத்தமாக தமிழ் இலக்கியத்தில் அதுவரை பேசப்பட்ட காமத்தின் வரலாறு கேள்வியாக்கப் படுகிறது. தமிழ் சமூகத்தில், பண்பாட்டில் நாம் காமம் என எதை எதை வரையறுக்கிறோம், அதன் எல்லைகளை, மீறல்களை ஒவ்வொரு குடியிலும் எப்படி பார்க்கப்படுகிறது, அவை அனைத்தும் அந்நாவலில் பேசப்பட்டு அதிலிருந்து கிரியின் வாழ்க்கை விரிக்கப்படுகிறது.



உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். புல்லுக்கட்டு நாயக்கர் திருநெல்வேலி, கன்யாகுமரி பகுதியில் வாழும் மலை சாதியினர். இவர்களுள் ஒரு வழக்கம் உண்டு. மனைவியை வாடகைக்கு விடுவது. ஒருவரின் மனைவியை மற்றவர் குத்தகைக்கு காசுக் கொடுத்துக் கூட்டிச் செல்லலாம். அவர்கள் சாதியில் அதில் எந்த சமூகப் பண்பாட்டு சிக்கலும் இல்லை.


இதே போன்ற இடம் காடு நாவலில் வருகிறது. குட்டப்பன் ரெஜினாவின் கணவனிடமிருந்து ரெஜினாவைக் கூட்டிச் சென்று அவளுடன் உடலுறவு கொள்கிறான். கிரிதான் அதனைப் பார்த்து திகைத்து அவன் குடிலுக்குள் இருப்பான் இரு வேறு பண்பாட்டுப் பின்னணிகள் நேர் எதிராக சந்தித்து நிற்கும் போது ஏற்படும் திகைப்பு.


இதனை நான் வாசிக்கும் போது இரு வேறு சமூக பின்னணியில் இருந்து எழுதப்பட்ட தமிழ் நாவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். கி. ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமத்தில் ஒரு இடம் வருகிறது. அதில் நாயக்கரிடம் பஞ்சாயத்து பேசப்படுகிறது. 


மகனுக்கு பெண் பார்த்துவிடுகின்றனர். ஆனால் அதற்குள் அவனது தாய் தவறிவிடுகிறாள். மனைவியை இழந்த அப்பா வீட்டில் இருக்கும் போது மகனுக்கு எப்படி திருமணம் நிகழ்த்துவது என்ற குழப்பம் ஏற்படுகிறது. நாயக்கர் அதற்கு உபாயம் சொல்கிறார். பார்த்து வைத்த பெண்ணின் கழுத்தில் அப்பாவை மாங்கல்யக் கயிற்றைக் கெட்டச் சொல்கிறார். அதன் பின் மகனைத் திருமணம் செய்துக் கொள்ளச் சொல்கிறார். அவ்வாறு நடக்கிறது மூவரும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். பின் நாயக்கரிடம், “நாயக்கரே நீங்க ஏன் அப்டி தீர்ப்பச் சொன்னீங்க. இன்னைக்கி ஒரே வீட்டுல ரெண்டு குடும்பம் நடந்திட்டு இருக்கு” என ஒருவன் கேட்கிறான்.


நாயக்கர், “இல்லேண்ணாட்டியும் அது அப்டி தான் நடந்திருக்கும் ஆனா அது தெரியவரும் போது வெட்டுக்குத்துல போய் முடிஞ்சிருக்கும். இப்ப பிரச்சனையில்லாம அவங்க வாழ்க்க போதுல்ல” என்பார்.


