நம் நீதியுணர்வின் எல்லைகள் - பாலாஜி பிருத்விராஜ்


ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ குறித்து


நவீன இலக்கியப் பரப்பில் “போரும் அமைதியும்” நாவலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. செவ்வியல் யதார்த்தவாதத்தின் உச்சம், வாழ்க்கையை அதன் பிரம்மாண்டத்துடனும் சிக்கலுடனும் புனைவாக்குதல், வரலாற்றைப் பற்றிய புனைவாசிரியரின் தனித்த பார்வை போன்ற பல பதக்கங்களை அணிந்திருந்தாலும் ஒரு முக்கியக் கூறு அதற்கடுத்த வந்த படைப்புகளின் போக்கை மாற்றியது. போரைக் குறித்த பார்வைதான் அது. அதற்கு முன் நம் படைப்புகளில் போர் என்பது அதிமானுடர் தங்களை வெளிப்படுத்தும் களமாகவோ அல்லது வீரநாயகர்கள் தங்களின் உயிரை தியாகம் செய்யும் இடமாகவோ இருந்தது. முன்னதற்கு இலியட் போன்ற இதிகாசங்கள் என்றால் பின்னதற்கு ஸ்பார்டகஸ் போன்ற நாட்டார் கதைகளை சொல்லலாம்.

 

ஆனால் முதன்முறையாக போர் என்பது என்பது வெறும் மானுட அழிவு மட்டுமே என்பதை போரும் அமைதியும் நாவல் காட்டியது. எளிய வீரர்களை முன்களத்திற்கு அனுப்பிவிட்டு ஜெனரல்கள் தொலைநோக்கியால் (டிஎஸ்.சொக்கலிங்கம் தன் மொழிபெயர்ப்பில் “தூரதிருஷ்டிக் கருவி” என்கிறார் :-) ) பார்த்து மதிப்படப்படும் நிகழ்வு என்பதை நாவலில் நாம் தொடர்ந்து காண்கிறோம். பல சமயம் பீரங்கிக் குண்டுகளால் ஏற்படும் புகைமூட்டத்தில் தங்கள் தரப்பு மக்களையே கொல்ல நேர்கிறது. அங்கு மானுட சாகசத்திற்கோ தியாகத்திற்கோ எந்தப் பொருளும் இல்லை. வரலாற்று நூல்களில் வீரநாயகர்களாக போற்றப்படும் நெப்போலியன் போன்ற வீரர்கள் எவ்வளவு சுய மைய சிந்தனை கொண்டவர்கள் என்பதைப் பார்க்கிறோம். அதே சமயம் தேசப்பற்று போன்ற விழுமியத்தை எப்படி நுட்பமாகப் பயன்படுத்தி அலெக்சாண்டர் போன்ற மன்னர்கள் மக்களை போர்க்களத்திற்கு அனுப்புகிறார்கள் என்பதும் சித்தரிக்கப்படுகிறது.

 

போரும் அமைதியும் நாவல் தொடங்கி வைத்த இந்தப் பார்வை அடுத்தடுத்து வந்த படைப்புகளில் பெரும் செல்வாக்கை செலுத்தியது. எங்கெங்கெல்லாம் மானுட அழிவு நிகழ்ந்ததோ அங்கெல்லாம் எழுத்தாளர்களின் கவனம் சென்றது. இரண்டு உலகப் போர்களைப் பற்றியும் இன்று ஏராளமான நூல்கள் கிடைக்கின்றன. அப்படைப்புகளில் எல்லாம் போர் குறித்த கசப்பும் மானுட அழிவு குறித்தான கரிசனப் பார்வையும் ஒரு பொதுப்போக்காக மாறியுள்ளதைக் கவனிக்கலாம். “All Quiet on the Western Front” “Catch 22” போன்ற புகழ்பெற்ற படைப்புகளில் போர் எனும் அபத்தத்தின் அதன் குரூரத்தின் மேலுள்ள கவனத்தைக் காணலாம். அதுபோல போரால் ஏற்படுத்தப்படும் மறைமுக அநீதிகளும் நாவல்களின் முக்கிய கருப்பொருள் ஆனது. காலனியாதிக்கத்தின் சுரண்டல்களும் அவை மக்களிடம் ஏற்படுத்திய அழிவுகளைப் பற்றிய படைப்புகள் தொடர்ந்து வந்தன. உடனடியாக நினைவிற்கு வருவது இந்திய ஆங்கில நாவலான “எரியும் பனிக்காடு.”

