இணைப்பயணம்- சுதா & ஶ்ரீனிவாசன்
வெண்முரசை எழுதுவதற்கு முன்பே ஜெயமோகன் தொலைக்காட்சித் தொடராக மஹாபாரதத்தை எழுதத் தொடங்கி (மார்ச், 2012) கைவிட்டிருந்தார். அதை மெய்ப்பு பார்க்கச் சொல்லி அவர் கேட்டிருந்ததால் ‘முழுமைபெறாத க்ளாஸிக்’ ஒன்றை படிக்கும் நல்வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருந்தது. அது கைவிடப்பட்டதில் எங்களுக்கு பெரும் வருத்தம் உண்டு. இதனால் அவர் வெண்முரசு எழுதப்போகிறேன் என்று அறிவித்தபோது எங்களுக்குத் தோன்றிய முதல் எண்ணம் ‘இதையாவது இந்த மனுஷன் ஒழுங்கா எழுதி முடிக்கணும்’ என்பதுதான். பத்து வருடங்கள் பத்து புத்தகங்கள் என்று திட்டமிட்டதையெல்லாம் கண்டு நாங்கள் வியப்படையவில்லை. அதற்கு செலுத்த வேண்டிய உழைப்பு என்பதெல்லாம் ஜெ-க்கு ஒரு பொருட்டேயல்ல என்பதை எல்லோரும் அறிவோம்தானே.
முதற்கனலின் முதல் மூன்று அத்தியாயங்களை படித்துவிட்டு, இப்படி உருவாகும் ஒரு படைப்பை வாசிக்கும் இன்பத்தை நாங்கள் இழக்கும்படி ஆகிவிட்டதே என்று எங்கள் வருத்தத்தை ஜெயமோகனுக்கு தெரிவித்திருந்தோம். மெய்ப்பு நோக்கும் எண்ணத்தோடே படித்ததால், நம் கண்ணெதிரே நிகழ்ந்த காவியத்தில் இன்னும் திளைக்கவில்லை என்பதே எங்கள் ஏக்கம்.
ஆனால், யோசித்துப் பார்க்கையில் உண்மையில் வேறொரு பேரனுபவத்தை நாங்கள் பெற்றோம் என்று மகிழ்ச்சிதான் ஏற்படுகிறது. ஒரு ஓவியமோ, பாடலோ புனையப்படுகையில் அருகிருந்து பார்ப்பது கலைஞனல்லாத ஒருவருக்கு பேரனுபவமாகவே அமையக்கூடும். விஷ்ணுபுரம் நாவலை முதல் முறை வாசித்தபோது, இதையெல்லாம் எழுத முடியுமா, இலக்கியம் என்பதில் இவ்வளவு சாத்தியங்கள் உண்டா என்ற வியப்புணர்ச்சிதான் அதிகமாகத் தோன்றியது. அதன் தொடர்ச்சியும் நீட்சியுமான வெண்முரசு - எழுதப்படுகையிலேயே செவ்வியல் படைப்பென உணரச்செய்த காவியம் - நிகழ்வதை அணுகியறிவதென்பது நிச்சயம் ஒரு வாழ்வனுபவம்தான். கலைமனம் ஒன்று கலைமகள் அருள்கொண்டு இயங்குவதை தரிசித்த அனுபவம்தான் அது.
சுதா: 2013 இறுதியில் இந்தப் பொறுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டபோது உற்சாகப்பட்டோம். கூடவே எங்களால் சரியாக செய்யமுடியுமா என்ற ஒரு சிறிய பயமும் இருந்தது.
ஶ்ரீனிவாசன்: ஆனால் அதில் இறங்கிய பிறகு, செய்தே ஆகவேண்டிய அன்றாடக் கடமைகளில் முதலிடம் வெண்முரசுக்குதான் என்று ஆனது.
சுதா: ஷண்முகவேல் அன்றன்றைக்கான ஓவியத்தை வரைந்து எங்களுக்கு அனுப்ப நாங்கள் அதை பதிவில் சேர்க்கவேண்டும். இதில் நான் தலையிட்டதில்லை. ஶ்ரீனிவாசன் மட்டுமே செய்வார்.