கு.ப.ராவில் தொடங்கி தி. ஜானகிராமன், சாரு, சு. வேணுகோபால் என யாரும் மேலே சொல்லப்பட்ட கி.ரா நாவலைப் படிக்கும் போதும் கிரிதரன் அடைந்த அதே திகைப்பையே அடைவர். கி. ரா தி.ஜா வின் உலகில் வாழ்ந்திருந்தால் அவரும் அதே திகைப்பையே அடைந்திருப்பார். அது இயல்பு தான் இரு பெரும் போக்குகள் அல்லது பண்பாடுகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் போது ஒன்று மற்றதைப் பார்த்து திகைப்படையவே செய்யும். 

காடு நாவலில் குட்டப்பனுக்கு கிரிதரனின் செயல்கள் கண்டு அதே திகைப்பிருக்கும், ஆனால் அது மௌனமாக உள்ளது. இப்படி ஒரு தனி மனித மைய நாவல் அதன் தேடலில் இருந்து சமூகங்கள், அச்சமூகத்தின் வரலாற்று, பண்பாட்டு பின்னணிகள், தமிழிலக்கிய வரலாற்றுப் பின்னணியின் தொடர் கண்ணி என இத்தனை பெரும் போக்கில் முன் வைத்து அதற்குள் நாவலை வைத்து அதன் மைய கேள்விக்கான விடையைத் தேடிப் பார்ப்பதே ஜெயமோகன் செய்தது.

ஜெயமோகனின் பெரும்பசிக்கு கி.ராவும் வேண்டும், தி.ஜாவும் வேண்டும், நவீன இலக்கியம், மரபிலக்கியம், உலக இலக்கியம் என அனைத்தும் வேண்டும். அனைத்தையும் தின்று தீராமல் இருக்கும் பெரும்பசிக்கு அவர் வாசிப்பு பின்புலத்தில் உள்ள வரலாறும், தத்துவமும் தான் காரணம் என ஒருவர் தயங்காமல் சொல்லமுடியும். அப்படி ஏற்படும் பெரும்பசியால் தான் வெண்முரசை ஏழு ஆண்டுகளில் எழுத முடியும். அத்தனை இந்திய தொன்மம், பண்பாடு, வரலாறு என இருபத்தி ஆறு நாவல்களில் தொகுத்த பின்பும் நூற்றிமுப்பது சிறுகதைகள், மூன்று நாவல்கள் என ஊற்றெடுத்து வரும்.


ஜெயமோகன் நூறு கதைகள் எழுதிய பின் ஈரோடு கிருஷ்ணன் ஒரு சூம் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவரே ஜெயமோகனிடம் விளையாட்டாக கேட்டார், “ஏன் சார், வெண்முரசு முடிச்சிட்டு இவ்வளவு குறுகிய காலத்துல இத்தனை கதைகள் படிக்க எங்களுக்கே மலைப்பா இருக்கே. நீங்க இத்தனை வகையில நூறு கதை நூறு நாளுல எழுதுறீங்க, இத எழுத வேறு ஒருத்தரால சாத்தியமில்லன்னு நினைக்கிறேன்.”


அதற்கு ஜெயமோகன், “ஆமா கிருஷ்ணன் ஏன்னா எனக்கு வரலாறு, இதிகாசம், தொன்மம் என கதைக்கு எல்லாம் தேவையா இருக்கு. அதை படிக்கவேண்டிய ஆர்வமிருக்கு. அவ்வளவு விரிவா நாம படிக்கும் போது எழுத்தும் அவ்வளவு விரியும்.” என்றார். அந்நாட்களில் மலையாளத்தில் யாரோ கேட்டுக்கொண்டதற்காக திருவிதாங்கூர் வரலாற்றைத் தொகுக்கும் பணியில் இருந்தார். திருவிதாங்கூர் அரசோடு மதுரை நாயக்கர் வரலாறும் இணைந்தது என்பதால் அப்பணியை ஒட்டி மதுரை நாயக்கர் கால வரலாற்றையும் தொகுத்தார். அதிலிருந்து அவர் எழுதிய திரை, ஆயிரம் ஊற்றுகள், போழ்வு, இணைவு, ஓநாயின் மூக்கு என சிறுகதைகளின் பட்டியல் ஒன்றை இடலாம். இவை வெண்முரசிற்கு பின்பாகவோ சமீபகாலங்களிலோ ஜெயமோகன் கதைகளில் ஏற்பட்ட மாற்றமில்லை.