 

வெள்ளை யானை அப்படியான ஒரு மானுடப் பேரழிவை தனது களனாகக் கொண்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் அரசின் சுரண்டலால் இங்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு செயற்கைப் பஞ்சத்தை நீதியுணர்ச்சியுள்ள ஒரு வெள்ளை அதிகாரியான ஏய்டன் காண நேர்வதும் அதன் மூலம் அவன் வாழ்க்கை நகரும் திசையுமாக நாவலின் கதையோட்டம் நிகழ்கிறது. 

 

நாவலின் தொடக்கத்தில் ஐஸ் ஹவுஸில் வேலை செய்யும் இரண்டு தொழிலாளர்கள் கங்காணியால் துன்புறுத்தப்படும் காட்சியை யதேச்சையாக ஏய்டன் காண்கிறான். அதை விசாரிக்க ஐஸ் ஹவுஸ் நிறுவனத்திற்கு செல்கையில் அங்கு வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களும் மிகமோசமாக நடத்தப்படுவதை  உணர்ந்து அந்த நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயல்கிறான். மேலும் காணாமல் போன அந்த இரு தொழிலாளர்களைத் தேடி அவர்கள்  குடியிருப்புக்குச் செல்லும் போதுதான் பிரச்சனையின் வீரியம் புரிகிறது. அக்குடியிருப்பே வறுமையின் உச்சகட்ட பிடியில் இருக்கிறது. அதன்மூலம் இன்னும் பிரம்மாண்டமான யதார்த்தத்தை உணர்கிறான். பஞ்சத்தால் செங்கல்பட்டிலிருந்து சென்னை நோக்கி பெரும் மக்கள் திரள் வருவதை அறிந்து ஒரு பயணம் மேற்கொள்கிறான். அதில் பெரும்பான்மையினர் வழியிலேயே இறந்து அழுகும் உக்கிரமான காட்சி ஏய்டன் கண்கள் மூலமாக சித்தரிக்கப்படுகிறது.

 

நாவலை ஒற்றைப் பெரும் உணர்வுக்கொந்தளிப்பு நிலையில் தான் வாசிக்கிறோம். ஒவ்வொரு பக்கம் புரட்டும்போதும் நம் மனம் அலைக்கழிக்கப்படுகிறது. அதை எளிய இரக்க உணர்ச்சி எனக் கூறி விட முடியாது. நாம் சில அடிப்படைகளை நம்பி இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் ஒன்று நம் சக மனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை. ஆனால் இத்தகைய நிகழ்வு அந்த நம்பிக்கையை அசைத்துவிடுகிறது. பஞ்சத்தில் மக்கள் செத்து விழுகையில் ஏன் ஒரு கரம் கூட அவர்களை மீட்கவில்லை என்கிற கேள்வி தொடர்ந்து நம் மனதில் எழுகிறது. அறம் என நாம் கூறிக் கொண்டிருப்பதெல்லாம் நம்மை ஏமாற்றிக் கொள்ளும் செயல்தானா? அறம் கூற்றாக வரும் என நாம் படித்ததெல்லாம் வெறும் காவியக் கற்பனைகளா எனப் பலக் கேள்விகளை எதிர்கொண்டு தான் வாசிக்க வேண்டிருக்கிறது. ஏனென்றால் இந்தக் கோர நிகழ்வு ஒரு பாறையென நம் வரலாற்றில் நின்று கொண்டிருக்கிறது. அந்த எண்ணம் தரும் அலைக்கழிப்பு தான் இந்த நாவலின் பின்புல உணர்வாக உள்ளது.

 

இத்தகைய வரலாற்று நிகழ்வை புனைவாக்குவதின் முக்கியத்துவம் என்ன? ஒரு அநீதி நிகழ்ந்திருக்கிறது. அதில் நம் முன்னோர்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. புனைவின் வழியாக அதை மீண்டும் வாழ்ந்து பார்த்து அப்பழியை ஏற்றுக் கொள்கிறோம். மானசீகமாக பலமுறை மன்னிப்புக் கோருகிறோம். உணர்வுபூர்வமாக சுத்தகரிக்கப்பட்டு அதைக் கடக்க முடியுமா எனப் பார்க்கிறோம். ஆம் அப்படித் தான் தோன்றுகிறது. கடந்து செல்லுவதைத் தான் பலவழிகளில் இந்த நாவல் மூலம் முயன்று கொண்டே இருக்கிறோம். 

