வெண்முரசும் காப்பிய மறுஆக்கங்களும்: ஒரு பார்வை - மயிலேறி விசு


[1] முன்னுரை:


ஒரு பண்பாட்டின் ஆழ்மனதைக் கட்டமைப்பதில் தொன்மங்களுக்குப் (myth) பெரும் பங்குள்ளது. தொன்மங்கள் (myth) அந்தப் பண்பாட்டில் உள்ள படிமங்களின் (imagery), வாய்மொழிக் கதைகளின் (folklore) விரிவாக்கங்கள். லெகோ துண்டுகளைக் கலைத்து அடுக்கி விளையாடும் குழந்தையைப் போல, அந்தச் சமூகத்தில் ஏற்கனவே இருக்கும் தொன்மங்களில் உள்ள நிகழ்வுகளையும், கதை மாந்தர்களையும் காவிய ஆசிரியர்கள் தங்களின் தரிசனத்திற்கு ஏற்ப மறுகட்டமைப்பு செய்து, புதிய தொன்மங்களை உருவாக்குகிறார்கள். பழைய புராணங்களின் ஏற்பு, மறுப்பு, தலைகீழாக்கம் என அவர்கள் உருவாக்கும் புதிய தொன்மங்கள் வழியே அந்தப் பண்பாட்டின் ஆழ்மனதைக் காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்க முயல்கிறார்கள். 

 


“முற்போக்கு" போர்வையில் தொன்மங்களை ஒட்டுமொத்தமாகப் பழங்கதைகள் என நிராகரிக்கும் போக்கும், “கலாச்சாரப் பாதுகாவலர்” போர்வையில் தொன்மங்களை மாற்றுவதைக் கண்டிக்கும் போக்கும் ஒரு வாழும் பண்பாட்டிற்கு உகந்தது அல்ல. தூர்வாரப்படாத அணை காலப்போக்கில் பயன்படாமல் போவதைப் போல, மறுஆக்கங்கள் செய்யப்படாத தொன்மங்களும் பயன்படாமல் போகக்கூடும். 


காவிய காலகட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமல்ல, நவீன நாவலாசிரியர்களும் உலகம் முழுவதுமே அவர்கள் வாழும் பண்பாட்டைச் சேர்ந்த தொன்மங்களைக் கொண்டு புதிய தொன்மங்களை உருவாக்குகிறார்கள். பரவலாக வாசிக்கப்படும் பொழுதுபோக்குப் படைப்புகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக ஜுராஸிக் பார்க் நாவல் ஒருவகையில் ஏதேன் தோட்டம், பிராங்கன்ஸ்டைனான டைனோசர், கிறித்தவத்தின் ஏழு கொடிய பாவங்கள் – தற்பெருமை, பேராசை, பெருந்தீனி, பொறாமை, பெருங்காமம், வெஞ்சினம், சோம்பல் – பிரதிபலிக்கும் கதை மாந்தர்களின் அழிவு (படம் மூல நாவலில் இருந்து மாற்றப்பட்டுள்ளது) என பைபிளில் உள்ளதின் கலவை இல்லையா?


ஜெயமோகனின்  அறம் சிறுகதையை கண்கள் கலங்காமல் படித்திருக்க  முடியாது. தமிழர்களின் நரம்பை அந்தக் கதை ஏன் தொடுகிறது என்றால் அதில் உள்ள கண்ணகி தொன்மம். பிரெஞ்சில் மொழிபெயர்த்தால் அது வெறும் ஒரு ராயல்டி திருட்டின் கதையாக வாசிக்கப்படும். பழைய நகைகளை மெருகேற்றி, புதிய உடைகளுக்கு ஏற்ப அந்த நகைகளின் சில பகுதிகளைப் பயன்படுத்திக்கொள்வதைப் போல, பழைய படிமங்களின் பல ஆழங்களை முதலில் சரியான ஒளியில் காட்ட வேண்டும் [1]. அதன் பின்பே அந்தப் படிமங்களை நவீனப் படைப்புகளில் பயன்படுத்திக் கொள்ளும்போது ஒரு ஆசிரியர் அந்தப் பண்பாட்டில் உத்தேசிக்கும் மாற்றங்களை உருவாக்க முடியும் [2]. [1] & [2] ஒரே தலைமுறை எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என்பதும் இல்லை. 


“தொன்மங்களைச் சரியான ஒளியில் காட்ட வேண்டும்” என்றால் நேர்மறையான என்ற பொருளில் அல்ல. மகாபாரத தொலைகாட்சித் தொடர், சிவாஜியின் ‘கர்ணன்’, தளபதி படத்தின் ஶ்ரீவித்யா கதாபாத்திரம் போன்றவற்றில் இருந்து குந்தி, திரௌபதி எல்லாம் “அபலைகள்" என்ற சித்திரம் எனக்கு இருந்தது. மகாபாரத மறுஆக்கங்களில் நான் முதலில் படித்த “இரண்டாம் இடம்” நாவல் தான் குந்தி அறிவு, ஆற்றல், சூழ்ச்சி நிறைந்த பேரரசி, மிக மையமான கதாபாத்திரம் என்று உணர வைத்தது. பின்பு மூல மகாபாரதத்தைப் படிக்கும்போது “இரண்டாம் இடம்" காட்டும் குந்தியே சரியான குந்தி என்பது புரிந்தது. உதாரணத்திற்கு நகுல சகாதேவர்களைப் பெற்ற பின் மாத்ரி மீண்டும் கருத்தரிக்க, பாண்டு குந்தியிடம் மந்திரத்தை மீண்டும் உபதேசிக்குமாறு சொல்ல, அதற்குக் குந்தியின் பதில். 


“ஓ மன்னரே, ஒரு முறை அந்த மந்திரத்தைச் சொன்னதற்கே, அவள் இரு பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள். நான் அவளால் ஏமாற்றப்படவில்லையா?(26) அவள் என்னைவிட அதிகம் பிள்ளைகளைப் பெற்றுவிடுவாள் என்று நான் அஞ்சுகிறேன். நிச்சயமாக இதுவே தீய பெண்களின் வழியாகும். ஒரு முறை இரட்டை தேவர்களை அழைத்தால் ஒரே பிரசவத்தில் இரு பிள்ளைகளைப் பெற்றுவிடலாம் என்பதை அறியாத அளவுக்கு முட்டாளாயிருந்திருக்கிறேன்.(27) ஓ மன்னா! நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மேலும் கட்டளையிடாதீர். இதுவே நீர் எனக்குத் தரும் வரமாக இருக்கட்டும்" என்றாள்.” 


சில குழந்தைகள் ஏற்கனவே இருக்கும் லெகோ கட்டுமானத்தை கலைத்துவிட்டுப் போய்விடும். மீண்டும் கட்டாது. “கலைத்தல்" என்பதற்கு எட்டி உதைப்பதைத் தவிர பெரிய திறன் எதுவும் தேவையில்லை. சில படிமங்கள் சரியான ஒளியில் காட்டப்படும்போது, இணை-படிமங்களைக் குறைத்துக் காட்ட நேரும். வெறுமே கலைத்தல் என்பதை விட இது மேலானது. “கலைத்து மீண்டும் அடுக்குதல்” என்பதே மறுஆக்கம். அதுவே சவாலானது. மகாபாரதம் போன்ற தொன்மவெளியைக் கலைத்து அடுக்கிக் காட்டுதல் என்பது, மகாபாரதம் அளவிற்கே இணை புராணமாக விரிந்தால்தான் சாத்தியம். 


வெண்முரசு அந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கும் மறுஆக்கப் படைப்பு. வெண்முரசு நாவலில் விரிவு, புதிய சொற்கள், உவமைகள், தத்துவங்கள், பாத்திரப் படைப்புகள் எனப்  பற்பல தருணங்களில் கண்கள் கலங்கி, உணர்ச்சியால் அடித்து செல்லப்பட்டு படித்திருக்கிறேன். ஏராளமான வாசகர் கடிதங்கள் இணையத்தில் வெளி வந்துள்ளன. இந்தக் கட்டுரையின் நோக்கம் வெண்முரசிலும் மற்ற நவீன மகாபாரத மறுஆக்கங்களிலும் மகாபாரத மைய நிகழ்வுகள் (பாண்டவர் பிறப்பு, திரௌபதி சுயம்வரம், சூதுக்களம், கீதை) எப்படி மறு கட்டமைக்கப்பட்டள்ளன, மைய கதை மாந்தர்கள் எப்படிப் பரிணாமம் அடைகிறார்கள் என்பவற்றைக் குறித்த ஒரு சித்திரத்தை அளிக்கும் முயற்சி. இது வெண்முரசை மேலும் அணுக்கமாக அறிந்துகொள்வதற்கும், ஆசிரியரின் தரிசனம் (vision) குறித்து வாசகருக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தவும் உதவலாம்.

 

இந்திய பண்பாட்டில் மிக அதிக அளவில் மறுஆக்கம் செய்யப்பட்ட படைப்பு இராமாயணம். இந்திய அளவில் இராமாயணம் அடைந்த மாற்றங்களையும், தமிழில் எழுதப்பட்ட கம்பராமாயணம் எப்படி வால்மீகி இராமாயணத்தில் இருந்து மறுகட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் பார்ப்பது வெண்முரசை மேலும் அறிந்துகொள்ள உதவும். இராமாயணத்தை முன்வைத்து இந்தியப் புராணங்களில் மறுஆக்க மரபையும்,  நவீன மகாபாரத மறுஆக்கங்கள் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தையும், அதன் பின் மகாபாரத மைய நிகழ்வுகள் (பாண்டவர் பிறப்பு, திரௌபதி சுயம்வரம், சூதுக்களம்) எப்படி மறுகட்டமைக்கப்பட்டுள்ளன என்பதையும் பார்ப்போம்.


[2] இந்திய புராணங்களில் இராமாயண மறுஆக்கம்:


அ.அ.மணவாளன் எழுதிய “இராம காதையும், இராமாயணங்களும்" என்ற நூல் இராமாயணத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் விவரிக்கிறது.  வேதங்களில் இராமன், ஜனகன், சீதை போன்ற பெயர்கள் காணப்பட்டாலும், இராமாயணக் கதையோ, இந்தப்பெயர்களுக்கிடையே உறவுகளோ (ஜனகன் - சீதை : தந்தை - மகள்)  வேதங்களில் குறிப்பிடப்படவில்லை. தசரத ஜாதகம் (பொ.யு.மு 5நூ), அனாமக ஜாதகம் (பொ.யு.மு 3நூ) ஆகிய பாலி மொழியில் எழுதப்பட்ட இரு புத்த ஜாதகக் கதைகள், வால்மீகி இராமாயணத்திற்குக் (பொ.யு.மு 4-3நூ) காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படுகின்றன. 


ஜாதகக் கதைகளில் தசரதனின் தலைநகரம் காசி; இராமர் புத்தரின் முந்தைய அவதாரம்; இராமனும் சீதையும் உடன்பிறந்தோர்கள்; வனவாசம் செல்வது இமயமலைப் பகுதியில். வால்மீகி இராமாயணத்தில் தசரதனின் தலைநகரம் அயோத்தி; இராமனும் சீதையும் தொடக்கம் முதலே கணவன் மனைவியர்; வனவாசம் தண்டகாரண்யத்தில். 


பாலி மொழியில் எழுதப்பட்ட பௌத்த இராமாயணங்களைப்போல, சமணர்களும் பிராகிருதம், அபப்பிரம்சம், வடமொழி ஆகிய மூன்று மொழிகளில் இராமாயணங்கள் எழுதியுள்ளனர். சமணர்களின் இராமாயணம் பிரதி புராணம் (எதிர் புராணம்) எனப்படுகிறது. விமல சூரியின் பிராகிருத பௌம சரியுவில் (பத்ம சரிதம் - பொ.யு 3-4 நூ) இராவணன் சமணர்களின் அறுபத்துமூவர்களில் ஒருவன். கல்வியில் சிறந்தவன். தன் ஆற்றல்கள் அனைத்தையும் கடும் நோன்புகள் மூலம் அடைந்தவன். அருகர் வழி வந்தவன். இராவணன் பிறந்த போது அவன் அம்மா, நவரத்ன மாலையை அணிவிக்கிறாள். ஒன்பது மணிகளிலும் அவன் முகம் பிரதிபலிக்க, தசமுகன் என்று அழைக்கிறாள். வானரர்கள் குரங்குகள் அல்லர், வித்யாதரர்கள். இராவணனுடைய உறவினர்கள். குரங்குக் கொடி உடையவர்கள், ஆகையால் வானரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 


இராவணன் விருப்பமில்லாத பெண்ணைத் தொட மாட்டேன் எனச் சபதம் எடுத்தவன். இராவணனின் வீழ்ச்சி காமத்தை வெல்ல முடியாததால் வருகிறது. இராமனோ புலன்களை வென்றவன். அருகர் நெறி வந்த நாயகன். இதுவே இராமனின் கடைசி பிறவி, ஆகையால் இராமன் யாரையும் கொல்வதில்லை. இலட்சுமணனும் இராவணனும் ஒவ்வொரு பிறவியிலும் சண்டையிட்டுக் கொள்ளும் வாசுதேவ-பிரதி வாசுதேவ இணையாக வருகிறார்கள். இராவணனைக் கொல்வது இலட்சுமணன். இராவணனைக் கொன்ற பாவத்தால் இலட்சுமணன் நரகத்திற்குப் போகும் போது, இராமன் வீடுபேறடைகிறான்.


வால்மீகி இராமாயணம் எழுதப்பட்டு குறைந்தது ஆயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்டது கம்பராமாயணம். இடைப்பட்ட காலத்தில் புத்த மத வீழ்ச்சி, திருக்குறள், பக்தி இலக்கியங்கள், ஆழ்வார் பாசுரங்கள், சங்கரர், ராமானுஜர் உள்ளிட்ட தத்துவ ஞானிகளின் வருகை, சிறிய அரசுகள்/குலங்கள் தொகுக்கப்பட்டுப் பேரரசுகள் உருவாக்கம் எனப் பெரிய பண்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்டன. கம்பர் அன்றைய “உலகம் யாவையும்" செறித்து உருவாக்கிய படைப்பு கம்பராமாயணம். 


இராமன், சீதை  உள்ளிட்டோர் வால்மீகியின் காப்பியத்தில் மனித குணங்களோடு இருக்கும்போது கம்பரின் காப்பியத்தில் இராமன், சீதை, இராவணன், கும்பகர்ணன் என  எல்லோருமே உச்ச பாத்திரப்படைப்புகள். வால்மீகியின் அயோத்தி கொடுத்துச் சிவந்த கரங்கள் உடையவர்களின் நகரம் என்றால், கம்பனின் அயோத்தியில் இல்லாதவர்கள் இல்லை, அதனால் உடையார்களும் இல்லை. சிறிய நிகழ்வுகள் கூட மாற்றப்பட்டுள்ளன. வால்மீகியில் முதல் போரில் இராவணன் தோற்றுத் திரும்பும்போது, தேவாசுரர்கள், நாகர்கள், பூதகணங்கள் சிரிக்கின்றன. கம்பனில் வான் நகும், மண் நகும் என்பதால் இராவணன் வெட்கவில்லை, ஜானகி சிரிப்பாளே என வெட்கப்படுகிறான். 


வால்மீகியின் சீதையும் இராமனும் மனித குணங்களோடு வருகிறார்கள். சீதை மாயமானைத் துரத்தி சென்ற இராமன் திரும்பி வராத போது, இலட்சுமணன் போக மறுப்பதைக் கண்டு, "என் மீது வைத்த ஆசையினால் பரதனின் கையாளாக நின்று இந்தத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்து நிற்கிறாயா?" என இலட்சுமணனைத் திட்டுகிறாள். பின்பு இராவணன் கடத்திச் செல்லும் போதும், கைகேயியும், பரதனும் தன் நிலை கண்டு சிரிப்பார்களே என அரற்றுகிறாள்.சுந்தர காண்டத்தில் அனுமன் வந்து தன் தோளில் ஏறச்சொலும்போது, "சிறிதாக உள்ள நீ எப்படி என்னை பத்திரமாகக் கொண்டு செல்வாய்? குரங்குத்தனமான யோசனை." என அனுமனையும் திட்டுகிறாள். அனுமன் தன்னை அவமதிப்பதாக முணுமுணுக்கிறான்.  கம்பனின் சீதை "நீ போகவில்லையென்றால் நான் தீக்குளிப்பேன்" என இலட்சுமணனை மிரட்டுகிறாள். இராவணன் கடத்திச்செல்லும்போதும் இறைவா, இளையோய், பரதா என இராமரையும், தம்பிகளையும் அழைத்து அரற்றுகிறாள். வால்மீகி இராமாயணத்தில், போரெல்லாம் முடிந்து பட்டமேற்க அயோத்தி மீள வரும்போது பரதன் மீண்டும் ஆட்சியைத் தருவானோ என்ற சந்தேகம் இராமனுக்கு உள்ளது. “அனுமனே, நீ பரதனிடம் சென்று இராவண வதத்தைக் கூறி, வலிமையான நண்பர்களுடன் நாங்கள் அயோத்தியின் அருகில் வந்துவிட்டோம் என்று சொல். பரதனின் முகக்குறிப்புகளைக் கவனி, இவ்வளவு பெரிய நாட்டை ஆண்டால் யாருக்குத்தான் ஆசை வராது? வேண்டுமானால் அவனே வைத்துக் கொள்ளட்டும்” என்கிறான். கம்பராமாயணத்தில் இராமன் அனுமனிடம், “பரதன் எனக்கு ஏதோ தீது நேர்ந்தது என எண்ணி தீ புகவும் கூடும். நீ சென்று தீதிண்மை செப்பி, தீ அவித்து, இளையோன் நின்ற நீர்மையும், நினைவும் தேர்ந்தபின் என்னிடம் தெரிவி" என்கிறான்.


சூர்ப்பணகை: கதையின் திருப்பமான சூர்ப்பணகை மூக்கு அறுபடுவது வால்மீகியில் இராமன் கட்டளையிட இலட்சுமணன் சூர்ப்பணகை மூக்கை அறுக்கிறான். சூர்ப்பணகைக்குச் சீதை இராமனின் மனைவி என தெரிகிறது. இரண்டாம் தாரமாவது உனக்குச் சரிவராது, தம்பிதான் உனக்குச் சரி என இருண்ட நகைச்சுவை காட்சி போலக் கிண்டலாகத் துவங்கி வன்முறையில் முடிகிறது. [கம்பன்] சூர்ப்பணகை இராமனிடம், திருமண விருப்பத்தைத் தெரிவிக்க, "நீ அந்தணர் (விஸ்ரவஸ்) மகள், நான் அரசர் குலம். முடியாது" என்கிறான். சூர்ப்பணகை தான் தாய்வழியில் அரக்கர் குலம் என்கிறாள். அரக்கரும் மனிதரும் மணம் புரிய மாட்டார்கள் என மறுக்கும் இராமன், மூவுலகும் வென்ற இராவணனும், குபேரனும் பெண் கொடாமல் உன்னை ஏற்க முடியாது என்கிறான். காந்தர்வம் ஏற்கப்பட்ட மணமுறையே,  அவ்வாறு மணம் செய்தால் முனிவர்களுடன் ஏற்கனவே போரில் இருக்கும் தன் அரக்கர் குல அண்ணன்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிறாள். அப்போது அங்கு வரும் சீதையின் அழகைக் கண்டு வியந்து, பின்பு தன்னைப் போலவே மாறுவேடமிட்டு வந்த அரக்கி என எண்ணி, இராமனை எச்சரிக்கிறாள். இராமன் புன்னகைத்து ஆம் அவள் அரக்கிதான் என்கிறான். சீதையைத் தாக்க வரும் சூர்ப்பணகையை எச்சரித்து என் தம்பி உனைக்கண்டால் கோபப்படுவான், போய்விடு எனச் சொல்லிச் சீதையுடன் சென்றுவிடுகிறான். சூர்ப்பணகை ஓர் இரவு முழுவதும் தாபத்தால் வாடுகிறாள். ஒருவேளை சீதை அவனுடைய துணைவியோ என நினைக்கிறாள். மாறுவேடத்தில் இருக்கும் அரக்கியான சீதை இருக்கும் வரை இராமன் வரமாட்டான் எனக் கருதி, மறுநாள் விடியலிலே சீதையை தூக்கிச் செல்ல வருகிறாள். அங்கு இராமன் இல்லை. சூர்ப்பணகையைத் தடுத்த இலட்சுமணன் அவள் மூக்கு, காதுகள், முலைகளையும் அறுத்துவிடுகிறான். 