ஜெயமோகன் எழுதத் தொடங்கிய காலம் தொட்டே அவரிடம் பூதக்கண்ணாடிக் கொண்ட இத்தகைய பெரும் பார்வை இருந்து வருவதைப் பார்க்கலாம்.


இரண்டு கதைகளை முதல் சிறுகதைத் தொகுப்பில் இருந்து உதாரணமாகச் சொல்லலாம். ஒன்று மாடன் மோட்சம். மாடன் மோட்சம் அன்றைய சமூகப் பின்னணியின் மாற்றத்தை பிரதிநிதித்துவப் படுத்திய கதையாக இருக்கிறது. 70 களில் தமிழகத்தில் ஏற்பட்ட சமூக மாற்றத்தை முன்னிறுத்தி அவை சமஸ்கிருதப் படுத்துதல் சென்று முடிவதைப் பற்றி பேசியது. இரண்டாவது திசைகளின் நடுவே கதையில் வரும் வேதாகம வைதீக மரபும் அதற்கு எதிரான சார்வாக மரபும்.


இவை இரண்டும் ஜெயமோகன் புனைவுலகிற்கான தொடக்கமாகப் பார்க்கிறேன். இங்கிருந்தே அவர் புனைவுலகை விரித்தார் எனப்படுகிறது. மாடன் மோட்சம் பின்னாளில் பின் தொடரும் நிழலின் குரல், வெள்ளையானையாக வளர்ந்ததையும், திசைகளின் நடுவே விஷ்ணுபுரம், கொற்றவை, வெண்முரசு என வளர்ந்ததையும் சொல்லி அறிய வேண்டியதல்ல. இப்பெருவெடிப்பிற்கான முதல் ஓசை ஜெயமோகனின் முதல் சில படைப்பிலேயே தென்படத் தொடங்கிவிட்டன.


***


(நன்றி: ஆனந்த விகடன்)


வரலாற்றின் மீதுள்ள ஜெயமோகனின் பித்தை வரலாற்று பார்வை, வரலாற்று உணர்வு என இரண்டாக வகுக்கலாம்.


ஜெயமோகன் கொண்டிருக்கும் வரலாற்று பார்வையென்பது பொது தளத்தில் பேசி நிறுவப்பட்ட பார்வைக்கு நேர் எதிரானது. அது எழுத்தாளனின் பார்வை, அந்த பார்வையில் ஓர் முழுமையும், புதுமையும், தனித்துவமும் இருப்பதைக் காணலாம்.


உதாரணமாக ஒரு நிகழ்வு சொல்கிறேனே, 2019-ல் மழைப் பயணம். ஆண்டு தோறும் செல்லும் வழக்கமான மழைப் பயணத்தில் இருந்து இப்பயணம் மாறுபட்டதாக இருக்க வேண்டுமென ஈரோடு கிருஷ்ணன் விரும்பினார். அதற்கான பயணத்திட்டங்களையும் வழக்கம் போல் அவரே வகுத்தார். பெங்களூரில் இருந்து கிளம்பி கொங்கன் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் பாறைச் செதுக்கோவியம் என்றழைக்கப்படும் petroglyph பார்த்து திரும்புவதாக திட்டம். பெட்ரொகிளிஃப் பின் பணிக் காலத்திற்கு பின் அதாவது இன்றிலிருந்து பத்தாயிரம் வருடம் முன்னர் சிறிய குன்றில் அமைந்த பாறையில் மனிதர்கள் செதுக்கிய ஓவியம். இவை 2015 இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்தினகிரி கொங்கன் கடற்கரை ஒட்டிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.