 

உணர்ச்சி ஒரு வழியென்றால் தர்க்கம் மற்றொரு வழி. எந்தெந்தத் தரப்புகள் எவ்வகையில் அச்சூழலுக்கு எதிர்வினையாற்றின என இந்த நாவல் மூலம் அறிந்து கொள்கிறோம். முதல் தரப்பு சக இந்தியர்கள். அவற்றில் பெரும்பான்மையானவர்களுக்கு இப்படியான நிகழ்வு நடந்திருப்பதே தெரிந்திருக்கவில்லை. தன் பிழைப்பு தன் உணவு என கடிவாளப் பார்வையுடனே வாழ்ந்திருக்கிறார்கள். “பஞ்சத்தால் இறக்காதவர்களுக்கு இங்கு பஞ்சத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. அரிசிவிலை கூடியிருப்பது மட்டும் தான் தெரியும். தன் தெருவுக்கு அப்பால் நீண்டு செல்லும் பிரக்ஞை இவர்களுக்கு இல்லை.” எனப் பாதிரியார் பிரண்ணன் கசப்புடன் கூறுகிறார்.

 

இந்தியர்களில் இன்னொரு சாரார் தீவிர சாதிக் காழ்ப்பில் இருப்பவர்கள். இப்பஞ்சத்தில் இறந்த பெரும்பாலானவர்கள் அடித்தட்டு மக்கள். அவர்கள் சக மனிதர்கள் எனக் கருதப்பட்டதேயில்லை. மூர்க்கமான சாதிப்பார்வை அவர்களை மிருகங்கள் என எண்ணச் செய்திருக்கிறது. “இந்தப் பஞ்சம் எங்களை வதைக்கட்டும். ரத்தம் கொட்டக் கொட்ட செதுக்கட்டும். உயிர் மிச்சமிருக்கும் இடத்திலிருந்து புதிய முளை வரட்டும்.” எனக் காத்தவராயன் எனும் பாத்திரம் ஆவேசமாகக் கூறுகிறான்.

 


இன்னொரு தரப்பு பிரிட்டிஷ் அரசு உயர்மட்ட அதிகாரிகள். இவர்களே இன்னும் மோசமானவர்கள் என ஏய்டன் எண்ணுகிறான். ஏனெனில் இவர்களின் பங்கு  நேரடியானது. இங்குள்ள விளைச்சல்களை எல்லாம் ஏற்றுமதி செய்து எளிய மக்களுக்கு எதுவும் கிடைக்காமல் செய்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களது சொந்த அரசியல் கணக்குகள் இருந்தன. பஞ்சச்சூழலை அதற்காகப் பயன்படுத்திக் கொண்டனர். அதன் உச்சியில் இருந்தவர் சென்னை மாகாண கவர்கர் பக்கிங்ஹாம் பிரபு. 

 

அடுத்தது வெள்ளை நடுத்தரப் பணியாளர்கள் தரப்பு. ஆம் இவர்களில் சிலர் உலுக்கப்படுகிறார்கள். அவர்களின் நீதியுணர்ச்சி இன்னமும் அழியவில்லை என்பதைப் பார்க்கிறோம். ஐஸ்ஹவுஸ் மேலாளரான பார்மர் ஒரு கட்டத்தில் உடைந்து அழுகிறார். தன் குடும்பத்தினர் தன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் எனக் கூறுகிறார். ஆனால் இந்த வகையான பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கெல்லாம் கண்டிப்பான ஒரு உத்தரவு தரப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்துவரும் ஜாதி அமைப்பைக் குலைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தனர். ஏனெனில் மெரும்பான்மையான இந்திய மக்கள் அக்குலைவை ஏற்றுக் கொள்ளமாட்டர்கள். அவர்கள் எல்லை மீறினால் என்னவாகும் என்பதை ஏற்கனவே சிப்பாய் கலகம் அவர்களுக்குக் காட்டியிருக்கிறது. ஆகவே பார்மர் போன்றவர்கள் மௌனமாக இருந்துவிடுகிறார்கள். இதனூடே மெக்கன்ஸி போன்ற தன்மையக்காரர்களும் உண்டு. எல்லாவற்றையும் தாண்டி தான் உயிரோடு உண்டு என்பதில் மட்டுமே மகிழ்ச்சி அடைபவர்கள்.