ஜடாயு: சீதையைக் கவர்ந்து சென்றபின், குற்றுயிராகக் கிடக்கும் ஜடாயுவை இராமன் காண்கிறான். [வால்மீகி] “கழுகு வடிவில் இருக்கும் அரக்கனான ஜடாயு, சீதையை உண்டுவிட்டது. சீதை ஜடாயுவுடன் போராடியதால், ஜடாயுவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஜடாயுவை இப்போதே கொல்வேன்” என்று ஆர்ப்பரித்தபடியே ஜடாயுவை நோக்கி செல்கிறான் இராமன். ஜடாயு இராமனிடம் சரணடைந்து, இராவணன் கவர்ந்து சென்றது பற்றி தெரிவிக்கிறது. ஜடாயுவை தவறாக எண்ணியதை நினைத்து வருந்துகிறான் இராமன். [கம்பன்] சீதையை கவரும்போது, ஜடாயுவிற்கு துணையாக, இராவணனுடன் போரிடாமல் வேடிக்கை பார்த்ததற்காக, தேவர்களையும், முனிவர்களையும் முனிந்து அவர்களை தண்டிக்க போகிறேன் என்கிறான் இராமன். ஜடாயு, இராமனிடம், தேவர்களோ, முனிவர்களோ இராவணனை எதிர்த்திருந்தால், தனக்கு ஏற்பட்ட நிலையே ஏற்பட்டிருக்கும். தவறு தேவர்களிடமோ, முனிவர்களிடமோ இல்லை. சீதையை வனத்தில் தனியே விட்டுவிட்டு மானின் பின்போன உன்னிடத்தில். ஆகவே, உலகை பழி சொல்ல வேண்டாம் என்று இராமனுக்கு அறிவுரை வழங்குகிறார். இராமன் தன் தவறை உணர்ந்து வருந்தி, ஜடாயுவை தன் தந்தை என்றே அழைக்கிறான்.


அனுமன்: வால்மீகியில் அனுமன் நாயகன்தான். சீதையைத் தேடி செல்லும்போது, பிலத்தில் மாட்டிக்கொள்ளும் அனுமனையும், வானரர்களையும் சுயம்பிரபை என்ற பெண்துறவி காத்து, பிலத்திற்கு வெளியே கொண்டுவந்து விடுகிறார். சீதை இலங்கையில் இருப்பதை அறிந்துகொண்டபின், கடலை யார் தாண்டுவது என பயந்து வானரர்கள் ஒருவரும் முன்வரவில்லை. ஒரு ஓரமாக, அமைதியாக உட்கார்ந்திருக்கும் அனுமனிடம் நீ வாயுபுத்திரன், உன்னால் முடியும் என உற்சாகப்படுத்தி அனுமனை கடல் தாண்ட ஆயத்தப்படுத்துகிறார் ஜாம்பவான். ஜாம்பவானின் சொல்லால் அனுமனுக்கு நம்பிக்கை வருகிறது. கம்பனின் அனுமன் அதிரடி நாயகன். பிலத்தில் மாட்டிக்கொள்ளும் வானரர்களையும், சுயம்பிரபையையும் அனுமனே பிலத்தைப் பிளந்துகொண்டு வெளியே கொண்டுவருகிறான். கடல் கடக்க வானரர்கள் தயங்க, ஜாம்பவான் அனுமனே சிறந்தவன் என்கிறார். இந்தக் கடல் என்ன, இதை விட ஏழு மடங்கு பெரிய கடலானாலும் சரி, அந்த இலங்கையையே இங்கே கொண்டு வரவேண்டும் என்றாலும் சரி, சீதையை மீட்டுக் கொண்டு வர வேண்டுமென்றால் சரி, எனக்கு இதெல்லாம் சாதாரணம் என்கிறான் அனுமன்.


வாலி: [வால்மீகி] வாலி இராமனிடம் என்ன குற்றம் செய்தேன்? உன் நாட்டிலோ நகரிலோ வந்து குற்றமிழைத்தேனா? மறைந்திருந்து தாக்குதல் அறமா? எனக்கும் உனக்கும் நிலம் மற்றும் செல்வம் சார்ந்து எந்த தகராறும் இல்லை. பிறகேன் கொன்றாய்? சான்றோர்களின் விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்? என் தோலோ, கறியோ உனக்கு உபயோகமில்லை. பிறகெதற்கு வீண் கொலை? என்று கேட்கும் வாலியிடம் அறம் அறியாத குரங்கே, உன் குரங்கு புத்தியுடன் என்னையே திட்டுகிறாயா என்ற ராமன்  நீ அறம் தவறினாய், உன் தம்பி மனைவியான ருமையிடம் தவறாக நடந்து கொண்டாய், அவள் உன் மருமகளுக்கு ஒப்பானவள், தர்மத்திற்கு எதிரானது அது; மொத்த உலகமும் - காடு, நாடு, மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் - இக்‌ஷவாகு குலத்தின் பரதனின் ஆட்சியில் உள்ளது, பரதனின் ஆணைக்கிணங்க நானும் மற்ற அரசர்களும் நீதியை நிலைநாட்டுகிறோம்; நீ ஒரு குரங்கு - வேட்டையில் மிருகங்களை பொறி வைத்தோ, மறைந்திருந்தோ கொல்லலாம்; மனு தர்மப்படி தான் உன்னை கொன்றேன். அது சாஸ்திரங்கள் சொல்லும் அறம்தான். மன்னர்களையெல்லாம் நீ கேள்வி கேட்கக்கூடாது. அவர்கள் மண் மீது நடக்கும் தெய்வங்கள் என்று ‘விளக்கங்கள்’ அளிக்கிறான் இராமன். [கம்பன்]  வாலி ராமனை நோக்கி அரக்கர் உனக்கு ஓர் இழிவு செய்தால், அதற்கு வேறு ஓர் குரங்கினத்து அரசை கொல்ல மனுநீதி கூறியதா? என் மீது என்ன குற்றம் கண்டாய்?  தந்தை செல்வத்தை உன் தம்பிக்கு தந்து நாடு ஒரு கருமம் செய்தாய், என்னை கொன்று என் தம்பிக்கு என் நாட்டை தந்து காடு ஒரு கருமம் செய்கிறாயா? நீ எனக்கு செய்தது முறை எனில், இலங்கை வேந்தன் முறையில்லாததை செய்தான் என்று முனிதியோ? என்று மேலும் ஆழமான கேள்விகள் கேட்கிறான். இராமன் அதற்கு உன் தம்பி மனைவியை கவர்ந்தது உன் குற்றம் என்கிறான். வாலி அதற்கு பதிலாக உணர்வு சென்ற வழி செல்வதே எங்கள் வழி, உங்கள் குலத்தை போல கற்போ, மறை நெறி வகுத்த திருமணமோ இல்லை என்கிறான். அதற்கு இராமன் எக்குலமாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர் வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும் என்கிறான். தான் செய்தது குற்றம் என ஏற்றுக் கொண்ட வாலியின் "மறைந்திருந்து ஏன் தாக்கினாய்?" என்ற கேள்விக்குக் கம்பனின் இராமனிடம் பதில் இல்லை. வால்மீகி ராமாயணத்தில் வருவதுபோல நீ ஒரு குரங்கு, உன்னை பொறி வைத்து பிடிக்கலாம் என்றெல்லாம் கம்பரால் சொல்ல முடியவில்லை. மற்ற கேள்வி பதில் பாடல்கள் குறைந்தது பத்து பாடல்களாவது வருகின்றன. மறைந்து நின்று தாக்கும் கேள்விக்கான பதிலை ஒரே பாடலில் கம்பன் கடந்து செல்கிறான். இலட்சுமணன் வாலியிடம், உன்னை கொல்வேன் என்று உன் தம்பிக்கு இராமன் வாக்களித்துவிட்டான்,  நீ அவனிடம் சரண் அடைந்தால் வாக்கை நிறைவேற்ற முடியாது போகும், அதைக் கருதி அண்ணல் மறைந்து நின்று அம்பெய்தினான் என்கிறான்.


தாரை: மழைக்காலம் முடிந்தபின் சீதையை தேடத்தொடங்குவோம் என்று இராமனுக்கு தந்த வாக்குறுதியை மறந்து, கள்ளிலும், காமத்திலும் உழன்றுகொண்டிருக்கும் சுக்ரீவனை எச்சரிக்க இலட்சுமணனை அனுப்புகிறான் இராமன். கிஷ்கிந்தையை நோக்கி மிகுசினத்தோடு வரும் லட்சுமணனை எதிர்கொள்ள தாரையை அனுப்பவேண்டும் என்கிறான் அனுமன். [வால்மீகி] குறையாடைகள் அணிந்து, வானரப் பெண்கள் சூழ, கண்கள் படபடக்க, இடை அசைந்தாட, உடைகள் நெகிழ, இலட்சுமணனுக்கு அருகில் சென்று வணங்கி நிற்கிறாள் தாரை. வானர மகளிரால் சூழப்பட்டு, வெகு அருகில் நிற்கும் தாரையால் இலட்சுமணன் வெட்கி கோபம் தணிகிறான். தாரை அவனிடம், சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டுகிறாள். [கம்பன்] குறைந்த ஆடைகள் அணிந்த வானர பெண்கள் சூழ தாரை வருகிறார். வாலி இறந்ததால், மங்கல அணி, நகைகள் அணியாமல், குங்கும சந்தன குழம்புகள் பூசப்படாத மார்புகளும், பாக்குமரம் போன்ற கழுத்தும் மறையும்படி மேலாடை போர்த்தி வந்த தாரையை கண்டவுடன், இலட்சுமணனுக்கு கணவனை இழந்த தன் தாய் சுமித்திரை நினைவுக்கு வர கண்கள் பனிக்கிறான். சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டியபின், இலட்சுமணனிடம், “சீதையை தேடுவதற்கு, வாலியை கொன்ற அம்பும், வில்லும் போதாதோ? வேறு துணையும் வேண்டுமோ? தேவியைத் தேடுவதற்கு ஆட்கள் தேடுகிறீர்களே” என்று சொல்வதை கேட்டு இலட்சுமணண் நாணுகிறான். 


வெறும் கழுகாக இருக்கும் ஜடாயு, கம்பனில் ராமனுக்கு அறிவுரை கூறும் தந்தையாகிறார். ஆதிகாவியத்தில் காமவல்லியாக வரும் தாரை கம்பராமாயணத்தில் அன்னையாகவும், அறச்சீற்றம் மிக்கவளாகவும் வருகிறார். வால்மீகியில் மனித குணங்களுடன் வரும் சீதையும், இராமனும் கம்பனில் காவிய குணங்களோடு அவதார புருஷர்களாக வருகிறார்கள். இராவணனும், கும்பகர்ணனும் நேர்நிலையான உச்ச கதைமாந்தர்களாக வருகிறார்கள். புத்த, சமண, பக்தி இலக்கிய காலகட்ட இராமயணங்களில் அந்த காலகட்டத்திற்கு உரிய, தத்துவ பின்புலங்களுக்கு ஏற்ப கதைமாந்தர்களின் குணங்களும், நிகழ்வுகளும் படைக்கப்பட்டுள்ளன. “குகனோடும் ஐவரானோம்", “மைந்தரால் பொலிந்தான் நுந்தை” பாடல்களில் குகன், சுக்ரீவன், விபீஷணன் எனப் பல குலங்களைய சேர்ந்தவர்களையும் இராமன் தன் உடன்பிறந்தவர்களாக ஏற்று, குலங்களுக்கான அறம் என்பதிலிருந்து மானுடத்திற்கான அறம் எனக் கம்பன் விரிவது, கம்பராமாயணத்தின் உச்சம் என்கிறார்கள் அறிஞர்கள்.


[3] காப்பியங்களும் - நாவல்களும்


பழங்குடிகளாக இருந்து, நிலப்பிரபுத்துவ காலகட்டம், காலனிய காலகட்டம் கடந்து மக்களாட்சி யுகத்தில் இருக்கிறோம். காப்பியத்தின் மையம் இது என கடவுள் வாழ்த்திலே சொல்லப்பட்டு அறம்-பொருள்-இன்பம்-வீடு சட்டகத்தில் புனையப்படும் காவியங்களில் இருந்து நாவல்களுக்கு நகர்ந்திருக்கிறோம். நாவல்கள் காப்பியங்களைப்போல விழுமியங்களை நிறுவதில்லை. ஒர் உலகை உருவாக்கி, வெவ்வேறு விழுமிய மோதல்களை காட்டி, வாசகனையும் ஆசிரியனுக்கு இணையாக பங்கேற்கச்செய்து, விழுமியங்களை வாசகனே உருவாக்கிகொள்ள வைக்கின்றன. இயல்புவாதம், நவீனத்துவம், மாய-யதார்த்தவாதம், பின்நவீனத்துவம் என நாவல் வகைகள் உண்டு என்பது நாம் அறிந்ததே. 


ஒரு மணல் கடிகாரத்தை திருப்பி வைப்பதைப்போல, விழுமியங்கள் துளித்துளியாகக் கொட்டி, நிலைபெற்றுவிட்ட ஒரு பண்பாட்டை, தன் எழுத்தின் வழியே பேரிலக்கியவாதி திருப்பிவைக்கிறார். மொத்த பண்பாடும், அறிதல்களும் புதிய பொருளில் மீண்டும் சொல்லப்படுகின்றன. சிலப்பதிகாரத்தையும் அதன் நவீன மறுஆக்கமான கொற்றவையையும் ஒப்பிட்டால் காப்பியத்திற்கும், நாவலுக்குமான வேறுபாடு புரியும். சிலப்பதிகாரத்தின் மையம்: 1.அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும். 2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். 3.ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும். கொற்றவையில் இந்த மையம் எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.


கொற்றவை நாவலின் மையமான பகுதியின் சுருக்கம்: தென் நில மக்களின் முதல் தெய்வம் கன்னி. தென்திசையும், மாகடலும் கருமையாகவும், மரணமாகவும் தொன்மக்களுக்கு அச்சமூட்டுகிறது. இருளையும், ஆழியையும் கண்டு அஞ்சாத முக்கண்ணனும், ஆழியானும் தமிழ் நிலத்தின் தெய்வங்கள் ஆகிறார்கள். வெண்கல யுகத்தில் இருக்கும் தென்நிலத்திற்கு, இரும்பை அறிமுகப்படுத்தும் குறுமுனி, குமரி முனையில் தெய்வங்களின் அன்னையான கன்னி அன்னைக்கு சிலையெடுத்து, அன்னையின் வலச்சிலம்பு மறவர்களுக்கும், இடச்சிலம்பு வணிகர்களுக்கும், வலதுகால் நீள்விரல் மணி உழவர்களுக்கும், இடதுகால் நீள்விரல்மணி பரதவர்களுக்கும், வலச்சிறுவிரல் மணி இடையர்களுக்கும், இடச்சிறுவிரல் மணி மலைவேடர்களுக்கும் என தமிழ்குடிகளே அன்னையின் உடலென வகுத்ததாகவும், கன்னியின் ஆட்சியில் தென்நிலம் வாழ்ந்ததாகவும், பின்பு தென்நிலம் பலமுறை கடற்கோளால் அழிய, தொல்குலங்கள் புதிய நிலங்களை நோக்கி பயணித்ததாகவும், புகார் நகர பெருவணிகன் மாநாய்கன் இல்லத்தில் முதுபாணன் பாடுகிறார். கண்ணை அன்னை காக்கும் புகார் நகர வணிகர் குடியில் மாநாய்கனின் மகளாக கண்ணகியும், கருங்கண் கொற்றவை காக்கும் பாலை நிலத்து மறவர் குல தலைவன் பழையன் குட்டுவனின் மகளாக வேல்நெடுங்கண்ணியும் பிறக்கிறார்கள். குலதெய்வங்களின் அடையாளமாக கண்ணகிக்கு வலச்சிலம்பும், நெடுங்கண்ணிக்கு இடச்சிலம்பும் அணிவிக்கப்பட்டு அவரவர் ஊர்களில் சிலம்பணி விழாக்கள் நடைபெறுகின்றன. பின்பு கண்ணகி கோவலனையும், நெடுங்கண்ணி பாண்டியனையும் மணக்கிறார்கள். காலம் உருண்டோடுகிறது. பட்டத்தரசியான தன் மகள் வயிற்று வாரிசு மூலம், மதுரையை மீண்டும் தன்குடி ஆளவேண்டும் என்ற கனவில் இருக்கிறார் மறக்குலத் தலைவன் பழையன் குட்டுவன். ஊர்தோறும் மறவர் படை, வணிகர்களையும், உமணர்களையும் கொள்ளையிடுகின்றனர்; வேளிர்களின் விதைநெல்லை கவர்கிறார்கள்; மல்லர்களை அடிமைகளாக வடவணிகர்களுக்கு விற்கிறார்கள். பெண்களைக் கவர்ந்து செல்கிறார்கள். நாடு முழுவதும் அறம் வழுவி, குடிப்பூசல்கள் எழுகின்றன. பரந்த நிலத்தில், அரசின் செங்கோல் எல்லா இடங்களிலும் செல்ல முடியாது, பூசல்கள் எழத்தான் செய்யும் என்கிறான் பாண்டியன். மன்னனின் கோல், அறவோர் நூல், மறையோர் சொல் செல்லா இடங்களிலும் செல்லும் ஒன்றுள்ளது, அது அறம் என்கிறார் அமைச்சர். அமைச்சரின் நற்சொற்களை ஏற்காத பாண்டியன், குடிகளின் குறைகளை களையாமல் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். இவ்வாறு, மதுரையே ஒரு கொந்தளிப்பான சூழலில் இருக்கும்போது, வாழ்வு தேடி கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு வருகிறார்கள். தனக்கு எதிராக எழும் பிற குலத்தலைவர்களை சதிகள் மூலம் கொன்று, பிற குலங்களின்  மேல் தன் குலத்தின் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு, பிற குடிகளிடம் இல்லாத, தன்குடி அடையாளமான, மந்தனச் சொற்கள் பதித்த சிலம்பைக் கொண்டு சிலம்பணி விழா எடுக்க திட்டமிடுகிறார் பழையன். எல்லா குடிகளுக்கும் அன்னையின் அணிகலன் குடியடையாளமாக உள்ளதாகவும், பழையனிடம் வலச்சிலம்பு இருப்பது போல, தமிழ் நிலத்தில் எங்கோ இடச்சிலம்பும் இருக்குமெனவும், அது வெளிப்படும்போது, குடிகளுக்கிடையே பெருமை சிறுமை இல்லை என அறிவீர்கள் என்கிறார்கள் பிறகுடித் தலைவர்கள். சிலம்பணி விழாவிற்கு முன் சிலம்பு திருடப்படுகிறது; கண்ணகியின் வலது சிலம்பை விற்க வந்த கோவலன் தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். அதுகேட்டு சன்னதம் கொண்டு எழுந்த கண்ணகி, எரிதழல் கொற்றவையாக மதுரை நகர் நுழைகிறாள். கோவலனின் கொலை, மதுரையில் கலகம் வெடிக்க ஒரு நிமித்தமாகிறது. பெண்களும், வடவணிகர்களுக்கு அடிமைகளாக விற்க கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தப்பி வந்த கடைசியர்களும் முன்னெடுக்க மதுரை தீக்கிரையாகிறது. கண்ணகியின் இடச்சிலம்பை கண்டு பாண்டியன் எல்லா குடிகளும் சமமானவையே, ஒன்றே, குடியாளும் அன்னையே அறம் என்று உணர்ந்து உயிர் துறக்கிறான். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது. அதுவும் சிலம்பில் வருவதுபோல ஒரு தனி மனிதருக்கு இழைக்கப்பட்ட பிழையினால் இல்லை, அனைத்து குடிகளும் ஒன்றே, சமமே என்பதை அறியாத பிழையினால் பாண்டியனுக்கு மரணம் வருகிறது. 


உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தும் சிலப்பதிகாரத்தில் கண்ணகியை கோவலன் புஷ்பக விமானத்தில் வந்து கூட்டி செல்கிறான். கொற்றவையில் எதிர்காலத்தில் கண்ணகியின் காலடியில் ஒரு சிறுகல்லாக தன்னை காண்கிறான். மகதி-பார்ப்பனன், முருகன்-வள்ளி, கவுந்தி வடிவில் வரும் நீலி எனும் பேய், நீலி காட்டும் உலகம் மூலமாக கற்பு, திருமணம் போன்ற விழுமியங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன. 


சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுவதை விளக்க கோவலன்-பரதன் கதை விவரிக்கப்படுகிறது.  முற்பிறவியில் சிங்கபுரம் நாட்டில் தன் மனைவி நீலியின் நகைகளை விற்கவந்த சங்கமனை காட்டிக்கொடுத்த பரதன் இப்பிறவியில் கோவலனாக பிறந்து அவன் ஊழ்வினையை அனுபவிக்கிறான் என மதுரையை எரித்த கண்ணகியிடம் விளக்கமளித்து கண்ணகியின் சினத்தை தணிக்கிறது  மதுராபதி தெய்வம். கொற்றவையில் சங்கமன்-நீலி போல கோவலன்-கண்ணகி வருகிறார்கள். ஊழ்வினை என்ற கருத்திற்கு பதிலாக காலத்தின் சுழற்சியில் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மகதி-பார்ப்பனன் போல சித்தார்த்தன்-யசோதரை, கடலில் குதிக்கும் செல்லி போல மணிமேகலை, நீலி-சங்கமன் போல கண்ணகி-கோவலன், மீண்டும் மீண்டும் அழியும் மதுரை என காலத்தின் சுழற்சி சுட்டப்படுகிறது.


ஒரு படைப்பின் அடிப்படை தேவை வாசிப்பு இன்பம். வாசிப்பின் முதல்படிகளில் இருக்கும்போது சில படைப்புகள் நம்மை பாதித்திருக்கும். செவ்வியல் என மயங்குவோம். நம் சிறுவயது தாத்தா வீட்டை போல. இளமையின் இனிய நினைவுகள், பெரிய அறைகள், தூண்கள் என அந்த வயதில் தோன்றி இருக்கும். வளர்ந்தபின் மீண்டும் சென்று பார்த்தால் மிக சிறிதாக தெரியும். நம் தாத்தா வீட்டிற்கும், சிற்ப செறிவு நிறைந்த ஒரு மாபெரும் கோவிலிற்கும் உள்ள வேறுபாடே ஒரு சாதாரண படைப்பிற்கும் செவ்வியல் படைப்பிற்குமான வேறுபாடு. செவ்வியல் படைப்பு என்பது வெவ்வேறு காலகட்டத்தில் மீள்வாசிப்பு செய்யும்போதும் சலிக்க வைக்காமல், புதிய திறப்புகளையும், புதிய அறிதல்களையும் தன் உள்ளே கொண்டிருக்க வேண்டும். கொற்றவை நாவல் அவ்வகையிலான செவ்வியல் படைப்பு. 


கொற்றவை நாவல் ஒரு செவ்வியல் சிற்ப கோயிலென்றால், வெண்முரசு சிற்ப கோவில்களால் நிறைந்த ஒரு சிற்ப நகரம். மொழி, புராண மறு உருவாக்கம், தொல் படிமங்களை கொண்டு எழுப்பப்படும் புதிய கட்டுமானம், பண்பாட்டு தலைகீழாக்கம், விரிவாக்கம் என கொற்றவையின் நீட்சி வெண்முரசு. 


[4] நவீன மகாபாரத மறுஆக்கங்கள்:


வெண்முரசோடு ஒப்பிடுவதற்காக நவீன மகாபாரத மறுஆக்கங்களில் கீழ்கண்ட நூல்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

 

பர்வா - கன்னட நாவல் - எஸ்.எல்.பைரப்பா - 1979 (தமிழில்: பருவம் - பாவண்ணன் மொழிபெயர்ப்பு - 2001) - 928 பக்கங்கள்.

ரண்டாமூழம் - மலையாள நாவல் - எம்.டி.வாசுதேவன் நாயர் 1984 (தமிழில்: இரண்டாம் இடம் - குறிஞ்சிவேலன்) - 464 பக்கங்கள்

இனி ஞான் உறங்கட்டே - மலையாள நாவல் - பி.கே.பாலகிருஷ்ணன். 1973 (தமிழில்: இனி நான் உறங்கட்டும் - ஆ.மாதவன் மொழிபெயர்ப்பு - 2000) - 273 பக்கங்கள்

உப பாண்டவம் - தமிழ் நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன் - 2000 - 384 பக்கங்கள்

யுகாந்தா - மராத்தி ஆய்வுக்கட்டுரை - ஐராவதி கார்வே - 1967 (தமிழில்:  இராக.விவேகானந்த கோபால்) - 272 பக்கங்கள். இணையத்தில் archive.org தளத்தில் உள்ளது.

கிருஷ்ணா கிருஷ்ணா - தமிழ் நாவல் - இந்திரா பார்த்தசாரதி - 1994 - 216 பக்கங்கள்.

கொம்மை - தமிழ் நாவல் - பூமணி - 2018 - 802 பக்கங்கள். கிண்டில் பதிப்பில் படித்தேன்.


யுகாந்தா:


மராத்தி எழுத்தாளர் ஐராவதி கார்வே மகாபாரதத்தை பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு யுகாந்தா. இந்த கட்டுரைகளில் சில பகுதிகள் மகாபாரதத்தை பற்றிய விமர்சன பார்வை, சில பகுதிகள் புனைவு. 1968ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது. இணையத்தில் ஆங்கில நூல் கிடைக்கிறது.  


யுகாந்தா மகாபாரதத்தை மார்க்சிய நோக்கில் பொருளியல் சார்ந்த நிலப்பிரச்சனையாக மட்டுமே பார்க்கிறது. மகாபாரதத்தின் தத்துவ சிக்கல்களில் ஒரு குழுவிற்கு மட்டுமே உரியவை, போலியானவை, ஆழமற்றவை என்று மறுக்கிறது. மகாபாரதத்தின் மையம் ஒரு கூட்டுக் குடும்பத்தின் நிலப்பிரச்சனை. மேலோட்டமாக இது நிலப்பிரச்சனை கதையாக இருந்தாலும், அதன் அடியில் உள்ளது பாண்டவர்களுக்கும் நாகர்களுக்கும் உள்ள பகை - நாகர்களிடமிருந்து ஆரியர்கள் இந்திய வடபகுதி நிலங்களை தங்கள் காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததின் கதை. கிருஷ்ணனும் அர்ஜுனனும் அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் செய்த இன அழிப்பிற்கு முன்னோடிகள். நில அபகரிப்பும், நாகர்களின் முற்றழிப்பும் மட்டுமே ஒரே குறிக்கோள். ஆனால் அந்த கொடூர எண்ணம் தோற்கடிப்பட்டுவிட்டது. ஹிட்லர் ஒரு இனத்தை முற்றழிப்பது சாத்தியமில்லை என்று அறிந்ததைப்போல, பாண்டவர்கள் நாகர்களை அழிப்பது இயலாது என்று இறுதியில் அறிந்தார்கள். நாகர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு பதிலாக அவர்கள் அடைந்தது பலரின் சாபங்களும், மூன்று தலைமுறை பகையும்.  


மகாபாரத காலகட்டம் வரையில் இந்திய பெண் தெய்வங்களுக்கோ, கடவுளின் மனைவியருக்கோ ஒரு தனித்த இடம் இல்லை. இந்திய, கிரேக்க சமூகங்கள் இரண்டுமே தந்தைவழி சமூகங்களாக இருந்தாலும், கிரேக்க பெண்களின் சமூக பங்களிப்பு இந்திய பெண்களை விட சிறந்ததாகும். இந்திய பெண்கள் தாய் மற்றும் மனைவி என்ற வரையறைக்குள்ளேயே அடங்கிவிடுகிறார்கள். ஆனால் கிரேக்கர்கள், தங்கள் புராணங்களில் பெண்களை என்றென்றும் நினைவில் நிற்கும் அளவில் தாய், காதலி, மனைவி, தங்கை, மகள் என பல்வேறு வடிவங்களில் சித்தரித்துள்ளார்கள் என யுகாந்தாவில் கார்வே தீர்ப்பு எழுதுகிறார்! 


கிரேக்க புராணங்கள் சிறந்தவை என்பதும், அதில் பெண்கள் பல்வேறு சிறப்பியல்புகளுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மகாபாரதம் கிரேக்க புராணங்களுக்கு இணையானதாகவோ, ஒரு படி மேலானதாகவோதான் நான் கருதுகிறேன். 


மகாபாரதமே காண்டவ பிரஸ்தத்தில் நடைபெற்ற நாகர்களின் அழிவையும், அந்த அழிவு தலைமுறைகளாக தொடரும் சாபத்தையும், ஏகலைவன் கட்டை விரலை காணிக்கையாக்கியதையும், வாரணவதத்தில் தன் ஐந்து மகன்களுடன் எரிந்தழிந்த காட்டுவாசிப் பெண்ணின் கதையும், போரில் பாண்டவர் தரப்பு செய்த சூழ்ச்சிகளையும் பதிவு செய்கிறது. கௌரவர்களும், பாண்டவர்களும் பேரழிவை சந்திக்கிறார்கள். கடவுளாக கருதப்படும் கிருஷ்ணனுக்கு "ஒரு நல்ல சாவு" அமையவில்லை. தன் குலமான யாதவர்களுடனும் தான் கட்டமைத்து பொலிந்த நகரத்தோடும் முற்றழிகிறார். தெய்வமே ஆனாலும் ஊழிற் பெருவலி யாவுள? குருதி உறவுகளையும், குலத்தையும், வர்ணத்தையும், காலத்தையும் தாண்டிய அறம் என்று ஒன்றுண்டா? எனும் பெரும் கேள்விகளை வியாசர் முன்வைக்கிறார். யுகாந்தா இந்தக் கேள்விகள் பக்கமே போகாமல் ஒரு வறட்டு மார்க்சிய கட்டுடைப்பாகவே நின்றுவிடுகிறது. 


திருவிவிலியத்தின் தொடக்க நூலிலிருந்து  Lot of Zoar, Abraham - Sarah - Abimelech கதைகளை எடுத்து தந்தை-மகள்கள், சகோதர-சகோதரி என முறை மீறிய பாலியல் உறவுகளை சொல்லும் நூல் எப்படி ஒரு புனித நூலாக இருக்க முடியும் என்று எழுதினால் அதற்கு மேற்கத்திய அறிவுப்புலத்தில் என்ன மதிப்பிருக்கும்? அதற்குப்பின் உள்ள உளவியல் என்ன? சகோதர-சகோதரி மண உறவு வரலாற்றில் அடைந்த பரிணாம மாற்றத்தில் விவிலியத்தின் பங்கு என்ன? (உதா: மாபெரும் பிரமிடுகளை கட்டிய எகிப்தியர்கள் சகோதர-சகோதரி மண உறவு உடையவர்கள் - கிளியோபாட்ரா-டாலமி) ; ஒழுக்கம் என்பது என்ன ? ஒழுக்கத்திற்கும் அறத்திற்கும் உள்ள முரண்பாடென்ன ? காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப வரலாற்றில் ஒழுக்கமென்பதும், அறமென்பதும் எப்படி வளர்ந்து வந்திருக்கின்றன ?  போன்ற கேள்விகளல்லவா பொருட்படுத்தத்தக்கவை. 


யுகாந்தாவில் பொருட்படுத்தக்கூடிய ஒரே பகுதி தருமனுக்கும் விதுரருக்கும் இருக்கும் உறவு தந்தை-மகன் உறவாக இருக்கலாம் என்ற ஊகம். விதுரர் யமனின் அவதாரமாக மண்ணில் தோன்றியவர். தருமரின் தந்தையாக குறிப்பிடப்படும் தெய்வம் யமதர்மன். விதுரர் இறக்கும் தருவாயில் தருமனும் விதுரரும் சந்திக்கும் இடம் போன்றவற்றின் மூலம் யுகாந்தா இந்த ஊகத்தை முன்வைக்கிறது. ‘இரண்டாம் இடம்', ‘உப பாண்டவம்’, ‘கொம்மை’ என பிற்காலத்திய படைப்புகளும் இந்த கோணத்தை சொல்கின்றன. 


மறுஆக்கம் என்பது ஒரு நூலையோ, புராணத்தையோ குறித்து இருக்கும் தோற்றங்களை கலைத்து, அதன் கருத்தியலமைப்பை மீண்டும் அடுக்கிக்காட்டுதலாக இருக்கவேண்டும். அந்த மீள்கட்டமைப்பு ஏற்கனவே இருப்பற்றின் ஏற்பாகவோ மறுப்பாகவோ இருக்கலாம். வெறுமே 'கலைத்தலாக'  இருக்கும் படைப்பு முதலில் ஒரு அதிர்ச்சியை உருவாக்கும், பிறகு காலப்போக்கில் அதற்கு பெரிதாக மதிப்பெதுவும் இல்லை. யுகாந்தா அப்படி 'கலைத்தலை' மட்டுமே செய்து காலத்தில் பின் நகர்ந்து விட்ட ஒரு படைப்பு. 


இனி ஞான் உறங்கட்டே:


“இனி ஞான் உறங்கட்டே” - மலையாள எழுத்தாளர் பி கே பாலகிருஷ்ணன் திரௌபதியின் பார்வையில் கர்ணனைப் பற்றி எழுதிய நாவல். “இனி நான் உறங்கட்டும்” என தமிழில் எழுத்தாளர் ஆ.மாதவன் மொழிபெயர்த்துள்ளார். வாழ்வே துயராதல், கடவுளால் / விதியால் / உறவுகளால் கைவிடப்படுதல், அந்நியமாதல், இருத்தலே துயரம் என இருத்தலியல் தத்துவத்திற்கு இந்திய பண்பாட்டில் கர்ணனையோ அம்பையையோ விட வேறு படிமத்தை சொல்லிவிட முடியாது. தேர்ந்த வாசகர்களால் 'இனி நான் உறங்கட்டே' சிறந்த இருத்தியலியல் நாவலாக கருதப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் இலட்சியவாத கனவு கலைதல், பொருளாதார மந்த நிலை, அவசர நிலையை இந்திய அரசு அறிவித்தல், ஊழல், வேலையில்லா திண்டாட்டம் என 1960-1980 காலகட்டத்தில் இந்தியாவில் பெருவாரியான இளைஞர்கள் தங்களை எல்லா திறமைகளும் இருந்தும் விதியால் தோற்கடிக்கப்பட்ட கர்ணனுடன் அடையாளப்படுத்திக்கொண்டார்கள். அந்த காலகட்டத்தின் பிரதிபலிப்பாக 1974 ஆம் ஆண்டு வெளிவந்த “இனி நான் உறங்கட்டே”விற்கு கேரள சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. 


தமிழ் மொழிபெயர்ப்பில் பல இடங்களில் சமஸ்கிருத, மலையாள சொற்கள் அப்படியே உள்ளன. நினைவுகளாக விரியும் ஒரு நாவலில் வாசகர் அந்த நினைவுகளில் ஒன்றி வாசிக்க முடியாமல் போவதற்கு இந்த மொழி ஒரு தடையாக உள்ளது. உதாரணமாக: “ஈஸ்வரஹிதம் நீக்குபோக்கற்றது”,  “சுயாபிமான உணர்வுகளால் சூடேறிய..”, “சர்ப்பதம்சனமேற்ற காந்தாரி, மயக்கத்தில் வீழ்ந்து கிடந்தாள்”, “நீ ஒரு நாஸ்திகை போல விதியிடம் கோபங்கொண்டு யுக்தி போதனை செய்கிறாய்.”  மொழிபெயர்ப்பில் விருப்பமுள்ளவர்கள் ‘இனி நான் உறங்கட்டும்’ மொழிபெயர்ப்பை பாவண்ணனின் ‘பர்வா’ மொழிபெயர்ப்புடன் ஒப்பிட வேண்டும். பாவண்ணன், ஆ.மாதவனைவிட வயதிலும், மொழியிலும் அடுத்த தலைமுறையை சேர்ந்தவர். ஆகவே மொழியும் நவீனமாக இருப்பது இயல்பே. ‘பருவம்’ வாசிக்கும்போது ஒரு தமிழ் நாவலை வாசிக்கும் அனுபவமே ஏற்படுகிறது. ‘பருவம்’ நாவல் பதிப்பில் நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தாலும், அவற்றை கடந்து எளிதாக வாசிக்க முடிகிறது. கன்னட / சமஸ்கிருத சொற்கள் மிகக் குறைவு. ‘இனி ஞான் உறங்கட்டே’ நாவலுக்கு மீண்டும் தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு வரவேண்டும். 


கர்ணனின் மீது கடும் வெறுப்பில் இருக்கும் திரௌபதியின் நினைவுகளாக துவங்கும் நாவல், குந்தி, கிருஷ்ணன், சஞ்சயன் உள்ளிட்டோர் திரௌபதியிடம் கர்ணனைப் பற்றி சொல்பவற்றின் வழியாக, கர்ணனைப் பற்றிய அவளது பார்வை மாறுகிறது. ‘இனி நான் உறங்கட்டும்’ மகாபாரத நிகழ்வுகளை மூலத்திலிருந்து மாற்றவில்லை. உதாரணமாக கர்ணனின் தந்தை சூரியன்தான். கர்ணன் இறந்த பிறகே பாண்டவர்களுக்கு கர்ணன் தங்கள் மூத்த அண்ணன் என்பது தெரிகிறது. மைய நிகழ்வுகள் எதையும் மாற்றவில்லை. முகவுரை குறிப்புகளிலும் தான் மூலத்தை அடியொற்றியே எழுதியுள்ளதாக குறிப்பிடுகிறார் பாலகிருஷ்ணன். 


நாவலாசிரியர் கர்ணனை எங்குமே விட்டுக்கொடுக்கவில்லை. சூதனை மாலையிட மாட்டேன் என நிலை மறந்து கூவுகிறாள் திரௌபதி. திரௌபதியை துகிலுரியுமாறு சொன்ன கர்ணன், தன் செயலுக்கு பின்பு வெட்கப்படும் போது அது பீமார்ஜுனர்களை அவமானப்படுத்தவே எனவும், திரௌபதியை அவமதிக்கும் நோக்கில் இல்லை என்று ‘கெத்து'  குறையாமலேயே வருத்தப் பட்டுக் கொள்கிறான். 


“பீமார்ஜுனர்களின் வீரத்தைதான் நான் சிரித்தேன். யாரைப் பார்த்து நான் நரியைப் போல பயந்து ஓடுவேன் என்று பீஷ்மர் சொன்னாரோ, அந்த அர்ஜுனன் தன் மனைவி ஆடையிழந்து, செயலற்று நிற்கும் காட்சியைத்தான் நான் சிரித்தேன். அந்த திரௌபதியை, நான் சுடு சொற்களால் சுட்டபோது, சுசரிதயான ராஜகுமாரியின் மனநிலை பற்றி எண்ணவே இல்லை! பீஷ்மரைத்தான் நான் கண்டேன். கர்ணனால் இகழப்படும் அர்ஜுன வீரத்தை தான் கண்டேன். இன்று அதற்காக வெட்கப்படுகிறேன் கிருஷ்ணா. என் ஆயுட்காலத்தில் - நிவாரணம் காண இயலாத வண்ணம் - என் புகழிலும் மனதிலும் களங்கம் சேர்த்திட்ட நிகழ்ச்சியாக நான் அறிகிறேன். அதற்காக நான் வெட்கி, வேதனைப்படுகிறேன்..”   


அம்புப்படுக்கையில் நிகழும் கர்ண-பீஷ்மர் சந்திப்பு -- அதுவரை பீஷ்மர் கர்ணனை கடிந்தது பேரன்பின் வெளிப்பாடே உண்மையான வெறுப்பல்ல என்ற கோணம் - ஜெயமோகனின் 'வடக்கு முகம்' நாடகத்திலும், வெண்முரசிலும் இதே பார்வை எடுத்தாளப்பட்டுள்ளது; திரௌபதி-கர்ண உறவு அடையும் பரிணாமத்தை சுட்டும் நாவலின் இறுதியில் வரும் திரௌபதியின் கனவும் முக்கியமான பகுதிகள். 


“அர்ஜுனனது சரங்களுக்கு இலட்சிய குறியாக உள்ள கர்ணனின் விரிந்த தோள்களில் அமைதியாக வீற்றிருக்கும், தன் குழந்தைச் செல்வங்களின் உருவத்தை ஆவலோடு, பயத்தோடு, நான் கண்டேன்! அவன் வலது தோள் மேல் அலட்டாது அமர்ந்திருக்கும் பிரதிவிந்தியனையும் சுதசோமனையும் கூட காணலானேன். மறுதோள் மேல் வீற்றிருக்கும் கிருதவர்மன், சதானீகன், சுருதசேனன் முகங்களை தெளிவாகவே காணமுடிந்தது...ஆறு சிரங்களை கொண்ட கர்ணனின் தோள்களை குறிவைத்து, அந்த தோள்களில் வீற்றிருக்கும் எல்லா சிரங்களையும் இலட்சியமிட்டு காண்டீவியின் சரங்கள் சீறிக்கொண்டு செல்கின்றன…”வேண்டாம் அர்ஜுனா, வேண்டாம் அர்ஜுனா” என்ற அழுகை ஓலம், பிளவுபட்ட கழுத்து வழியாக வெளிவந்தது எனவும், அந்த ஓசை தெறிப்பில் தான் பொடிப்பொடியாக உடைந்து சிதறியதாகவும் அவளுக்கு தோன்றியது" .     


ரண்டாமூழம்:


தீவிர இலக்கிய அறிமுகமில்லாத ஒரு பொதுவாசகர் விறுவிறுப்பாக வாசித்து முடிக்கக்கூடிய நாவல் ரண்டாமூழம்.  எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள நாவல். தமிழில் குறிஞ்சிவேலனின் சரளமான மொழிபெயர்ப்பில் ‘இரண்டாம் இடம்’ என சாகித்ய அகாடமி பிரசுரமாக 2000ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. ‘இனி நான் உறங்கட்டும்’ கர்ணன் எனும் சிம்மத்தின் கதை என்றால், ‘இரண்டாம் இடம்’ பீமன் எனும் வேழத்தின் பார்வையில் விரியும் நாவல். பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதத் தொடர் மற்றும் மணிரத்தினத்தின் தளபதி படத்தில் குந்தி சாயலில் வரும் ஶ்ரீவித்யா கதாப்பாத்திரம் மூலமாக குந்தி குறித்து அபலை; ஆண்களின் அரசியலில் பகடைக்காயாக அலைக்கழிக்கப்படும் பெண் என்று எனக்கு ஒரு தோற்றம் இருந்தது. தமிழக பொது மனநிலையும் அதுவே. மகாபாரத மறுஆக்கங்களில் நான் முதலில் வாசித்த ‘இரண்டாம் இடம்’ என் மனதில் குந்தி குறித்த தோற்றத்தை கலைத்தது. குந்தி ஒரு ‘அபலை’ இல்லை, பாண்டவர்களை வழிநடத்திச் செல்லும் வலுவான பிடி யானை என எனக்கு உணர்த்தியது. 


கௌரவர்கள் நூற்றுவரையும் கொன்றது பீமன். ஆனால் தர்மனுக்கே முடி சூடுகிறார்கள். பாண்டவர்களில் திரௌபதியை மிகவும் விரும்புவது பீமன் -- பகடைக்களத்தில் துரியோதனாதிகளை கொல்வேன் என்று சபதமிட்டது பீமன்; கீசகனை கொன்றது பீமன்; ஜெயத்ரதனை அடித்து அவமானப்படுத்தியது பீமன்; சௌகந்திக மலரை கொய்து வந்தவன் பீமன்; இறுதியில் இமையத்தின் நெடும் பயணத்தில் திரௌபதி கீழே விழக்கண்டு துயறுருபவன் பீமன் -- ஆனால் திரௌபதியின் மனதில் என்றுமே அர்ஜுனனுக்கே முதலிடம். வாரணவதத்தில் அனைவரையும் தோளில் ஏற்றிக் கொண்டு தப்பித்து, இடும்பனையும், பகாசூரனையும் கொன்று திரௌபதி சுயம்வரம் வரை தன் தம்பிகளையும், குந்தியையும் காத்தது பீமன். ஜராசந்தனை  கொன்றது பீமன்; பாண்டவர்களின் ராஜசுயத்திற்கு வித்திட்டது பீமன். ஆனால் வீரத்தில் அர்ஜுனனுக்கு அடுத்த இரண்டாமிடத்திலே பீமனை வைக்கிறார்கள். கடோத்கஜனும், அபிமன்யுவும் போரில் வீரமரணமடைந்தாலும் அபிமன்யுவின் மரணத்திற்கே கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் அழுகிறார்கள். கடோத்கஜனின் மரணத்திற்கு இரண்டாமிடமே. இந்த பார்வையில், தனக்கு எப்போதும் இரண்டாம் இடம் கிடைப்பதின் கசப்பை சொல்வது ‘இரண்டாம் இடம்’. 


விதியின் மேல் இருக்கும் கசப்பு என்பதற்கப்பால் விரியவில்லை நாவல். இந்த கட்டுரைக்காக இரண்டாம் இடம் நாவலை இரண்டாம் முறை வாசிக்கும்போது, முதல் முறை வாசித்த பரவசம் இல்லை. கிளாஸிக் என்பது பல வாசிப்புகளுக்கு இடம் கொடுத்து, ஒவ்வொரு வாசிப்பிலும் புதிதாக கண்டுகொள்வதற்குரிய சாத்தியங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும்.

கிருஷ்ணா கிருஷ்ணா:


இந்திரா பார்த்தசாரதி எழுதிய தமிழ் நாவல். 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்திரா பார்த்தசாரதி எழுத்தில் நான் வாசித்த முதல் நாவல். நாவலின் முன்னுரையிலேயே “உலக இலக்கியங்களில் காண முடியாத பன்முக கதாபாத்திரம் கிருஷ்ணன்.. கிருஷ்ணனை எந்த யுகத்திலும், அந்தந்த காலத்திய மதிப்பீடுகளுக்கேற்ப அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் என்பதே அவன் தனிச்சிறப்பு...ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் படைப்பாக கிருஷ்ணனைக் கொள்ள முடியாது. அவன் சமுதாயத்தின் கனவு.. உலக இலக்கியங்களில் அறிய முடியாத இப்படிப்பட்ட ஒரு கதாப்பாத்திரத்தின் செய்தியை நாவல் வடிவில் எழுத வேண்டும் என்று தோன்றிற்று. இக்காலத்திற்கும் அர்த்தப்படுகின்ற ஒருவனாக அவனை காட்ட வேண்டும் என்பதே விருப்பம்” என்கிறார் ஆசிரியர். 


கிருஷ்ணா கிருஷ்ணா நாவலில் கிருஷ்ணன் என்ற படிமம் நித்ய பாலகனாகவும், நித்ய காதலனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். பரிபூரண வெறுப்பும் (கம்சன் - கிருஷ்ணனைத் தவிர வேறு நினைவே இல்லாததால் கம்ஸன் - ஸம்பரம யோகம் செய்தவன்- வைகுண்டத்தில் இருக்கிறான்), பரிபூரண காதலும் (ராதை) சந்திக்கும் புள்ளி, ராதையின் முக்கியத்துவம், கிருஷ்ணர் இறுதியில் ராதையை பார்க்க வருவது என வெண்முரசு வரிசையின் நான்காவது நாவலான நீலத்திற்கும் கிருஷ்ணா கிருஷ்ணாவிற்கும் ஒப்புமைகள் உண்டு. ஆனால் நீலம் ராதையை / பெண்மையை கிருஷ்ணனை விட உயர்த்திக் காட்டுகிறது. கிருஷ்ணா கிருஷ்ணாவின் இறுதியில் ராதையை சந்திக்க வரும் இடத்தில் அந்த கிராமத்தில் எட்டு வயது வரை இருக்கும் சிறுவர்கள் அனைவருக்கும் கிருஷ்ணன் என பெயரிடுகிறார்கள், ராதை “பாட்டியாக” இருக்கிறார். நீலத்தில் ராதை என தலைமுறைகளாக பெயரிடுகிறார்கள். சிறுமி ராதை குழல் வைத்திருக்கிறாள், ஆற்றியது ஆற்றி அமைந்த நெஞ்சத்தோடு வரும் “தாத்தா” கிருஷ்ணன், நீலக்கடம்பின் கீழ் நித்ய கன்னியாக நின்று கண் திறக்கும் கற்சிலை ராதையை காண்கிறார். 


கிருஷ்ணா கிருஷ்ணாவில் எல்லா பெண்களும் கிருஷ்ணனை விரும்புகிறார்கள். கிருஷ்ணன் ஒரு கையால் முலைக்காம்பை நெருடிக்கொண்டே, பால் குடிக்கும் நிலையில் பூதனையின் முகத்தில் ஒரு தாயின் பேரன்பு தோன்றுகிறது, பின்பு அது சிறிது சிறிதாக மறைந்து, அவள் மைதுனத்தின் உச்சகட்டத்தில் இருப்பதுபோல, சந்தோஷ ஆரவாரம் செய்து, சம்போக ஆனந்தத்தின் எல்லை நிலமான மரணத்தை சேர்கிறாள். நீலத்தில் கம்சனின் ஆணையால் பிறந்த குழந்தைகள் கொல்லப்பட, அதில் தன் மகனை பறிகொடுத்து பிச்சியான பூதனை, கண்ணனுக்கு பாலூட்டும் போது அண்டம் அறிகிறது, தேவகியும், யசோதையும், ராதையும் அறிகிறார்கள் - ஒரு போதும் ஒரு மதுவும் அவனுக்கு அது போல அத்தனை தித்தித்ததில்லை என. இங்கே பூதனை ராதையும் விட ஒரு படி மேலாக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஒரு வகையில் கிருஷ்ணா கிருஷ்ணாவில் உள்ள கிருஷ்ணர் ‘எஜமான்’ ரஜினிகாந்த் என்றால், வெண்முரசில் உள்ள கிருஷ்ணர் ‘கபாலி’ ரஜினிகாந்த். இரண்டு ரஜினிகாந்துகளின் அடிப்படையே வேறு.


கண்ணனை அரசியலாளன், வஞ்சகன், பெண் பித்தன் என எப்படியும் எழுதலாம். அப்படி எழுதுவதற்கு மொழியோ / வடிவமோ ஒரு தடையில்லை. ஆனால் ஒரு பண்பாட்டின் பெருந்தெய்வம் என, ஞானி என, பெருங்காதலன் என, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் வாழ்க என நம் மொழி வாழ்த்திய மணிவண்ணனை சித்தரிக்க வேண்டும் என்றால், அந்த உணர்வுகளை வாசகர்களில் எழுப்பவேண்டும் என்றால் அதற்குரிய நடையும்,  வடிவமும் வேண்டும். மேக்பத், ஹிட்லர், journalist, Freud, strip tease industry psychology, killjoys, etc, etc என்று ஆங்கிலமும், தமிழும் கலந்த கிருஷ்ணா கிருஷ்ணாவின் ‘அடித்து தூள்’ கிளப்பும் நடையில் சுஜாதா நாவல்களில் வரும் விடலைகளை எழுப்பமுடியும், தெய்வங்களை அல்ல. கிருஷ்ணன் போன்ற மாபெரும் மர்மம் நிறைந்த, ஒரு பண்பாட்டால் கடவுளாகவே கருதப்படுகிற ஒரு படிமத்தை நவீன எழுத்தாளர்கள் தங்கள் மொழியில் எழுதுவது என்பதே கம்பன் அவையடக்க பாடலாக சொல்வதைப்போல


“ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென”


ஒரு பூனை பாற்கடலை முழுவதும் நக்கி குடித்து விட முடியும் என நினைக்கும் முயற்சி. பாற்கடலை பூதங்களே குடிக்க முடியும். ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ யானை பிழைத்த வேல். அதை ஏந்துவது பெருமையே. அதை ஏந்தியதாலேயே இந்திரா பார்த்தசாரதி எனக்கு பிடித்தவராகிறார். 


உப பாண்டவம்: 


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் 2000 ஆம் ஆண்டு எழுதிய தமிழ் நாவல். எஸ்.ராவின் முதல் நாவல். நாட்டார் பாரதமும்  செவ்வியல் மகாபாரதமும் சந்திக்கும் புள்ளியாக எழுதப்பட்ட முயற்சி. ‘இரண்டாம் இடம்’ நாவலுக்கு பின் நான் வாசித்த இரண்டாவது மகாபாரத மறுஆக்க நாவல். சகுனி மற்றும் கௌரவர்கள் தரப்பு நியாயங்களை மேலதிக வெளிச்சத்துடன் காட்டும் நாவல். உப பாண்டவம் கதை நிகழ்வுகளை மாற்றவில்லை. கதையின் அடுக்கை மாற்றுகிறது. உதாரணமாக நாவலின் சூல் மற்றும் பால்ய விருட்சம் பகுதிகள் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பல கதைமாந்தர்களின் பிறப்பு மற்றும் வளர்ப்பை சொல்கிறது.  அவர்களிடையே உள்ள ஒற்றுமைகளை கோடிட்டு காட்டுகிறது. இந்த ‘அடுக்கிக் காட்டும்’ முயற்சி மற்ற மறுஆக்கங்களில் இருந்து உபபாண்டவத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆனால், இது நாவலின் முதல் சில பகுதிகளோடு நின்றுவிடுகிறது. பைபிள் தமிழ் மொழியாக்கத்தில் ஏவாள் விருட்ச ஸ்த்ரீ என குறிப்பிடப்படுகிறாள். இங்கே திரௌபதி விருட்ச ஸ்திரீயாக வருகிறாள். சமஸ்கிருத பைபிள் நடை, வாக்கிய அமைப்பு என வாசிப்பு எனக்கு கடுமையாக இருந்தது.  


உபபாண்டவத்தில் யுகாந்தாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. ஒருவகையில் மகாபாரத மைய சிக்கல்களை பங்காளி சண்டையாக மட்டுமே பார்க்கிறது. உதாரணமாக, உபபாண்டவத்தின் ஜரா விருஷ்ணிகளில் ஒருவன், கிருஷ்ணனின் ஒன்றுவிட்ட சகோதரன், வர்ண கலப்பில் பிறந்தவன், ஜராவுக்கும் கிருஷ்ணனுக்கும் இருக்கும் பகை நிலத்தகராறில் வரும் பங்காளிச் சண்டையில் வருவது. அதுபோல மூல மகாபாரத கதை மாந்தர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் உள்ள ‘உன்னதமாக்கல்’ தலைகீழாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சத்யவதி-பீஷ்மர் உறவு பாலசந்தர் திரைப்படம் போல முன்னாள் காதலி சிற்றன்னை ஆகும் உறவு. சத்தியவதியான பரிமளகந்தி கங்கையில் அம்பு பயிற்சியில் ஈடுபடும் பீஷ்மர் மேல் காதல் கொள்கிறாள். அவன் வருவான் என்று காத்திருக்கிறாள். வருவதோ அதே முகமுடைய வயதான பீஷ்மரின் தந்தை. பிஷ்மர் அந்த சொல்லாத காதலை தன்னுள் புதைத்து கொள்கிறார். மச்சகந்தியின் கலையாத நேசத்தின் மீது எவர் பிரியமும் ஈடு வைக்க வேண்டாம் என முடிவு செய்தால் பீஷ்மர் நித்ய பிரம்மச்சாரியாக சபதமேற்கிறார். காந்தாரியின் பாத்திரப்படைப்பும் மகாபாரதத்திற்கு நேரெதிர்.  உபபாண்டவத்தில் திருதராஷ்டிர ஆலிங்கனத்திற்கு தூண்டுவது காந்தாரி. பீமனுக்கு பதில் உடைபடுவது தர்மனின் சிலை. விதுரர் தர்மனிடம் தன் மன மொழியை ஒரு கூழாங்கல்லாக தருகிறார். குந்தி திருதராஷ்டிர-காந்தாரியை தொடர்ந்து கானேகுவது குற்றவுணர்வினால். அஸ்வத்தாமன் குடிகாரனாக ஒரு தாமரை மலரை கையில் வைத்து ‘திரௌபதி! திரௌபதி!’ என அரற்றுகிறான். 


காட்டெரி சூழ பாறையில் பிள்ளைகளுடன் தவிக்கும் திருதிராஷ்டிர-காந்தாரியை மறுபக்கத்திலிருந்து தாக்கும் ஓநாய்களிடமிருந்து காக்க முயலும் சகுனியின் கனவு,  ஒரு பிராமணனிடம் விலை மதிப்பில்லாத வெண்ணிற பசுக்களை மூன்றே ஆட்டத்தில் தோற்கும் தர்மன் என சில பகுதிகள் எனக்குப் பிடித்திருந்தது. முழு நாவலும் அடுக்கிக்காட்டுதலாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.


பர்வா:


ஏற்கனவே குறிப்பிட்டது போல, நாம் சிறு வயதில் கேட்டு வளர்ந்த இதிகாசத்தை ‘கட்டுடைத்து’ அதன் மறுபக்கத்தை காட்டும் படைப்பு முதலில் ஒரு பரவசத்தை தரும். ஆனால், ஒரு கட்டத்தில் வெறும் கட்டுடைப்பு போதாமலாகிறது. அந்த ‘மறுபக்கத்தின்’ போதாமைகளை உணர்கிறோம். மறுபக்கத்தின் மறுபக்கத்தை காண விரும்புகிறோம். அதுவும் மகாபாரதம் போன்ற பெருங்காப்பியத்தை தன் நோக்கிற்கேற்ப சுருக்காமல், பாரதத்தை நோக்கி விரியும் படைப்பை காணும்போது மனதில் பேருவகையும், நாவில் பெரும் தித்திப்பும் உருவாகிறது. வெண்முரசிற்கு முந்தையவற்றில் விரிவிலும், தரிசனத்திலும் முதன்மையான “பர்வா” அப்படிப்பட்ட ஒரு நாவல். 


“இனி ஞான் உறங்கட்டே” வெளிவந்து ஐந்து ஆண்டுகள் கழித்து 1979 ஆம் ஆண்டு வெளிவந்த பர்வா, ‘கலைத்தல்’ + ‘மீண்டும் ஆக்குதல்’ என “மறு ஆக்கம்” என்ற சொல்லின் முழுமையான பொருளில் வந்த முதல் படைப்பு. 


பர்வா மகாபாரதத்தின்  தொன்மங்கள் இல்லாத, எவ்வித மாயங்களும் இல்லாத நவீனத்துவ மறுஆக்கம். எழுத்தாளர் பாவண்ணன் கன்னட மூலத்திலிருந்து தமிழில் ‘பருவம்’ என மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.  உப பாண்டவம், கிருஷ்ணா கிருஷ்ணாவை சேர்த்தே இந்த நாவல்களில் வாசிக்க சரளமான மொழியில் அமைந்துள்ளது பருவம்.


யதார்த்தவாத நாவல்களை படித்து சலிப்புற்றிருந்த மேற்கத்திய வாசகர்களுக்கு காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் “தனிமையின் நூறாண்டுகள்" மூலம் மாய யதார்த்தவாதத்தை அறிமுகப்படுத்தி பெரும் பரவசத்திற்கு உள்ளாக்கினார். தினமும் வெண்பொங்கல் சாப்பிட்டவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டது போல் அது தித்தித்தது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், மாய யதார்த்த சர்க்கரைப்பொங்கல் புராணங்களில் திகட்டத் திகட்ட மூழ்கி திளைத்த இந்தியர்களுக்கு, வெண்பொங்கலை சுவைத்த பரவசம் பர்வா.