மகாராஷ்டிரா, கர்நாடகா எல்லையில் அமைந்து குடோப்பி என்னும் சிறு கிராமத்தில் அமைந்த பாறை ஓவியத்தை நாங்கள் பார்க்க சென்றோம். ஒரு கழுகின் புடைப்போவியத்திற்கு முன்னால் நான் கிருஷ்ணன், ராஜ மாணிக்கம், ஈஸ்வர மூர்த்தி நின்று பார்த்துக் கொண்டிருந்தோம்.


கிருஷ்ணன் எங்களிடம், “கழுகின் கால்கள் இத்தனை பெரிசாவும் தலை இத்தனை சிறுசாவும் இருக்குமா?” என்றார்.


எங்களுக்கு நேர் எதிரில் நின்று அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயமோகன் முதலில் எதுவும் பேசவில்லை. கிருஷ்ணன் பேசுவதைக் கேட்டுவிட்டு சிறிது நேரம் அந்த புடைப்போவியத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பின், “இல்ல கிருஷ்ணன் நீங்க நிக்கிறது தலைப் பக்கம் இது தான் கால் இது இரட்டைத் தலைக் கழுகு.” என்றார்.


வழக்கம் போல் கிருஷ்ணன் நம்பாமல் எதிர் வாதம் செய்தார். ஜெயமோகன் இருந்த பக்கம் சென்றதும் வாதம் நிறைவுற்றது. சிறிது நேரம் எல்லோரும் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதனை முழுமையாகப் பார்த்து முடித்ததும் ஜெயமோகன் சொன்னார், “இந்த இரட்டைத் தலைக் கழுகு உலகம் முழுக்க பல பேரரசுகளோட சின்னமா இருந்திருக்கு. எகிப்து, கிரேக்க தொன்மத்துல நாம பல இடங்கள்ல இரட்டை தலை கழுகு பார்க்கலாம். ஏன் நம்ம கீழை தொன்மத்துலயே பல இடத்துல இந்த இரட்டைத் தலை கழுகு வருது. இங்க மைசூர் மகாராஜாவோட சின்னமே இரட்டைத் தலை கழுகு தான்” என்றார்.


ஜெயமோகனின் வரலாற்று பார்வை என்பது இந்த முழுமையில் இருந்து எழுவது. ஒரு விஷயத்தை அல்லது கேள்வியை ஜெயமோகன் தொடர்பு படுத்துவது பின் பணி காலத்தில் இருந்து கிரேக்க, எகிப்திய தொன்மம் தொட்டு, இந்திய தொன்மம், உலக அரசியல், ராஜ்யம் என விரிந்து சென்று சமகாலத்தை நோக்கி வருகிறார்.


பின் சாருடன் நான் பெங்களூரில் காரில் சென்றுக் கொண்டிருந்த போது, “இங்க பாத்தியா எனக்கு இடது பக்கம் என்ன இருக்குன்னு பாரு” என்றார்.


திரும்பிப் பார்த்தேன். காரின் அருகில் ஒரு பேருந்து நின்று கொண்டிருந்தது. பி.எம்.டி.சி. பேருந்து. அதன் சின்னத்தில் இரட்டைத் தலை கழுகு இருந்தது. இப்படி ஒன்றை விடாமல் முழுமையில் இருந்து  முழுமைக்கு அப்பால் எனத் தாவுவதே ஜெயமோகனின் இயல்பு.


இதிலிருந்து நான் ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை நீட்டிக்கொண்டேன். அன்று எல்லோரும் மார்க்சியத்தைப் பார்த்தது பெரிய கால் சிறிய தலை கொண்ட கழுகாக தான், அல்லது தலையே இல்லாத கழுகாக.


ஜெயமோகனின் அருணாசலம் அந்த இரட்டைத் தலை கழுகின் பூர்வீகம் ஒவ்வொன்றையும் தேடி தேடிச் செல்கிறான். அதனையே வீரபத்ரபிள்ளையும் செய்கிறார். அவர்களுக்கு நேர் எதிர் தரப்பில் கதிர் நிற்கிறான். இந்த இரு தரப்பின் வாயிலாக ஜெயமோகன் மார்க்சியக் கோட்பாட்டை தொடுகிறார். அதிலிருந்து நடைமுறை மார்க்சியத்திற்கு செல்கிறார். கோட்பாட்டு மார்க்சியத்திற்கும் நடைமுறை மார்க்சியத்திற்கும் உள்ள இடைவேளையைச் சுட்டுகிறார். அதிலிருந்து ஜெயமோகனின் மெய்யான மார்க்சிய கனவு நோக்கிச் செல்கிறார்.


மெல்லிய நூல் என்னும் சிறுகதை வீரபத்ர பிள்ளை எழுதியதாக பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் வருகிறது. அதில் காந்தியை சந்திக்க பெரியவர் ஒருவர் வருவார்.


அவரிடம் காந்தி சோகன்ராம் என்னும் அணுக்க சிஷ்யனைக் காட்டி, “இவன் தான் என் அணுக்க சிஷ்யன்” என்கிறார்.


பெரியவர், “இவர் வேறு வண்ணம் போல் தெரிகிறதே” என காந்தியிடம் கேட்கிறார்.


காந்தி, “ஆம் நான் வைஷ்ணவன். இவன் ஹரியின் பிள்ளை” என்பார். பெரியவர் காந்தியிடம், “இதற்கு தர்ம சாஸ்திரத்தில் அனுமதி உண்டா?” எனக் கேட்கிறார்.


“இதற்கு ராமனிடமிருந்து அனுமதி கிடைத்தது. நான் ராமனிடம் நேரடியாகப் பேசி வாங்கிக் கொண்டேன். வேண்டுமென்றால் நீங்கள் பேசி அதனை உறுதி செய்து கொள்ளலாம்” என்பார். பெரியவர் எதுவும் சொல்லாமல் கிளம்பி விடுவார். இது மொத்த மார்க்சியம் மீது ஜெயமோகன் ஏற்றி வைக்கும் கனவு. அதன் லட்சியவாதத்தின் உச்சம். அதன் உச்சங்களான டால்ஸ்டாயும், தஸ்தோவ்ஸ்கியும், காந்தியும் கொண்டே அதனை நிறுவுகிறார்.

இதனை எழுத வரலாற்றின் முழுமைத் தொட்டு அதற்கு அப்பால் உள்ள ஒன்றுத் தொட்டு உசாவும் தன்மைக் கொண்ட ஒருவரால் மட்டுமே முடியும்.

***

யோசித்துப் பார்த்தால் ஜெயமோகனின் எல்லா நாவல்கள், கதைகளையும் பின்னி பின்னி ஒரு கோட்டில் இணைத்துவிடலாம் எனத் தோன்றுகிறது. நம் கற்பனை விரியும் அளவு பெரிய கோடாக இருக்கும்.


பின்தொடரும் நிழலின் குரல் எழுதி பதினேழு வருடத்திற்கு பின்பு எழுதிய வெள்ளையானையிலும் இதே வடிவம் தான்.



தாது வருஷப் பஞ்சத்திற்கு நாம் பிரிட்டிஷாரின் செயற்கையான பஞ்சம் ஏற்படுத்தும் முறையைச் சொல்கிறோம் அல்லது இயற்கையின் கோரத் தாண்டவமாக கருதுகிறோம்.