 

இவ்வகையில் அன்றைய சூழலின் ஒட்டுமொத்த சித்திரத்தை இந்த நாவல் அளிக்கிறது. ஆனால் அத்துடன் நின்று விடவில்லை. தன் படைப்பூக்கத்தை மேலும் நீட்டித்து செல்கிறது. இரு வகையான கேள்விகளை எழுப்பிக் கொள்வதன் மூலம் தன் தேடலை நிகழ்த்துகிறது. முதலாவது ஒரு மானுட அழிவு என்பது பெரிய சமன்குலைவு. அந்தக் குலைவு மூலம் வேறொரு சாத்தியத்தை அது திறக்கிறதா எனப் பார்ப்பது. பாரதப் போர் பற்றி அப்படி ஒரு கருத்தாடல் ஒன்று. அது யுகமுனைச் சந்திப்பு என அழைக்கப்படுகிறது. ஐராவதி கார்வே மகாபாரத காலகட்டத்தைப் பற்றிய தன் ஆய்வு நூலுக்கு “யுகத்தின் முடிவில்” என தலைப்பிட்டுள்ளார். ஒரு யுகம் முடிந்து வேறொன்று எழுகிறது. அது பாரதப் போர் மூலமாக நிகழ்கிறது.

 

அதை ஒரு நீர்சுழிப்பு என உருவகம் செய்து கொள்ளலாம். மேற்பரப்பு நீரை தன்னை நோக்கி இழுத்துச் சென்று உள்ளே அழுத்திப் புதைக்கிறது சுழி. அதன் மூலமே உள்ளே அமிழ்ந்திருக்கும் நீரோட்டம் மேலெழுந்து வருகிறது. அந்த பிரசவித்தலுக்காகவே அச்சுழிப்பு நிகழ்கிறது என்பது ஒருவகையான கண்ணோட்டம். காத்தவராயன் கதாப்பாத்திரம் அவ்வகையானப் பார்வை கொண்டவன். தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன். ஆனால் நூல் கற்றவன். அவன் அப்பஞ்சத்தை ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறான். அவனது மக்களுக்கு அது புதிய வாசலைத் திறக்கும் என நம்புகிறான். அதுவரை நிலத்தில் அடிமைகளாய் இருந்தவர்கள் இப்போது அதிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். நகர் நோக்கி வருகிறார்கள் எனக் கூறுகிறான். 

 

கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தாலே நமக்குத் தெரியும். தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரையும் கட்டுண்டு அழுத்தி வைத்திருந்தது  கிராமிய நில அடிமைமுறை. பஞ்சம் மூலம் அவர்கள் கொள்ளும் இடப்பெயர்வு அவர்களில் ஒரு பகுதியினருக்காவது விடுதலையை அடுத்த கட்ட நகர்வை அளிக்கும் என காத்தவராயன் நம்புகிறான். காத்தவராயன்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதை நமது சென்ற நூற்றாண்டு கால வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது.

 

அதே போல இந்த நாவலில் படைப்பூக்கம் செயல்படும் இன்னொரு தளம் இதில் நாம் கண்டுவரும் ஒளிமிக்க மானுடர்கள். மானுட இருளை தன் முதன்மை மொழிபாக கொண்டுள்ள படைப்பில் கூடவே மானுட மேன்மையையும் காண்கிறோம். ஒருவர் பிரண்ணன். கிறித்துவப் பாதிரியார். ஊக்கத்துடன் செயல்படுபவர். அங்கு நிலவும் கடுமையான சாதி ஒடுக்குமுறையிலும் தன்னால் இயன்ற வரையில் அடித்தள மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துபவர். அந்த நேர்மறை மனநிலையை தன்னுடைய நகைச்சுவை உணர்வு மூலம் தக்கவைத்துக் கொள்கிறார்.