ஶ்ரீனிவாசன்: ஜெ எழுதி schedule செய்த பதிவு வெளியாவதற்கு முன் அதை மெய்ப்பு பார்த்து படம் சேர்த்துவிடவேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதில் தீவிரமாக இருந்தது எந்த அளவிற்கென்றால் (இப்பொழுது யோசித்தால் சிரிப்பாக இருக்கிறது) சுதாவின் அப்பா இறந்தபோது, மருத்துவமனையிலிருந்த நான் முதலில் ஃபோன் செய்தது ஷண்முகவேலுக்கு. ‘படத்தை ராம்-க்கு அனுப்பிச்சிடுங்க’. ஆனாலும் திருப்தியில்லை. இரவு, வீட்டில் இறந்தவர் உடல் கீழ்தளத்தில் கிடக்க, மாடியில் அமர்ந்து மெய்ப்பு நோக்கி, படம் சேர்க்கப்பட்டுவிட்டதா என்று உறுதிப்படுத்திக்கொண்டேன்.
சுதா: இப்படி மாப்பிள்ளை கிடைக்க எங்கப்பா என்ன தவம் பண்ணியிருக்கணும்!
ஶ்ரீனிவாசன்: உண்மையில் அதன் பிரம்மாண்டம் அப்போது மண்டைக்குள் போகவே இல்லை. என்னைப் பொறுத்த வரை மஹாபாரதம் என்பது அரசவை ஒன்றில் பெண்ணொருத்தி அவமானத்திற்குள்ளான கதை. சிறுவயதில் பௌராணிகர்களின் பிரசங்கங்கள் கேட்டிருந்தாலும் அந்தக் கதை மனதில் பதியவே இல்லை. ஏதோ ஒரு புராணம் என்று மட்டுமே எண்ணம். ஆனால் இது ஒரு வகையில் வசதியாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பல வாசகர்கள் செய்ததைப் போல ‘பாரதத்தில் இப்படி வராதே, தப்பா எழுதுறாரே’ என்ற தடை ஒருபோதும் எனக்கு எழவில்லை!
சுதா: எனக்கு மஹாபாரதப் பரிச்சயம் உண்டென்றாலும், இது மஹாபாரதம் அல்ல, வெண்முரசு என்ற தெளிவு இருந்தது. எனது பணி இதற்குள் முரணில்லாமல் அமைந்துள்ளதா என்று நோக்குவது மட்டுமே என்று உணர்ந்திருந்தேன்.
ஶ்ரீனிவாசன்: நான் எழுத்துப்பிழை (typo), ஒற்றுப்பிழை, வாக்கிய அமைப்பு இவற்றைதான் சரிபார்த்தேன் என்று சொல்லலாம். Edit Mode-ல் படித்தாலும் அது பேசும் பொருள் தன்னுள் இழுத்துக்கொள்ளவே செய்தது. இந்த வகையான பிழைகளும் இப்படைப்பின் அளவை வைத்துப் பார்க்கையில் மிக மிகக் குறைவாகவே இருந்தன. ஜெ எழுதிய பின், அதில் அரிதாகத் தோன்றிய முரண்களை கவனித்து அவருடன் consult செய்து திருத்தியதெல்லாம் சுதாதான்.
சுதா: முரண் குறித்து எனக்கு சந்தேகம் தோன்றும்போது, முன்னர் வந்த அத்தியாயத்தையும் நான் சரிபார்த்துக்கொண்டிருக்கும் அத்தியாயத்தையும் திரையில் வைத்துக்கொண்டு அவரை தொலைபேசியில் அழைப்பேன். ‘ஜெ, அதுல அப்டி இருக்கு, இப்போ அடுத்து வரதுல இப்டி எழுதியிருக்கீங்க’ என்பேன். அந்த சமயத்தில், அடுத்து பல அத்தியாயங்கள் எழுதி முடித்திருப்பார். பயணத்திலோ, வேறு பணியிலோ இருப்பார், மடிகணினி கையில் இருக்காது. ஆனாலும், அடுத்த நொடி எப்படி திருத்த வேண்டும் அல்லது எழுதியிருப்பது எப்படி சரிதான் என்று சொல்லிவிடுவார். அந்தக் கதைக்குள் ஆண்டுக்கணக்கில் மூழ்கிக் கிடந்த ஒருவரால் மட்டுமே அப்படி செய்யமுடியும் என்று தோன்றும். மிக அரிதாகவே, அவருக்கே சந்தேகம் வந்தால், ‘சரி, நான் பார்க்கிறேன்’ என்று சொல்லி தானே திருத்தம் செய்தனுப்புவார்.