இப்படி நாம் என் ஒரு செயலுக்கான காரணங்களைத் தேடுகிறோம் என யோசித்துப் பார்க்கலாம். இத்தகைய காரணங்கள் என்பது ஒரு வகை முகமூடி தான். நாம் நம் நீதி உணர்வை கேள்விக்குள்ளாக்க ஒரு சில வருடங்களே எடுத்துக் கொள்வோம். வருடங்கள் என்பது அதிகபட்சம். முற்றிலும் மறந்து கடந்து செல்வதற்கான கால அளவு அது. அதன்பின் மேற்சொன்ன காரணங்கள் தன்னியல்பான படிமமாக சமுதாயத்தில் படிந்திருக்கும். பெரும் போர்களையும், பேரிழப்புகளையும் நாம் இப்படி தான் ஒரு அகலக் கால் எடுத்து வைத்து நடந்து செல்கிறோம். நம் முன் இருக்கும் மொத்த பாதாளமும் அந்த ஒரு தாவலில் மறைந்துவிடுகிறது.


தாது வருஷப் பஞ்சத்தையும் நாம் இயல்பாக எண்ணாமல் இருப்பது அந்த பாதாளத்தின் மேல் வைத்த அகலக் காலால் தான். உலகில் உள்ள அத்தனை பெரும் போர்கள், பேரிழப்புகளுக்கு நிகரானது இந்தியாவில் ஏற்பட்ட தாது வருஷப்பஞ்சம். ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியை நாம் திரும்ப திரும்ப நினைவில் நிறுத்துகிறோம். ஆனால் நம் முன் நிகழ்ந்த தாது வருஷப் பஞ்சத்தை அல்ல. அந்த அதலபாதாளம் ஒரு எட்டில் தாண்டப்பட்டுவிட்டது. ஆனால் எழுதாளனின் மனம் என்பது அந்த பாதாளத்தின் உள்ளிருக்கும் ஒவ்வொரு அடுக்களாகச்  சென்று பார்ப்பது தான். சென்று சென்று கீழேழ் உலகையும் கடந்து பாதாளத்தின் உலகில் உள்ள ஆதிசேஷன் விஷத்தின் மனத்தை அறிவது. பின் அந்நீலகண்டத்திலேயே திளைத்திருப்பது.


பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னையைத் தாக்கிய முதல் பெரும் பஞ்சம் 1647-ல் நிகழ்ந்தது. 1647-8-ல் பிரிட்டிஷ் வணிக நோக்குடன் இந்தியாவினுள் வந்தக் காலகட்டம் மதராஸ பட்டினத்தை தாக்கிய பஞ்சம் அது. அதனைக் குறித்து எழுதிய தாமஸ் ஐவி குறிப்புகளில், போர்ச்சுகீஸிய படைகளின் 15000 பேர் இறந்ததும், சாந்தோமில் இருந்தவர்கள் கோட்டைக்குச் சென்றதும். அவர்களிடமிருந்த அடிமைகள் தப்பி சென்றதையும் பற்றிய குறிப்புகள் மட்டுமே உள்ளது. அதில் திரும்ப திரும்ப வருவது தச்சர்கள், நெசவாளிகள் கணக்கு பற்றியும், அவர்கள் கிளம்பிச் சென்றது பற்றியும், அதனால் பிரிட்டிஷ் வணிகம் பாதிக்கப்பட்டது பற்றியும் தான்.


இந்த மனநிலையின் ஒரு பூதாகரமான பகுதி தான் வெள்ளையானையில் வரும் ரஸ்ஸலிடம் நாம் காண்பது. முரஹரி அயங்கார் ஐஸ் ஹவுஸ் வந்த பின் ஏற்படும் நிகழ்வு மாற்றத்தில் அயங்காரின் மனநிலையையும் தாமஸ் ஐவியின் மனநிலையையும் நாம் ஒப்பிட்டுக் காணலாம். வணிகம் மற்றும் அதிகாரத்தின் அடுக்குகள் அந்த அடுக்குகளின் வரிசைக்கு நேர் எதிராக நிற்கும் எய்டன்.