 

இன்னொருவர் ஆண்ட்ரூ. யதேச்சையாக ஏய்டனுன் செங்கல்பட்டு நோக்கிப் பயணிக்கிறார். வழி நெடுக காணும் அப்பஞ்ச சித்தரிப்பில் தன்னுள் உறையும் ஒன்றை கண்டுகொள்கிறார். அவர்களுக்கு சேவை புரிவதே தன் ஆணை என உணர்ந்து வழியில் இறங்கிக் கொள்கிறார். அங்கிருந்து இன்னொரு மகத்தான பயணம் தொடங்கப் போவதை உணர்ந்து கொள்கிறோம்.

 

இன்னொரு கேள்வி வாசகனான நம்மை நோக்கித் திரும்புகிறது. கொஞ்சம் சங்கடமளிக்கும் கேள்வி. நிகழும் அநீதியைக் கண்டு கொதிக்கும் நாம் எவ்வளவு தூரம் அவ்வுணர்வைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமென்பது. நமது எல்லை என்ன என்பது ஏய்டனின் கதாப்பாத்திரம் மூலம் நிகழ்கிறது. ஏய்டன் நவீன மனிதன். ஜனநாயக உணர்வும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நீதித்துறை மேல் நம்பிக்கையும் கொண்டவன். பஞ்சத்தால் வாடும் மக்களின் நிலையை மாற்ற முயல்கிறான். அதன் மூலம் பற்றிக்கொண்ட முதல் தொழிலாளர் போரட்டத்தை வெற்றியாக முடிக்க நினைக்கிறான். ஆனால் ஒரு இக்கட்டு வருகிறது. போராட்டம் மேலும் தொடர முடியாது என்பதை உணர்ந்தவுடன் அவர்களைக் கலைந்து போகச் சொல்கிறான். ஆனால் அவர்கள் ஏய்டனின் பேச்சைக் கேட்கவில்லை. முதல் முறையாக அவனின் உத்தரவு மறுக்கப்படுகிறது. கெஞ்சிப் பார்க்கிறான். ஆனால் எதுவும் அவர்களுக்குள் செல்லவில்லை. தங்களால் போராட முடியும் என்பதை வரலாற்றில் முதன்முறையாகக் கண்டுகொள்கிறார்கள். அந்த வாய்ப்பை அவர்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால் ஏய்டனோ  மேலும் நீண்டால் அவர்கள் ஒடுக்கபடுவார்கள் என்கிற 'நல்லெண்ணத்தில்’ அங்கிருந்து போகச் சொல்கிறான். இருபுறமும் சமமாகி அசைவற்ற நிலையில் விதியின் புன்னகையை நாம் பார்க்கிறோம். ஒரு கட்டத்தில் தன்னையறியாமல் அவன் கை உயர்கிறது. காவல் படைகள் அம்மக்களை அடித்து ஒடுக்கி அங்கிருந்து அப்புறப்படுத்துகின்றனர். அங்கு சில மரணங்களும் நிகழ்ந்திருக்கக் கூடும். “கம்பனி சார்ஜ்…” அந்த வார்த்தை எப்படித் தன்னிடமிருந்து வெளிப்பட்டது என்பதை அதன்பிறகு மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்க்கிறான். மெக்கன்ஸியும் காத்தவராயனும் அதை மறுத்தாலும் ஏய்டனால் அதிலிருந்து வெளிவரமுடியவில்லை. 

 

உண்மையில் வாசகர்களாலான நம்மை நோக்கி எழுப்படும் கேள்வி அது. ஏய்டனின் பார்வையில்தான் மொத்த நாவலும் நிகழ்கிறது. அவன் மூலமாகவே பஞ்சம் சார்ந்த உணர்வுகள் நம்மை வந்தடைகின்றன. ஒவ்வொரு வாசரும் அவனாக நடித்தே அச்சூழலை அனுபவிக்கிறார். அப்படியென்றால் நாவல் எழுப்புவது நாமும் அவ்வாறு நடந்துகொள்ள வாய்ப்புள்ளவர்கள் தானா என்று. நம் நீதியுணர்ச்சியின் எல்லை என்பது நம் அகங்காரம் சீண்டப்படும் வரையில் தானா என்று. இவ்வகையான உருமாற்றம் வழியாகயும் தத்துவப்படுத்தல் வழியாகயும் நாவலின் தாவல் இன்னொரு தளத்திற்கு செல்கிறது. நாவலை பின்திரும்பி பார்த்து நிகழ்வுகளை உசாவுகிறோம். ஒருவேளை பிரண்ணனுக்கும் அந்த இளைய ராணுவ வீரனுக்கும் அத்தகைய சிக்கல்கள் இருக்காதோ? இவர்களிடத்தில் இருப்பது எது ஏய்டனிடம் இல்லை? ஓரிடத்தில் இயல்பாக ஒரு அடிமையின் முதுகில் கால்வைத்து இறங்குகிறான் ஏய்டன். மிகச் சாதாரணமாக சொல்லப்படும் வரி அந்த நிகழ்வுக்குப் பின் கணம் ஏறுகிறது. 

 

இந்த நாவலின் முக்கியமான கலையனுபவம் ஏய்டனின் வாழ்க்கைப் பயணத்தின் வழியே நாம் உணர்வது. இரண்டு முக்கிய படிமங்கள் வழியாக நம்மில் அது நிகழ்கிறது. முதலாவது ஏய்டனின் குதிரை. அது அவனுக்கு ஒரு பீடம் போல. முதன்மையாக வெள்ளையன் என்கிற பீடம். அதன் மூலம் மக்களைக் காக்கும் பொறுப்பு இருக்கிறது என நினைக்க வைப்பது. ஆனால் கூடவே அது ராணுவம் என்னும் மிகப்பெரிய அமைப்பின் அது அளித்த பயிற்சியின் விளைவாக வந்தடைந்தது. அதன் அடிப்படை இயல்புகள் மீது தான் அவன் பொறுப்புணர்வு கட்டப்பட்டுள்ளது. அடுத்ததாக சிந்தனை என்னும் மற்றொரு பீடம். இவ்விரண்டும் அம்மக்களிடம் இருந்து நுட்பமாக அவன் விலகும் இடங்கள். இவை நாவலின் ஆரம்பத்திலேயே வலுவாக நிறுவப்படுகிறது. ஏய்டன் ராணுவப் பயிற்சி முடிந்து தன் சொந்த கிராமத்திற்கு வரும் போது அவன் அன்னியமாக உணர்கிறான். அதை விட முக்கியமானது அதை அவருடைய அப்பாவும் கண்டுகொள்வது. அவன் மீண்டும் ராணுவத்திற்கு திரும்பும் போது தன் தந்தையிடம் உள்ள விலக்கத்தை அவன் உணர நேர்கிறது.

 

அடுத்த முக்கியப் படிமம் கடல். குதிரைக்கு இணையாகவே நாவல் நெடுகிலும் கடலின் விதவிதமான சித்திரங்கள் காட்டப்படுகின்றன. கொந்தளிக்கும் கடல். ஓயாமல் அலையடிக்கும் கடல். இரவில் அமைதியாக ஒளிமின்னும் படகுகளை தன் மீது வைத்திருக்கும் கடல் என அவன் அக உணர்வின் வெளிப்பாடாக கடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

 

மேற்கூறிய இரண்டும் தன்னிலைப் படிமங்கள் என்றால் யானை பொதுப் படிமமாக இருப்பதைக் காண்கிறோம். இரண்டு வகையான யானைகள். நாவலின் தலைப்பான வெள்ளை யானை முதல் வகை. துதிக்கை, தந்தம், மத்தகம், வால் என அனைத்து உறுப்புகளும் உள்ளிழுத்துக் கொண்ட அதன் வலிமையும் மூர்க்கம் மட்டும் கொண்ட செவ்வக வடிவ வெள்ளை யானை. ஒவ்வொரு முறை பெட்டியில் இருந்து அது திறக்கப்படும் போதும் ரத்தபலி கொள்வது. அடுத்தது ஏய்டனின் பார்வையில் வீதியில் காணும் கறுப்பு யானை. இந்தியாவைக் காட்சிப்படுத்துகிறது. அதன் கண்ணின் ஆழம் அவனை அச்சுறுத்துகிறது. மிகச்சிறிய பாகனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரியும் அது உண்மையில் விளங்கிக் கொள்ள முடியாத உயிரினமாக அவனுக்குத் தென்படுகிறது.