சல்யர், குந்தி, பீமன், திரௌபதி, அர்ஜுனன், சாத்யகி, கர்ணன், பீஷ்மர், யுயுத்சு, துரோணர் ஆகியோரின் நினைவுகளாக விரிகிறது பர்வா. ‘தருமம் என்றால் என்ன’ என்ற கேள்வி அனைவரின் அகத்தையும் துளைக்கிறது. அதன் புற வெளிப்பாடாக நாவல் முழுவதும் புழுக்கமும், வெக்கையும் அனைவரையும் வாட்டுகின்றன. 


பகாசூரனை பீமன் கொன்றதற்கு பழிவாங்குவதற்கு ராட்சச குலம் போரிட வேண்டும் என கடோத்கஜனை நெருக்கிறார்கள். ராட்ஸச குலம் இரண்டாக பிரிந்து நிற்கிறது - ‘அம்மா, எது தர்மம் என்று எனக்கு எதுவும் புரியவில்லை. நீயே விளக்கமாக சொல்’ என கடோத்கஜன் இடும்பியை கேட்கிறான். 


“பாண்டவர்கள் இமயமலைப் பகுதியில் பிறந்தவர்கள். சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் பழக்கத்தை துவக்கியிருக்கிறார்கள். அந்த பழக்க வழக்கங்களை முழு ஆரிய சமூகத்தின் மேல் சுமத்தப்பார்க்கிறார்கள். நீங்கள் எந்தப் பக்கம்? ஆரியரா? அல்லாதவர்களா?” என வேத சாஸ்திரிகள் அனைவர் முன்னிலையிலும் கேட்கிறார்கள். அம்மா, உண்மையான ஆரிய தருமம் என்றால் என்ன?” என்று பிரதிவிந்தியன் தன் அம்மா திரௌபதியிடம் கேட்கிறான். ஆரிய தருமம் என்றால் வேட்டை, சூது, மது, பெண்களுடன் சல்லாபம் என நினைத்து சிரித்து கொள்கிறாள் திரௌபதி.


பங்காளிகளுக்கிடையே உள்ள நிலப்பிரச்சனையாக மட்டும் இருந்தால் அது உலகியல் சார்ந்தது. ஆனால் ‘நியோகமாக இருந்தால் அஸ்தினாவதியிலேயே, புரோகிதர்கள் மூலம் ஒரே ஒரு மகனைப்பெற்றிருக்க வேண்டும். காட்டில் சென்று பல மகன்களைப் பெற்றதன் மூலம் குந்தியின் நியோகம் செல்லாதது, பாண்டவர்கள் குருவம்சமே இல்லை, மலைக்குடிகளின் தருமத்தை முன்வைத்து ஆரிய தருமத்தை அழிக்கிறார்கள். ஆகவே யுத்தமே நிலத்திற்கானது அல்ல, அறத்திற்கானது’ என்கிறான் துரியோதனன். 


ஆசிரியர்களையும், உறவினர்களையும் எதிர்க்க வேண்டுமா என்று நினைத்தாலும், போர் புரிய மறுப்பதற்கு ஆரிய பெண்களின் கற்பு சார்ந்து எழும் சிக்கலே அர்ஜுனனை தயங்க வைக்கிறது. 


“போரில் யார் வென்றாலும் தோற்றாலும் ஆரியவர்த்தத்தின் பாதிக்கும் மேற்பட்ட சத்ரிய ஆண்கள் இறந்து விடுவார்கள். நம் தூய்மையான சத்ரிய பெண்களை மற்ற கீழ் குலத்தார் - குறிப்பாக ஆரியரல்லாதவர்கள் -- தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள். ஆண் துணை இல்லாமல் நம் பெண்களே அவர்களை தேடிச் சென்றாலும் சென்றுவிடக்கூடும். அப்போது வர்ணங்கள் குழம்பி, அதருமம் தலையெடுக்கும்.” என நினைக்கும் அர்ஜுனன், துரியோதனனே ஆளட்டும், நமக்கும் வயதாகிறது, காட்டில் ஆசிரமம் கட்டிக்கொண்டு இருந்து விடுவோம், போர் புரிய மாட்டேன் என்கிறான்.


கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கிறான். கற்பு என்ற பேசுபொருளை முன்வைத்து தர்மம் என்றால் என்ன என்ற கேள்விக்கு விடையாக அமைகிறது பர்வாவின் கீதை.


“யுத்தத்தில் ஆண்கள் இறந்து பெண்கள் ஆதரவற்றவர்களாக மாறுவது சகஜம்தான். அதற்கப்புறம் அப்பெண்கள் அடுத்த ஆண்களோடு சேருவதும் சகஜம்தான். பலாத்காரத்தாலோ அல்லது விருப்பத்தின்பேரிலோ இது நடந்துவிடும். ஆனால் நம் சத்ரியப் பெண்களுக்கு நடந்தால் மட்டும் இது அநியாயம் என ஏன் எண்ணவேண்டும்? கற்பும் புனிதமும் வெறும் ஆரிய பெண்களுக்கு மட்டும் உரியவையா? உன் மூத்த பாட்டி சத்யவதி ஆரியப்பெண்ணா? பீஷ்மரின் தாய் கங்கை ஆரியப்பெண்ணா?... கற்பு என்று சொல்ல வந்தால் அது அவர்களுக்கும் உண்டு, இவர்களுக்கும் உண்டு. இதில் வித்யாசமாகப் பார்ப்பது நமது அகங்காரத்தைத்தான் காட்டும்….நீங்கள்  அனைவரும் பாண்டுவுக்கு பிறந்தர்களே இல்லை என்று துரியோதனன் சொல்கிறான். பீஷ்மனும் துரோணரும் அவர்கள் பக்கத்தில் இருப்பதால் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றே பொருள்படும். அவர்களிருவரும் தரும நெறியில் சிறந்தவர்கள் என்பதையும், உன் தாய் திருமணத்திற்கு புறம்பான முறையில் பிள்ளைகளைப் பெற்றவள் என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொண்டது போல் ஆகும். நீ அதை ஏற்கிறாயா? ” 


சஞ்சயன் மூலம் கீதையை கேட்கும் காந்தாரி, தன்னையும் குந்தியையும் ஒரே தட்டில் வைப்பதா என நினைத்து, கிருஷ்ணனை தந்திரக்காரன் என்கிறாள். போர் முடிந்த பின் கிருஷ்ணனிடம் சொல்லும்போது, ஒரு குருடனை திருமணம் செய்துகொள்வதை எதிர்த்தே கண்களை கட்டிக்கொண்டேன் என்கிறாள். பதிவிரதை என்று பீஷ்மரும், மற்றவர்களும் அழைக்க ஆரம்பித்ததனால், அவளே அதை நம்ப ஆரம்பித்ததாக சொல்கிறாள். அவளுடைய கற்பினாலேயே கௌரவர்கள் செல்வமும் வெற்றியும் அடைகிறார்கள் என நினைக்கிறாள். கிருஷ்ணர் அவளுடைய கண் கட்டை அவிழ்க்கிறார். கற்பு என்று சொன்னவை எல்லாம் போலி என உணர்கிறாள் காந்தாரி. பின்பு குந்தியும் காந்தாரியும் இணைந்து போரில் இறந்த மகன்களின் பிணங்களை காணச் செல்கிறார்கள். தன் மகன்களின் பிணங்களுக்கும், மற்ற பிணங்களுக்கும் வித்தியாசம் இல்லை. எல்லா பிணமும் ஒன்றே என்பதை உணர்கிறார்கள். நாவலின் உச்சங்களில் ஒன்று இந்த இடம். நாவல் இங்கேயே முடிந்திருக்க வேண்டும். ஆனால், அடுத்து ஒரு 15 பக்கங்கள் நீள்கிறது. அதன் நவீனத்துவ வடிவம் கதைத்தருணங்களோ மாந்தர்களோ மண்ணை மீறி விண்ணில் பறந்தாலும் அதை மீண்டும் தரையிரக்க வேண்டும் இல்லையா? காந்தாரிக்கு கண் பார்வை பறிபோய் உண்மையிலேயே குருடியாகிவிடுகிறாள். கிருஷ்ணன் செய்வதறியாமல் திகைக்கிறார். உத்திரையின் மகன் இறந்தே பிறக்கிறான். வாரிசு வேண்டும், குழந்தை பெற்றுத்தா என திரௌபதியை குந்தி நிர்பந்திக்கிறாள். போரில் கணவனை இழந்தவர்கள் எங்களுக்கு ஒரு பதில் சொல் என தர்மனை நெருக்குகிறார்கள்.


உன்னதமாக்கல், கற்பனை அம்சம், கனவுகள், நாடகீய உச்சங்களை பர்வாவின் நாவல் வடிவம் அனுமதிப்பதில்லை. பாண்டவர்கள் வனவாசம் சென்ற பின், துச்சாதனன் நான் இந்திரபிரஸ்தத்தை ஆள்கிறேன் என்று துரியோதனனிடம் கேட்கிறான். துரியோதனன் அப்படி தந்தால் துச்சாதனன் என்றாவது தனக்குப் போட்டியாக வந்துவிடுவான் என்பதால், வேண்டாம் அதை மீண்டும் காண்டவ வனமாகவே மாற்றிவிடுவோம் என்கிறான். ஆயிரம் பக்க நாவலில் இரண்டு சிறு கனவுகள் வருகிறது. துரோணருக்கு ஒரு ஆசிரமம் கட்ட வேண்டும் என்று. கர்ணனுக்கு வரும் கனவில் அவனுடைய மூன்று  மகன்களான சுஷேணன், சித்திரசேனன், சுஷர்மன் அனைவரும் சூரிய மண்டலத்தை சென்று  சேர்ந்தார்கள். இதமான வெளிச்சம். கீழே அகன்ற நதி, அதில் ஒரு படகு. சூரிய வெளிச்சமே ஒரு குழந்தையாக அந்தப் படகில் வந்து இறங்கியது. நதியில் பெருகும் வெள்ளத்தால் படகு மெல்ல அசைந்து அதன் போக்கில் போகிறது. 


பறவைகளும், பாய் புலியும், சிம்மமும் வேழமும் அதன் அதன் கூண்டுக்குள் வாழ்வதைப் பார்ப்பது போன்றது பர்வாவை வாசிப்பது. அந்த விலங்குகள் எல்லை கட்டப்பட்டிருந்தாலும், அவற்றிற்கு கூர் உகிர்களும், பற்களும் உள்ளன என்பதை நாம் உணர்கிறோம். அவற்றின் கர்ஜனைகளையும், பிளிறல்களையும் நாம் கேட்கிறோம். பர்வா எனும் மிருகக்காட்சி சாலையை கண்டு வியந்திருந்தேன் வெண்முரசென்னும் பெருங்காடே கண்முன் விரியும் வரை.


கொம்மை:


“கொம்மை” - எழுத்தாளர் பூமணி எழுதிய நாவல். 2018 இல் வெளிவந்துள்ளது. பெரும்பாலான நவீன மறுஆக்கங்கள் மூலத்தின் செவ்வியல் வடிவத்தை பிரதிபலிக்கின்றன. வெண்முரசு மூலத்திற்கு இணையான செவ்வியல் மாற்று உலகை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.  “கொம்மை” நேர் எதிர்.  உரையாடல்கள், பாடல்கள், என முழுக்க முழுக்க அன்றாட பேச்சு மொழியில் எழுதப்பட்டுள்ளது. கொம்மை என்றால் மார்பகம் / கொங்கை என்று பொருள். புராணங்களை பேச்சு மொழியில் சொல்லி பார்த்தாலே அது பெண்களின் துயர்பாடும் காவியம்தான். அதனால் சில முக்கியமான மாற்றங்களை தவிர்த்து மூலத்தை ஒட்டியே பெரும்பாலான நிகழ்வுகள் உள்ளன.  வெண்முரசு நாவல் வரிசையை போலவே எண்ணற்ற கிளைக்கதைகளின் சுருங்கிய வடிவங்களை உள்ளடக்கியது. கொம்மையில் சங்க இலக்கிய, திருக்குறள் குறிப்புகள் உள்ளன. வெண்முரசில் இந்த குறிப்புகள் மானுடத்தின் அறிதல்களாக, உச்சங்களாக  வெளிப்படும். கொம்மையில் இந்த  வரிகளின் தலைகீழாக்கங்கள் உள்ளது. துயரத்தையும் கேலி, கிண்டல் மொழியில் சொல்லி செல்கிறது. 


உதாரணமாக “காமம் காமம் என்ப” என்ற சங்கபாடல் வரிகள் முதலில் கிழட்டுப்பசுவான சாந்தனுவின் பார்வையிலும், பின்பு சத்யவதி / கங்கையின் பார்வையிலும் சொல்லப்படுகிறது. மேலோக கூத்தும், புலோக கூத்தும் ஒன்றிற்கு ஒன்று சளைத்ததில்லை என்கிறது.


சாந்தனு தன் வயதான காலத்தில் மச்சகந்தியின் மீது  காமுறுவதை தன் சாரதியிடம் சொல்கிறான்: “காமத்துக்கு ஏதுடா மூப்பும் பிணியும். அட மடையா நல்லாத் தெரிஞ்சுக்கோ. காமம் காமம்னு ஏளனமாச் சொல்றாங்களே அப்படி இல்லடா. அது பேயுமில்ல நோயுமில்ல. மழைக்குத் தளுத்த எளம்புல்ல கெழட்டுப்பசு கரும்பி நமட்டுமே அந்த மாதிரி தீராத பெரிய விருந்தாக்கும்.” “அது சரி. அனுபவம் பேசச் சொல்லுது. அப்படின்னா இனியும் விருந்து தீராதுன்னு சொல்லுங்க”. “புல்லு தளுக்கிறதும் மாடு புசிக்கிறதும், எண்ணைக்குமே தீராதுடா.”

 

பீஷ்மரை விரும்புகிறாள் சத்யவதி. கங்கைக்கும் மச்சகந்தியை மருமகளாக்கும் ஆசை இருக்கிறது. சாந்தனு சத்யவதியை திருமணம் செய்துகொண்டு தனக்கு சக்களத்தியாக வந்தபின் கங்கையும், சத்யவதிக்குமான உரையாடல்: 


“ஒனக்கென்ன ஒரு புருசனோட காலத்த முடிச்சுக்கிருவ. என்னச் சொல்லு. பேருதான் தேவத. செய்றதென்னமோ தேவடியாத்தனம். என்னப் போல ஊர்வசி ரம்பை திலோத்தமை மேனகை கிருதாசின்னு ஒரு அடிமைக் கூட்டமே இருக்குது. இந்திரனோட அமராவதியிலயும்  ஆத்துத் தண்ணியிலயுமாக் குடியிருக்கொம். கூப்புட்ட கொரலுக்கு ஓடணும். ஏவுன வேலையச் செஞ்சு முடிக்கணும்.’’


“அப்படியென்ன வேலம்மா.’’


“இன்னதுன்னு கெடையாது. ராசாக்களுக்குப் பொண்டாட்டியா இருக்கணும். இல்ல வப்பாட்டியா வச்சுக்கிருவாக. முனிவருக்குத் தொண்டுசெய்யணும். அவுகளுக்கு அரிப்பெடுத்த நேரம் கூடப் படுத்துக் காம இச்சைக்குத் தீனியாகணும். கொழந்த பெத்துக்குடுக்கணும்.’’


“எங்க பெழப்பும் அப்படித்தான். பராசர முனிக்கு துவைபாயனனப் பெத்துக் குடுத்தனே அப்படி.’’


“யாராச்சும் வரங் கேட்டுத் தவமிருந்தாகன்னா இந்திரனுக்குக் கொடலு பதறும்.’’


“ஏன் அப்படி.’’


“எல்லாம் பதவியத் தக்கவச்சுக்கிறத்தான். தவமிருக்கிறவனுக்கு ஏறுக்கு மாறா வரத்தக் குடுத்துப்புட்டுப் பெறகு குத்துதே கொடையிதேன்னு அடிச்சுக்கிருவாக. வரம் வாங்குனதும் மொதக் காரியமா இந்திரன் தலையிலதான் கைவப்பாக.’’ “அப்படிச் சொல்லு.’’ “இந்திரன் பதறியடிச்சு ஒடனே எங்கள ஏவிவுட்டு தவத்தக் கலைக்கச் சொல்லுவாரு. அவுகளுக்கு முன்னால ஆடணும் பாடணும். அவுத்துப்போட்டுக் குளிக்கணும். கூடப் படுக்கவும் செய்யணும். எப்படியோ அவுக தவத்தக் கலச்சாச் சரி. காமம் கட்டுப்பாட்ட மீறிக் கரையொடச்சுக்கிட்டா வீரியத்தப் பீச்சி அங்கங்க செடிகொடியில புடிச்சுவச்சிட்டுப் போயிருவாக. அது கருவாகி வளந்து கொழந்த பெறக்கும். அத யாராச்சும் எடுத்து வளக்கிறதும் உண்டு. காட்ல அனாதையா அலையவுடுறதும் உண்டு. ஈவெரக்கங் கெடையாது. கேட்டா ஆயிரம் நியாயம் சொல்லுவாக.’’


“எங் கதையும் அப்படித்தான். மச்சத்தோட வயித்துல பெறந்தென். நதியில முனிவருக்குப் புள்ளையப் பெத்துக் குடுத்தென்.’’


“நீ கன்னியாயிருந்த. ஒருத்தருக்கு மனைவியாருந்து தாயாகப்போற. பேரப் புள்ளைகளையும் கண்குளிரப் பாக்கப்போற. ஒனக்குப் பிணி உண்டு. மூப்பு உண்டு. மரணமும் உண்டு. எனக்கு எதுவுமே கெடையாது. எல்லாரையும் சந்தோசப்படுத்துற நித்தியக்கன்னி. ஒன்னப்போல இருக்கணும்னு எனக்கும் ஆச இருக்குமில்ல. நானும் பொண்ணுதான. பொண்ணுகளோட மனசப் புரிஞ்சுக்கிறாம இந்திர சபையில கூடி ஆடிப்பாடி அளவுக்கு மீறிச் சோமரசமும் சுரா பானமும் குடிச்சுக் கூத்தடிக்கிறத நெனச்சுப் புழுங்கிக்கிட்டே எங்காலமும் ஓடுது.’’ 


“மேலோகத்துக் கூத்துக்குப் பூலோகக் கூத்து ஒண்ணும் கொறஞ்சதில்ல.’’ 


“இப்பத்தான் மனசு லேசாருக்குடி.. வாறென். அடுத்து என்ன வேல வச்சிருக்காகளோ.’’


அர்ஜுனன் கிருஷ்ணனை “டேய் மாட்டுகார பயலே”, “கருத்த மச்சான் கிச்சு” என்று கூப்பிட, கிருஷ்ணன் அர்ஜுனனை “அட பரதேசி அச்சு" என்கிறான். எல்லா மகாபாரத மறுஆக்கங்களிலும் சூதுக்களத்தில் திரௌபதிக்கு யாரவது உதவுகிறார்கள். கொம்மையில் திரௌபதியே துச்சாதனனை அடித்து உதைத்து தன்னை காப்பாற்றி கொள்கிறாள். உங்களை நீங்களேதான் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற பார்வை இது. “செஞ்ச பாவத்தை அனுபவிக்கனும்” என்பதை தாண்டி கொம்மை தத்துவங்களை நோக்கி போவதில்லை. தர்மன் குறித்து வரும் வரிகள், நாவலின் பார்வையை பிரதிபலிக்கின்றன.


இப்போது தருமன் முற்றிலும் புதிய மனிதனாக மாறியிருந்தான். எதார்த்த வாழ்க்கையும் தத்துவங்களும் அவனை ஞானவானாக்கிவிட்டன. புதிய அனுபவங்கள் புடம்போட்டதில் புத்தொளி பெற்றிருந்தான். மனிதனின் மதிப்பைத் தெளிவாகப் புரிந்திருந்தான். வாழ்க்கைப் பொறுப்புக்களை அறிந்துணர்ந்தான். மாய மந்திரச் சக்திகளைப் பெறுவதைவிட உலகத்தின் இயக்கத்தைப் புரிந்துகொண்டாலே போதும். மனஅமைதி தானே வருமெனக் கண்டுகொண்டான். செல்வத்தில் வறியவனாக இருந்த அவன் ஆன்மிகப்பலத்தால் செல்வந்தனாகிவிட்டான். பிறரைத் தண்டிப்பதைவிட மன்னிப்பதில்தான் அதிக இன்பம் கிட்டும் என்பதை அறிந்துகொண்டான்.


இந்த நாவலின் தனித்த அடையாளமாக நான் கருதுவது தாளத்துடன் கூடிய ஏராளமான நாட்டார் பாடல்கள். ஒரு உதாரணம்: 

 

“அண்டம் நடுங்கிடத் 

தண்டு முறிந்திடச் 

சண்டை நடந்ததடா - 

சூரன் மண்டை பிளந்ததடா. 

கண்டவர் அஞ்சிடக் 

கானவர் ஓடிட 

வென்றவன் வீரனடா - பகனைக் கொன்றவன் பீமனடா.’


வெண்முரசு:


வெண்முரசிற்கு முந்தைய மகாபாரத மறுஆக்கங்களில் பர்வாவும், கொம்மையும் அளவிலும், உள்ளடக்கத்திலும் பெரிய நாவல்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள். வெண்முரசு அதைவிட இருபத்தி ஐந்து மடங்கு பெரியது. வெண்முரசை எல்லாம் யாரும் படித்துவிட்டேன் என சொல்ல முடியாது. ஒரு முறை வாசித்துள்ளேன். சில பகுதிகளை மீளமீள வாசித்துள்ளேன். வெண்முரசு மூல மகாபாரத்திற்கு இணையான ஒரு நவீன புராணத்தை உருவாக்கி காட்டுகிறது. 

 

பெரிய நூல் தரமான நூலாக இருக்காது என்பது பொது புரிதல். விரிவும், அழகும், உன்னதமும் ஒருசேர இருக்க முடியும் என்பதற்கு தமிழ் இலக்கிய மரபில் கம்பராமாயணம் முன் உதாரணமாக இருக்கிறது. என் வாசிப்பில் வெண்முரசை கம்பராமாயணத்தோடு மட்டுமே ஒப்பிட முடியும். திருக்குறள், பக்தி இலக்கியங்கள் என அன்றைய “உலகம் யாவையும்” உள்ளிழுத்து கம்பர் காவியம் படைத்தார் என்றால், இதுவரை வந்த மொத்த தமிழ் இலக்கியங்கள், இந்திய மற்றும் மேற்கத்திய நவீன நாவல்கள் என இன்றைய “உலகம் யாவையும்" செரித்து படைக்கப்பட்டது வெண்முரசு. 

 

வெண்முரசின் சுருக்கமான உள்ளடக்கம் எல்லாம் ஒரு கட்டுரையில் எழுதிவிட முடியாது. என் வாசிப்பில் வெண்முரசின் முக்கியத்துவம் என்பது:


இந்திய தொன்மங்களுக்கு இடையே இருக்கும் ஆச்சிரியம் தரும் ஒற்றுமை (தாட்சாயனி-அம்பை, கத்ரு-வினதை காந்தாரி-குந்தி). ஒன்று போல இருக்கும் தொன்மங்களை அடுக்கி காட்டுதலின் மூலம் உருவாகும் ஆழம், காலத்தின் சுழற்சி. மற்ற எந்த நவீன மகாபாரத மறுஆக்கங்களிலும் இந்த அடுக்குகள் இல்லை. சம்வகை போன்ற புதிய கதைமாந்தர்களை உருவாக்கி தேவயானி, தமயந்தி, சத்யவதி, குந்தி, திரௌபதி அடுக்குகளில் இணைக்கிறது. ஒற்றைப்படையாக நாம் அறிந்த புராணங்கள் பல அடுக்குகளாக விரியும்போது, இன்றைய உலகும், நாளைய உலகும் அதில் சொல்லப்படாத அடுக்குகளாக இணைகின்றன. 


மகாபாரத தொன்மங்கள் தர்க்கத்தை மீறாத, நடக்க சாத்தியம் உள்ள வரலாற்று நிகழ்வாக மாறுதல். ஜெயமோகன் வரலாற்று நிகழ்வுகளை தொன்மங்களாக மாற்றும் படைப்புகளை எழுதியுள்ளார் (உதா:படுகை). கொற்றவையிலும், வெண்முரசிலும் தொன்மங்களை ஒரு நிகழ சாத்தியமான வரலாற்று நிகழ்வாக மாற்றி காட்டியுள்ளார். யதார்த்த நிகழ்வுகள் தொன்மங்களாக பரிணாமம் அடையும் சித்திரமும் உள்ளது. உதா: கன்றுகளை பலியிடும் வேள்விகள் தேவையில்லை என்பதால் இந்திரன் ஆயர்களின்மீது கோபம் கொண்டு பெருமழை வெள்ளத்தால் ஆயர்களை அழிக்க முற்படுகிறான். கண்ணன் தன் சுண்டுவிரலால் ஆயர்மலையை தூக்கி வெள்ளத்தில் இருந்து யாதவர்களை காப்பாற்றினான் என்பது தொன்மம். வெண்முரசில் யாதவர்தம் பேரரசனாக இருக்கும் கண்ணன், மாமழை பெய்து வெள்ளம் ஏற்படும் ஆற்றின் குறுக்கே, ஆயர்மலை கற்களை கொண்டு அணை கட்டுவதற்கு கையொப்பம் இடுகிறார். வருடந்தோறும் ஏற்படும் வெள்ளத்திலிருந்து அணை மக்களை காக்கிறது. ஒற்றை விரல் ஆணையால், மலையை தூக்கி மழைக்கடவுள் இந்திரனிடம் இருந்து காத்ததாக சூதர்கள் பாடுகிறார்கள்.

இந்திய தத்துவங்களின் விளக்கங்கள். உதா: கீதையின் மூன்றாவது பகுதியான கர்ம யோகத்தில், கண்ணன் பார்த்தனுக்கு உரைப்பதாக உள்ள வரிகளின் வழக்கமான மொழிபெயர்ப்பு [“இந்து ஞான மரபு - ஒரு எளிய அறிமுகம்” நூல் பின்-இணைப்பு - அறிஞர் ஜடாயு]: “விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டு செலுத்துதல் கூட உனக்கில்லாமல் போய்விடும். வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது. ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு.” வெண்முரசு நாவல் வரிசையில் இமைக்கணம் நாவலின் இறுதிப்பகுதியில் கீதையின் தமிழாக்கம் உள்ளது. அதில் - https://venmurasu.in/imaikkanam/chapter-48/: “உனக்கான செயலை செய்க! ஏனென்றால் செயலின்மையை விடவும் செயல் மேன்மை உடையது. செயலின்மை கொண்டாயென்றால் உடலைப் பேணவே இயலாதவனாவாய். வேள்வியென ஆற்றப்படும் செயல்கள் தவிர்த்த பிறவற்றால் இவ்வுலகம் செயற்சுழலில் சிக்கியிருக்கிறது. ஆகவே குந்தியின் மகனே, அவ்வாறான செயலை பற்றில்லாது செய்க!” . “விதிக்கப்பட்ட தொழில்” என்பதற்கும் “உனக்கான செயல்” என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. அதுபோலவே, “வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர” என்பதற்கும் “வேள்வியென ஆற்றப்படும் செயல்கள் தவிர்த்த“  என்பதற்கும் பெரும் வித்யாசம் உள்ளது. முந்தைய சொற்கள் வேள்வியை மட்டுமே குறிக்கும்போது, “வேள்வியென ஆற்றப்படும் செயல்கள்” என்பது விவசாயம், ஆய்வு, கலை, தொழில்முனைவு என ஒருவர் முழுமூச்சாக ஈடுபடும் அனைத்து செயல்களையும் குறிக்கிறது. வேள்விக்கு எதிராக எழுந்த கீதையின் முனைகள் ஆயிரம் வருடங்களாக மழுங்கடிக்கப்பட்டு மீண்டும் வேள்வியிலே கொண்டு கட்டப்பட்ட முயற்சிக்கு எதிராக கீதையை “சரியான ஒளியில்" காட்டும் முயற்சி வெண்முரசு.


மொழி, புதிய சொற்கள், உவமைகள். ஜெ. பல நடைகளில் எழுதக்கூடியவர். தமிழ் நாவல்களை தொடர்ந்து வாசித்தவர்கள் கொற்றவை நடை தமிழ் புனைவில் ஒரு பெரும்பாய்ச்சல் என்பதை உணர்ந்திருப்பார்கள். வெண்முரசு அந்த நடையின் அடுத்தக்கட்டம். நீலம் அதன் உச்சம்.


எண்ணற்ற கதைமாந்தர்கள்: திரௌபதியின் பாத்திரப்படைப்பு. வெண்முரசை தவிர எல்லா மகாபாரத மறு ஆக்கங்களிலும் குந்தி திரௌபதியைவிட பெரிய ஆளுமை. வெண்முரசில் திரௌபதி குந்தியைவிட பெரிய, கிருஷ்ணனுக்கு இணையான ஆளுமை. மேலும் மற்ற படைப்புகளில் கர்ணன் அர்ஜுனனைவிட பெரிய ஆளுமை. தர்மனுக்கு பெரிய இடம் இல்லை. வெண்முரசில் தர்மன், அர்ஜுனன் உள்ளிட்ட மைய பாத்திரங்கள் மட்டும் அல்ல, மூலத்தில் ஒரு வரியில் வரும் கதைமாந்தர்கள், புதிய கதை மாந்தர்கள் என நூற்றுக்கணக்கான ஆளுமைகள் வருகிறார்கள்.


[5] மகாபாரத மைய நிகழ்வுகள் - மறுஆக்கங்கள் ஒரு ஒப்பீடு: 


வெண்முரசின் பல அடுக்குகளை விட்டுவிட்டு மூல கதையில் உள்ள மையமான நிகழ்வுகள் – பாண்டவர் பிறப்பு, திரௌபதி சுயம்வரம், சூதுக்களம் –  எப்படி எல்லா நவீன மகாபாரத நாவல்களிலும் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளன என்று ஒப்பிட்டு பார்க்கலாம். 


பாண்டவர் பிறப்பு:


திருதராஷ்டிரனின் நூறு பிள்ளைகளும் “கௌரவர்கள்”. கௌரவர் என்ற சொல்லே குரு வம்சத்தவர் என்பதை குறிக்கிறது. பாண்டுவின் பிள்ளைகளை கௌரவர் என்று அழைக்காமல் “பாண்டவர்கள்” என்று அழைக்கிறார்கள். பாண்டவர்களுக்கு குரு நாட்டில் உரிமை உண்டா என்பது மகாபாரதத்தில் முன்வைக்கப்படும் ஒரு மைய கேள்வி. கர்ணன் சூரியனுக்கும், தர்மன் யமனுக்கும், பீமன் வாயுவிற்கும், அர்ஜுனன் இந்திரனுக்கும், நகுல, சகாதேவன் அஸ்வினி தேவர்களுக்கும் பிறந்தவர்கள் என நாம் அறிந்ததே. 


திருதராஷ்டிரனும், பாண்டுவும் வியாசர் மூலம் நியோகத்தில் பிறந்தவர்கள். விசித்திரவீர்யனின் தாயான சத்யவதிக்கு சாந்தனுவுடன் திருமணம் ஆவதற்கு முன்பே வியாசர் மைந்தனாக உள்ளார். நியோகம் தொன்மையாக ஏற்கப்பட்ட முறை. திருதாவும், பாண்டுவும் எப்படி குரு வம்சமோ, பாண்டவர்களும் அப்படித்தான் குரு வம்சம். அவர்களுக்கு குரு நாட்டில் உரிமை உண்டு என மூல மகாபாரதமே சொல்கிறது.


குந்தி மைந்தர்களின் உயிரியல் ரீதியான தந்தை இன்னார் என்று நவீன எழுத்தாளர்கள் சொல்லலாமா என்றால் அது அவர்கள் உரிமை. ஜனநாயகத்தின் அடிப்படையான தனிநபர் உரிமையும், கருத்து சுதந்திரமும் அது. இந்து மதத்தில் கேள்விகளை தாண்டிய எந்த புனித நூலோ, ஞானியோ, தத்துவமோ இல்லை. கேள்வி கேட்பவருடைய தகுதி என்ன என்பது வேறு விவாதம்.  அதே நேரத்தில் இன்னார் என்று சொல்வதற்கு மூலத்தில் ஏதேனும் குறிப்புகள் உள்ளதா? இன்னார் என்று சொல்வதால் கட்டமைக்கப்படும் புனைவுவெளி என்ன? அந்த ஆசிரியரின் தரிசனம் (பார்வை அல்லது நோக்கம்) என்ன ? போன்ற கேள்விகளை வாசகர்களும், விமர்சகர்களும் ஆராயந்து படைப்புகளை ஏற்கவோ, நிராகரிக்கவோ செய்யலாம். 


என் வாசிப்பில், நவீன மகாபாரத நாவல்களில், குந்தி, மாத்ரி மைந்தர்களின் உயிரியல் தந்தைகள்:


இனி ஞான் உறங்கட்டே & கிருஷ்ணா கிருஷ்ணா: மூல மகாபாரதத்தில் மாற்றம் இல்லை.


யுகாந்தா: கர்ணன் - துர்வாசர்; தருமன் - விதுரர்;  


ரண்டாமூழம்: கர்ணன் - குந்திபோஜனின் தேரோட்டி; தருமன் - விதுரர்; பீமன் - பெயரற்ற ஒரு காட்டாளன்; 


உபபாண்டவம்: தர்மன் - விதுரர் (ஊகம்)


கொம்மை: தர்மன் - விதுரர்; பீமன் - திருதராஷ்டிரர்; அர்ஜுனன் - கிருபர்; நகுல சகாதேவர்கள் - குருகுல புரோகிதர் தௌமியர். கர்ணன் - சொல்வதில்லை. (பீஷ்மரோ என்று நினைக்கிறேன்!)


பர்வா: கர்ணன் - துர்வாசர்; இமயமலையில் தேவர்கள் எனும் ஆரிய தொல் பழங்குடிகள் வாழ்கிறார்கள். தர்மர் - பழங்குடிகளின் தலைமை புரோகிதர் யமன்; பீமன் - பழங்குடிகளின் சேனாதிபதி; அர்ஜுனன் -  பழங்குடிகளின் அரசன் இந்திரன்; நகுல-சகாதேவர்கள் - பழங்குடிகளின் மருத்துவர்கள்.  


வெண்முரசு: கர்ணன் - சல்லியர்; தர்மன் - துர்வாசர்; பீமன் - பால்ஹீக நாட்டை சேர்ந்த பலாஹாஸ்வ முனிவர்; அர்ஜுனன் - வில்வித்தையில் தேர்ந்த சரத்வான் முனிவர்; நகுல-சகாதேவர்கள் - சரத்வான் குடிலில் உள்ள மருத்துவர்கள்.


மறுஆக்கங்களில் மூலத்தில் உள்ளதில் மாற்றம் இல்லாத படைப்புகள் கிருஷ்ணா கிருஷ்ணா & இனி ஞான் உறங்கட்டே. இனி நான் உறங்கட்டே நாவலுக்கு கர்ணணின் இருத்தியல் துயரம் மட்டுமே இலக்கு. மூலத்திலே கர்ணன் மாபெரும் இருத்தியல் படிமம்தான் என்பதால், வேறு எந்த மாற்றத்தையும் அது முயலவில்லை. கிருஷ்ணா கிருஷ்ணா “கட்டுடைப்புகளுக்கு” மாற்றாக கிருஷ்ணன் என்ற மாபெரும் மர்மத்தை மையப்படுத்திய நாவல். அதனால் மூலத்தில் அதுவும் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.


தர்மனின் தந்தை விதுரர் என்று யுகாந்தா வைக்கும் கோணத்தை ஏற்ற படைப்புகள் “உப பாண்டவம்”, “ரண்டாமூழம்” மற்றும் “கொம்மை”. உபபாண்டவத்தில் சகுனிக்கு மேலதிக வெளிச்சம் தந்து, மூலத்தில் உள்ள உன்னதமாக்கல்கள் தலைகீழாகப்பட்டுள்ளன. வெவ்வேறு சமூக குழுக்களுடைய மோதல்கள் கூட பங்காளி சண்டையாக சுருக்கப்பட்டுள்ளது. உபபாண்டவத்தில் கிருஷ்ணனை கொல்லும் வேடன் ஜரா கிருஷ்ணனின் பங்காளி. 


மேலும், தர்மரின் தந்தை விதுரர் எனும் கோணத்தை ஏற்கும் போது அதைத்தாண்டிய “பெரிய கேள்விகளை” நோக்கி அந்த படைப்புகள் விரிவதில்லை. உதா: நியோகம் என்பது என்ன? நியோகத்திற்கு யார் ஒப்புதல் வேண்டும்? நியோகம் என்ற கருதுகோள் எப்படி உருவாகி இருக்கும்? பழங்குடிகளில் “பல்கி பெருகவேண்டும்”, “குலம் தழைக்கவேண்டும்” என்ற நோக்கத்திலிருது நியோகம் என்ற கருதுகோள் உருவாகி இருக்கலாம். பழங்குடி வாழ்வு முறையிலிருந்து தந்தை வழி சமூகமான நில பிரபுத்துவ காலகட்டத்திற்கு மாறும்போது நியோகத்தின் பொருள் எப்படி மாறுகின்றது ? காலப்போக்கில் ஸ்மிருதிகள் (அல்லது நவீன பார்வையில் சட்டம்) எப்படி மாறுகின்றன?  மாறாத அறம் என்று ஒன்று உண்டா? 


பர்வாவும், வெண்முரசும் நியோகம் என்ற கருதுகோளை மையப்படுத்துகின்றன. அதற்கான உலகங்களை அவை உருவாக்குகின்றன. மேலே எழுப்பிய கேள்விகளை விரிவாக புனைவில் கேட்டு கொள்கின்றன. பைரப்பா வம்ச விருக்ஷா என்ற நவீன நாவலில் எழுப்பிய இதே கேள்வியை புராணத்தில் பொருத்தி ஆராய்கிறார். பர்வாவின் மொத்த நாவலுமே இந்த ஒரு கேள்வியை வெவ்வேறு குலங்கள் கேட்பதிலும், அதன்மூலம் திருமணம், கற்பு என்ற கருதுகோள்கள் உருவான விதத்தையும் ஆராய்கிறது. பர்வாவில் கீதையே பெண்களின் கற்பு என்ற பேசுபொருளை குறித்துதான். பர்வாவில் “கற்பு”, “தர்மம்" குறித்த கேள்வி எல்லோரையும் வாட்டுகிறது. நாவல் முழுதுமே எல்லோருக்கும் வெட்கையும், புழுக்கமுமாக இருக்கிறது. பர்வா இந்த ஒரே ஒரு பெரிய கேள்வியில் மையம் கொள்வதால், மற்ற பெரிய தத்துவ கேள்விகளை பொருட்படுத்துவது இல்லை. வெண்முரசு அந்த கேள்விகளையும் சேர்த்து கேட்பதால் அது மகாபாரதத்தின் இணை-புராணமாக விரிகிறது. 


மேலும் பர்வாவில் தர்மன், பீமன், அர்ஜுனன் ஒரு ஆரிய தொல் பழங்குடியில் பிறக்கும்போது, வெண்முரசில் வெவ்வேறு குடிகளில் இருந்து வரும் ரிஷிகளில் நியோகத்தின் மூலம் பிறக்கிறார்கள். பர்வாவில் காந்தார தேசம், மத்திர தேசம் இருக்கும் பிரம்மவர்த்தம் ஏழை நாடுகள். யாதவர்கள் பணக்காரர்கள். பாண்டுவிற்கு சீதனம் தந்து குந்தியை மணம் முடிக்கிறார்கள். திருதா காந்தாரிக்கு சீதனம் தருகிறார். வெண்முரசு பர்வா உலகில் இருந்து வேறுபட்டது. பாலை தேசங்கள் வணிகத்தால் செல்வம் சேர்த்துள்ளன. அவை சத்ரியர் என்ற குல அடையாளத்திற்காக குருதேசத்துடன் பெரிய செல்வம் தந்து மண உறவு ஏற்படுத்தி கொள்கின்றன. மேய்ச்சல் நில யாதவர்கள் அரை பழங்குடிகள். பர்வாவில் “நமக்கு முன் திருதராஷ்டிரன் தந்தையானால், நமக்கு எதிர்காலமே இல்லை” என பாண்டு குந்தியிடம் சொல்லி, குந்தியை நியோகத்திற்கு ஏற்க செய்கிறான். கர்ணனின் இருப்பை குந்திபோஜர் மறைக்கிறார். 

 

கர்ணனுடைய தந்தையாக சில படைப்புகள் துர்வாசர் என்கின்றன. பர்வாவில் துர்வாசரிடம் “குழந்தைகள் எப்படி பிறக்கின்றன” என்று கேள்வி கேட்கும் சிறுமி குந்திக்கு துர்வாசர் சொல்லித்தருவதால் கர்ணன் பிறக்கிறான். இது ஒரு வகையில் குந்திக்கு “அபலை” சாயம் பூசி, குந்தியின் ஆளுமையை சிறிது குறைத்து காட்டுகிறது. வெண்முரசு கர்ணனின் தந்தை சல்லியர் என்கிறது. இதுவரை எந்த படைப்பிலும் இல்லாத கோணம் இது. பீஷ்ம பருவம், துரோண பர்வம், சல்லிய பர்வம் என்பவை மகாபாரத பர்வங்களின் பெயர்கள். பீஷ்மர் மற்றும் துரோணர் அளவிற்கு சல்லியர் பெரிய ஆளுமை இல்லை. ஆனால் சல்லியரின் பெயரில் ஒரு பர்வம் உள்ளது. அதைவிட மூலபாரதத்தில் சல்லியர் கர்ணனுக்கு இறுதியில் தேரோட்டியாக வரும்போது, கர்ணனின் பிறப்பை இழிவுசெய்து கொண்டே வருகிறார். இப்படி யோசித்தால் சல்லியர் கர்ணனுக்கு தந்தையாக இருக்கலாம். வெண்முரசு கர்ணன்-சல்லியர் கோணத்தை பல இடங்களில் அபாரமாக பயன்படுத்தியுள்ளது. 


மற்ற படைப்புகளில் கர்ணன் குந்தி மைந்தன் என்பது கிருஷ்ணன், பீஷ்மர் உள்ளிட்ட ஒரு சிலருக்கு தெரிகிறது. ரகசியம் காக்கப்பட்டு இறுதி போரின் போதே மற்றவர்களுக்கு தெரிகிறது. வெண்முரசில் கர்ணன் குந்தி மைந்தன் என்பது ஆரம்பத்தில் இருந்தே எல்லோருக்கும் தெரியும். குந்தி அதிகாரபூர்வமாக சொல்லவில்லை என்பதால் கர்ணணுக்கு அங்கீகாரம் இல்லை. பொதுவில் யாரும் கேட்பதும் இல்லை. வெண்முரசின் உச்ச நாடகீய தருணங்களில்  ஒன்று குந்தி-கர்ணன் சந்திக்கும் இடங்கள். 


நியோகம் என்ற கருதுகோளை முன்வைத்தாலும் குந்தி-விதுரர் உறவின் பரிணாமத்தையும் விரிவாக வெண்முரசு சொல்கிறது. குந்தி-பாண்டு, குந்தி-துர்வாசர் உறவும் மாற்றம் அடைகின்றன. குந்தி-கம்சன், குந்தி-சல்லியன் என புதிய கோணங்களையும் ஆராய்கிறது.  பேரரசியாக நாடாள வேண்டும் என்ற விழைவால் குந்தி கர்ணணை கைவிடுகிறாள். அந்த விழைவே சல்லியர், விதுரர், கம்சன் உள்ளிட்டோரையும் வெவ்வேறு தருணங்களில் கைவிட செய்கிறது. குந்தி அவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறாள். ஆனால் ஏற்பதில்லை. தான் விரும்பிய மொத்த பாரதவர்ஷத்த்தையும் தன் மைந்தர்கள் வென்றபின், மாபெரும் உலகியல் வெற்றிக்கு பின், குந்தி பெரும் வெறுமையை அடைகிறாள். கர்ணனுடைய நீர்கடனின் போதே கர்ணனை அதிகாரபூர்மாக மைந்தனாக அறிவிக்கிறாள். தன் உண்மையான இணை என எப்போதும் அவள் ஆழ்மனம் உணர்ந்த விதுரருடன் அவள் காட்டிற்கு செல்கிறாள். காந்தாரி-திருதராஷ்டிரரை தன் மூத்தவர்கள் என உண்மையில் ஏற்கிறாள். சத்யவதி-அம்பிகை-அம்பாலிகை வனவாசத்தில் தீயில் எரிந்தது போல திருதாராஷ்டிரர்-காந்தாரி-குந்தி எரியில் மறைகிறார்கள். காலம் சுழல்கிறது. 


திரௌபதி சுயம்வரம்:


வாரணவதத்திற்கு பிறகு மறைவு வாழ்க்கை வாழும் பாண்டவர்கள், பிராமணர்களாக வேடம் பூண்டு திரௌபதியின் சுயம்வரத்தில் பங்கு கொள்கிறார்கள். அர்ஜுனன் வில் போட்டியில் வெல்கிறான். கர்ணனை திரௌபதி அவன் பிறப்பை காட்டி சுயம்வரத்தில் பங்கேற்க கூடாது என்றாள் என்பது பொதுவான புரிதல். இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து மகாபாரத மூல சுவடிகளை சேர்த்து ஆராய்ந்த பூனே பண்டார்க்கர் நிறுவனத்தின் “ஆய்வாளர் பதிப்பில்” திரௌபதி கர்ணனை பங்கேற்க கூடாது என்று சொன்னது பிற்சேர்க்கை என்கிறது. கிருஷ்ணர் சுயம்வரத்தில் பங்கேற்றாலும், போட்டியில் பங்குகொள்ள வில்லை. குந்தி பிச்சையை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பதை ஏற்று ஐவரும் திரௌபதியை மனம் செய்துகொள்கிறார்கள்.


சில கேள்விகள் எழுகின்றன:


கர்ணன் - திரௌபதி கோணம் குறித்து நவீன நாவல்கள் என்ன சொல்கின்றன?


சுயம்வரத்திற்கு வந்த கிருஷ்ணன் ஏன் போட்டியில் பங்குகொள்ளவில்லை?


பிச்சையை பகிர்ந்து கொள்ளுங்கள் என குந்தி சொன்னவுடன் திரௌபதி, பாண்டவர்கள், பாஞ்சால அரசன் ஏற்றுக்கொண்டார்களா? 


இந்த கேள்விகளுக்கு நவீன மகாபாரத புனைவுகள் என்ன சொல்கின்றன?திரௌபதி என்ற படிமத்தை குறித்து அவை அளிக்கும் சித்திரம் என்ன?


வெண்முரசைத் தவிர அனைத்து நவீன நாவல்களிலும் திரௌபதியைவிட குந்தி பெரிய ஆளுமை. உப பாண்டவம் சுயம்வரம் குறித்து பெரிதாக ஒன்றும் சொல்வதில்லை. தர்மன் வில்லின் நான் ஏற்றிட வேண்டும் என எழும்போது, அர்ஜுனன் அவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறான். கிருஷ்ணா கிருஷ்ணாவில் திரௌபதி கிருஷ்ணரை விரும்புகிறாள். அர்ஜுனனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணர் சொன்னவுடன் திரௌபதி ஏற்றுக்கொள்கிறாள். கர்ணன் போட்டியில் பங்கேற்க தடையில்லை என்கிறார் கிருஷ்ணன். கிருஷ்ணா கிருஷ்ணாவில் கிருஷ்ணர் சொல்வதால், பலரும் கேட்டுக்கொள்வார்கள். சொன்னது கிருஷ்ணர் என்ற பக்தி விளக்கம் மட்டுமே போதும். வேறு லாஜிக் எல்லாம் கேட்க கூடாது. கர்ணனுக்கு அர்ஜுனன் குறித்த பயத்தால் தலைவலி ஏற்பட்டு, வில்லை தொடாமல் திரும்பிவிடுகிறான். இரண்டாம் இடம் நாவலில், நம்மால் தான் சுயம்வரத்தில் இருந்து எல்லோரும் பத்திரமாக வந்து சேர்ந்தார்கள், ஆனால் அதை பெரிதாக யாரும் பேசவில்லையே என்ற கசப்புடன் இருக்கிறான் பீமன். மேலே குறிப்பிடப்படும் கேள்விகளுக்கு மேலோட்டமான விளக்கங்கள் தவிர இந்த நாவல்களில் ஒன்றும் இல்லை. 


கர்ணன் சுயம்வரத்தில் பங்குகொள்வதை திரௌபதி தடுத்தாள் என பர்வா, கொம்மை உள்ளிட்ட நாவல்கள் சொல்கின்றன.  “கர்ணன் பாஞ்சாலி மீது ஆழமான காதல் கொண்டு கற்பனையில் திளைத்திருந்தான். அவளும் அவனை நேசித்தாள். அவனது சாதியை அறிந்தபோது மனம் மாறிவிட்டாள். பாஞ்சாலி  நறுக்கென்று நாலு வார்த்தை கூறி அவனை புறக்கணித்தாள். கர்ணன் நெஞ்சில் ஈட்டி பாய்ந்த வலி. அவமானத்துடன் திரும்பினான்.” என்கிறது கொம்மை. 


பர்வா நாவலில் திரௌபதியை வென்றது நான், எனக்கு திரௌபதியை திருமணம் செய்து வை என குந்தியை நெருக்குகிறான் அர்ஜுனன். விற்போட்டியில் நீ ஜெயித்திருக்கலாம், ஆனால் கௌரவர்களிடம் இருந்து காப்பாற்றியது நான் என்கிறான் பீமன். அர்ஜுனனும் பீமனும் அடித்துக்கொள்ள தயாராகிறார்கள்.பர்வாவில் என் ஐந்து பிள்ளைகளையும் மொத்தமாக நீ திருமணம் செய்துகொள். ஐவருமே வீர புருஷர்கள். உனக்கு நிறைய சுகம் கிடைக்கும். உன்னைப்போல தாம்பத்ய சுகம் அனுபவிக்கப்போகிறவள் யாருமே இல்லை என திரௌபதியை குந்தி ஏற்கச்செய்கிறாள். தர்மனும் துருபதனும் திருமணம் குறித்து விவாதிக்கிறார்கள். ஆரியர் அல்லாத குடிகளின் வழக்கம் ஒரு பெண்ணிற்கு பல கணவர்கள் என துருபதன் தயங்க, தொல் ஆரிய குடியான தேவர்களிடமும் இந்த வழக்கம் உள்ளது  என துருபதனை தர்மன் ஏற்க செய்கிறான். கொம்மை நாவலில் வியாசன் துருபதனை ஏற்க செய்கிறான். "துருபதனே ஒரே பெண் பல கணவரோட குடும்பம் நடத்துன காலமும் உண்டு. பத்துப் பேருக்குக்கூடஒருத்தி மனைவியா இருந்துருக்கா. ஏன் இப்போதும் பழங்குடியினருட்ட அந்த வழக்கம் உண்டு. பாண்டவர் அஞ்சு பேரும் பாஞ்சாலிக்குக் கணவராகுறது சாத்தரப்படி சரிதான். நீ அனுமதிக்கணும்.’’


வெண்முரசில் குரு குலத்தின் முதல் பேரரசியான தேவயானியின் மணிமுடியை எப்படியாவது அடைய வேண்டும் என இளமை முதல் கனவு காண்கிறாள் காட்டில் மாடுமேய்க்கும் யாதவ சிறுமி குந்தி. எனக்கு இரண்டாம் தேவயானி என்ற பட்டம் வேண்டாம், நானே முதலாமவள் என்கிறாள் திரௌபதி. வெண்முரசிலும் திரௌபதி கர்ணணை ஏற்கவில்லை. அதற்கு காரணம் கர்ணன் கீழ் குலம் என்பதால் அல்ல. கர்ணண் தன்னை துரியனுக்கு கடமைப்பட்டவன் என்று அறிவித்துவிட்டதால், அவன் பாரதவர்ஷத்தை வென்று ஆளப்போவதில்லை என்பதால். விற்போட்டி ஏற்பாடு செய்வதே அர்ஜுனனையும் பாண்டவர்களையும் பொறி வைத்து பிடிப்பதற்காகத்தான் என்கிறாள் திரௌபதி. 


திரௌபதி அறிமுகம் ஆகும் சில அத்யாங்களிலே அவள் கர்ணனை பற்றி தன் தோழியிடம் வினவுகிறாள். அவனை சுயம்வரத்தில் முதலில் காணும்போது இருவரும் உள்ளம் நெகிழ்கிறார்கள். துரியோதனனுக்கும் ஆசை இருந்தாலும் அவன் கர்ணணுக்கு விட்டு குடுக்கிறான். சுயமவரத்தில் கர்ணனை யாரும் தடுப்பதில்லை. ஐந்து கிளிகள் கொண்ட கூண்டில் , நான்கை சரியாக குறிபார்த்து அடித்த பிறகு, முக்கியமான தருணத்தில் மந்திரம் மறந்து போகும் என பரசுராமர் இட்ட சாபமும், திரௌபதியின் முகம் மலராததை கண்டு அவளுக்கு விருப்பம் இல்லை என்பதை அறிந்ததும், ஐந்தாவது கிளிக்கான கர்ணனின் குறி தவறுகிறது. கிருஷ்ணன் போட்டியில் பங்கேற்று நான்கு கிளிகளை அடித்த பிறகு, ஐந்தாவது கிளியை அடிக்காமலே போட்டியில் இருந்து விலகி விடுகிறான். பீமன் அந்த வில்லின் ரகசியத்தை அர்ஜுனனுக்கு சொல்கிறான். கடைசியாக அர்ஜுனன் போட்டியில் வெல்கிறான்.


திரௌபதி பாரதத்தின் இணையற்ற பேரரசியாக ஆக வேண்டும் என்ற பெருவிருப்பு இருக்கிறது. நான் பிறந்ததே பேரரசி ஆவதற்குதான், அதற்கு என்ன விலை வேண்டும் ஆனாலும் தருவேன் என்கிறாள். துரியோதனனுக்கும் பேரரசன் ஆகும் வேட்கை இருக்கிறது. ஏன் துரியோததனை தேர்வு செய்யவில்லை என்றால், அவனால் கிருஷ்ணனை வெல்ல முடியாது என்கிறாள். கிருஷ்ணன் பாரதவர்ஷத்தை ஆள விரும்பவில்லை, அதனால் கிருஷ்ணனை தேர்வு செய்யவில்லை என்கிறாள். கிருஷ்ணனை நாராயணன் என்று சூதர்கள் பாடுவதைப்போல, அர்ஜுனனை இந்திரன் என சூதர்கள் பாடுகிறார்கள். இந்திரனால் நாராயணனை தேவை ஏற்பட்டால் வெல்ல முடியும் என்பது அவள் கணக்கு. தன்னால் பாரதவர்ஷத்தை வெல்ல முடியும், ஆனால் தொடர்ந்து ஆள முடியாது, யாதவ குலத்தை மற்ற சத்ரியர்கள் ஏற்க மாட்டார்கள், சத்ரியர்களின் ஏற்பு இல்லையென்றால் பெருங்குருதி பெருகும் என திரௌபதியிடம் சொல்கிறான் கிருஷ்ணன். இரண்டு தலைமுறைகள் சத்ரியர்களுடன் மண உறவுகளுக்கு பிறகு வேண்டுமானால் யாதவர்கள் பாரதவர்ஷத்தை ஆள்வது சாத்தியம் என்கிறான். 


பாண்டவர்கள் நாடற்றவர்கள். பழங்காலத்தில் பாஞ்சாலத்தில் ஒரு பெண் பல கணவர்களை திருமணம் செய்யும் முறை இருந்திருக்கிறது. பாண்டவர்களுக்கு பாஞ்சாலத்தின் உதவி தேவை. யாதவ குடியில் பின்னர் பாண்டவர்கள் திருமணம் செய்தால் திரௌபதியின் முக்கியத்துவம் குறையலாம், ஆகையால் ஒருவருக்கு பதில் ஐவரையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என திரௌபதி தரப்பிலிருந்து கோரிக்கை வருகிறது. குந்தி ரிஷிகளிடம் கலந்து அந்த முடிவை ஏற்கிறாள். அரசியல் கணக்குகள் தாண்டி, திரௌபதியை ஏற்பது குறித்த பாண்டவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், கர்ணன்-அர்ஜுனன் இருவரையும் ஒப்பிடும் திரௌபதி, சூதர் பாடல்கள் என திரௌபதி சுயம்வரம் சார்ந்த பகுதிகள் வெண்முரசின் மிகச்சிறந்த பகுதிகளில் ஒன்று. வெண்முரசு திரௌபதிக்கு அளிக்கும் வண்ணம் இதுவரை எந்த படைப்பிலும் இல்லாதது. இந்திய பண்பாட்டின் மையமான கருவறை தெய்வம் என திரௌபதியை முன் வைக்கிறது. 


சூதுக்களம்: 


கங்குலியின் மூல மகாபாரதம்: விதுரர் திருதராஷ்டிரரின் சார்பில் கௌரவர்களுடன் சூதாட பாண்டவர்களை அழைக்கிறார். முதல் முறை சூதாடி தோற்றபின், துச்சாதனன் அந்தப்புரத்தில் இருந்து திரௌபதியை இழுத்துவருகிறான். கர்ணன் துச்சாதனனை தூண்ட திரௌபதி துகில் உரியப்படுகிறாள். திரௌபதி கிருஷ்ணனை வேண்டிக்கொள்கிறாள். தர்மதேவன் ஆடை தந்து காக்கிறார். தன்னை வைத்து ஆட தர்மனுக்கு உரிமை உண்டா ? என்று திரௌபதி கேள்வி எழுப்புகிறாள். கௌரவர்களை கொல்வேன் என பீமனும், கௌரவர்களில் குருதி பூசி கூந்தல் முடிப்பேன் என திரௌபதியும் சபதம் செய்கிறார்கள். காந்தாரி அறிவுரை சொல்லி, திருதராஷ்டிரர் திரௌபதியையும், பாண்டவர்களையும் விடுவிக்கிறார். மீண்டும் இரண்டாம் முறை சூதாடி தோற்று பதிமூன்று ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செல்கிறார்கள். 


சூதாடுபவனுக்கு தர்மன் என்று பட்டமா?


ஆடை தந்த தர்மதேவன்/கிருஷ்ணன் அப்படியே கௌரவர்களை எரித்திருக்கலாமே?


சூதாடும்போது கிருஷ்ணன் சால்வனுடன் போரில் இருந்தேன், அதனால் அஸ்தினபுரத்திற்கு வரமுடியவில்லை என்று வன பர்வத்தில் சொல்கிறான். சால்வன் யார்? 


“இது அறமா?” என்ற திரௌபதியின் கேள்விக்கு பீஷ்மர், துரோணர் உள்ளிட்டோர் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?  எப்படி பெரும்பாலான சத்ரிய அரசர்கள் குருஷேத்திர போரில் துரியோதனன் பக்கம் இருக்கிறார்கள்?


கர்ணன் ஏன் தூண்டுகிறான்?


போன்ற நிறைய கேள்விகள் எழுகின்றன. வெவ்வேறு மகாபாரத படைப்புகள் சொல்லும் விடைகள் என்ன என்று பார்க்கலாம். (மூல பாரதத்தில் துகில் உரிதலே பிற்சேர்க்கை என்று ஒரு தரப்பு உண்டு).


இரண்டாம் இடம் நாவலில் பீமன், துச்சாதனனின் ஆடையில் கை வைத்ததை பார்த்து, பீமன் முன்னோக்கி தாவுகிறான். நியதிகளை மறந்து பீமன் தன்னை தாக்குவான் பயந்து துச்சாதனன் துகில் உரிதலை நிறுத்திக்கொள்கிறான். திரௌபதி துச்சாதனனின் கைப்பிடியை உதறிக்கொண்டு, திருதராஷ்டிரரின் காலில் விழுந்து ஏதோ சொல்கிறாள். திருதராஷ்டிரர் விடுதலை செய்கிறார். “சகாதேவா, தீக்கட்டையை எடுத்து வா! நானே என் கையை பொசுக்கிக்கொள்ள வேண்டும். என்னை நானே தண்டித்து கொள்ளத்தான் இப்போது என்னால் முடியும்” என்கிறான் பீமன். சால்வனுடன் போரில் இருந்தேன். “நான் மட்டும் இருந்திருந்தால் சூதாட்டத்தை நடத்தவே அனுமதித்திருக்க மாட்டேன்” என்கிறான் கிருஷ்ணன். மேலே உள்ள கேள்விகளுக்கு விடைகளே இல்லை.


கிருஷ்ணா கிருஷ்ணாவில், சால்வன் போர் சூதாட்டத்திற்கு முன்பே நடந்துவிடுகிறது. கிருஷ்ணர் சூதக்கள “script”ஐ பயன்படுத்தி துரியோதனனுக்கு “end card” போட நினைக்கிறார். எல்லாம் கிருஷ்ண லீலை. உபபாண்டவத்தில் பகடையின் வெற்றிக்கு பின்பு, சகுனி “துரியோதனா, வெற்றிக்கு பின் இவை உன் உரிமைகள். உரிமைகளை அனுபவித்துவிட வேண்டும்" என்கிறான். காந்தாரி தன் தமையனின் அந்த குரலை வெகுவாக ரசிக்கிறாள். முன்பே சொன்னதுபோல உன்னதமாக்கலின் தலைகீழாக்கம் உபபாண்டம். “திரௌபதியின் உடலில் ஒளி நீண்டு வஸ்திரமாக விரிகிறது. உலகம் தோன்றிய நாள் முதல் பெரிய வஸ்திரம் ஒளிதானே. அதுதானே பகல் என தினமும் பற்றி இழுக்க இழுக்க முடிவற்று வந்து கொண்டேயிருக்கிறது. கிருஷ்ணையில் உள் ஒளிந்து உயிர் சக்தி ஒளி வஸ்திரமென நீண்டுகொண்டிருந்தது”. நகுலன் திரௌபதியை பற்றி, “அவள் ஒரு விருட்சத்தைப் போல தன் உடலின் அடுக்குகளை களைந்து கொண்டே இருந்தாள். விருட்சம் நிர்வாணமற்றது. அவளுக்குள் கைப்பு சரசரசரத்து ஓடுகிறது. அவள் ஒரு விருட்ச ஸ்திரீ” என பைபிள் ஏவால், ஒளி என ஏதோதோ வருகிறது. யாராவது விளக்கலாம். எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணால் மீட்கப்பட்டான் என்பதை காட்டிலும் அடிமையாவதே சிறந்தது என தர்மன் நினைப்பதால் இரண்டாம் முறை சூதாடுகிறான் என்கிறாள் பாஞ்சாலி.


பர்வா நாவலில் கிருஷ்ணனின் பெயரை திரௌபதி சொன்னவுடன் துரியோதனன் பயந்து விட்டு விடுகிறான். “இப்போது நீ எங்கள் அடிமை, வா, வந்து எங்களோடு படு” என்று துரியோதனன் கூப்பிடும்போது, அப்படி கூப்பிடுவதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறது என்பதை போல எல்லோரும் ஊமையாக உட்கார்ந்திருந்தார்கள். தருமன் சூதாடியது தப்பு என்று யாருமே சொல்லவில்லை. தருமம் என்றால் என்ன என்று தெரிந்தவன் ஒருவன் தான். துவாரகை கிருஷ்ணன். கிருஷ்ணன் வந்துதமே, அவன் தருமனை பார்த்த பார்வையை நீங்கள் பார்த்திருக்கவேண்டுமே. ஆரிய தருமத்திற்கு எல்லாம் நான் தான் அதிபதி என்பதைபோல இருக்கும் தருமன் கூனி குறுகிபோனான்” என திரௌபதி சொல்கிறாள். சால்வன் பெரிய படைகளை கொண்டு தாக்கியதால், என்னால் வரமுடியவில்லை. வந்திருந்தால் சூதாட்டத்தை தடுத்திருப்பேன் என்கிறான் கிருஷ்ணன். சூதாடுவதற்கு ஒப்புக்கொண்ட உன் கைகளைத்தான் முதலில் வெட்டியிருப்பேன் என தர்மனை திட்டுகிறான். ஆரிய தருமம் என்றால் என்ன என்ற கேள்விக்கு மது, சூது, வேட்டை என்கிறாள் திரௌபதி. 


கொம்மை நாவலில் பாஞ்சாலி துச்சாததனை காலால் மிதித்து தன்னை தானே காப்பாற்றிக்கொள்கிறாள். காப்பாற்ற எல்லாம் யாரும் வரமாட்டார்கள். நீங்களே உங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற கோணம் இது. “பாஞ்சாலி வெடித்தாள். “கிட்ட வாடா வச்சுக்கிறென்.’’ சூறாவளிக் காற்றாக இருமுறை சுழன்று உடம்புமுழுக்க மூடிக்கொண்டு ஆடையின் விளிம்பைப் பலங்கொண்ட மட்டும் படக்கென்று சுண்டி இழுத்தாள். நிலைகுலைந்துபோன துச்சாதனன் தட்டுத்தடுமாறி அவள் காலடியில் மண்டியிட்டு விழுந்தான். அவனைஒரு காலால் எட்டித் தள்ளிவிட்டாள். “சீச்சீ பெழச்சுப்போடா மூடனே.’’ அவனுக்கு அபயமளித்து முழுஆடையில் உடம்பை மறைத்துக்கொண்டாள். சபையினரைக் காளியின் ருத்திரக் கோலத்தில் கம்பீரமாகப்பார்த்தாள். அவர்களின் கரவொலியில் அரங்கமே அதிர்ந்தது.”  மேலும் சுயம்வரத்தில் கர்ணனை அவமானப்படுத்தியதற்காக பிரதிபலான அவள் சூதுகளத்தில் அவனமானப்படுகிறாள் என்கிறான் கிருஷ்ணன். “பாஞ்சாலி ஒனக்கு நெனவிருக்கா. ஒஞ் சுயம்வரத்துல தேரோட்டி மகன்னு இழிவாப் பேசிக் கர்ணன நெராகரிச்ச இல்லையா.’’ “உண்மதான்.’’ “ஒன் வார்த்தைகளால அவன் மனசு எவ்வளவு புண்பட்ருக்கும்தெரியுமா. அவன் தன்னிகரில்லாற மாவீரன். அவனுக்கு நீ மாலையிட்ருந்தா சூதாட்டத்துல ஒன்னப்பணயம் வச்சிருக்க மாட்டான். அந்தணர் வேசத்துல வந்த அர்ச்சுனனத்தான நீ தேர்ந்தெடுத்த. முன்னாலயே அவன் அரசகுமாரன்னு தெரியாதில்லையா.’’ “தெரியாது.’’ “ஒனக்குப் பாதுகாப்புன்னுதான அஞ்சு ராச குமாரர்களக் கைப்புடிச்ச. இந்தா பாரு அவங்களால ஒன்னக் காப்பாத்த முடியாமத் திக்குத்தெரியாற காட்ல கொண்டுவந்து நிறுத்தீருக்காங்க. நீ அவமானத்துல தனியா நிக்கிற. ஒன்ன அறியாமயே உருவான இந்தப் பரிதாப நெலமைக்கு நீயும் பெறுப்பேற்கத்தான் வேணும் பாஞ்சாலி.’’ பாஞ்சாலி குற்றவுணர்வில் கதறினாள். “நான் மகா பாவி......’’ கிருஷ்ணன் அவளை அரவணைத்துக்கொண்டான். அவனாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை.’ 


எல்லா மகாபாரத மறுஆக்கங்களும் மேலே கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல ஓரளவு முயன்று இருக்கின்றன.  என் வாசிப்பில் இந்த கேள்விகளுக்கு மிக விரிவான சித்திரத்தை அளித்து வெண்முரசு அளிக்கும் விடைகளே சிறந்தவை. பெரும்பாலான மறுஆக்கங்களில் நான் அங்கிருந்தால் தடுத்திருப்பேன் என்கிறார் கிருஷ்ணர். வெண்முரசில் பாண்டவர்களை சூதாட்டத்திற்கு அழைக்கும் போதே, அஸ்தினபுரியும் அதன் நட்பு நாடுகளும் ஒரு பெரிய படையை திரட்டி, சால்வனை ஒரு முகமூடியாக கொண்டு துவாரகையை தாக்குகின்றன. பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்கும்போது, துவாரகையும் அழிந்திருக்க வேண்டும் என்பது சகுனி மற்றும் சகுனியின் அலோசகர் கனிகரின் கணக்கு. மொத்த மகாபாரதம் சொல்லும் நீதிக்கு எதிரான சொல்லாக இருப்பது கனிக நீதி. மூல பாரததித்தில் வாரணவதத்தில் பாண்டவர்களை எரித்தழக்க சொல்பவர் கனிகர். வெண்முரசில் கனிகர் பெரும் எதிர்பாத்திரம். சூழ்ச்சியில் கிருஷ்ணனுக்கு நிகராக சித்தரிக்கப்பட்டுள்ளார்.


சால்வனுடைய போரில் கிட்டத்தட்ட துவாரகை அழிகிறது. வெண்முரசில் முன்பு அம்பையை கைவிட்ட அதே சால்வனுக்கும் கிருஷ்ணனுக்குமான போர் புதிய கோணங்களை காட்டுகிறது. திரௌபதியிடம் அனைத்தும் இவ்வளவு விரைவாக நிகழும் என தான் எண்னவில்லை என்கிறார் கிருஷ்ணர்.  ஊழ் தன்னைவிட பெரியது. நான் மானுடன். தெய்வம் அல்ல என்கிறார். வெண்முரசு சொல்வளர்காடு நாவலில் வரும் கிருஷ்ண-திரௌபதி உரையாடலும், அடுத்து வரும் சில பகுதிகளும் மேலே எழுப்பிய கேள்விகளுக்கு விடைசொல்கிறது. 


வெண்முரசில் திரௌபதிக்கு பாரதவர்ஷத்தை முழுதாளும் பெரும்விழைவு இருக்கிறது. துரியோதனன், கர்ணனை அவள் சுயம்வரத்தில் ஏற்காமல் பாண்டவர்களை ஏற்பதே பாரதத்தின் பேரரசியாக ஆவதன் பொருட்டு. வெண்முரசில் இந்திரபிரஸ்தம் திரௌபதியின் கனவு. ராஜசுயம் அவள் நடத்துவது. மேலும் குருகுலத்தின் முதல் பேரரசியான தேவயானியின் மணிமுடி வேண்டாம், இரண்டாம் தேவயானி என அறியப்படுவதில் தனக்கு விருப்பம் இல்லை என துரியோதனன் தரும் மணிமுடியை நிராகரிப்பதின் மூலம் தன்னையும், தன் மூதாதையர்களையும் அவமதித்துவிட்டதாக துரியோதனன் எண்ணுகிறான். வெண்முரசு காட்டும் உலகில் சத்ரிய நாடுகளிடையே சூதாட்டம் என்பது ஒரு வகை போரேதான். உண்மையான போரின் அழிவை தவிர்த்து வெற்றி தோல்விகளை முடிவு செய்துகொள்வதற்காக சூதாட்டம் நிகழ்கிறது. அதனால் தர்மன் சூதாட்ட அழைப்பை ஏற்கிறான். திரௌபதியின் சுயத்தை உடைக்காமல் இந்திரபிரஸ்தத்தின் மீது உண்மையான வெற்றி அமையாது என்பதால் துரியோதனன் எல்லை மீறுகிறான். 


வெண்முரசில் திரௌபதி அறிமுகத்தில் பாஞ்சாலத்திற்கு பட்டத்து இளவரசாக யாரை நியமிக்கலாம் என துருபதன் சிறுமி திரௌபதியிடம் கேட்கிறான். பாஞ்சாலத்தின் ஐந்து குலங்களும் சேர்ந்து ஒப்புதல் அளித்து அரசனை தேர்வு செய்யும் தொல் மரபு இருக்கிறது. குல அவை அரசனை தேர்வு செய்து, நீக்கும் அதிகாரம் இருந்தால் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும். குல ஏற்பெல்லாம் தேவையில்லை, பிறப்பின் அடிப்படையில் மூத்த மைந்தனுக்கு பட்டம் சூட்டுங்கள் என்கிறாள் திரௌபதி. பாரத வர்ஷத்தை ஆள்வதற்கு கிருஷ்ணனுக்கு விருப்பம் இல்லை என்கிறாள் திரௌபதி. கிருஷ்ணன் தான் பாரதவர்ஷத்தை வெல்லலாம், ஆள முடியாது, தான் வெல்லும் நாடுகள் தன்னை ஏற்காது என்கிறான். “குலங்களின் ஏற்பு”, “வெல்லும் நாடுகளின் ஏற்பு" என்ற கருதுகோளை முதலில் திரௌபதி ஏற்பதில்லை. 


இது அறமா? என்ற திரௌபதியின் கேள்விக்கு வெண்முரசு காட்டும் அன்றைய சத்ரிய நாடுகளின் சட்டத்தின்படி, அந்த சத்ரிய சட்டம் அமைந்த வேத மரபின்படியும் அது சரியானதுதான். அதனால் பீஷ்மரும், துரோணரும் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த மானுட அறத்தின் படி அது தவறு. எப்படி அம்பைக்கு நிகழ்ந்த அநீதி சத்ரிய சட்டத்தின்படி சரி, ஆனால் மானுட அறத்தின்படி தவறோ அதேபோல. அரசியல் அமைப்பு, சட்டம் என்பதை போல வேத மரபு, சத்ரிய அறம் வருகிறது. சட்டங்கள் தவறென்றால் அந்த சட்டங்கள் நின்றிருக்கும் அரசியல் அமைப்பு காலாவதி ஆகிவிட்டது, புதிய யுகத்திற்கு ஒரு புதிய அரசியல் அமைப்பு தேவை என்பதை போல, வேத மரபு முடிந்து கிருஷ்ணனின் புதிய சொல் எழ வேண்டும் என்கிறாள் திரௌபதி. “கண்ணா, எழுக உன் சொல், எழுக புதிய வேதம்” என்கிறாள். கண்ணனின் பெயர் அங்குள்ள கௌரவர் குல பெண்களின் மனதை தொட, அவர்கள் ஆடை தந்து திரௌபதியை காக்கிறார்கள். சூதாடும் களம், ஊழின் முன் திகைக்கும் தெய்வங்கள் என வெண்முரசின் உச்சம் சூதுக்களம். 


திரௌபதியின் கூந்தல் அன்றைய “அமைப்பின்" குறியீடாக வருகிறது. திரௌபதி சுயம்வரத்தின் பகுதியாக பாஞ்சாலத்தின் ஐந்து குலங்களும் குருதி பலி தந்து, அந்த குருதி திரௌபதியின் ஐந்து புரி கூந்தலில் பூசி கட்டப்படுகிறது. சூதுகளத்தில் கூந்தல் அவிழ்ந்து, பெரும் போரின் முடிவில், கிருஷ்ணனின் சொல்லாக வேதாந்தம் எழுந்து புதிய அறம் / அமைப்பு உருவாகி, திரௌபதியின் கூந்தல் மீண்டும் முடியப்படுகிறது. வேதத்தரப்பில் இருந்து வேதமுடிபு தரப்பிற்கு நகர்கிறாள் திரௌபதி. திரௌபதியே பாரதவர்ஷத்தின் குறியீடாக வருவதால், குருதியால் நிறுவப்பட்ட சொல்லாக பாரதவர்ஷம் வேதமுடிபு தரப்பை ஏற்கிறது. 


கொற்றவை நாவலில் ஏற்கனவே கொந்தளித்து கொண்டிருக்கும் மதுரை பற்றி எரிய பாண்டியனின் அவை புகும் கண்ணகி ஒரு நிமித்தமோ, அதுபோல வெண்முரசில் வேத மரபு முடிந்து வேதாந்த மரபு எழுவதற்கான ஒரு நிமித்தம் சூதுக்களத்தில் திரௌபதி உரைத்த வஞ்சினம். வெண்முரசு தனி நபர், இனக்குழு, தத்துவ மோதல்கள் என பலபடிகளாக விரியும் பெரும் படைப்பு.


***


மேலும் பெண்களின் துயரத்தை பேசும் கொம்மை, கற்பு எனும் கருப்பொருளை விரிவாக பேசும் பர்வா உட்பட எல்லா மகாபாரத மறுஆக்கங்களும் ஒருவகையில் ஆண் பார்வையில் சொல்லப்படுகிறது. குந்தி வலுவான பாத்திரம். ஆனால் காந்தாரி, திரௌபதி உள்ளிட்ட மற்ற பெண் கதாப்பாத்திரங்கள் தங்களின் நிலைக்கு வேறு யாரையாவது காரணம் என சொல்கின்றன.  வெண்முரசின் உலகில் மட்டுமே மையமான பெண் கதாப்பாதிரங்கள் அனைத்தும் தங்களின் நிலைக்கு தாங்களே பொறுப்பாகின்றன. எல்லா நாவல்களிலும் காந்தாரி-திருதராஷ்டிரனின் கல்யாணம், காந்தாரி கண்ணை கட்டிக்கொண்டதை விவரிக்கும் இடங்களை கவனித்தால் இது தெரியும். 


சகுனிக்கு அதிக வெளிச்சம் தரும் உப பாண்டவத்தில் “ஒரு சகோதரனாக இல்லை, ஒரு தகப்பனாக உன்னை நான் அஸ்தினாபுரத்தின் மணமகளாக கொண்டுவந்தேன்” என காந்தாரியிடம் சொல்கிறான் சகுனி. சகுனி காந்தாரியின் மூத்த சகோதரன். வெண்முரசில் சகுனி பாரத வர்ஷத்தை வென்று காந்தாரியின் காலடியில் படையலாக வைக்க வேண்டும் என நினைக்கிறான். காந்தாரி மூத்த சகோதரி. சகுனியின் மனதில் காந்தாரி தெய்வம். மூல பாரதத்தைவிட காந்தாரியை ஒரு படி உயரமாகவே வைக்கும் வெண்முரசில் காந்தாரி கண்ணை கட்டிக்கொள்வது அவள் எடுக்கும் முடிவு. திரௌபதிக்கு பாரதவர்ஷத்தை வென்று பேரரசியாக ஆகும் விழைவு இருப்பதுபோல, காந்தாரிக்கு கண்ணை கட்டி கொண்டு  கற்புக்கரசி, பேரன்னை என தெய்வம் ஆகும் விழைவு இருக்கிறது. தன் பிள்ளைகள், சகோதரன், தந்தை என அனைவரையும் இழந்து திரௌபதி பேரரசி ஆனதுபோல, காந்தாரியும் தன் சுற்றத்தை இழந்து பேரன்னை ஆகிறாள். 


இன்றைய காலகட்டத்திற்கு பேரரசுகளிடமிருந்து தொலைவில் பாலைநிலத்தில் தன் அரசை அமைத்த கிருஷ்ணன்களும், செயலே யோகம் என கொள்ளும் அர்ஜுனன்களும், தன் செயலுக்கு தானே பொறுப்பேற்கும் திரௌபதிகளும் தான் தேவை.  நவீன மகாபாரத மறுஆக்கங்கள் இதழிதழாக விரியும் தாமரை என்றால், வெண்முரசு தாமரைத்தடாகம். கமல காடு. கற்பக கான். “செயல் புரிக" என்பதே எக்காலத்திற்குமான சொல்லாக இருக்க முடியும்.

***

No comments:

Powered by Blogger.