வரலாற்றில் இன்று வரை இந்த இரண்டு விசைகளும் நேர் எதிர் திசையில் நின்று ஒருவருக்கு ஒருவர் துவந்தம் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். வெல்வது யார் என்பது வரலாறு ஏற்கனவே முன்னறிந்து முடிவு செய்து வைத்தது தான். ஆனால் எய்டன்கள் மண்ணில் முளைத்துக் கொண்டே இருக்கின்றனர். 

இந்த வணிக, அதிகார அடுக்குகள் அந்த வெள்ளையானைக்கு எதிராக நாவலில் நிற்பது எய்டன் மட்டுமல்ல. நம் மனசாட்சி குறித்த கேள்வி தான். வரலாறு நெடுக நாம் தாண்டி வந்த பாதாளத்தை அகழ்ந்து அகழ்ந்து இன்னும் பெரிய நாம் கடக்கவே முடியாத பாதாளமாக்குகிறார் ஜெயமோகன். எய்டனும் வெள்ளையானையும் நாமும், நம் நீதியுணர்வும் என மாறி நம்முள் வளர்வது அதன் காரணத்தினால் தான் என நினைக்கிறேன்.

***




மேற்சொன்ன இரண்டு நாவலைப் பற்றி யோசிக்கும் போது, ஜெயமோகனின் வரலாற்றுப் பார்வையும், வரலாற்று உணர்வும் ஒன்றில் மற்றொன்று ஊடுபாவென நெய்து இவையெல்லாம் உருவாகி வருவதைக் காணலாம்.


நான் மேலே சொன்ன வரலாற்று முழுமையும், தனித்துவமும் இத்தகைய நாவல்களில் ஊடாக வந்தது என்றால் அவர் கொண்டிருந்த வரலாற்று உணர்வு அதன் பாவாக அமைந்து பெரும் கேள்விகளை எழுப்பும் பேரிலக்கியங்களை அவர் படைக்க காரணமாகியது எனலாம்.


இந்த ஒட்டுமொத்த பார்வையை ஜெயமோகனின் வரலாற்று பார்வையாக கருதலாம் என்றால் அதன் மேல் அவர் ஏற்றி வைக்கும் நீதி உணர்ச்சி என்பது தனி மனிதன் கொள்ளும் உணர்ச்சியில் இருந்து மேலெழுந்த வரலாற்று உணர்ச்சி. அந்த உணர்ச்சியே வீரபத்ரபிள்ளைக்காக அருணாச்சலத்தை அலைகழிக்கச் செய்தது. அந்த உணர்ச்சியே எய்டன் என்னும் கதாபாத்திரத்தை நம் மனசாட்சிக்கு படிமமாக உருவாக்கி நம் முன் கேள்வி எழுப்பியது.

***

ஜெயமோகனின் இந்த நான்கு வருட ஆசிரியத்துவத்தில் அவர் எனக்கு கற்றுக் கொடுத்தது இந்த இரண்டையும் தான் என நினைக்கிறேன்.


இந்நான்கு வருடத்தில் பல லௌகீகப் பிரச்சனைக்கான தீர்வுகளுக்காக ஜெயமோகனை அழைத்துப் பேசியிருக்கிறேன். நேரில் அவர் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். அதற்கான தீர்வு உடனடியாக அவரிடம் இருக்கும். ஆனால் அதற்கு மேல் என்னிடம் சொல்ல எப்போதும் அவரிடம் ஒன்றிருந்திருக்கிறது. நான் என்னை ஒரு எழுத்தாளனாக கருதுகிறேன் என்றால் இத்தகைய லௌகீக விஷயங்களைத் தாண்டி என்னிடம் இருக்க வேண்டிய ஒரு வரலாற்று உணர்ச்சியை எனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லிக் கொண்டேயிருப்பார். சில சமயம் அன்பாக, பல சமயம் அன்பின் உச்சம் கொள்ளும் கோபத்தால்.


ஜெயமோகன் சார் அறுபது வயதைக் கடக்கும் இத்தருணத்தில், அவர் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகள் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு கையளிக்க நினைப்பது இந்த இரண்டு விஷயத்தை மட்டும் தான் என்பதை நான் தயங்காமல் சொல்வேன். இதனை நான் அவர் எந்த எழுத்தாளரிடம் பேசும்போதும் கண்டிருக்கிறேன்.


பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் அய்யன்காளி தன் குழுவினருடன் காந்தியைச் சந்திக்கும் ஒரு இடம் வரும். அதில் காந்தி அய்யன்காளியோடு வந்த சிண்டன், மற்றவர்களுடன் உரையாடி உரையாடி ஒரு தெளிவை அடைவார். அவர்கள் எல்லோரிடமும் எதிர்த்து சண்டை செய்பவர்களிடம் காட்டவேண்டிய அகிம்சையைப் பற்றிச் சொல்வார். அதனை தான் ஏற்று நடப்பத்தால் மட்டும் தன்னால் பிறரிடம் முன்வைக்க முடிகிறது என்பதையும் நிறுவுவார். இறுதியில் அய்யன்காளியிடம், “என்னால் உங்களிடம் உரையாட முடிகிறது. நாம் பேசிக் கொண்டிருக்கும் இவ்வுரையாடலுக்கு அப்பால் சென்று என்னால் உரையாட முடிகிறது” என்பார். அந்த உரையாடல் முடிந்ததும் அய்யன்காளி தன் கையில் உள்ள கழியை அங்கேயே போட்டுவிட்டு மீள்வார்.


இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் ஜெயமோகன் ஒவ்வொரு சந்திப்பிலும் அவர் பேசுவது ஒரு வரலாற்றின் ஒட்டுமொத்தப் பார்வையை என்றால் அவர் சொல்லாமல் உணர்த்திச் செல்வது அந்த பார்வையில் இருந்து அவருக்கு உருவாகி வந்த வரலாற்று உணர்வை தான். ஜெயமோகன் பல கட்டுரையில் விளக்கியது போல் காந்தி அதனை சமன முனிவர்களிடமிருந்து பெற்றிருக்கலாம். ஜெயமோகன் அதனை ஆதியில் தியானத்தில் அமர்ந்த ஒரு பழங்குடி முனிவனிடமிருந்து காந்தி வரை என எல்லோரிடமும் இருந்து பெற்றுக் கொள்கிறார்.


இத்தகைய பெருவிசையை இந்திய பெருநிலத்தில் கடந்த நூற்றாண்டில் காந்தி விதைத்துச் சென்றார். ஆயிரம் காந்திய மரங்கள் வேரூன்றி விருட்சமாக நிற்பதை இப்போது நாம் காண்கிறோம். இந்த நூற்றாண்டில் ஜெயமோகன் விதைத்துக் கொண்டிருக்கிறார். பின் விளையக் காத்திருக்கும் ஆயிரம் மரங்களுக்காக.


பாறையில் அமைந்திருக்கும் கழுகின் இரட்டைத் தலையும் ஒன்றை ஒன்று இட்டு நிரப்பி விதைக்க காத்திருக்கும் ஆயிரம் மரங்களின் சின்னமாக அமையலாம். ஆனால் அதன் ஆதி பாறைச் செதுக்கோவியம் என்பது ஜெயமோகன் என்னும் கழுகு தன் இரண்டு தலைகளையும் தானே இவ்வண்ணம் தீட்டிக் கொண்டது தான்.


பேராசிரியனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகளும், வணக்கங்களும்.

***

ஜி. எஸ். எஸ். வி. நவீன் - தமிழ் விக்கி

1 comment:

  1. ஜெயமோகனை அருகிருந்து பார்த்த பார்வையையும் அவரை அகவயமாய் உளவாங்கியதையும் தெளிவாக எழுதியிருக்கிறார் ஜிஎஸ்எஸ்வி.

    ReplyDelete

Powered by Blogger.