ஶ்ரீனிவாசன்: மஹாபாரதம் வாசித்தால் வீட்டில் சண்டை வரும் என்றொரு நம்பிக்கையுண்டு. அது மெய்யோ பொய்யோ, வெண்முரசை மெய்ப்பு நோக்குகையில் எங்களுக்குள் பலமுறை கடும் மோதல்கள் ஏற்பட்டன. ‘இது என்னப்பா sentence சரியாவே இல்ல, என்ன பாத்த நீ’ என்று சுதா கேட்க, ‘அதெல்லாம் கவிதை, உனக்கு புரியாது விடு’ என்று நான் சொல்ல, சிக்கல்தான். ஜெ-யிடம் இதை சொன்னால், ‘எதற்காக சண்டையெல்லாம் போடுகிறீர்கள், மாமிகள் என்றாவது எதையாவது தவறாக சொல்லியிருக்கிறார்களா’ என்று சமாதானம் வேறு செய்வார்.
சுதா: எங்களுக்குள் பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதென்றால், நான் நேரடியாக ஜெ.க்கு ஃபோன் செய்துவிடுவேன். நேரம் காலமெல்லாம் பார்த்தது கிடையாது. அவரும் சிக்கலை தீர்த்து வைப்பார்.
ஶ்ரீனிவாசன்: முதற்கனலில் ‘சுனந்தை ரதம் ஏறிச்சென்ற பாம்பு போல மெல்ல நெளிந்தபடி படுக்கையிலேயே கிடந்தாள்’ என்று எழுதியிருந்தார். நாங்கள் இருவரும் மண்டையை உடைத்துக்கொண்டோம். ரதத்தில் ஏன் பாம்பு ஏறவேண்டுமகென எங்களுக்கு பெரும் குழப்பம். வேறு வழியே இல்லாமல் அவரை கேட்டபோது ‘ரதம் ஊர்ந்துசென்ற பாம்பு போல’ என்று மாற்றச் சொன்னார். இதைக் கூட புரிந்துகொள்ளமுடியாத ‘ஜந்து’க்களிடம் மெய்ப்பு நோக்கும் பொறுப்பை கொடுத்திருக்கிறோமே என்று நொந்து போயிருப்பார், பாவம்!
சுதா: அபிமன்யு களம்படும் பகுதியில் பீமன் மறுநாள் துச்சாதனன் மகன் துருமசேனனை தான் கொன்றுவிடுவேன் என்றும் ஜயத்ரதனை அர்ஜுனன் பழிதீர்க்க வேண்டும் என்றும் கூறுவான். மறுநாள் போர் நிகழ்வுகள் பற்றிய பகுதியில் துருமசேனனை கொல்வது இடம் பெறவில்லை. இது விடுபட்டிருக்கிறதே என்று அவரை அழைத்து கூறினேன். அப்போது அவர் சென்னையில் நண்பர்கள் புடைசூழ அமர்ந்திருந்தார். இரண்டு மணிநேரம் கழித்து, ஶ்ரீனிவாசன் கண்ணீர் மல்க கணினி முன் அமர்ந்திருந்ததை பார்த்தேன். ‘என்னாச்சுப்பா’ என்று கேட்டதும் ‘எவன் செத்தா என்ன, சாகலைனா உனக்கென்ன? அந்தாளை எதுக்கு கூப்பிட்டு சொன்ன?’ என்று என்னை வசைபாட ஆரம்பித்துவிட்டார்.
சுதா - ஶ்ரீனிவாசன் (ஊட்டி காவிய முகாம் 2011) |
ஶ்ரீனிவாசன்: உணர்வுச்சம் கொண்ட, மிக முக்கியமான அந்தப் பகுதியை, அவ்வளவு குறைந்த நேரத்தில், நண்பர்களின் அரட்டைக்கு மத்தியில் ஒருவரால் எழுதமுடியும் என்றால் அவர் சாதாரண மனிதனே அல்ல, ஏதோ யட்சன்தான் என்று சொல்லிக்கொண்டோம்.