 


இறுதியாக ஒன்றுண்டு. அது நவீனுத்துவத்திற்கு பின்பான மனநிலை மூலமாக எழுந்த வந்த பார்வை எனலாம். எல்லா வரலாற்று நிகழ்வுகளும் கால ஓட்டத்தின் இணைப்புத் துளிகள் மட்டுமே என்கிற எண்ணம். ஒரு நீரோட்டத்திற்கு எப்படி தாழ்வழுத்தம் தேவையோ அப்படி. நாவலின் பஞ்ச காலகட்டம் அடுத்து வரும் எவற்றின் விசையாக இருக்கிறது என்பதை கண்டுகொள்ளுதல். அனைத்து நிகழ்வுகளும் வரலாற்றுத் துளிகளே என்கிற தன்னுணர்வு கொடுக்கும் பார்வை என அதை வரையறுக்கலாம். 

 

காத்தவராயன் தன்னுடைய ஆன்மீகத்தைக் கண்டடையும் கணம் அப்படிப்பட்ட ஒன்று. தன் ஆசிரியர் தனக்களித்த தீவிர வைணவ பக்தியை உதறும் தருணம். ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்கள் அடித்து நொறுக்கப்படும் போது அதன் முதலாளி முரஹரி ஐயங்கார் முகத்தில் தெரியும் புன்னகை அவனுக்கு விஷ்ணுவை நினைவுபடுத்துகிறது. அதன் மூலம் தான் வழிபடும் ஒரு மதம் தங்கள் மக்களை நசுக்கும் நேரெதிர் மக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உணர்கிறான். அதுவும் ஒருவகையான கீழ்ப்படிதல் என்பதால் அதை உதறுகிறான். அதே சமயம் ஏதுமில்லாமல் வெற்று வெளியில் எதையும் கட்டியெழுப்ப முடியாது என்றும் அனைத்தையும் உதறுதல் வெற்று கசப்புகளுக்கு மட்டுமே அழைத்துச் செல்லும் என்பதால் தன்னுடைய மூதாதையர் கையளித்துவிட்டுப் போன நூல்களில் இருந்து தன் மெய்யியலைக் கண்டடைகிறான். அது புத்தர் சொன்ன தர்மம் என்கிற தரிசனம். அதைப் பிடித்துக் கொள்கிறான். 

 

இன்று நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில் தலித்தியத்தின் முக்கிய முன்னோடியான அயோத்திதாசரின் தடயங்களை காத்தவராயன் கதாப்பாத்திரத்தில் கண்டு கொள்கிறோம். அவர் வைதிக மதங்கள் உருவாக்கிய மைய நீரோட்ட புராணத்திற்கு எதிரான புராணத்தை முன்வைத்தார். அதை உருவாக்குவதற்கான சாத்தியங்களை வரலாற்றிலிருந்து கண்டடைந்தார். அதை விட முக்கியம் அது உருவாக்கிய விளைவு. தாழ்த்தப்பட்ட மக்களிடையே ஒரு புதிய உத்வேகத்தை நிகழ்த்தியது. பூர்வ பௌத்தம் என்னும் கருதுகோள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வரலாற்று மொழிபாக அவர்களை ஒன்றிணைக்கும் புள்ளியாக மாற உதவியது.

 

இந்த சாத்தியத்தை நாவல் திறந்து காட்டுகிறது. அதன் மூலம் சென்ற காலத்தில் இருந்து வருங்காலத்திற்கு ஒரு இணைப்புக் கண்ணியாக அது மாற்றம் கொள்கிறது. யாரால் கூறமுடியும்? உத்வேகம் மிக்க ஒரு தலித் இளைஞன் இந்த நாலைப் படிக்கையில் தங்களை பட்டினியால் அழித்த ஒரு இருண்ட காலகட்டம் என்பதைத் தாண்டி தங்களுக்கான ஆன்மீகத் தளம் ஒன்று பிறந்து வந்த வரலாற்றுத் தருணம் என்கிற தரிசனத்தை அடையலாம். அதன் மூலமாக வரலாறு செயபடும் விதத்தை புரிந்துகொண்டு ஒரு நேர் நிலை எண்ணத்தை அடையும் வாய்ப்பை இந்த நாவல் அளிக்கிறது. இருண்ட அறையில்தான் தீபச் சுடரை இன்னும் கூர்மையாகப் பார்க்கிறோம். அகண்ட காரிருள் வெளியில் அப்படியான சில வெளிச்சப் புள்ளிகளை இந்த நாவல் ஏற்றிக் காட்டுகிறது.

***

1 comment:

  1. நாவலை வாசிக்கத்தூண்டும் கட்டுரை.

    ReplyDelete

Powered by Blogger.