சுதா: பொதுவாக ஒரு நாவலை எழுதி முடித்து அடுத்த நாவலை உடனே தொடங்கிவிடுவார். மிஞ்சிப்போனால் 15 நாட்கள் அளவில்தான் இடைவெளி இருக்கும். ஆனால் இருபத்திமூன்றாவது நாவலான நீர்ச்சுடர் முடிந்த பிறகு அடுத்த நாவல் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடாமலே இருந்தார். பொறுத்துப் பொறுத்து பார்த்தோம். நாங்கள் எங்கள் பொறுப்பை நிறைவேற்றாதது போல் ஒரு எண்ணம். நாங்கள் ஒதிஷா சென்றிருந்த சமயம் அது. ஒரு கோவிலில் வரிசையாக இருந்த யானைச்சிற்பத் தொகுதியைப் பார்த்துவிட்டு ‘இந்தாளு அடுத்த நாவல் எழுதற மாதிரி தெரியல, பேசாம வெண்முரசு நிறைவுற்றதுனு ஒரு பதிவு நாமளே எழுதிப் போட்டுரலாமா’ என்று பேசிக்கொண்டோம். அன்று மாலை அவருக்கு ஃபோன் செய்து இதை சொல்லவும் செய்தோம். உடனே அவர், ‘தளத்தை பாக்கலியா, காலைலதான அறிவிப்பு போட்டேன், ‘களிற்றியானை நிரை’ அடுத்த நாவல்’ என்றார்!
ஶ்ரீனிவாசன்: ஜெ நிறைய பகுதிகள் எழுதி schedule செய்திருந்தாலும் நான் மறுநாள் வரவிருப்பதை மட்டுமே மெய்ப்பு நோக்குவது வழக்கம். முதலாவிண் நாவலின் பகுதிகளை மொத்தமாகவே schedule செய்திருந்தார்.. கொரோனோ பாதிப்பு தொடங்கியிருந்த காலம். ‘என்ன வேணா ஆகலாம், proof read பண்ணலனாலும் பரவாயில்ல, காவியத்த முழுசாவாவது படிச்சுறலாம்’ என்று சொல்லி ஒரே அமர்வில் படித்து முடித்தேன்.
இதுபோல் anecdotes பல சொல்லலாம்.
ஷண்முகவேல் பகுதிகளுக்குப் பொருத்தமான ஓவியங்களை அன்றாடம் அவ்வளவு நேரம் எடுத்து வரைந்து நள்ளிரவுக்குள் அனுப்பி வைப்பார். படம் குறித்து எங்களது கருத்துக்களையும் கேட்டு, தேவையென்றால் திருத்தம் செய்தும் கொடுப்பார். ஆக, ஒரு காவியகர்த்தா, ஒரு ஓவியன் என இரு கலைஞர்கள் செயல்படுவதை அணுகியறிந்திருக்கிறோம்.
நண்பர்கள் அருணாசலம் மகாராஜனும் காளி பிரசாதும், எங்கள் பார்வைக்குத் தப்பிய சில விடுபடல்களை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மிகச்சிலரே ஆனாலும் எழுத்தெண்ணிக் கற்ற இவர்களைப் போன்ற வாசக நண்பர்களுடன் கலந்துரையாடியதெல்லாம் இனிய பொழுதுகள்.
ஒட்டுமொத்தமாக, எங்கள் வாழ்நாளில் நாங்கள் மேற்கொண்ட, முழு ஈடுபாட்டுடன், மனமுவந்து செய்த ஒரு பணி என்றால் அது இதுதான் என்று மகிழ்வோடு சொல்லிக்கொள்வோம். ஜெயமோகன் எங்களை இணையாசிரியர்கள் என்று சொல்கிறார். இதை, அவருடைய பயணத்தில் உடனிருந்த எங்கள் மீது அவர்கொண்ட அன்பின் வெளிப்பாடெனவே கொள்கிறோம். வெண்முரசை எழுதிமுடித்துவிட்டால் என்ன ஆவீர்கள் என்று அவரிடம் நண்பர்கள் கேட்டால், ‘என்ன விடுங்க, மெய்ப்பு பார்க்கிற அந்த ரெண்டு ஜீவனும் என்னாகும்னு தெரியல’ என்று சொல்வாராம். காவியம் முடிவடைந்தபோது வெறுமை ஏற்பட்டதென்றெல்லாம் சொல்வதற்கில்லை. இனிய கனவாக எங்களுடன் என்றும் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. நாங்கள் செய்யவேண்டியது, வெறும் வாசகர்களாக அதை ஒரு முறையாவது படித்து அதில் திளைக்கவேண்டும்.
***
No comments: